Friday, June 10, 2005

அப்படி போடு அருவாள.. ஜெயகாந்தன் விளக்கம்..

அவர் கருத்தை அவர் கூறினார்.

நமக்கு தாழ்வு மனப்பான்மையா.. இல்லையென்றால் ஒரு எழுத்தாளன் சொல்லி இத்தனை பேர் ஏன் "நாய்" ஆனார்கள். இவர் சொல்லித்தான் இத்தனை நாள் தமிழை செம்மொழியாய் ஆக்கினோமா.. புரியவில்லை

இது குமுததில் வந்த கட்டுரை.

அன்புடன்
விச்சு


‘‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. ‘பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும்; பேச வேண்டும்’ என்கிற தமிழறிஞர்கள், தம்மைத்தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் நுழைந்திருக்காது!’’
_என்று ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னாலும் சொன்னார்... அது, அவரை விடாது கறுப்பாகத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.
அண்மையில் கோவை_விஜயா பதிப்பகம் அவருக்கு நடத்திய பாராட்டு விழாவில் அவரை ஏக வசனத்தில் நிந்தித்துச் சிலர் கொடுத்த துண்டுப் பிரசுரத்தாலும், ‘தாய்த் தமிழை அசிங்கப்படுத்திய ஜெயகாந்தனே தமிழில் பேசாதே; சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று அவர்கள் போட்ட கோஷத்தாலும் அவ்விழாவே அமளிதுமளிப்பட்டது. கடைசியில், போலீஸார் வந்து கலகக்காரர்களை அப்புறப்படுத்தி இலக்கியக் கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்கும் அளவுக்கு விஷயம் முற்றிப் போய் விட்டது!
கடந்த ஞாயிறன்று காலை 10 மணிக்கு ஓட்டல் அரங்கம் ஒன்றில் விழா நடப்பதாக ஏற்பாடு. பதினொரு மணிக்குத்தான் ஆரம்பித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பின் வரவேற்புரை வாசித்த விஜயா_வேலாயுதம் ஜெயகாந்தனுக்கும், மேடையிலிருந்த பிறருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை.
எல்.ஜி. கீதானந்தன் தலைமையுரையாற்றும் போதுதான் பிரச்னை ஆரம்பமானது.
‘‘ஜெயகாந்தன் ஒரு சிந்தனையாளர். அவருக்குப் பாராட்டுச் செய்வது தமிழுக்குப் பாராட்டுச் செய்வதற்கு ஒப்பாகும். அப்படிப்பட்ட அவருக்கு, ‘பாராட்டு விழா நடத்தக் கூடாது’ என்று சில சண்டாளர்கள் விஜயா பதிப்பகத்திற்குத் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். ‘இந்த ஆளுக்கு விருது எதுக்கு? பாராட்டு எதுக்கு?’ என்று கேட்பவர்களுக்கு இதைச் சொல்லுகிறேன். அவர் விரச விவகாரங்களையும், காம வேட்கைகளையும் தணித்துக் கொள்ள எழுதும் எழுத்தாளர் அல்லர். விருதுகளுக்காகவும் எழுதுபவர் அல்ல. ஒருமுறை, ‘இந்த விருதுகள் எதற்காக?’ என்று அவரிடம் கேட்டேன். ‘அது எழுத்தாளர்களுக்கு நாய் பாஸ்’ என்றார். அப்படி மேன்மையான இடத்திலிருந்து விருதுகளையும், பாராட்டுக்களையும் துச்சமாகப் பார்ப்பவர்தான் இவர்!’’ என்று அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு நபர், ஒரு கற்றை துண்டுப்பிரசுரங்களை எடுத்துக் கொண்டு நேராக மேடைக்கே வந்து ஜெயகாந்தன் உள்பட அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கூட்டத்திலும் விநியோகிக்க ஆரம்பித்தார்.
கையால் எழுதப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட அந்த பிரசுரத்தில் இடம் பெற்றிருந்தவை எல்லாம் அதிர்ச்சிக்குரிய வாசகங்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்தவை இவைதான்.
