Saturday, October 15, 2005

128. காரணம்

தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ளன.. அங்கங்கே பட்டாசு வெடிக்கும் சப்தமும், இனிப்புகள் செய்யும் மணமும் வந்து கொண்டிருந்தன..

எங்கள் குடியிருப்பில் யார் வீட்டில் என்ன நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும். ஒண்டுக் குடித்தனம் என்றே சொல்லலாம். என் குழந்தைகளும் அப்பா இன்னும் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கலாமென்று நச்சரித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அடுத்த வீட்டில் உரக்க பேச்சுச் சத்தம்.. என் மனைவி வெளியில் எட்டிப் பார்த்து விட்டு.. "ஆரம்பிச்சாச்சு" என்று கூறிக் கொண்டு கதவை மூடினாள்.

பக்கத்து வீட்டில் இருக்கும் ராமனுக்கு இரண்டு பெண்கள். இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெற இருக்கிறார். முதல் பெண் பானுவுக்குத் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றது. பன்னிரெண்டாம் வகுப்பே கஷ்டப்பட்டு தேறினாள். உடனே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆறு வருடத்தில் கணவனுடன் இருந்ததைவிட இங்கே இருந்தது தான் அதிகம்.

இரண்டாவது பெண் ரம்யா பொறியியல் கல்வி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தாள். அவளுடன் வேலை பார்த்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.. முதலில் எதிர்த்த குடும்பம், பொருளாதார நிலையால் அவளது உதவியை எதிர் பார்க்க வேண்டிய கட்டாயம். அவளும் உதவி செய்து வந்தாள்.

சண்டை எப்போதுமே பானுவால் தான் தொடங்கும். அவள் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாக இருக்கிறார். கொஞ்சம் அந்தப் பழக்கம் இந்தப் பழக்கம் என்று எல்லாமே உண்டு. மூன்றுவேளை சாப்பிடவே கையைக் கடிக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் ஒரு சிறுவேலை இருக்கிறது போகிறாயா? என்றதற்கு.. "ஒண்ணு கட்டினவன் சாப்பாடு போடணும்.. இல்ல அவனுக்குக் கட்டி வைச்சவர் சாப்பாடு போடணும்.. எனக்கு வேலைக்கெல்லாம் போக தேவை இல்லை" என்று பதில் வந்தது. அதன் பிறகு அவளிடம் எதுவும் நான் பேசுவதில்லை. ஆனாலும் ராமனின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம் உண்டு.

"ரம்யான்னா உங்களுக்கு தனி அன்பு.. அவளை எஞ்ஜினியரா படிக்க வச்சீங்க.. அவளுக்கு பிடிச்சவனை கட்டி வச்சீங்க.. எனக்கு என்ன செஞ்சு இருக்கீங்க? அவளைப் படிக்க வைக்க ஆன செலவை என் பேரிலே பாங்கில் போடுங்க" என்று ஆரம்பிப்பாள்.. அப்புறம் அவளுடைய 25 வருடங்களில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஒன்றொன்றாக தேதி நேரம் தவறாமல் வரிசையாக வரும்.. ரம்யாவிற்கு அதே நிலையில் என்ன நடந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கப் படும். யாராவது பதில் சொன்னால் அழுகையாய் மாறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டலாய் மாறும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தப்பாக நினைப்பார்களே என்றால் வாசலில் நின்று கத்துவாள். இப்பொதெல்லாம் யாரும் பதிலே சொல்வதில்லை. எங்களுக்கும் பழகி விட்டது.

அன்றைக்கு தீபாவளிக்கு ரம்யா பட்டுப் புடவை வாங்கியதைக் காட்ட வந்து சென்றிருந்தாள். அது தான் விதை. ராமன் கிளம்பி வெளியில் போய் விட்டார். வழக்கமாக நடப்பது தான். அவர் மனைவி தலையில் சுக்கு பற்று போட்டுக்கொண்டு தாழ்வாரத்தில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்து விடுவார்.

