Saturday, March 05, 2022

நம்பிக்கை

 ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.


🌹 🌿 அப்போது பார்வதி கேட்டார் .

“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,

அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "

என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,

அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.

சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.

மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?

என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை

“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “

என வினவினார்.


🌹 🌿 "அவன் சொன்னான்”

எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.

நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.


🌹 🌿 " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."

"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை


🌹🌿"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""

Thursday, March 03, 2022

நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..

 நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..


ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தான்.


ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 


வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.


அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.


தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..


ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.


அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான்.


உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டான்.


பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நாமே வைத்து கொண்டால் என்ன? தாங்கள் அதிகமாக வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சமாகக் கொடுங்கள்" என மிகவும் வற்புறுத்தினான்.


வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் ஒட்டக வியாபாரியைப் பார்த்து ஒப்படைக்கப் புறப்பட்டுப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, "உங்கள் நேர்மையை நான் பெரிதும் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள்" என்று நீட்டினான்.


அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக் கொண்டே " உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்து கொண்டேன் " என்றான்.


உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.


உடனே அந்த வியாபார-

" நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

*1. எனது நேர்மை

2. எனது சுயமரியாதை

*என்றான் கம்பீரமாக 

சிறிது கர்வமாகக் கூட*


*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்


*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.


*நேர்மை கூட ஒரு போதை தான், அதை அனுபவித்து விட்டால், அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாது - ஆனால் மன நிம்மதி கிடைக்கும்..


நேர்மை ஒரு வரப்பிரசாதம்..

கோபாலா கோபாலா

 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது


கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்


இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்


யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்


யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்


அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது


தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை


அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்


அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது  பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்


12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என  12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்


ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்


அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்


அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது


பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்


இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது


ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது


இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்


ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என  உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று


அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"


அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்


இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது


புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்


இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது


அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது


இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்


இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு


சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம்  அதனை தொடர்ந்தது


சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்

இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று


இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்


தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்


சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?


ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது


பின்குறிப்பு: யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு.


(நன்றி: திரு ஸ்டான்லி ராஜன்)

Tuesday, May 19, 2020

தேவாரம் நான்காம் திருமுறை முதற் பதிகம் பாடல் 1.

அப்பர் என்று அழைக்கப் படும் திருநாவுக்கரசர் யாத்த பாடல்கள் 4, 5 மற்றும் 6ம்  திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன.

அவர் எழுதிய முதல் பதிகத்தை இப்பதிவில் காண்போம். 

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன், அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.

பொருள்:

திருக்கெடில ஆற்றின் வடகரை  திருவதிகை என்னும் வீரட்டானத் தலத்தில்  எழுந்தருளியிருக்கும் தலைவனே! இந்தப் பிறவியில் அறிந்து கொடுஞ் செயல்களைச் செய்ததாக  எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் கொடிய சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வண்ணம்  என் வயிற்றினுள் குடலாடு ஏனைய உறுப்புக்கள் செயற்படாமல் முடக்கி பெரும் வழி ஏற்படுத்துகிறது.  அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போன்ற  அந்நோயைக்  நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 
******************************************

திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று.
அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது.
அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன்.

இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்.
`
வேற்றுச் (சமண) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.

இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது;

பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை
மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?

``வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`

என்று அருளினார் பின்னர்  சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார்

முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்.
திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?
மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?

இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?
மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)
இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?
மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!.
இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?
மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்.
இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?
மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்.

கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்.

கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து.

கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி.

கொடுமை - கொடுஞ்செயல்.
ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; `

சூலை நோய் (வயிற்று வலி) நீங்க அருள் புரியும் திருவதிகை. நடுநாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 7-வது தலமாக விளங்குவது திருவதிகை. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு திருவதிகை இறைவனை மனமுருகி பதிகம் பாடி, திருநாவுக்கரசர் தனது வயிற்று வலி நீங்கி அருள் பெற்ற தலம்.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் ஒரு சைவக் குடும்பத்தில், புகழனார் -  மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலகவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர்.

மருள்நீக்கியார் வளர்ந்து தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து, தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். 

தமக்கை திலவதியாரோ, தனக்கு மணம்புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார், ஒரு போரில் இறந்துபோக, இனி தனக்குத் திருமணம் வேண்டாம் என்று வெறுத்து, சைவ சமயம் சார்ந்து திருவதிகை சிவஸ்தலத்தில் இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.

தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரியவேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. அவர் தங்கியிருந்த சமண மடத்தில் செய்யப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல், தன்னுடைய தமக்கை இருக்கும் திருவதிகை சென்று முறையிடுகிறார்.

தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி, திருவதிகை இறைவனிடம் அழைத்துச் சென்று, அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி, இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும், கூற்றாயின வாறு விலக்ககிலீர் என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப்பெற்றார்.

Sunday, May 17, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம், பாடல் 11.

முதல் திருமுறை, முதல் பதிகம், பதினொன்றாவது பாடல்:

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய    
பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை    
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த    
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே.    


அருஞ்சொற்பொருள்:

 அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்;
அருநெறி=அருமையான நெறி.

அருநெறியமறை வல்லமுனி - அருமையான நெறி களை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். 
ஒருநெறியமனம் - ஒன்றுபட்ட மனம். 
மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள்.  
திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். 

தொல் வினை - பழமையாகிய வினை; "போய  பிழையும் புகுதருவான் நின்றனவும் " என்று ஆண்டாள் சொன்னது போல ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக கூடிய  பிராரத்த சேடத்தையும். பழ வினைகள்  தீரினும் பிராரத்த சேடம் அனுபவித்தே தீர  வேண்டியதாக உள்ளதால், நான் அனுபவிக்கிறேன்  என்ற எண்ணமின்றிக் கழிக்கப்படும்  என்பதால் பழ வினை களைதலே இப்பாடலின் பலனாய் கொள்ளலாம்.

மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார்.

இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன.

பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொருள் :



அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.  

ஞானசம்பந்தரின் தந்தையார் கேட்ட கேள்விக்கு, யார் கொடுத்த எச்சில் பாலினை உண்டாய் என்ற கேள்விக்கு, விடை அளிக்கும் முகமாக மொழிந்த பதிகம் என்பதால், தனது  தந்தையார் கேட்ட கேள்வியையோ, பால் கொடுத்தவர் என்று குறிப்போ இந்த பதிகத்து பாடல்களில் காணப்படவில்லை.

இந்த பதிகத்தை நாம், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வியுள் பாலைக் குடித்த விடயம் அடங்கியுள்ளது எனவே அந்த கேள்வியுடன் நாம் இந்த பதிகத்தில் சொல்லப்படும் பதிலை இணைத்துக் கொள்ளவேண்டும்.