‘‘தமிழ் உயர்தனிச் செம்மொழி. உலக வழக்கில் அழியாத மொழி. சமசுகிருதம் செத்த மொழி. அது என்றுமே பேச்சு மொழியாக இருந்ததில்லை. செந்தமிழை செத்த மொழியோடு ஒப்பிட்டது மாபெரும் கண்டனத்துக்குரியது!
ஏய் செயகாந்தனே! நீ தமிழினத்தில் பிறந்து தமிழிலேயே பேசி, தமிழிலேயே எழுதி இன்று ஞானபீட பரிசைப் பெற்றிருக்கின்றாய். தமிழை விட சமசுகிருதம் உயர்வானது என்று கூற நீ ஒன்றும் ஆராய்ச்சியாளன் இல்லை. வெறும் எழுத்தாளன் மட்டுமே. துணிவிருந்தால் இந்த மேடையில் சமசுகிருதத்தில் பேசு. தமிழில் பேசாதே!
தனித்தமிழில் பேசவும், எழுதவும் செய்கின்ற தமிழறிஞர்களை நீ தன்னைத்தானே நக்கிக் கொள்ளும் நாய்கள் என்று குறிப்பிட்டுள்ளாய். அப்படியென்றால் பிறமொழி கலந்து எழுதும் உன்னை பார்ப்பானின் அடிவருடி என்றுதான் கூற வேண்டும். எங்கள் தனித்தமிழ் அறிஞர்களைப் பழித்துக் கூறிய உனக்கு எதற்கடா மதிப்பு? உனக்கு விழா ஒரு கேடா? உன்னைப் போன்ற முட்டாள்களை நினைத்துத்தான் எங்கள் பாவேந்தர்
‘வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய்_எதிர்வரக்கானில்
காறி நீ உமிழ்வாய்!’ என்று பாடியுள்ளார்.
வர்ண வேறுபாடு என்ற தீண்டாமையை ஆதரித்துப் பேசியிருக்கின்றாய். அந்தத் தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கூட உனக்கு விலங்கு பூட்டலாம். ஏய்! தமிழின எதிரியே நாவை அடக்கிப் பேசு. இல்லையென்றால் உனது மதிப்பு கெட்டுப் போகும். _தமிழ் உணர்வாளர்கள், கோவை.’’
_இந்த துண்டுப் பிரசுரத்தைப் படித்ததும் விழித்துக் கொண்டவர் மேடையில் இருந்த விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம். உடனே கீதானந்தனின் பேச்சினிடையே மறித்து ‘ஏம்ப்பா! இங்கே எந்தப் பிரசுரமும் கொடுக்காதீங்க. விழா முடிஞ்சு வெளியே போய்க் கொடுங்க!’ என்று ‘மைக்’கிலேயே அறிவிப்புச் செய்தார்.
பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நபர் அசரவில்லை. ‘இதற்கு ஜெயகாந்தன் பதில் சொல்லட்டும்!’ என்று பதிலுக்குக் குரல் கொடுக்க, அரங்கிலிருந்த ஜெயகாந்தன் விசிறிகள் விடவில்லை. இந்த நபரிடம் பெறப்பட்ட பிரசுரங்களைக் கிழித்தெறிந்த கையோடு அவரை வெளியேற்றவும் முயற்சி செய்தனர். அதனால் அமளிதுமளி ஆரம்பமாகிவிட்டது. போலீஸ் வந்தபிறகே கூட்டம் அமைதியானது.
இறுதியில் ஜெயகாந்தன் பேச எழுந்தபோது, மறுபடியும் அரங்கம் களேபரமானதும் ‘தமிழில் பேசாதே! சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று கூட்டத்தின் கடைக்கோடியிலிருந்து தி.க. இளைஞர்களிடமிருந்து குரல்கள் ஒலிக்க, அதற்கு முன்னதாக அரங்கின் முன் வரிசையில் அமர்ந்திருந்த கோவை ஞானி எழுந்து ஒரு விஷயத்தைச் சொன்னார்.
‘‘ஜெயகாந்தனின் தமிழுணர்வு பற்றி எங்களுக்குச் சந்தேகமில்லை. அதை மேடையில் கவிஞர் சிற்பி விளக்கியும் விட்டார். ஆனால் எங்களுக்கு மீதி மூன்று விஷயங்களை ஜெயகாந்தன் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும். ‘வர்ண வேறுபாடுகள் வேண்டும்!’ என்கிறார் அது எந்த வகையில்? சமஸ்கிருதம் தமிழை விட உயர்வானது எப்படி? பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவதும் எழுதுவதும் குற்றமா?’’
