தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ளன.. அங்கங்கே பட்டாசு வெடிக்கும் சப்தமும், இனிப்புகள் செய்யும் மணமும் வந்து கொண்டிருந்தன..
எங்கள் குடியிருப்பில் யார் வீட்டில் என்ன நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும். ஒண்டுக் குடித்தனம் என்றே சொல்லலாம். என் குழந்தைகளும் அப்பா இன்னும் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கலாமென்று நச்சரித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அடுத்த வீட்டில் உரக்க பேச்சுச் சத்தம்.. என் மனைவி வெளியில் எட்டிப் பார்த்து விட்டு.. "ஆரம்பிச்சாச்சு" என்று கூறிக் கொண்டு கதவை மூடினாள்.
பக்கத்து வீட்டில் இருக்கும் ராமனுக்கு இரண்டு பெண்கள். இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வுபெற இருக்கிறார். முதல் பெண் பானுவுக்குத் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகின்றது. பன்னிரெண்டாம் வகுப்பே கஷ்டப்பட்டு தேறினாள். உடனே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆறு வருடத்தில் கணவனுடன் இருந்ததைவிட இங்கே இருந்தது தான் அதிகம்.
இரண்டாவது பெண் ரம்யா பொறியியல் கல்வி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தாள். அவளுடன் வேலை பார்த்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.. முதலில் எதிர்த்த குடும்பம், பொருளாதார நிலையால் அவளது உதவியை எதிர் பார்க்க வேண்டிய கட்டாயம். அவளும் உதவி செய்து வந்தாள்.
சண்டை எப்போதுமே பானுவால் தான் தொடங்கும். அவள் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாக இருக்கிறார். கொஞ்சம் அந்தப் பழக்கம் இந்தப் பழக்கம் என்று எல்லாமே உண்டு. மூன்றுவேளை சாப்பிடவே கையைக் கடிக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் ஒரு சிறுவேலை இருக்கிறது போகிறாயா? என்றதற்கு.. "ஒண்ணு கட்டினவன் சாப்பாடு போடணும்.. இல்ல அவனுக்குக் கட்டி வைச்சவர் சாப்பாடு போடணும்.. எனக்கு வேலைக்கெல்லாம் போக தேவை இல்லை" என்று பதில் வந்தது. அதன் பிறகு அவளிடம் எதுவும் நான் பேசுவதில்லை. ஆனாலும் ராமனின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம் உண்டு.
"ரம்யான்னா உங்களுக்கு தனி அன்பு.. அவளை எஞ்ஜினியரா படிக்க வச்சீங்க.. அவளுக்கு பிடிச்சவனை கட்டி வச்சீங்க.. எனக்கு என்ன செஞ்சு இருக்கீங்க? அவளைப் படிக்க வைக்க ஆன செலவை என் பேரிலே பாங்கில் போடுங்க" என்று ஆரம்பிப்பாள்.. அப்புறம் அவளுடைய 25 வருடங்களில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஒன்றொன்றாக தேதி நேரம் தவறாமல் வரிசையாக வரும்.. ரம்யாவிற்கு அதே நிலையில் என்ன நடந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்கப் படும். யாராவது பதில் சொன்னால் அழுகையாய் மாறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டலாய் மாறும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தப்பாக நினைப்பார்களே என்றால் வாசலில் நின்று கத்துவாள். இப்பொதெல்லாம் யாரும் பதிலே சொல்வதில்லை. எங்களுக்கும் பழகி விட்டது.
அன்றைக்கு தீபாவளிக்கு ரம்யா பட்டுப் புடவை வாங்கியதைக் காட்ட வந்து சென்றிருந்தாள். அது தான் விதை. ராமன் கிளம்பி வெளியில் போய் விட்டார். வழக்கமாக நடப்பது தான். அவர் மனைவி தலையில் சுக்கு பற்று போட்டுக்கொண்டு தாழ்வாரத்தில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்து விடுவார்.
"நாளைக்கு ராணியைக் காலையில் கொஞ்சம் சீக்கிரம் வரும்படி சொல்லிட்டு வாங்க" என்று உத்தரவு வர, நானும் கடைத்தெருவுக்கு போக வேண்டியதாயிற்று.. ராணி என்வீட்டு வேலைக்காரி. மாலை நேரத்தில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தாள்.
வழியில் ராமன் எதிரில் வந்தார். " என்ன ராமன் எப்படி இருக்கீங்க" என்று மரியாதைக்காகக் கேட்டேன்.
" என்ன சார் சொல்லறது.. எதுக்கெடுத்தாலும் வீட்டில் பிரச்சினை.. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.
"பானுவை எதாவது பயிற்சிக்கு அனுப்பி ஒரு வேலை வாங்கிக் கொடுக்கலாமே" என்றேன்.
"எல்லாம் என் கிரகசாரம் சார், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்குப் போக மாட்டேன் என்கிறாள். சொல்லிப் புரியவைக்கக் கூடிய நிலையில் நான் இல்லை.. வீட்டில் நிம்மதியே இல்லை."