உமையம்மை தனக்கு அளித்த பொன் கிண்ணத்தில் இருந்த பால் பற்றியும், அயலாரிடம் பால் உண்டதற்காக கோபித்துக்கொண்ட தந்தை பற்றியும் கூறி தன்னை ஆட்கொண்ட அப்பனையும் அம்மையையும் நினைவு கூறுகிறார்.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் தோடுடைய செவியன் என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகமும் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும்  வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களும் தேவார ஆசிரியர்கள் பாடிய முதல் பதிகங்கள் ஆகும்.

இவை முறையே முதல், நான்காம் மற்றும் ஏழாம் திருமுறைகளில் முதல் பாடலாக அமைந்துள்ளன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்து, சூலை நோய் அவரை விட்டு நீங்கியது; சுந்தரரும் திருஞான சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த மூன்று  பதிகங்களையும் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது., 

இயற்கை காட்சிகளை கவினுறக் கூறுவதில் சம்பந்தர்க்கு இணை சம்பந்தர் தான் என்று கருதும் அளவுக்கு, இயற்கைக் காட்சிகளை நயமாக எடுத்துரைப்பதை நாம் பல பாடல்களில் காணலாம். பாடலின் இரண்டு அடிகளில் பெருமானது பண்பு, மாண்பு, அவருடன் தொடர்பு கொண்ட பல புராண நிகழ்சிகளை ஆகியவற்றை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டு அடிகளில் இயற்கைக் காட்சிகளை குறிப்பிடுகின்றார்.

பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடிய பின்னர் திருக்கடைக்காப்பு பாடி, பதிகம் நிறைவு பெற்றதை உணர்த்தும் வண்ணம், பதிகம் அளிக்கும் பயன் மற்றும் தனது பெயரையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டு இறைவனைத் தொழுது நின்றார்.

அப்போது வானத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஒன்று கூடி மலர்மாரி பொழிந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே செல்ல, அவரது தந்தையாரும் அவரைத் தொடர்ந்து பின் சென்றார். அவரது கையில் இருந்த சிறு கொம்பு, பிள்ளையாரை மிரட்டுவதற்காக எடுத்த கொம்பு, அவரையும் அறியாமல் கீழே விழ, ஆனந்தக் கூத்து ஆடியவராய் பிள்ளையார் அருளிய பாடலினைக் கேட்கும் விருப்பும் வியப்பு கலந்த உணரவும் உடையவராய், சிவபாத இருதயர் இருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.

உமையன்னை பால் ஊட்டிய நிகழ்ச்சியை நேரில் காணும் பேற்றினை பெறவில்லை எனினும், மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடியதையும், தான் கேட்ட கேள்விக்கு பதிலாக இறைவன் அடையாளங்களை உணர்த்தி பாடியதையும் உணர்ந்த, சிவபாத இருதயர் நடந்த அதிசயம் இறைவனின் அருளால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டார்.

விவரம் அறிந்த ஊர் மக்கள் பலரும், திருஞானசம்பந்தரை நேரில் காணும் விருப்பம் உடையவர்களாய்  திருக்கோயிலின் முன்னர் சூழ்ந்தனர். சம்பந்தப் பெருமான் மூலம் இறைவனது பண்புகளையும் பெருமையினையும் அறிந்து கொண்ட நாம், உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்பதை உணர்ந்து, திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று, பெருமானை வணங்கி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

Saturday, May 16, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 10

முதல் திருமுறை, முதல் பதிகம், பத்தாவது பாடல்:

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா   
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்    
மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப்    
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள்:


பொறியில்=அறிவற்ற;


பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள்
புறங்கூற - நேர்நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமை யாய்ச் சொல்ல. 
நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. 
ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. 

பொருள்:


புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக் களைச் சொல்லித் திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னு மாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

அறிவற்ற சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பெருமைக்குரிய செயல்களை (பலி ஏற்பது போன்ற செயல்கள்) சரியாக புரிந்து கொள்ளாமல், பிழைபட்ட கருத்துக்களை சொல்லி வந்த போதும், அத்தகைய சொற்களால் மயங்கி தங்களது மனம் போன போக்கில் உலகத்தவர் பலரும் பழித்து கூறிய போதிலும், அத்தகைய சொற்களை பொருட் படுத்தாது உலகத்தவருக்கு உய்யும் வாப்பினை அளிக்கும் பொருட்டு பெருமான் தொடர்ந்து உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், எனது உள்ளத்தைக் கவர்ந்து விட்டார்.

தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நாடி வந்த மதயானை மருளும் வண்ணம் அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதைக் கண்ட அனைவரும், யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாமல் போர்த்துக் கொள்ளும் இவர் என்ன பித்தரா என்று எண்ணினராகிலும், யானையின் பசுந்தோலால் பெருமானுக்கு கேடு ஏதும் விளையாததைக் கண்டு ஈது என்ன மாயம் என்று வியந்தனர்.


இந்த பாடலில் பித்தர் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சுந்தரரும் இறைவனை பித்தா என்று தனது முதல் பதிகத்தில் நமது நினைவுக்கு வருகின்றது.

யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று சம்பந்தர் அழைத்தார் போலும்.


பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தமால் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.


சமணர்களின் கொட்டத்தை அடக்கி, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுவதே சம்பந்தப் பெருமான் அவதரித்த நோக்கம் என்பதால், பாடல்தோறும் சமணர்கள் மற்றும் புத்தர்களின் தவறான கொள்கை பெரும்பாலான பதிகங்களின் பத்தாவது பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது.


புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங் கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத் தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார். 

யானையின் தோல்  போர்த்த கதை

கஜாரி சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். இதனை சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. இந்த வடிவம் சிவபெருமானின் வீரத்தினை விளக்கும் எட்டு வடிவங்களில் (அட்ட வீராட்ட வடிவங்களில்,  (பிரம்மனின் சிரம் கொய்தது, யானைத் தோல் போர்த்தியது உள்ளிட்ட சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களை, அட்ட வீரட்டான தலங்கள் என்பர்)  ஒன்றாகப் போற்றப்படுகிறது. வழுவூர்ரில் நிகழ்ந்தது யானைத்தோல் போர்த்திய கதை.  மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.