இதைக் கேட்ட ஜெயகாந்தன், ‘‘நன்றி ஞானி. கண்டிப்பாக பதில் சொல்கிறேன்!’’ என்றபடி மைக்கைப் பிடித்து ‘‘நண்பர்களே!’’ என்று ஆரம்பித்தார். அவ்வளவுதான்! அரங்கின் பின் பகுதியில் இருந்த இளைஞர் படை மேடை நோக்கி ‘தமிழில் பேசாதே! சமஸ்கிருதத்தில் பேசு!’ என்று கோஷம் எழுப்பியபடி மீண்டும் ஆவேசமாக எழுந்து வந்தது. சிறிது நேரம் அவர்கள் ஜெயகாந்தனைப் பேசவே விடவில்லை. பிறகு, போலீஸார் உட்புகுந்து கலகக்காரர்களை ஒவ்வொருவராக அரங்கிலிருந்து வெளியேற்றினர். பிறகுதான் ஜெயகாந்தன் பேசவே ஆரம்பித்தார்.
எடுத்த எடுப்பில் ‘‘மன்னியுங்கள் நண்பர்களே, மன்னியுங்கள்!’’ என்று மூன்றுமுறை கேட்டுக் கொண்டவர், ‘‘எனக்குத் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. தமிழ் கூடத் தெரியாது!’’ என்று தமது சிம்மக் குரலில் கர்ஜித்தவர், பிறகு ‘‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’’ என்று தொடர்ந்தார்.
‘‘நண்பர்களே கோபத்திலிருந்துதான் உண்மை வெளிப்படும். நானும் மனிதன்தான். தவறு செய்வது இயற்கை. ‘தவறுக்கு மன்னியுங்கள்’ என்று கேட்பது மரபு. ‘மன்னிப்புக் கேள்!’ என்பது கட்டளை. அப்படிக் கேட்டாலும் கேட்கக்கூடியவன் நான் அல்ல. வடமொழியைப் புகழ்வது குற்றமென்றால் நான் மாசுபட்டவன் ஆகி விடுவேன். தமிழைத் தவிர வேறு மொழியைப் புகழ்ந்து பேசுவது கூடாது என்று சொன்னால் நான் தவறிழைத்தவனாகி விடுவேன். சைவ வேளாள இனத்தைச் சேர்ந்தவன் நான். ஆனால் சேரிக்குச் சென்றேன். அம் மக்களுடன் எல்லாம் பழகினேன். என் ஜாதிக்காரர்கள் சாப்பிடாததையெல்லாம் சாப்பிட்டேன். ‘சைவவேளாளர்’ ஜாதியை ஏன் சொல்லுகிறேன்? என்னை சமூகத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளவே. இல்லாவிட்டால் என்னை அட்ரஸ் இல்லாதவன் என்று சொல்லி விடுவார்கள்.
இங்கிருப்பவர்கள் தமிழுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லட்டும். எனக்கும் தமிழுக்குமான சம்பந்தத்தைச் சொல்கிறேன். இந்தப் புகழுக்கு யார் பொறுப்பு? நானா? அப்படியெனில் இவர்கள் இகழ்கிறார்களென்றால் அதற்கும் நானேதான் அதிகம் பொறுப்பு. உண்மை இகழும். இகழ வேண்டும். தவறு செய்தால் மனம் வருந்துகிறது. இதுதான் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உள்ள வித்தியாசம். மனிதன் மிருகம் அல்ல; மிருகத்தைப் போல... சமஸ்கிருதம் கடல். வால்மீகியைப் படித்த கம்பன் சொல்லும்போது, ‘அது ஒரு கடல். அதை நாய் நக்கிக் குடிப்பது போல்தான் குடித்தேன்’ என்கிறார். அதன் பெருமையை தமிழ்நாட்டில்தான் பேசுவேன். இங்கேதான் இந்தி படியுங்கள் என்று சொல்லுவேன். ஆனால் தில்லிக்குச் சென்றால் தமிழ் முரசம் ஒலிக்கச் செய்வேன். தமிழ் எனக்குத் தெரியாது. தமிழுக்கு என்னைத் தெரிந்து விட்டது. நான் மாட்டிக் கொண்டேன். புழுதி வாரித் தூற்றுவது கூட ஒரு வகைப் புகழ்ச்சிதான். உங்களிடம் பேசியது பழகியது. கலந்துரையாடியது. கற்றுக் கொண்டதை உங்களுக்கே திரும்பக் கொடுத்ததைத் தவிர தவறு ஒன்றும் நான் செய்து விடவில்லை. நாகாக்க என்பது எனக்கு மட்டும் சொல்லப்பட்டது போலும். உங்களுக்காக சொல்லப்பட்டது இல்லை போலும்!’’ என்று பல்வேறு விஷயங்களையும் பேசி முடித்தார். இப்படி அந்த இலக்கியக் கூட்டம் ஒரு வழியாக முடிந்தது.

4 comments:

குழலி / Kuzhali said...

//சேரிக்குச் சென்றேன். அம் மக்களுடன் எல்லாம் பழகினேன். என் ஜாதிக்காரர்கள் சாப்பிடாததையெல்லாம் சாப்பிட்டேன். ‘சைவவேளாளர்’ ஜாதியை ஏன் சொல்லுகிறேன்? //

என்னய்யா இது ஏதோ சேரிக்கு சென்றதும் அவர் சாதிக்காரர்கள் சாப்பிடாததெல்லாம் சாப்பிட்டதும் ஒரு பெரிய விடயமாக கூறுகின்றார், நான் சேரிக்கெல்லாம் சென்றிருக்கின்றேன் என பெரிய விடயமாக கூறுவதே ஒரு குறிப்பிட்ட இன மக்களை அவமதிப்பது போலத்தான் என்னமோ இவர் பெரிய இது மாதிரியும் சேரி மக்களெல்லாம் குறைந்தவர்கள் மாதிரியும் இவர் அங்கு செல்வதே அவர்களுக்கெல்லாம் பெருமை மாதிரியும்..., இதுவே உயர்சாதிவெறியின் வெளிப்பாடுதான்.

Anonymous said...

அப்படிப்பட்ட அவருக்கு, ‘பாராட்டு விழா நடத்தக் கூடாது’ என்று சில சண்டாளர்கள் விஜயா பதிப்பகத்திற்குத் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள்

அனோனிமாசு சொல்வதாவது

|அப்புடி போடு அருவாள|

Saran said...

சரியாக சொன்னீர்கள் குழலி. இது எல்லாம் அவர் வளர்ந்த சிறுபருவ சூழலின் ஆதிக்கம்... நாகாத்தல் அவருக்கு நல்லது... கவலையாக இருக்கிறது... தனது பெருமையெல்லாம் அழித்துகொண்டிருக்கிறார்... உள் மன எண்ணமெல்லம் வெளிபட்டுகொண்டிறுக்கிறது...

சிங்காசரன்

neyvelivichu.blogspot.com said...

னாம் எல்லவற்றையுமே தவறாகவே பார்க்கிறோமோ என்று தோன்றுகிறது.

அவர் சொன்னதை இப்படி பாருங்களேன்.

யாருமே செல்லத் தயங்கிய குடிசை வாழ் மக்களின் வீடுகளுக்கும் சென்றிருக்கிறேன். மரக்கறி உணவுண்ணும் குடும்பத்தில் வந்தாலும் உண்ணக்கூடாது என்று சொன்னவற்றையும் உண்டிருக்கிறேன். செய்யக் கூடாது என்று பொதுவாக எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட செயல்களை எல்லாம் செய்திருக்கிறேன்.

இது தான் அதன் பொருளாக எனக்குப்படுகிறது.. என் அடுத்த பதிவைப்பாருங்கள்.. யாராவது அவர் பேசிய முழு உரையையும் தாருங்கள்.. யாரோ சொன்னர்கள் என்பதால் நிலவு களங்கமடயாது.. இவ்வளவு நாள் இந்த ஜெயகந்தன் கதைகளைப் படித்ததற்கு அவர் இப்படி அடாவடித்தனமாக எழுதுவது தான் காரணமாக இருந்தது.. இன்று ஜாதி இன ரீதியான கருத்துக்கள் என்று அதையே வகைப்படுத்துகிறோம்.

சிந்தித்துப்பாருங்கள்.. (சேற்றை வாறி இறைக்கும்முன்.)

அன்புடன்

விச்சு