"நாளைக்கு ராணியைக் காலையில் கொஞ்சம் சீக்கிரம் வரும்படி சொல்லிட்டு வாங்க" என்று உத்தரவு வர, நானும் கடைத்தெருவுக்கு போக வேண்டியதாயிற்று.. ராணி என்வீட்டு வேலைக்காரி. மாலை நேரத்தில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள்.

வழியில் ராமன் எதிரில் வந்தார். " என்ன ராமன் எப்படி இருக்கீங்க" என்று மரியாதைக்காகக் கேட்டேன்.

" என்ன சார் சொல்லறது.. எதுக்கெடுத்தாலும் வீட்டில் பிரச்சினை.. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.

"பானுவை எதாவது பயிற்சிக்கு அனுப்பி ஒரு வேலை வாங்கிக் கொடுக்கலாமே" என்றேன்.

"எல்லாம் என் கிரகசாரம் சார், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்குப் போக மாட்டேன் என்கிறாள். சொல்லிப் புரியவைக்கக் கூடிய நிலையில் நான் இல்லை.. வீட்டில் நிம்மதியே இல்லை."

" பானுவை அவளுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விடுங்களேன்? இல்லைஎன்றால் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் அப்போது தான் நாளைக்கு யாரையும் சாராமல் வாழமுடியும் என்று புரியும் படி சொல்லுங்களேன்"

என்னை நிமிர்ந்து பார்த்தார். "அவன் எங்கயோ ஒடிப்போய்ட்டான் சார். அலுவலகத்தில் பணம் கையாடி விட்டு காணாமல் போய் விட்டான். மூணுமாசமா வாடகை கட்டலை என்று வீட்டுக்காரன் இவளை வெளியில் துரத்திவிட்டுவிட்டான். என்னால முடியறவரை பெத்த பாவத்துக்காக சோறு போடுவேன். அதற்கப்புறம் கடவுள் விட்ட வழி" அவர் கண்ணில் நீர் தளும்பியது. அவர் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

நான் கடைத்தெருவுக்குச் சென்றேன். ராணியின் கடையில் நல்ல கூட்டம். அவளது கடையில் இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தோசை போட ஒரு ஆள். இலை எடுத்து சுத்தம் செய்ய ஒரு ஆள். ராணி வேண்டியதைக் கேட்டு பரிமாறிக்கொண்டிருந்தாள். கடை என்றால் தள்ளுவண்டி தான். தோசை இட்டிலி ஆம்லெட் சூப்பு என்று கோணலாக எழுதி இருந்தது. அருகில் இரண்டு பெஞ்ச் போட்டிருந்தது. அதில் உட்கார்ந்து சிலரும் நின்றபடியே சிலரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் ராணி சுத்தம் செய்பவரை பரிமாறச்சொல்லிவிட்டு என்னிடம் வந்து "என்னங்கையா?" என்றாள்..

ராணிக்கும் பானு வயசு தான் இருக்கும்.. இன்னும் குறைவாகவே இருக்கலாம். ஆறாங்கிளாசு முடித்ததும் அவளுடைய அம்மா எங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க அழைத்து வந்தாள்.. படித்துக் கொண்டே வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்பதால் படிப்புக்கு முழுக்குப் போடப் பட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என் வீட்டுக்கருகில் கார் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தவனுடன் ஓடிப் போனாள். அவளுடைய அம்மா இரண்டு நாளைக்கு அழுது ஒப்பாரி வைத்து விட்டு.. இந்த சனியன் எனக்கு பொறக்கவே இல்லை என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டாள்.. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் ராணி மட்டும் திரும்ப வந்தாள். அவளுடைய அம்மா படி ஏறாதே என்றதால் என் மனைவியிடம் உதவி கேட்டு வந்தாள். அவளுடன் ஓடிப் போனவன் மஞ்சள் காமாலை வந்து இறந்து விட்டானாம். என் மனைவி தான் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை வாங்கித் தந்தாள். பிறகு அவள் வந்து சூப்புக் கடை வைப்பதாகக் கூறியதும் ஐநூறு ரூபாய் முதலும் தந்தாள்.. அந்தக் கடனை அடைத்த பிறகு இப்போது ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் என் மனைவி மூலமாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைத்திருக்கிறாள். இப்போது அந்த நன்றிக்காக என் வீட்டில் மட்டும் வீட்டு வேலை செய்கிறாள்.

"ஒன்னுமில்ல. நாளைக்குக் கொஞ்சம் வெளில போறோம்.. அதனால காலைல சீக்கிரமா அய்ந்தரை மணிக்கே வந்துடு"

"சரிங்கய்யா"

"அப்புறம் கடை எப்படி போகிறது"

"எதோ உங்க புண்ணியத்துல நல்ல போகுதுங்க.. பக்கத்துல ஒரு கடை வாடகைக்கு எடுக்கலாம்னு இருக்கேன்.. நிறைய ஆளுங்க வராங்க.. ஒரு டீக்கடை மாதிரி ஆக்கிட்டா வியாபாரம் நல்ல இருக்கும்.. அதான்.." என்றாள்.

"நல்லது. உனக்கு எதாவது உதவி வேணும்னா அம்மா கிட்ட சொல்லு.. நான் வரேன் " என்று சொல்லி விட்டு வீடு நோக்கி நடந்தேன்..

வழினெடுகிலும் பானுவால் ஏன் ராணியைப் போல சொந்தக் காலில் நிற்க முடியவில்லை என்ற கேள்வி மனதில் ஒலித்தது. ராணியை விடப் படித்த வசதியான பானுவால் தன் தேவைகளுக்கு தானெ சம்பாதிக்க முடியவில்லையே.. முயற்சி இல்லையா.. நம்பிக்கை இல்லையா அல்லது ராணியிடம் இருக்கும் போராடும் குணம் பானுவிடம் இல்லையா இல்லை ராமன் காப்பாற்றுவதால் வந்த அலட்சியமா என்பது புரியவில்லை. பானு இது போல் ஒரு கடை போட ராமன் விட்டிருப்பாரா.. நடுத்தர வர்க்கத்தின் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப் பார்களோ என்ற எண்ணம் தான் இதற்குக் காரணமோ என்றும் தோன்றியது.

வீட்டிற்கு வந்ததும் சத்தம் ஓய்ந்திருந்தது. யார் பானுவுக்கு புரியவைப்பார்களோ என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருந்தது. யாராவது வருவார்கள். இல்லை காலம் கற்றுக் கொடுக்கும்.. என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

பி. கு.
இந்தக் கதை தமிழோவியம் மின்னிதழின் தீபாவளி இதழில் வெளிவந்தது
அன்புடன் விச்சு

Tuesday, October 11, 2005

125a. சம்பள உயர்வு வேண்டுமா?

This podcast is a personality dev blog. The link goes to CIO.com

சம்பள உயர்வு யாருக்கு வேண்டாம்.. ஆனால் ஏன் சிலருக்கு அதிக உயர்வும் சிலருக்கு குறைந்த உயர்வும் கிடைக்கிறது?

என்ன செய்தால் நமக்கும் அதிக சம்பள உயர்வு கிடைக்கும்படி செய்யமுடியும்?

தலைவரை மயக்கும் வழிகளை இந்த ஒலித்துண்டில் கேளுங்கள்.


அன்புடன் விச்சு

Monday, October 10, 2005

124.தெருவெல்லாம் "ஸ்டிரிப் கிளப்'கள்

அட இதைப் படிங்க முதலில்.. தினமலர் ஒரு செய்தி சொல்லி இருக்காங்க..

அமெரிக்காவின் பிற நகரங்களில் "ஸ்டிரிப் கிளப்'கள் தெருவுக்கு தெரு உள்ளன. "ஆடை அவிழ்ப்பு' நடனம் என்ற பெயரில் அங்கெல்லாம் அனைத்து வித ஆபாசங்களும் அரங்கேறி வருகின்றன.




நான் நியூ ஜெர்சியில் இருக்கிறேன். எனக்கு இங்கே தெருக்களில் அப்படி எந்த கிளப்பும் கண்ணில் படவில்லையே..