தருகானவத்து முனிவர்களின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிச்சாண்டவ வடிவினை ஏற்றுச் சென்றார். வனத்தில் பிச்சாண்டவரைக் கண்ட முனிப்பத்தினிகள் கற்புநெறி தவறி அவருடன் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிச்சாண்டவர் மீது தங்களுடைய தவ வலிமையால் எண்ணற்ற கொடிய உயிர்களையும், பொருட்களையும் ஏவினர். மான், புலி ஆகிய மிருகங்களைத் தொடர்ந்து மதங்கொண்ட யானையை அனுப்பினர்.
சிவபெருமான் அட்டாமாசித்திகளுள் ஒன்றான அணிமா சக்தியால் மிகவும் சிறியதாக மாறி, யானையின் வயிற்றுக்குள் சென்றார். அதனுள்லிருந்து மாவுருவம் கொண்டு வயிற்றைக் கிழித்து வெளியே வந்தார். யானையின் தோலை தன்னுடைய ஆடையாகப் போர்த்திக் கொண்டார், இந்த வடிவத்தினை கஜாரி என்கிறானர்.
சிவன் யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்திக் காணப்படுவார்.
                கயமுகாசுரன் யானை வடிவங்கொண்டு மேருமலையில் பிரம்மனை நோக்கி தவஞ்செய்தான். சிவபிரான் தவிர மற்ற ஒருவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் யாவரும் அஞ்சும்படி யானை வடிவில் கயமுகன் வந்தான். இதைக் கண்ட உமாதேவி அஞ்சினாள். சிவன் உக்கிர வடிவமெடுத்து அவனை அழித்தார். யானையின் தோலை உரித்துப் போர்த்தருளினார். 

இதனைஇப்புராணத்தின் வழி யானைத் தோலை உரித்ததுமனிதனின் அகத்திலுள்ள அழுக்குகளை நீங்கல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.

Friday, May 15, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 9

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

ஒன்பதாம்  பாடல்:

தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும்    
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்    
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்    
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள் :

மாலொடு தண்தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் என்று பிரித்துப் பொருளறிய வேண்டும் .

மால் தாள்காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க.

தாணுதல்=தாள்+நுதல், நுதல்=நெற்றி; தாள்=திருப்பாதங்கள்; திருவடியும் திருமுடியும்.

தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும்பொருட்டு; இறைவனைக் காணும்பொருட்டு என்பாரும் உளர். 

நீளுதல் என்ற சொல் எதுகை கருதி நீணுதல் என்று திரிந்தது;

நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். 

ஒழிய - செயலற்றுப்போக. நிமிர்ந்தான் - அண்ணாமலையாய் உயர்ந்தவன். 
வாணுதல்=வாள்+நுதல், ஒளி பொருந்திய நெற்றி; செய் மகளிர்=சிவந்த உடல் கொண்ட மகளிர்; 

பொருள்:

தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதை அறியும் முயற்சியில், வாதம் செய்து கொண்டிருந்த தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில், பன்றியாக மாறிய திருமாலும் அன்னமாக உருவெடுத்த பிரமனும் நெடுந்தூரம் சென்ற போதும் அவர்களால் தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை; அவ்வாறு அண்ணாமலையாக நிமிர்ந்தவன் எனது உள்ளம் கவர் கள்வனாக உள்ளான்.

என் உள்ளம் கவர் கள்வனாய் விளங்கு பவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

தம்முள் யார் பெரியவன் என்பதைக் கண்டறிய பிரமனும் திருமாலும் முயற்சி செய்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. 

மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது தானும் வையத்த வருள் ஒருத்தியாயிருக்க, மற்றவர்களுக்குக் கிடைக்காத பேறாக்கிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்கிறார். .

பிரமனும் திருமாலும் இறைவனின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் தோல்வி அடைந்து திகைத்து நின்ற நிகழ்ச்சி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப் பெருமானின் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது.

கல்விக்கு அதிபதியாக விளங்கும் நாமகளை மனைவியாக உடையவர் பிரமன். மேலும் அவரும் தினமும் வேதம் ஓதுபவராக உள்ளார். எனவே கல்வி அவரது வலிமையாக கருதப் படுகின்றது.

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் இலக்குமி தேவி திருமாலின் மனைவி. எனவே செல்வத்தின் அடையாளமாக அவர் கருதப் படுகின்றார். அவர்கள்; இருவரும் தங்களுக்கு உள்ள வலிமையினால், தங்களது வலிமை மீது செருக்கு கொண்டவர்களாய் இறைவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர்.

இறைவன் கல்விக்கும் செல்வத்திற்கும் மயங்காதவன் என்பதையும் அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அவன் கட்டுப்படுவான் என்பதை உணராமல் அவர்கள் முயற்சி செய்த போது, அவர்களால் காண முடியவில்லை;

பின்னர் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனிடம் இறைஞ்சி வேண்டியபோது இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் என்பது புராணம். எனவே இறைவன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு மட்டுமே அருள் புரிவார் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம்.

எனவே தான் அன்புடன் இறைவன் வணங்க வேண்டும் என்ற இந்த செய்தி பதிகம் தோறும் சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது.

இதனை உணர்த்தும் சேக்கிழாரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த பதிகத்து பாடலில், தன்னைத் துதிக்கும் உலகத்தவருக்கு பெருமான் அருள் புரிகின்றார் என்று குறிப்பிட்டு பெருமானை துதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார். 

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்    
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்    
இழிவாகும் கரு விலங்கும் பறவையுமாய் எய்தாமை     
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்   . 




Thursday, May 14, 2020

இராவணன் கைலாய மலையைத் தூக்க முயன்ற கதை

இராவணன் சிறந்த சிவபக்தன் ... ஒரு சமயம் கர்வம் கொண்டு கையிலை மலையை பெயர்த்து எடுக்க துணிந்தான் .. தன் வலிமையை காட்ட.... இறைவன் தன் பெருவிரல் கொண்டு நிலத்தினை அழுத்த வே வலி தாங்க முடியாமல் கதறினார் ..

எனினும் இறைவன் மீது கொண்ட அன்பால் வீணை மீட்டி இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்தான் ...  அந்த வட மொழிப் பாடலின் தமிழ் பொருள் இங்கே .

இவ்வாறாக கையிலாய மலையை இராவணன் தூக்கும் கைலாச பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வார் கைலாச வாகனம் அல்லது கையிலாச வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த வாகனத்தில் அதிகாரபீட ராவண வாகனம், கைலாசபீட ராவண வாகனம் என்ற இருவகை காணப்படுகிறது.


பத்து தலைகளுடனும், இருபது கைகளுடனும் சிவ பக்தனான இராவணன் வீணையை மீட்டியபடி இருப்பதாக வடிவமைக்கப்பெறும் வாகனம் அதிகார பீட இராவண வாகனமென்றும், இராவணன் கயிலையை சுமந்து இருப்பது போல வடிவமைக்கப்படும் வாகனம் கைலாசபீட ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.


இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அதன் அடியில் அவனை வைத்து அழுத்தி அலற வைத்ததும் சிவபெருமானின் திருவடி!

மார்கண்டேயருக்காக காலனைக் காலால் உதைத்து அவன் உயிரை வாங்கியதும் சிவபெருமானின் அதே திருவடிதான்!

ஒரே திருவடி இராவணனிடம் ஒரு மாதிரியும், மார்கண்டேயருக்காகக் காலனிடம் ஒரு மாதிரியும் செயல் படுகிறதே!

அப்பர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இராவணன் விஷயத்தில் இறைவனது திருவடி மிக மிக இலேசாகத்தான் மலையை அழுத்தியதாம்! அதை “இறைச் செற்ற” என்ற சொற்களால் காட்டினார். இறை என்றல் இங்கே மிக இலேசாக என்று பொருள். அதற்கே இராவணன் மலையடியில் மாட்டிக் கொண்டு “ஓ” என்று அலறி அழுதான்.

