Saturday, March 05, 2022

நம்பிக்கை

 ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.


🌹 🌿 அப்போது பார்வதி கேட்டார் .

“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,

அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.

சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,

ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.

கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "

என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.

உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.

உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,

அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.

சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.

மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?

என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடன் பார்வதி அன்னை

“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “

என வினவினார்.


🌹 🌿 "அவன் சொன்னான்”

எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.

நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.

முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.


🌹 🌿 " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."

"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை


🌹🌿"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""

Thursday, March 03, 2022

நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..

 நேர்மை கூட ஒரு வரப்பிரசாதம்..


ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் ஒன்று வாங்கி வர சந்தைக்குப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு ஓட்டி வந்தான்.


ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 


வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.


அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.


தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..


ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.


அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி வந்து அதைக் காண்பித்தான்.


உடனே வியாபாரி, "அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்"னு சொல்லி புறப்பட்டான்.


பணியாளோ, "ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நாமே வைத்து கொண்டால் என்ன? தாங்கள் அதிகமாக வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சமாகக் கொடுங்கள்" என மிகவும் வற்புறுத்தினான்.


வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் ஒட்டக வியாபாரியைப் பார்த்து ஒப்படைக்கப் புறப்பட்டுப் போனான்.


ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, "உங்கள் நேர்மையை நான் பெரிதும் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள்" என்று நீட்டினான்.


அதற்கு அந்த வியாபாரியோ சிரித்துக் கொண்டே " உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் எடுத்து வைத்து கொண்டேன் " என்றான்.


உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.


உடனே அந்த வியாபார-

" நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

*1. எனது நேர்மை

2. எனது சுயமரியாதை

*என்றான் கம்பீரமாக 

சிறிது கர்வமாகக் கூட*


*நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்


*வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.


*நேர்மை கூட ஒரு போதை தான், அதை அனுபவித்து விட்டால், அதற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாது - ஆனால் மன நிம்மதி கிடைக்கும்..


நேர்மை ஒரு வரப்பிரசாதம்..

கோபாலா கோபாலா

 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது


கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்


இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்


யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்


யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்


அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது


தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை


அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்


அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது  பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்


12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என  12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்


ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்


அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்


அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது


பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்


இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது


ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது


இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்


ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என  உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று


அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"


அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்


இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது


புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்


இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது


அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது


இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்


இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு


சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம்  அதனை தொடர்ந்தது


சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்

இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று


இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்


தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்


சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?


ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது


பின்குறிப்பு: யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு.


(நன்றி: திரு ஸ்டான்லி ராஜன்)