" பானுவை அவளுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விடுங்களேன்? இல்லைஎன்றால் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் அப்போது தான் நாளைக்கு யாரையும் சாராமல் வாழமுடியும் என்று புரியும் படி சொல்லுங்களேன்"
என்னை நிமிர்ந்து பார்த்தார். "அவன் எங்கயோ ஒடிப்போய்ட்டான் சார். அலுவலகத்தில் பணம் கையாடி விட்டு காணாமல் போய் விட்டான். மூணுமாசமா வாடகை கட்டலை என்று வீட்டுக்காரன் இவளை வெளியில் துரத்திவிட்டுவிட்டான். என்னால முடியறவரை பெத்த பாவத்துக்காக சோறு போடுவேன். அதற்கப்புறம் கடவுள் விட்ட வழி" அவர் கண்ணில் நீர் தளும்பியது. அவர் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நான் கடைத்தெருவுக்குச் சென்றேன். ராணியின் கடையில் நல்ல கூட்டம். அவளது கடையில் இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தோசை போட ஒரு ஆள். இலை எடுத்து சுத்தம் செய்ய ஒரு ஆள். ராணி வேண்டியதைக் கேட்டு பரிமாறிக்கொண்டிருந்தாள். கடை என்றால் தள்ளுவண்டி தான். தோசை இட்டிலி ஆம்லெட் சூப்பு என்று கோணலாக எழுதி இருந்தது. அருகில் இரண்டு பெஞ்ச் போட்டிருந்தது. அதில் உட்கார்ந்து சிலரும் நின்றபடியே சிலரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் ராணி சுத்தம் செய்பவரை பரிமாறச்சொல்லிவிட்டு என்னிடம் வந்து "என்னங்கையா?" என்றாள்..
ராணிக்கும் பானு வயசு தான் இருக்கும்.. இன்னும் குறைவாகவே இருக்கலாம். ஆறாங்கிளாசு முடித்ததும் அவளுடைய அம்மா எங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்க அழைத்து வந்தாள்.. படித்துக் கொண்டே வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்பதால் படிப்புக்கு முழுக்குப் போடப் பட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என் வீட்டுக்கருகில் கார் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தவனுடன் ஓடிப் போனாள். அவளுடைய அம்மா இரண்டு நாளைக்கு அழுது ஒப்பாரி வைத்து விட்டு.. இந்த சனியன் எனக்கு பொறக்கவே இல்லை என்று சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டாள்.. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் ராணி மட்டும் திரும்ப வந்தாள். அவளுடைய அம்மா படி ஏறாதே என்றதால் என் மனைவியிடம் உதவி கேட்டு வந்தாள். அவளுடன் ஓடிப் போனவன் மஞ்சள் காமாலை வந்து இறந்து விட்டானாம். என் மனைவி தான் இரண்டு வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை வாங்கித் தந்தாள். பிறகு அவள் வந்து சூப்புக் கடை வைப்பதாகக் கூறியதும் ஐநூறு ரூபாய் முதலும் தந்தாள்.. அந்தக் கடனை அடைத்த பிறகு இப்போது ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் என் மனைவி மூலமாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைத்திருக்கிறாள். இப்போது அந்த நன்றிக்காக என் வீட்டில் மட்டும் வீட்டு வேலை செய்கிறாள்.
"ஒன்னுமில்ல. நாளைக்குக் கொஞ்சம் வெளில போறோம்.. அதனால காலைல சீக்கிரமா அய்ந்தரை மணிக்கே வந்துடு"
"சரிங்கய்யா"
"அப்புறம் கடை எப்படி போகிறது"
"எதோ உங்க புண்ணியத்துல நல்ல போகுதுங்க.. பக்கத்துல ஒரு கடை வாடகைக்கு எடுக்கலாம்னு இருக்கேன்.. நிறைய ஆளுங்க வராங்க.. ஒரு டீக்கடை மாதிரி ஆக்கிட்டா வியாபாரம் நல்ல இருக்கும்.. அதான்.." என்றாள்.
"நல்லது. உனக்கு எதாவது உதவி வேணும்னா அம்மா கிட்ட சொல்லு.. நான் வரேன் " என்று சொல்லி விட்டு வீடு நோக்கி நடந்தேன்..
வழினெடுகிலும் பானுவால் ஏன் ராணியைப் போல சொந்தக் காலில் நிற்க முடியவில்லை என்ற கேள்வி மனதில் ஒலித்தது. ராணியை விடப் படித்த வசதியான பானுவால் தன் தேவைகளுக்கு தானெ சம்பாதிக்க முடியவில்லையே.. முயற்சி இல்லையா.. நம்பிக்கை இல்லையா அல்லது ராணியிடம் இருக்கும் போராடும் குணம் பானுவிடம் இல்லையா இல்லை ராமன் காப்பாற்றுவதால் வந்த அலட்சியமா என்பது புரியவில்லை. பானு இது போல் ஒரு கடை போட ராமன் விட்டிருப்பாரா.. நடுத்தர வர்க்கத்தின் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் என்ன நினைப் பார்களோ என்ற எண்ணம் தான் இதற்குக் காரணமோ என்றும் தோன்றியது.
வீட்டிற்கு வந்ததும் சத்தம் ஓய்ந்திருந்தது. யார் பானுவுக்கு புரியவைப்பார்களோ என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருந்தது. யாராவது வருவார்கள். இல்லை காலம் கற்றுக் கொடுக்கும்.. என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
பி. கு.
இந்தக் கதை தமிழோவியம் மின்னிதழின் தீபாவளி இதழில் வெளிவந்தது
அன்புடன் விச்சு
Saturday, October 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment