Monday, June 13, 2005

ஜெயகாந்தன் கருத்தும் பிராமண எதிர்ப்பும்

//இங்கே பிறப்பினால் உயர் குலத்தோன் என்று சொல்லப்படுபவர் சமூகம் தரும் அத்தனை சலுகைகளையும் சுகத்தையும் மரியாதையும் அனுபவித்துக்கொண்டு பிறப்பினால் உயர்வு தாழ்வு இருந்தால் தான் வாழ்வு சுவாரசியமாக இருக்கும் என்று கூறும் ஒரு நோயுற்ற மனப்பாண்மையை கண்டித்து பேசிக்கொண்டிருக்கின்றோம் //

இந்த கருத்தை நானும் பல முறை எனக்கு நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. சில சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு நம் முன்னேற்றத்தை தடுத்துக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.

கேரளத்தில் இருந்த அளவு இந்த இன பேதம் (பெண்கள் மேலாடை அணியத்தடை, எதிரில் நடந்து வரக்கூட தடை) மோசமாக தமிழகத்தில் இருக்க வில்லை என்றே நினைக்கிறேன்.. இந்த விஷயத்தில் நாராயண குரு கொண்ட கொள்கை (உங்களுடைய எதுவும் வேண்டாம், எங்களுக்கு நாங்களே ) ஈழவர்களுக்கு அவர்கள் முன்னேற வழி காட்டியது போல தோன்றுகிறது.

தமிழகத்தில் இது சமூகம் சார்ந்த நிகழ்வாய் பெரியாரால் தொடங்கப்பட்டு அரசியலாக்கப்பட்டதும் அதன் முக்கியதுவம் குறைந்து விட்டது என்பது என் கருத்து.. ஆனால் கேரளத்தில் இன்னும் அது சமூக இயக்கமாகவே தொடர்வதால் ஏற்றத் தாழ்வுகள் மிகவும் குறைந்து விட்டதென்றும் நினைக்கிறேன்.

தமிழகத்தில் இரு கோடுகள் கதை நடக்கிறது.. பெரிய கோட்டை அழித்து சிறிய கோட்டை பெரியதாக காட்டும் முயற்சியில், பெரியதும் போச்சு, சிறியதும் வளர வில்லை. இல்லையென்றால், இன்றும் ஒரு தாழ்த்தப்பட்டவர் இனம் பொருளாதார அடிப்படையிலோ கல்வி அடிப்படையிலோ முன்னேறி இருக்கிறோம் என்று கூற முடியாத நிலை இருக்காது.

இரண்டாவது, தமிழகத்தில் பிராமணர்களைத் தூக்கி எறிந்துவிட்டு அதற்கு அடுத்த வர்ணக்காரர்கள் தமக்கு கீழ் உள்ளவர்களை நசுக்கும் நிலையும் தென்படுகிறது.. எங்கெல்லாம் தலித்துகள் தாக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களை நசுக்குபவர்களெல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதயும் கவனிக்க வேண்டும்..

இன்றைய தினத்தில் பிராமணர்களுக்கு அவர்கள் சொல்லி நடத்தச் செய்யும் அளவு பலம் இருப்பதாக தோன்ற வில்லை. இந்த நிலையில் பிராமண எதிர்ப்பு என்பது செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும்.. ஓட்டு வாங்க உதவுமே தவிர தாழ்த்தப்பட்டவர்கள் நல்வாழ்விற்கு உதவுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

கடந்த 25 ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி கற்க சமமான தளம் அமைந்திருப்பதை மறுக்க முடியாது. நானும் மாநகராட்சி பள்ளியில் படித்து வளர்ந்தவன் தான். ஆங்கிலத்தில் பேசவே கல்லூரி சென்றுதான் கற்றுக்கொண்டேன். இப்பொது அமெரிக்காவில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் பலரும் அப்படி படித்து வந்தவைகள் தான். முயற்சி தான் இந்த நிலையைத் தந்தது.. ஊக்கம் நமக்குள்ளிருந்து வரவேண்டும். யாரும் எதுவும் இலவசமாகவோ எளிதாகவோ கிடைக்கப்பெறுவதில்லை. நாம் முன்னேறாவிட்டால், நாம் தான் பொறுப்பு.. அடுத்தவர்களைத் திட்டி பழி போட்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.

ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் போது அந்தப் பகுதியில் செல்வோர் எல்லாம் கை நீட்டி தானம் பெறும் மனப்பாங்கும் இங்கே தென்படுகிறது. இதில் பலன் பெறுவோர் பலர் இடைப்பட்ட சமூக அந்தஸ்தில் உள்ளவர்களே. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பு இடங்கள் நிரப்ப ஆள் கிடைக்காமல் காலியாக உள்ளது, அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இத்தனைக்கும் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களில் ஜெயலலிதா தவிர அனைவருமே பிராமணர் அல்லதோர் தான். இலவசத் திட்டங்களும், படி அரிசித்திட்டங்களும் போட்டு ஓட்டு வேட்டையாடியதைத் தவிர அவர்களை முன்னேற்ற யாருமே முனைப்புடன் செயல்பட வில்லையென்பது தன் கட்சி, தலைவர் என்ற தடுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் தெளிவாகத்தெரியும்.

எப்படிப்பட்ட நடவடிக்கை தேவை என்றால், குடும்பக்கட்டுப்பாடு, போலியோ தடுப்பு போன்றவற்றில் காட்டப்பட்ட அளவு ஆர்வம் தேவை. மதிய உணவு தந்து காமராஜரும் எம் ஜி ஆரும் மாணாக்கர் களை பள்ளிக்கு கொண்டு வந்தார்களே அது போன்ற முயற்சி தேவை.. அப்படித்தானே 100 சதவீத கல்வி நிலைக்கு தமிழகம் வந்தது. அதே முயற்சி தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திலும் காட்டப்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களும் முன்னேறுவார்கள், தமிழகமும் முன்னேறும். பல நூறாண்டு களங்கமும் நீங்கும்.

1 comment:

குழலி / Kuzhali said...

//இந்த நிலையில் பிராமண எதிர்ப்பு என்பது செத்த பாம்பை அடிப்பதற்கு ஒப்பாகும்.. ஓட்டு வாங்க உதவுமே தவிர //

தமிழ் உணர்வு பற்றி பேசி எப்படி தற்போது ஒரு ஓட்டு கூட கூடுதலாக வாங்க முடியாதோ அதே நிலைதான் பிராமண எதிர்ப்பு பேசி ஒரு ஓட்டு கூட கூடுதலாக வாங்கமுடியாது...

// (உங்களுடைய எதுவும் வேண்டாம், எங்களுக்கு நாங்களே ) //
தமிழகத்திலேயும் யாரும் அவர்களிடம் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லையே...

இங்கே கேட்பதெல்லாம் ஒன்றுதான் முன்னேற வைக்க முடியவில்லையென்றாலும் சிறிது சிறிதாக ஒழிந்து கொண்டிருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பதை ஏதேனும் சப்பைக்கட்டு கட்டி மீண்டும் எழுப்ப வேண்டாம் என்பதே