அதனால் வடமொழியில் அலறி அழுதவன் என்ற பொருளில் இராவணன் என்று பெயரிட்டனர். தமிழில் இராவணன் என்ற சொல் இரவைப் போன்ற கரு நிறத்தவன் என்ற பொருளைத் தரும். இரண்டிலும் இரு வேறு பொருள்.
இவன் தவறு செய்து விட்டான்; அதை உணர்ந்தான்; தவறு செய்து விட்டேன் என்னைக் காப்பாற்று என்று சிவனுக்கு விருப்பமான இசையில் துதி செய்தான்.

இராவணன் இசையில் வல்லவன் என்று சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன, எனவே இசையால் துதிக்கிறான். எதனால் இது அவனுக்கு இயன்றது? பழக்கம் தான்; அவன் சிவனடியான்; நாடோறும் சிவபூசை செய்து சிவனை இசையால் துதிப்பவன். எனவே துன்பம் வந்த போது தான் வணங்கும் சிவனைத் துதிக்கிறான்.

இந்த  பின்னணியில், இராவணன் சிவனைத் துதிக்க சிவபெருமான் அவனுக்கு இரங்கி புறப்பகை விலக்க வாளும், உட்பகை விலக்கி வாழ்நாளும் அளித்தான் என்பது புராணக்கதை. இதை மேற்கோள் காட்டாத இலக்கியமே இல்லை.

இங்கே ஒளிந்துள்ள இறையியல் இயற்கைப் பேருண்மை இது தான். எல்லா சிவனடியார்களும் ஒரே பக்குவத்தில் இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. எனவே பக்குவக் குறைபாட்டால் சிவனடியார்களும் தவறு செய்வதுண்டு. தவறு என்பது அறியாமல் செய்வது; தப்பு என்பது அறிந்தே செய்வது. தப்பு செய்தால் இயற்கையும், இறையும் தப்பு தப்பு என்று தப்பிவிடும். செய்த தவறு திருத்தப்படுமானால் இறையருள் உப்பி விடும். இது ஒரு மெய்ஞான இயற்பியல் உண்மை!

இங்கே இராவணன் கதையில் இந்த மெய்ஞான இயற்பியல் உண்மையாக எது ஒளிந்துள்ளது என்பதைக் காண்போம்.

1) சிவனடியார் ஆனாலும் தவறுவது இயற்கை, சுந்தரரை விறண்மிண்டரும், ஏயர்கோன் கலிக்காமரும் எதிர்க்கவில்லையா? ஆனால் முடிவில் தவற்றை உணர்ந்து திருந்தினால் அருளலாம் என்பது இறைவன் உணர்த்தும் முதல் நியதி.

2) அடுத்து இயற்கையின் அமைப்பை சிதைத்தால் இறைவன் அதே இயற்கையைக் கொண்டு தண்டிப்பான். இமயமலை இராவணனை என்ன செய்தது? அதைப் பெயர்ப்பது இயற்கையைச் சிதைப்பது அல்லவா? ஆகவே அதனடியிலேயே இராவணன் மாட்டிக் கொண்டு அலறினான் என்று கதையைக் காட்டினர் பெரியோர்.

இப்போது நடப்பதும் அதுதான்! இயற்கையை நாம் மிகவும் சீரழித்து விட்டோம்! இராவணனை மலையடியில் அழுத்தியது போல கரோனாவை விட்டு வீட்டுக்குள் மனித இனத்தையே அழுத்தி வைத்திருக்கிறான் இறைவன்;

இதனால் இயற்கை சீராகிக் கொண்டிருக்கிறது. வானவெளியில் உள்ள ஓசோன் ஓட்டை தானாக அடைந்து சீராகி உள்ளது. கங்கைப் பேரியாறு தெளிந்திருக்கிறது. நமக்கு அது இயற்கை; அதுவே இறைவனது செயற்கை. அதைச் சிதைத்தால் விடுவானா?

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதில் அப்பர் இன்னொரு பாடலில் மற்றொரு உண்மையையும் உணர்த்துகிறார். “கரைந்து கைதொழு வாரையும் காதலன்; வரைந்து வைதெழு வாரையும் வாடலன்” என்று பாடுகிறார் அப்பர்.

இதன் பொருள் துதிப்பதற்காக அவன் மதிப்பவன் அல்லன்; வைததற்காக கொய்பவனும் அல்லன். இகழுரையும் புகழுரையும் அவனுக்கு ஒன்றே! அவன் தான் கடவுள்!

எனவே தன் இருப்பிடத்தைப் பெயர்த்தவன் என்பதால் இராவணனை மலையடியில் சிவன் அழுத்தினான் என்றால் அது கடவுள் செயலாகாது. அவனன்றி அணுவையும் அசைக்க முடியாது என்னும் போது சிவனை இராவணன் அசைத்துவிட முடியுமா? அப்படியானால் இதற்கு என்ன பொருள்? இயற்கை என்பது இறைவனின் ஒரு திட்டமிட்ட செயற்கை. அதைச் சிதைப்பது இறைவனது ஒரு திட்டத்தை சிதைப்பது. அதற்கு இயற்கை வழியாகவே தண்டனை உண்டு என்பதைக் காட்டியது தான் அதன் உட்பொருள். இதை உணர்ந்து தான் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்றும், இயற்கைக்கு மாறானது இறைக் கொள்கை ஆகாது என்றும் எழுதி வைத்தனர். அந்த கதையே தான் இராவணன் கதையும் இன்றைய கரோனா கதையும்..
பிறகு இராவணன் இசை பாடி துதித்த போது அவனுக்கு வாளும், வாழ்நாளும் கொடுத்தான் என்றால் சிவன் துதிக்கு மயங்குபவன் என்று ஆகி விடாதா என்று கேட்கலாம். இயற்கைக்கு மாறுபட்ட போது தவறாது தண்டனை! அடுத்து தவற்றைத் திருத்தி இயற்கையோடு இசைந்தான் என்பதை இசையால் உய்ந்தான் என்று காட்டியது கதை.

அதிலும் சிவனடியான் என்ற காரணத்தாலும், தவறைத் திருத்திக் கொள்வான் என்பதனாலும் திருவடி கொண்டு இலேசாக அழுத்தினான் என்பதை “இறைச் செற்ற சேவடி” என்று பாடிக் குறிப்பிட்டார் அப்பர்.

ஆனால் மார்க்கண்டேயர் கதையில் சிவனடியார் என்று அறிந்து தீங்கு செய்ததால் இலேசாக அல்லாமல், காலனை சிவபெருமான் சீறித் திருவடியால் உதைத்து நீறாக்கி விட்டான்; அதாவது உயிரையே பறித்து விட்டான் என்று பாடினார் அப்பர். ஒரே சேவடி ஒருவனை இலேசாக எற்றியது; இன்னொருவனை எட்டி உதைத்து உயிர் பறித்தது; இதன் உட்பொருள் என்ன என்று யோசி என்று குறிப்பு கொடுத்து இருக்கிறார் அப்பர்.