வலையில் தேடி கண்டு பிடித்ததில் N.J மானிலத்தில் 150 ஸ்ட்ரிப் கிளப்கள் உள்ளன. இது ஊருக்கு ஒன்று கூட இல்லை.. (அட இப்படிப்பட்ட ஊர்லயா இருக்கிறேன்?)

தினமலர் நிருபர் "பார்" அல்லது டைனர் (நம்ம ஊர் ஓட்டல் ரத்னா கபே மாதிரி) என்றிருந்தால் அதுவும் ஸ்ட்ரிப் கிளப் என்று முடிவு கட்டிவிட்டார் போல இருக்கிறது

மற்ற அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு அவர்கள் ஊர்களில் "தெருவுக்குத் தெரு" "ஸ்டிரிப் கிளப்'கள் உள்ளனவா? என்று கண்டுபிடித்து சொல்லுங்களேன்.
இந்த பத்திரிகையைப் படிக்கும் தமிழ்னாட்டு மக்களுக்கு எல்லாம் எதோ அமெரிக்காவில் எல்லாரும் ஆடையே அணியாமல் தெருவில் நடப்பது போன்ற ஒரு கருத்தை இது ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது..

சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்த நண்பர் அமெரிக்காவில் பெண்கள் அப்படி இப்படி என்று சொன்னர்கள் ஒன்றுமே இல்லையெ என்று நியூ யார்க் சுற்றிப் பார்க்கும் போது கேட்டார். இப்பொது புரிகிறது அவருக்கு யார் ஐடியா கொடுத்தது என்று..

அன்புடன் விச்சு

பி கு

மேலே பொட்டிருக்கும் படத்துக்கும் ச்ட்ரிப் க்கும் என்ன சம்பந்டம் என்று கேட்கிறிர்களா.. "THE STRIP" என்பது நான்கு மைல் நீளமுள்ள கேசினொ என்றழைக்கப்படும் சூதாட்ட அரங்குகள்.. லாஸ் வேகாஸ் நகரில் இருக்கின்றன.. ஓஷன் லெவன் படத்தில் காட்டுவார்களே.. அது தான்.

Friday, October 07, 2005

123. குஷ்புவும் பெரியாரும்

குஷ்பு விஷயத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் குரல் கொடுக்க வில்லை. இதன் மூலம் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் என்று எண்ணிய சிறு கட்சிகள் தான் தாவிக் குதிக்கின்றன. சமீபத்தில் அன்பரசு (இவரை யாரும் சமீபத்தில் கண்டு கொள்ளவே இல்லை என்பதால்) குரலெழுப்பி இருக்கிறார். இதை விட்டுவிடக் கூடாது என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் கீழ்க்கண்ட கட்டுரை தமிழகத்தின் திராவிட கலாசாரத்தை விளக்கி இந்த கட்டுரை எழுதப் பட்டிருப்பதாலும் இது நியாயமான கருத்து என்று தோன்றுவதாலும் திண்ணையில் வந்த இந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன். இந்த கட்டுரையை எழுதியவருக்கு இதை நான் இங்கே வழங்குவதில் எதும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். பதிவை நீக்கி விடுகிறேன்.

உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

அன்புடன் விச்சு


குஷ்புவும், ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள் (திண்ணையில் வந்த கட்டுரைக்கு இங்கே சுட்டவும்)

விஸ்வாமித்ரா----

குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான கணைகள் , தாக்குதல்கள் குஷ்புவின் மீது தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும், திருமா வளவன் மற்றும் ராமதாசின் கட்சிக் கும்பல்களால் தொடுக்கப் படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் குஷ்புவின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளன. அட, அப்படியென்ன குஷ்பூ சொல்லி விட்டார்?

"ஆண்கள் தங்கள் மனைவிகள் கன்னித்தன்மையோடு திருமணம் வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது"

"பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் நோய் வராமல் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்"

இதைச் சொன்னது யார்? குஷ்பு

குஷ்பு என்பவர் யார், எங்கு இதைச் சொன்னார் ?

ஒரு நடிகை. அவரது அனுபவத்தில் எது சரியென்று அவருக்குப் படுகிறதோ, அதை அவரது கருத்தாக செக்ஸ் சம்பந்தமான கணக்கெடுப்பை வருடா வருடம் வெளியிட்டு தனது பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் சொல்லும் உபதேசங்களையோ, கருத்துக்களையோ மக்கள் யாரும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதையே பின்பற்ற முயல்வதில்லை. இதே போன்ற கருத்துக்களை கமலஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகளும், கவிதாயினிகளும் இதற்கு முன்பே சொல்லியுள்ளார்கள். அப்படி ஒரு நடிகை தன் கருத்தைச் சொல்லுவதால் தமிழ் பெண்களின் கற்பும், மானமும் பறி போய் விடுமானால், ஒரு குஷ்பூ தெரிவித்த கருத்தைக் கேட்டு அதன்படி தமிழ் நாட்டுப் பெண்கள் நடக்க ஆரம்பித்து விடுவார்களேயானால், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகையின் கருத்தினால் மட்டுமே களங்கம் ஏற்பட்டு விடுமானால், அது என்ன கற்பாக, என்ன பாரம்பரியமாக இருக்க முடியும்? அப்படிப் பட்ட பலவீனமான பண்பாடா தமிழ்ர் பண்பாடு? ஒரு குஷ்பூவின் அறிக்கையினால் தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் களங்கம் ஏற்படும் என்று இவர்கள் சொல்வார்களேயாயின் இவர்கள் அல்லவோ தமிழ் நாட்டுப் பெண்களைக் கேவலப்படுத்துவதாக ஆகிறது?

குஷ்பு ஒரு நடிகை என்ற அளவில் தனக்குத் தோன்றிய, தனது அனுபவத்தின் படி ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அதை ஏற்கவில்லையெனில், இவர்களும் அதே பத்திரிகைக்கோ, பிற பத்திரிகைக்கோ, தாங்களும் ஒரு பேட்டி கொடுத்து ஐயா, அப்படியாகப் பட்ட கருத்து தவறு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு படி மேலே போய், கற்பின் முக்கியத்துவத்தை தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இவர்கள் கட்சி கூட்டங்கள் போட்டு பாடம் எடுத்திருக்கலாம், அல்லது கற்புக் காப்புக்களை வாங்கி இலவசமாக விநியோகித்திருக்கலாம். அதை விட்டு, விட்டு ஏன் இந்த வெறிக்கூச்சல் ? ஏன் இந்த ரவுடித்தனம்? ஏன் இந்த அடவாடித்தனம்? ஏன் இந்த அராஜகம்?

இப்பொழுது குஷ்புவை எதிர்ப்பவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் ராமதாஸ§ம், திருமாவளவனும். இவர்கள் தங்களை ஈ வெ ராவின் சீடர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். ஈ வெ ராவின் சிலைக்கு பிறந்தநாளுக்கும், திவசத்திற்கும் சென்று சிலையுயர ரோஜா மாலை அணிவிப்பவர்கள். ஈ வெ ராவைப் பழித்தவர்களைச் சும்மா விடாதவர்கள். அப்படியாகப் பட்ட சீடர்கள் கூறுகிறார்கள், ஈ வெ ரா கற்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று மட்டும்தான் சொன்னாராம். என்ன சீடர்கள் இவர்கள்? தங்கள் குரு என்ன சொன்னார் என்பது கூடத் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? போகட்டும் சந்தேகத்தின் பலனை இவர்களுக்குக் கொடுத்து, இவர்களுக்கு உண்மையில் ஈ வெ ரா என்ன சொன்னார்? எதைப் போதித்தார்? எதை எழுதினார் என்பதை சற்றே நினைவு படுத்தலாம். பின்வரும் பாராக்காள் ஈ வெ ரா கற்பைப் பற்றியும், ராமதாசும், திருமாவும், கருணாநிதியும் தலையில் வைத்துக் கூத்தாடும் கண்ணகி குறித்தும், கற்பைப் போதித்த திருவள்ளுவர் குறித்தும் பல்வேறு கால கட்டங்களில் கூறியவை.
----
ஈ வெ ரா கற்பை, திருமணத்தைப் பற்றி விடுதலையில் எழுதியது:

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தௌ¤வாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

'விடுதலை' 28.6.1973

நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள 'கற்பு' என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.