 இந்த பாடலில். சிவனடியார் தவறு செய்து திருந்தினால் சிவன் திருவடி தட்டிச் சரிசெய்து அருள் தரும்; சிவனடியார்க்கே தீங்கு செய்தால் அதே திருவடி உயிரையே பறித்துவிடும் என்று மெய்ஞான இயற்பியல் உண்மைதான் மேற்கண்ட இரண்டு புராணக் கதைகள் மூலம் பனி நுனியாகக் காட்டின. அங்கே புகுந்து ஊடுருவிப் பார்த்தால் ஆழமான பேருண்மை புரியும் என்றதை அப்பர் அற்புதமான குறிப்புடன் பாடிக் காட்டினார்! என்னே அவரது அருட்புலமைத் திறம்!!

*********************************************************************

இன்னும் ஒரு நிகழ்வு, இதே கதை சார்ந்தது, குறிஞ்சிக்கலி  பாடலில் வருகிறது. 

இந்நிகழ்வை, கபிலர் தான் பாடும் கலித்தொகைப் பாடலுக்கான உவமையாகப் பயன்படுத்தி ஒரு குறுங்காவியமாக்கி இருக்கிறார்.

குறிஞ்சிநிலப் பெண்கள் அருவியில் நீராடவும், மலர்களைக் கொய்யவும், தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக் காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள்.  குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள்.

தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள் தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர். தினையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கும் பெண்களிடம், அவ்வழியாக தன் பிடியிலிருந்து தப்பித்து வந்த மானையும் யானையையும் பற்றி வினவி, அவை சென்ற திசையறிந்து இளைஞர்கள் அவற்றை வேட்டையாடுவார்கள். யானைகள் தப்பித்து வரும் பொழுது, தன் வசமிழந்து வயல்களுக்குள் நுழைந்து விட்டால், அவை தினைப்புனத்திற்கும், அங்கிருக்கும் பெண்களுக்கும் துன்பத்தைத் தந்து விடும்.. எனவே இளைஞர்கள், அவை வயல்களுக்குள் நுழைந்து விடாமல் இருக்க, அவற்றை விரட்டிய படியே இருப்பர்.

இத்தினைப் புனக்காவல் அறுவடைக் காலம் வரை தொடரும். இக்காவலின் போது ஏற்பட்ட சந்திப்பினால், காதல் கொண்ட தலைவியும் தலைவனும் பகல் வேளையில் சந்திக்க இயலாததால், இரவு நேரத்தில் தோழியின் உதவியோடு சந்தித்துக் கொள்வர்.

இப்படி ஒரு தலைவியும், தலைவனும் தனியிடத்தே பல முறை சந்திப்பதற்கு துணை புரிந்த ஒரு தோழி, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.

அவர்கள் தொடர்ந்து ஊரார் அறியாமல் இரவிலே சந்திப்பது தொடர்ந்தால், தலைவியின் நிலை ஆபத்தாக முடியும் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தி திருமணத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்துகிறாள். தலைவியை நிரந்தரமாக பெறுவதற்கு ஒரே வழி திருமணமே என்பதைத் தலைவன் உணருமாறு எடுத்துரைக்கிறாள். இப்பாடலில் வரும் தோழி தலைவனிடம், சுற்றி வளைத்து, இரண்டு நிகழ்ச்சிகளை கூறுகிறாள். பின், தலைவியின் நிலையை எடுத்துரைத்து, அவனைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறாள்.

இப்பாடலில் தோழியின் கூரிய அறிவும், சொல்லாற்றலும் தலைவி குறித்த அக்கறையின் வெளிப்பாடும், இனி இரவில் சந்திப்பது நடக்காது என்ற உறுதியும், தலைவன் இனி தாமதிக்க முடியாது என்ற நெருக்கடியும், தலைவனிடமிருந்து பெறும் திருமண உறுதியும், அதை தலைவியிடம் சொல்லி மகிழும் மனநிறைவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தலைவன் தோழியிடம் வழக்கம்போல் கேட்டு நிற்கிறான்.

இதோ தோழி தலைவனிடம் கூறும் செய்திகள்:

‘தலைவனே நான் இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி கூறுகிறேன் கேள். ஒன்று நீ அறிந்த புராண செய்திதான். அது சொல்லும் உண்மை நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும். ஒருமுறை சிவபெருமான் தன் மனைவி உமாதேவியோடு கயிலை மலையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இராவணன், தன் பலத்தைக் காட்ட விரும்பினான். உடனே, கயிலை மலையைப் பெயர்த்து அப்படியே தூக்கிவிட முயன்றான். தன் கைகளை அம்மலைக்கு அடியில் செலுத்தி பெயர்க்க முயன்றான்.  ஆனால், சிவபெருமான் இராவணனின் ஆணவத்தை அடக்க, தன் கால் பெருவிரலால் மலையை அழுத்தினார். இதனால், இராவணனின் கைகள் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. துன்புற்றான். வருந்தினான்”என்று இந்த கதையைக் கூறுகிறாள். தலைவியைத் தலைவன் சந்திப்பதற்கும் இக்கதைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமலா தோழி இக்கதையைச் சொல்லியிருப்பாள்? என்ன வாசகர்களே உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

இராவணனைப் போல தலைவனும், தலைவியை எப்போதும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்து இறுமாந்திருந்தான். தோழியின் உதவியினால் இரண்டு மூன்று முறை தலைவியை எளிதாகச் சந்தித்திருந்திருக்கிறான். தலைவியைச் சந்திப்பது ஒரு பெரிய செயலல்ல என நினைத்துக் கொண்டிருக்கிறான். . அதனால், இரவுக் சந்திப்பிலேயே தன் வாழ்க்கையைத்  தொடர்ந்திடலாம் என தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

ஆனால், இனி இது இயலாது. அவன் நினைப்பது போல் நடக்காது. தன் நிலை அறியாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவன் தலைவியின் நிலையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உலகைக் காக்கும் சிவபெருமான், கட்டை விரலை அழுத்தி இராவணன் செயலை தடுத்துவிட்டதைப் போல, தலைவியைக் காக்வேண்டிய பொறுப்பிலுள்ள தோழியும், இரவு தொடர்பை மறுத்து தலைவியுடனான சந்திப்பை தடுத்து விட முடியும் என்பதை மறைமுகமாக இக்கதை மூலம் புலப்படுத்துகிறாள். கையை வெளியே எடுக்க முடியாமலும், மலையை பெயர்க்க முடியாமலும் இராவணன் தவித்து துன்புற்று வருந்துவதைப்போல, தலைவியை மறக்க இயலாமல், அவளைச் சந்திக்கவும் இயலாமல் இனி தலைவனும் துன்புற நேரிடும் என்பதை இக்கதை மூலம் நயமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல் எடுத்துரைக்கிறாள்.

தலைவனுக்கு இது புரியாமல் போனாலும் போகலாம். அல்லது புரிந்தும் புரியாததுபோல் இருக்கலாம். எனவே, தோழி இன்னொரு நிகழ்ச்சியின் மூலமும் நன்றாக புரியுமாறு கூறுகிறாள். தன் கருத்தை புலப்படுத்துவதில் இத்தோழிக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்றே கூறலாம்.

அவள் கூறும் இன்னொரு நிகழ்ச்சியைக் கேளுங்கள். தலைவனிடம் கூறுகிறாள். ‘ஒரு யானை இருந்ததாம் அது மதம் பிடித்த யானை. அதற்கு எப்படி மதம் பிடித்தது? அது அப்போதுதான் ஒரு புலியோடு போரிட்டு வென்றிருந்தது. அப்போர் மிகக் கடுமையான போர். பலத்த பெரிய காயங்களைப் பெற்று அது புலியை வென்றிருந்தது. காயங்கள் தந்த வருத்தத்தோடு, அது தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தூக்கத்தில் புலி வந்து தாக்குவது போல ஒரு கனவு கண்டது. உடனே அது வெகுண்டு எழுந்தது. பெருஞ்சீற்றத்தோடு சுற்றுப்புறத்தை நோக்கியது. தொலைவில் ஒரு வேங்கை மரம் மஞ்சள் நிற பூக்களோடு நிறைந்து நின்றிருந்தது. அந்த வேங்கை மரத்தின் கரிய வண்ணமும், அதில் இருந்த மஞ்சள் வண்ணப் பூக்களும் சேர்ந்து, தூக்க கலக்கத்தில் வெருண்டிருந்த யானைக்கு வேங்கை புலியை நினைவுபடுத்தியது. உடனே, அம்மரத்தை புலியென நினைத்து சீற்றம் கொண்டது. அதனைநோக்கிப் பாய்ந்து சென்றது. தன் வலிய கொம்புகளால், புலியின் வயிற்றைக் குத்திக் கிழிக்க முயன்றது. முடியாத நிலையினால் வலி பொறுக்க முடியாமல் பிளிறியது. அச்சத்தம் மலை முகடுகளெல்லாம் எதிரொலித்து, அக்காட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தது. நீயும் வேங்கை மரங்களும், மதயானைகளும் நிறைந்த நாட்டைச் சார்ந்தவன் தானே. இதுபோன்ற காட்சியை நீயும் கண்டிருப்பாய் அல்லவா?’ என்று தலைவனைப் பார்த்துத் தோழி கேட்கிறாள்.

இங்கு ‘யானை’ தான் தலைவன் அவனுக்கு பிடித்த ‘மதம்’ தான் காதல். முன்பு வென்ற புலியை போல் இப்போதும் புலியை வென்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் யானையைப் போல, (தலைவியை முன்பு எளிதாக அடைந்தது போல) இப்போதும் அடைந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இம்முறை அப்படி நடக்காது ஒன்றும் வேலைக்கு ஆகாது. மரத்திலிருந்து கொம்புகளை எடுக்க நினைக்கும் யானையும் துன்புறுவது சிலமணி நேரம்தான். யானை கொம்புகளை மரத்திலிருந்து எடுத்துவிட்டால் சுதந்திரமாகத் திரியும். உண்மையான இன்பத்தைப் பெறும்.  அதுபோல அவர்களாக சென்று மாட்டிக்கொண்ட களவு என்னும் மரத்திலிருந்து விடுபட இருவரும் பிரிவுத் துன்பத்தைச் சந்திக்கத்தான் வேண்டும். களவு மணத்திலிருந்து விடுபட்டுவிட்டால், தலைவி திருமணத்தின் வழி அவனுக்கு உரிமையாகி விடுவாள் உண்மையான இன்பத்தை யானையைப் போல தலைவனும் பெறுவான் என்கிறாள்.

துன்பமும் இன்பமும் தலைவனுக்கு மட்டுமல்ல தலைவிக்கும் உரியது. துன்பநிலை மாறி இன்பநிலை மட்டும் இனி எய்தவேண்டும் என்கிறாள். இத்தோடு விட்டுவிட்டாளா? அவள் தலைவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். களவுக் காலத்தில் இருவரும் சந்தித்த இன்ப துன்பங்களை ஒரு பட்டியலே போட்டுக் காட்டி, தலைவனைத் திருமணத்திற்கு நாள் குறிக்கச் செய்துவிடுகிறாள்.

தலைவனைப் பார்த்து, ‘நீ இரவு நேரத்தில் வருகிறாய் கடும் இரவு நேரங்களில் காட்டு வழி எப்படி இருக்கும்? கொடிய நச்சுப்பாம்புகள் நிறைந்திருக்கும். ஆனால் தலைவியின் மீது கொண்ட காதலால், அந்த நச்சுப்பாம்புகளை நினைத்து நீ பயப்படுவது இல்லை. அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. துணிவோடு நீ வருகிறாய். ஆனால் தலைவி உன்போல் அஞ்சாமல் இருக்க முடியுமா? நீ வரும் வழியை நினைத்து நினைத்து அவள் பயப்படுகிறாள். நீ வரும் வரை அவள் உயிர் அவளிடம் இருப்பதில்லை. நீ வரும் காட்டு வழிக்கு உன் பாதத்தைத் தாங்கச்  சென்று விடுகிறது. அச்சத்தினால் பொலிவிழந்து போகிறாள். அப்போது அவள் படும் துன்பத்தை காணப் பொறுக்க முடிவதில்லை .அப்போது,’நீரற்ற பாலைவனம் எப்படி இருக்குமோ’. அவள் அப்படி இருக்கிறாள். ஒரு வழியாக உன்னைப் பார்த்தபின் தான் அவள் நிம்மதி அடைகிறாள். அப்போது ‘மழை பொழிந்த வயல் எப்படி இருக்குமோ’  அப்படி மகிழ்ச்சியோடு பொலிவு பெற்று விளங்குகிறாள். அழகாகக் காட்சியளிக்கிறாள். அந்த அழகு அவளை விட்டு நீங்காமலிருக்க ஏதாவது ஒரு வழி உண்டா? தெரிந்தால் அதை எனக்குக் கூறு. தன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் அவளோ,உன்னிடம் காட்டுவழி வர வேண்டாம் என இறைஞ்சுகிறாள். நீ வேறு வழியில் வரப்போவதாகக் கூறுகிறாய்.