ஈ வெ ரா கண்ணகியைப் பற்றி கூறியது:

கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.

எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறோம்

ஈ வெ ரா திருவள்ளுவரைப் பற்றி எழுதியது: http://www.thinnai.com/pl0311042.html
----

படித்துவிட்டீர்களா? ஆக திருமணம் என்பது ஒழிக்கப் படவேண்டிய ஒரு சடங்கு என்கிறார் ஈ வெ ரா. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ஆனால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் ஈ வெ ரா. பதிவிரதம் என்பதும் கற்பு என்பதும் ஒரு நாட்டை முன்னேற்றாது என்கிறார் ஈ வெ ரா. இதைத்தானே குஷ்வும் சொன்னார். பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் ஏதும் தவறில்லை ஆனால் நோய் வரமால பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்கிறார் குஷ்பு. அவருக்கு செருப்படி, ஈ வெ ராவுக்கு ரோஜா மாலையா? என்னையா இது நியாயம்?
குஷ்புவாவது கற்பு பற்றி ஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை ஆனால் ஈ வெ ராவோ கற்பு என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனம் என்கிறார். ஏற்கனவே தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர்தான் இந்த புண்ணியவான்.

இதையெல்லாம் ஈ வெ ரா சொல்லவே இல்லை என்று ராமதாசும், திருமாவும் இன்னும் மறுக்கப் போகிறார்களா? குஷ்புவாவது ஒரு சாதாரண நடிகை. அவர் சொல்லை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவர் பின்னால் யாரும் செல்லப் போவதில்லை. ஆனால் ஈ வெ ரா யார்? தமிழர்களின் தந்தையல்லவா? தமிழ்ர்களின் பெரியார் அல்லவா? அவர் வாழ்க்கைப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் கொள்கைகள் புத்தகங்களாகவும், பிரச்சாரங்களாகவும் தமிழ் நாடு முழுவதும் பரப்பபடுகிற்து அல்லவா? அவருக்கு தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் பின்னால் பல திராவிட இயக்கங்கள் செல்கின்றன அல்லவா? ஈ வெ ரா தமிழர்களின் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா? அவர் சொன்னால் அது தமிழகத்தை மிகவும் பாதிக்கும் அல்லவா? ஒரு கருத்தை ஒரு ஈ வெ ரா சொல்வதற்கும், ஒரு பெரியார் சொல்வதற்கும் , ஒரு பகுத்தறிவுப் பகலவன் சொல்வதற்கும், ஒரு தமிழர்களின் தந்தை சொல்வதற்கும், ஒரு சாதாரண நடிகை சொல்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா? எது அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லது? எது அதிக களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது? யார் சொல்வதற்கு அதிக வலு இருக்கும்? மதிப்பு இருக்கும்?

ஆக ஈ வெ ராமசாமி நாயக்கர் சொன்னதற்கு குஷ்பு சொன்னதை விட பல மடங்கு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் உண்டு. அப்படி இருக்கும் பொழுது இந்தப் பண்பாட்டுக் காவலர்கள், தமிழர் மானத்தைக் காக்க அவதரித்தவர்கள், கண்ணகி பிறந்த பூமியின் மானத்தைக் காக்க உறுதி பூண்டவர்கள் யாரை முதலில் எதிர்த்திருக்க வேண்டும்? யாரை முதலில் விமர்சித்து விட்டு பின்னர் குஷ்புவிடம் வந்திருக்க வேண்டும். அப்படி செருப்பாலடிப்பதையும், விளக்குமாற்றால் கடவுள் சிலைகளை அடிப்பதையும் தமிழ் நாட்டுக்கு ஒரு கலாச்சாரமாகவே அறிமுகப் படுத்தியது இந்த ஈ வெ ராதானே? ஒரு வேளை இது வரை ஈ வெ ரா சொன்னது என்ன என்பது தெரியாததனால் இவர்கள் ஒரு அறியாமையினால் ஈ வெ ராவின் சிலைகள் மீதோ, அவரது வாரிசுகள் மீதோ, அவர்கள் புத்தகங்களின் மீதோ தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கக் கூடும். இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டார்கள் அல்லவா? தமிழர்களின் மானத்தை, தமிழ் பெண்களின் கற்பை களங்கப் படுத்திய ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும் ஒரு கை பார்த்து விட்டுத்தான் பண்பாட்டுக் காவலர்கள் ஓய்வார்கள் என்று நம்புவோமாக. இனிமேல் தங்களை ஒரு பொழுது ஈ வெ ராவின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புவோமாக. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் அல்லவா? இனி ஈ வெ ரா இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். தமிழ் நாட்டுப் பெண்களைக் களங்கப் படுத்துவது ஈ வெ ராவாக இருந்தால் என்ன குஷ்புவாக இருந்தால் என்ன? யாராலும் தமிழின விரோதிகள்தானே. ராமதாஸ§ம் திருமாவும் இனி சும்மா விட மாட்டார்கள் ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும், சீடர்களையும். ஒரு கை பார்த்து விட்டுத்தான் ஓய்வார்கள் என்று நாம் நம்புவோமாக.

மாறாக ஈ வெ ராவின் சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சியினர் ஏன் இந்த விஷயத்தில் மொளனமாக உள்ளனர்? அவர்களுக்கு ஈ வெ ராவின் கொள்கைகளை ராமதாஸ§ம், திருமாவும் எதிர்ப்பதில் உடன் பாடு உள்ளதா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிவுடன் உலகுக்கு அறிவித்த வீராங்கனை, கொள்கையின் கலங்கரை விளக்கம் குஷ்பூ அவர்களின் மீது வீசப்படும் தாக்குதல்களை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? இவர்கள் உண்மையிலேயே ஈ வெ ரா சீடர்கள்தானா? வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு? ஏன் இந்த மௌனம், ஓ ஒருவேளை இவர்களுக்கும் ஈ வெ ரா என்ன சொன்னார் என்று தெரியாமல் போயிருக்கலாம், இப்பொழுதுதான் அறிவித்து விட்டோமே, இனிமேலாவது, ஈ வெ ராவின் கொள்கைகளை எதிர்க்கும் ராமதாசுடன், ஈ வெ ராவின் உண்மையான வாரிசுகளான தங்கள் கட்சிக்கு இனிமேல் ஒட்டோ உறவோ கிடையாது என்று துணிந்து அறிவிப்பாரா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிந்து இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்ன குஷ்புவை உடனடியாகத் தமிழர்களின் அன்னை என்று அறிவிப்பார்கள் என்று நம்புவோமாக. அன்னைக் குஷ்புவுக்கு ஏற்கனவே ஒரு மறத்தமிழன் கட்டியுள்ள கோவிலுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு குடமுழுக்கும் நடத்துவார்கள் என்றும் நம்புவோமாக.

என்ன செய்யப் போகிறார்கள் ஈ வெ ராவின் சீடர்களும், பண்பாட்டுக் காப்பாளர்களும்?
----

122 என் கனவில் கோயிஞ்சாமி 8 1/2

என்கனவில் வந்த கோயிஞ்சாமி 8 1/2 கொஞ்சம் கேள்விகள் கேட்டார். எனக்கு வழக்கம் போல பதில் தெரியவில்லை. (கோனார் இதற்கு இன்னும் விடைப் புத்தகம் போட வில்லையாம்).. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

1. வங்கிகள் ஏன் பணமில்லை என்றதும் "பணம் இல்லை" என்பதற்காக தண்டனைப் பணம் கேட்கிறார்கள்?

2. நாலு கோடி நட்ச்த்திரங்கள் என்றதும் நம்பியவர், பெயின்ட் ஈரமாக இருக்கிறது என்றதும் ஏன் தொட்டுப் பார்க்கிறார்?

3. கோந்து ஏன் பாட்டிலில் ஒட்டுவதில்லை?

4. டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

5. சூப்பெர் மேன் குண்டுகளை மார்பினால் த்டுத்தாலும் துப்பக்கிகளை வீசும் போது ஏன் குனிந்து கொள்கிறார்?

6. இருட்டின் வேகம் என்ன..?

7. சிறப்பு ஒலிம்பிக்சில் சாதாரண மனிதர்களுக்கு வண்டிகள் நிறுத்த சிறப்பு இடம் உண்டா?

8. இன்றைக்கு பூஜ்யம் டிகிரி, நாளைக்கு இன்றையைப் போல இரண்டு மடங்கு வெப்பம் என்றால், நாளைக்கு எவ்வளவு வெப்பம்?

9. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தார்கள் என்றால் இன்னும் குரங்குகள் ஏன் இருக்கின்றன?

10. நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இருக்கிறோம் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

11. திருமணமானவர்கள், ஆகாதவர்களை விட நீண்டநாள் வாழ்கிறார்களா அல்லது அப்படி தெரிகிறதா?

12. split personality உள்ளவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினால், அவர் யாரையாவது பணையக் கைதியாக வைத்திருக்கிறாரா?

13. தண்ணிருக்குள் அழ முடியுமா?

14. கொலை செய்யப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராயிருந்தால் அவர் படுகொலை (assasination) செய்யப் பட்டதாகக் கூறப்படுவார்?

15. பணம் மரத்தில் காய்க்கவில்லையானால் வங்கிகளுக்கு ஏன் கிளைகள் உள்ளன?

16. வட்டமான பிட்சா ஏன் சதுரமான பெட்டியில் வருகிறது?

17. நன்றாகத் தூங்கினால், ஏன் குழந்தை போலத் தூங்கினார் என்று கூறுகிறார்கள்.. குழந்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை எழுந்து அழுமே?

18. காது கேளாதவர் நீதிமன்றம் சென்றாலும் அது hearing என்றே அழைக்கப் படுமா?

இவ்வளவு தான் கேட்டார்.. அதற்குள் கனவு கலைந்து விட்டது ..

பதில் அனேகமாக வி எம் கனவில் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்..

அன்புடன் விச்சு

Monday, October 03, 2005

121. சானியா டைம் பத்திரிகையில்

டென்னிஸின் தற்போதய நட்சத்திரமான இவர் சென்ற மாதம் அமெரிக்க ஓபனில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்ற பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு "I'm cute? No shit." என்ற வாசகஙளுடன் ஒரு சட்டை அணிந்து வந்திருந்தார். அந்த வாசகத்தாலும், அவரது ஆட்டத்தாலும் நிச்சயமாக அவர் கவனிக்கப்பட்டார். பல பத்திரிகைகள் அவரைப்பற்றி, இந்தியாவின் சானியா மிர்சா போட்டியின் "மிகவும் பிரபலமான ஆட்டக்காரர்" (ராய்ட்டர்), அவரது "மட்டைப் பை நாட்டின் எதிர்பார்ப்புகளின் கனம் தாளாமல் தொங்குகிறது " (நியூயார்க் டைம்ஸ்) என்றெல்லாம் எழுதின.

அவரது வைரம் பதித்த மூக்குத்தி அவர் ஒரு சாதாரண சாதனையாளர் மட்டுமல்ல என்பதைக் குறிக்கிறது என்று USA Today பத்திரிகை எழுதியது. அதுவே அவரது அவரது ஆட்டத்தையும் சிலாகித்து எழுதியது.

இப்படியாக போகும் கட்டுரை ஒன்று டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிய பதிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்தப் பத்திரிக்கை இளம் ஆசிய சாதனையாளர்களைப்பற்றிய இதழில் தான் எழுதியிருக்கிறது.

படத்தில் இருப்பது போல மட்டையைக் கீழெ போட்டு விட்டு சட்டையை மட்டும் பிடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டாரோ என்று பயம் ஏற்படுகிறது. சூரியனை கார் மேகங்கள் மறைக்கலாம். சூரியன் மறைவதில்லை.. நல்ல ஆட்டக் காரரான இவரும் தற்போதைய பிரச்சினைகளைக் கடந்து பிரகாசிக்க வாழ்த்துவோம்.

அன்புடன் விச்சு