மீண்டும் நீ விடியற் காலையில் சென்று விடுகிறாய். மறுநாள் இரவு மீண்டும் வேறொரு கொடிய வழியில் வருகிறாய். மலைச்சாரல் நிறைந்த அந்த வழியானது, கொலை செய்வதற்குச் சிறிதும் அஞ்சாத கொடிய கள்வர்கள் நிறைந்த வழி. அவர்களைக் கண்டு நீ பயப்படாமல் இருக்கலாம். ஆனால் உன்மீது காதல் கொண்ட தலைவி பயப்படாமல் இருக்க முடியுமா? கள்வர்களால் உனக்கு ஏதாவது துன்பம் நேருமோ எனப் பயந்து அவள் நிலைத் தடுமாறிப் போகிறாள். பயந்த அவளைப் பார்க்கும் பொழுது ‘இளமையிலே வறுமையின் கொடிய தாக்குதலுக்கு ஆளானவன் எப்படி இருப்பானோ’ அப்படி வறட்சியாய் காணப்படுகிறாள். உன்னைப் பார்த்த பின்தான் அவளுக்கு போன உயிர் திரும்ப வருகிறது. அப்போது அவள் “இறைவனின் அருளினால் வளமான வாழ்க்கையைப் பெற்றவனைப் போல“ ஆனந்தத்துடன் தென்படுகிறாள். அந்த ஆனந்த நிலை அவளை விட்டு நீங்காமலிருக்க உனக்கு ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு.

கொடிய மலைச்சாரல் வழியிலும் வரவேண்டாம் என உன்னிடம் தலைவி வேண்டிக் கொள்கிறாள். நீயோ, மறுநாள் கரிய இருள் சூழ்ந்திருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து வருகிறாய். நீ வரும்வரை அவள் நிலை எப்படி இருந்தது தெரியுமா? “செல்வமிருக்கும்போது பிறருக்கு உதவாதவன் மூப்புக் காலத்தில் யார் உதவியும் இன்றி எப்படி துன்பத்தில் துயருருவானோ “அப்படி துயரம் நிறைந்து இருந்தாள். நீ வந்த பின்பு,“ பிறரது துன்பம் உணர்ந்து பொருளைக் கொடுக்கவல்லவனிடம் செல்வம் சென்று சேர்ந்தால் அவன் வாழ்க்கை எப்படியிருக்குமோ“ அப்படி பொலிவுடன் காணப்பட்டாள்’.

இப்படி இரவு நீ வரும்வரை துயருருவதும், வந்து சென்றபின் பகலில் மகிழ்வதுமாக இருக்கும் இவளைப் பார்த்து ஊரார் என்ன நினைப்பர்? மேலும், இப்படி தலைவன் வரும் வழியை நினைத்து எத்தனை நாள் தலைவி துயர் அடைவாள்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? தலைவியிடம் வாட்டமும் வனப்பும் மாறி மாறி தோன்றுவது அயலாரின் பழிச் சொல்லுக்கு ஆளாக்கி விடும் அல்லவா? இப்படியிருந்தால் எப்படியும் ஊரில் அவர்கள் களவு வெளிப்பட்டு விடும். அதற்கு இடம் கொடுக்கலாமா? அது தலைவனுக்கு அழகா? மற்றவர்கள் புறம் பேசாமலிருக்க, ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு எனத் தலைவனை நோக்கிக் கேட்கிறாள் தோழி.

பின்னர் இப்படியெல்லாம் தலைவனிடம் கேட்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவன் என்ன பதில் கூறியிருப்பான்? தலைவியின் மனம் படபடக் என அடித்துக் கொள்கிறது. தோழி, தலைவியைக் கள்ளத்தனமாகப் பார்த்துச் சிரிக்கிறாள்.

தோழியின் கேள்விகளில் உள்ள நியாயத்தினை உணர்ந்த தலைவன், ‘வேங்கைப் பூக்கள் மலரும் காலத்தே தலைவியை மணக்க உறுதியாக வருவேன்’ என்று கூறித் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்றிருக்கிறானாம்.

(இவ்வாறாகத் தோழி தலைவியின் வருத்தத்தைத் தன் நுண்ணறிவினாலும், பேச்சு சாமர்த்தியத்தாலும் போக்குகிறாள்.) இதோ அப்பாடல்……

இது ஒரு தோழி கூற்றுப் பாடல். பாடியவர் கபிலர்.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல

5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.
‘தலைவலி மருத்தீடு’- திருப்புகழ்)
வயிரவிவனப் பாடல் ஒன்றில், ‘‘சிறந்த
கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த வீரனாகிய இராவணனின் உடல் நெரிந்து
துன்புற தமது கால் விரல்களைச் சற்றே அழித்து
ஊன்றிய அரன்’’ என்ற பொருளில்,
‘‘அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊணும்
அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே’’

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 8

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

எட்டாவது பாடல்:

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்    
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்      
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள்:

வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம்.
இலங்கை அரையன் - இராவணன்.
அரையன் தோள்களை வலிசெற்று என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். . 
துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கர்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது முன்வினையால் அனுபவிக்கும் இன்ப துன்பங்களில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே அதிகமாகத் தெரிவது .
பல ஊழி- பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ்.

பொருள்:

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெரு வீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம்கவர் கள்வன், துயர் விளங்கும் இவ் வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ எனக்குப் பாலூட்டியவன்.

முற்றூழி காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னரும், மீண்டும் உலகினை தோற்றுவித்து தன்னிடம் ஒடுங்கிய உயிர்களை பெருமான் தோற்றுவிப்பது, உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான் மீண்டும் ஓர் வாய்ப்பு அளிப்பது, அந்த உயிர்கள் தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினை உள்ளடக்கியது. இதனை உணர்த்தும் முகமாக பல ஊழிகள் தோன்றி அழிந்த பின்னரும் உலகம் மீண்டும் தோன்றி இயங்குகின்றது என்று கூறுகின்றார். 

 இந்த பாடலில் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பொதுவாக தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுவது திருஞான சம்பந்தரின் பழக்கம்.

தான் வாழும் கயிலை மலையையே பேர்த்து எடுக்கச் துணிந்த அரக்கன் இராவணனது வலிமை குன்றும் வண்ணம் மலையில் கீழே அடக்கி நெரித்தமையும் பின்னர் அரக்கன் தனது தவற்றினை உணர்ந்து சாமகானம் பாடியபோது அவனுக்கு அருள் புரிந்தமையும் இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றன. இராவணன் கைலாய மலையைத் தூக்க முயற்சித்த கதை இங்கே.

 எவரையும் வெல்லும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதும், பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சம் கொண்டவர் பெருமான் என்பதும், தனது தவறினை உணர்வோரை மன்னித்து அருள்பவர் பெருமான் என்பதும் இந்த குறிப்பு மூலம் உணர்த்தப் படுகின்றது.

எனவே இந்நாள் வரை நாம் எந்த தவற்றினை செய்திருந்தாலும், இனி அந்த தவறுகளை செய்யாமல், இறைவனை வாழ்த்தி வணங்கினால் நமக்கும் இறையருள் கிடைக்கும் என்ற முக்கியமான செய்தியை தேவார ஆசிரியர்கள் இந்த குறிப்பு மூலம் எடுத்துரைக்கின்றனர்.

திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமான தேவாரப் பாடல்களில் இடம் பெரும் (அறுநூறு பாடல்களுக்கும் மேலாக) நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.தவறு செய்த உயிர்கள், தமது தவறினை பொறுத்திட வேண்டியும், இனிமேல் அந்த தவறினை செய்யாது இருப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் இறைவனை உள்ளன்போடு  வேண்டினால் இறைவன் உயிர்களை மன்னித்து அருள்வான் என்பதை உணர்த்தும் பொருட்டு சம்பந்தரின் பதிகங்களில் எட்டாவது பாடல் அமைந்துள்ளது என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராண பாடலை நாம் இங்கே காண்போம்.

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்     கண் நுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட    எண்ணமிலா வல்லரக்கன் எடுத்து முறிந்து இசை பாட    அண்ணல் அவர்க்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் 

வியர்வை பெருகுவதும் மலை போன்று உயர்ந்ததும் ஆகிய தோள்களைக் கொண்டுள்ள அரக்கன் இராவணன், தனது வழியில் குறிக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அவனது வலிமையை அடக்கிய பெருமான் எனது உள்ளத்தினைக் கவர்ந்தவர் ஆவார்.

உயிர்களுக்கு துன்பம் விளையும் இடமாக உள்ள இந்த உலகம் பலமுறை அழிந்து மீண்டும் தோன்றிய போதும், தான் அழியாமல் இருக்கும் பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும், எனது பெருமைக்குரிய தலைவனே, எனது உள்ளத்தினைக் கவர்ந்த கள்வர் ஆவார்.

இப்பாடலில் இராவணனின்‌ தோள் வலிமை புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. உயர் இலங்கை அரையன் என்றும், மலை போன்ற தோள்களை உடையவன் என்றும் அவனது உயர்வையும் வீரத்தையும் புகழ்ந்து சொல்லிய பிறகே, ஆணவத்தினால் அவன் இழைக்க இருந்த தவற்றை இறைவன் தடுத்தாட்கொண்டார் என்ற கருத்து பதிவிடப்படுகிறது. இதிலிருந்து தவறு செய்தவனின் நற்குணங்களையும் வீரத்தையும் முன்னிறுத்திக்கூறும் பண்பு நினைவில் கொள்ளத்தக்கது.

அவன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த செய்தி பொழிப்புரையில் கூறப்படினும், பாடலில் அதைப்பற்றிய நேரடியான குறிப்பு இல்லை. எனினும், இராவணனின் வலிமைக்கு அந்த செயல் முக்கிய அடையாளமாக இருப்பதால் அதை மறைந்திருக்கும் செய்தியாகக் கொள்வதில் தவறு இல்லை. இதில் சுவையான விஷயம் என்னவென்றால், இதே செய்தி அனேக பாடல்களில் நேரடியாகக் கூறப்பட்டாலும், ஒவ்வொன்றிலும் வேறு வேறு விதமாக எடுத்துக்காட்டப்படுவதிலிருந்து தமிழ் மொழியின் வளமையும், உமை அம்பிகையிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தரின் புலமையும் நமக்கு நன்கு புலப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்

சிவதாண்டவ ஸ்தோத்திரம்

 ஜடா டவீ கலஜ் ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே 
கலே வலம்ப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம் 
டமட் டமட் டமட் டமன் னிநா தவட் டமர் 
வயம் சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம் 

அடர்த்தியான காடு போல் இருக்கும் சடையில் இருந்து சொட்டு சொட்டாக விழும் நீரால் சுத்தீகரிக்கபட்ட ராஜநாகத்தை கழுத்தில் மாலையாக அணிந்து, உடுக்கை ஒளியின் இசைக்கு ஏற்ப தாண்டவ நடனம் புரியும் சிவபெருமான் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.

ஜடா கடாஹ ஸம்ப்ரம ப்ரமண் ணிலிம்ப நிர்ஜரீ 
விலோல வீச்சி வல்லரீ விராஜ மான மூர்த்தனி 
தகத் தகத் தகஜ் ஜ்வலல் லலாட பட்ட பாவகே 
கிஷோர சந்த்ர ஷேகரே ரதிஃ ப்ரதிக்ஷணம் மம 

கொடிபோல் அசையும் அலைகள் கொண்ட கங்கைக்கு நடுவில் தன் தலையை வைத்திருப்பவர், எரிந்து கொண்டிருக்கும் தீ போன்ற சுருள் சடையைக் கொண்டவர், தனது நெற்றியில் கனல் வீசும் தீயை கொண்டவர் மற்றும் இளம்பிறையை தனது நெற்றியில் கொண்டிருப்பவராகிய சிவபெருமானை நான் ஒவ்வொரு கணமும் போற்றுகிறேன்.

தரா தரேந்த்ர நந்தினீ விலாஸ பந்து பந்துர
ஸ்புரத் திகந்த ஸந்ததி ப்ரமோத மான மானஸே
க்ருபா கடாக்ஷ தோரணீ நிருத்த துர்த ராபதி
க்வசித் தீகம்பரே மனோ வினோதமேது வஸ்துனி

எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட பிரபஞ்சத்தை தன் உள்ளத்தில் கொண்டவர், மலை அரசனின் மகளின் இனிய துணையாக இருப்பவர், பல இன்னல்களை தீர்ப்பவர், திசைகளை ஆடையைக் கொண்டவராகிய சிவபெருமானைக் கண்டு என் உள்ளம் மகிழ்கிறது.

ஜடா புஜங்க பிங்கள ஸ்புரத் பணா மணி ப்ரபா
கடம்ப குங்கும த்ரவ ப்ரலிப்த திக்வதூ முகே
மதாந்த ஸிந்து ரஸ்புரத் வகுத்தரீ யமேதுரே
மனோ வினோத மத்புதம் பிபர்து பூத பர்தரி

ஒளிபொருந்திய மாணிக்கத்தை அணிகலனாகக் கொண்ட கொடி போன்ற நாகத்தை கொண்டவரும், திசைகளின் தெய்வங்கள் மீது வண்ணமயமான வண்ணங்களைப் பரப்பி மதயானையின் தோலை ஆடையாகப் போர்த்தி இருப்பவரும், பூதங்களின் கடவுளாக இருப்பவருமாகிய சிவபெருமானை என் உள்ளம் பற்றிக் கொள்கிறது.

லலாட சத்வர ஜ்வலத் தனஞ்ஜய ஸ்புலிங்க பா
நிபீத பஞ்ச ஸாயகம் நமன் னிலிம்ப நாயகம்
சுதா மயூக லேகயா விராஜமான சேகரம்
மஹா கபாலி ஸம்பதே ஸிரோ ஜடா லமஸ்துனஃ

ராஜ நாகத்தை மாலையாக அணிந்து தனது சடையை முடிந்திருப்பவரும், சகோரப் பறவையின் நண்பனான இளம் பிறையை தனது தலையில் சூடி இருப்பவரும், தேவர்களால் துதிக்கப்படுபவருமாகிய சிவபெருமானை பணிவதால் நாம் சகல சௌபாக்கியத்தையும் பெறுவோம்.