Friday, September 30, 2005

120. சிறுகதை - நடிகையின் நிஜங்கள்

அருணுக்கு எப்படி இந்த செய்தியை எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. அம்மா காலையில் தொலை பேசியில் சொன்னாது சந்தொஷமான செய்தியா அல்லது சங்கடமான செய்தியா.. விஷ்யம் ஒன்றும் பெரிதாக இல்லை..

"உனக்கு ஒரு வரன் கூடி வந்திருக்கிறது.."

"சரி மேல பேசு. உனக்குப் பிடிச்சிருந்தா பொண்ணு புகைப்படம அனுப்பி வை. பார்த்துட்டு பிடிச்சிருந்தா சொல்லறேன்"

அம்மா சிரித்தாள். குரலில் ஒரு ஆர்வம்."புகைப்படமே வேண்டாம்.. உனக்குப் பிடித்தவள் தான்.."

எனக்குப் பிடித்தவளா.. அப்படி யாருமே இல்லையெ.. காதல் எல்லாம் கசக்கும் பொருள் என்று பெண்ணைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொண்டு நடப்பவனாயிற்றே நான்.

"யாரும்மா அது?"

"திரைப் பட நடிகை மாலதி"

குடும்பப் பாங்கான வேடங்களில் நடிப்பவள் தான். நிஜமாகவெ குத்து விளக்கு போன்ற அழகு. மாராப்பு விலகாமல் நடித்து விருதுகள் எல்லாம் வாங்கிக் குவித்திருந்தாள்.

"எனக்கு கொஞ்சம் அவகாசம் தா.. ரெண்டு நாள் பொறுத்து என் முடிவைச் சொல்லரேன்"
******************
செந்தில் எனக்கு இந்தியாவிலிருந்தே நண்பன்.. பள்ளி நாட்களிலேயே தெரியும் என்றாலும் அமெரிக்கா வந்த பின் தான் நல்ல நண்பனானன்.. இப்போது மனம் விட்டுப் பேசும் அளவு நட்பு.

மாலையில் வீட்டுக்கு வாடா என்றதும் என்னடா பாகற்காய் பிட்லை செய்யப் போகிறாயா என்று கிண்டலடித்தான். காதல் கசக்குமாம் பாகற்காய் இனிக்குமோ என்று கிண்டல் அடிப்பான். காதல் திருமணம் செய்திருந்தான். காதல் இல்லாமல் மனிதரின் வாழ்க்கை வீண் என்ற கட்சிக் காரன்.

ஆறு மணிக்கு வந்தான். வாசலிலேயெ நின்று ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளிவிட்டு நாற்றத்தையும் உள்ளே கொண்டு வந்தான்.

"அருண் சார், எதுக்கு கூப்பிடீங்க" என்றான் கிண்டலாக.
சொன்னேன்.
என்னைப் பார்த்தான்..

"நானாயிருந்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்"

"ஏன்?"

"என்னால நிம்மதியா இருக்க முடியாது. யாராவது எதாவது சொல்வார்கள்.. மனசு வருத்தப்படும். நாளைக்கு உன் பணம் என் பணம் என்று சிக்கல் வரும்"

"நடிகை என்பதாலயா?"

"ஆமாம், அது நிழல் வாழ்க்கை.. யார் என்ன செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது.."

"மாலதிபற்றி எதுவும் கேள்விப்பட்டதிலையே?"

"இல்லை அவளைப்... " என்னைப் பார்த்தான்.

"எதுவாயிருந்தாலும் சொல்லு"

"அவங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன்" சிரித்தேன்.

"அவள் அவளாகவே இருக்கட்டும் அவங்களாக வேண்டாம்"

" சமீபத்தில்கூட கிரிக்கெட் நட்சத்திரம் அவினாஷுடன் சிங்கப்பூரில் அவள் அடித்த கூத்து பற்றி எழுதி இருந்தார்கள்"

"அப்படி என்ன கூத்து?"

"மழைக்காலம் படப் பிடிப்பிற்காக இவள் போன போது அவனும் அங்கே ஒரு போட்டிக்காக வந்திருந்தானாம். இரண்டு பேரும் ஒரே ஓட்டலில் தங்கியதும்.. கடைத்தெருவில் வண்டி வண்டியாய் அவன் அவளுக்கு பொருள்கள் வாங்கித் தந்ததும்..ஒரு M பொட்ட சிவப்புக் கல் மோதிரம் கூட வாங்கினார்கள்
விரைவில் அவனுடன் திருமணம் என்று கூட எழுதி இருந்தார்கள்.."

"அப்படியா?"

"அதற்கு முன்னாலும் முதல் படத்தில் அவளுடன் நடித்த கதாநாயகனுடன் நிறைய கிசுகிசு வந்தது. அவளை அறிமுகப் படுத்திய இயக்குனரும் அறிமுகப்ப்படுத்தும் நடிகைகளை ஒப்பந்தமிட்டு கொஞ்சம் நாள் தங்கள் சின்ன வீடு மாதிரி வைத்திருப்பார்.. அப்போது அவர் எடுக்கும் படங்கள் எல்லவற்றிலும் அவள் தான் கதாநாயகி..என்றில்லாம் எழுதி இருந்தார்கள். இவளும் அவர் இயக்கத்தில் ஆறு படங்கள் நடித்திருக்கிறாள்.. இன்னோரு வேடிக்கை தெரியுமா.. அவினாஷுடைய அப்பாதான் அவர்"

எனக்கு செந்தில் சொன்னது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது..

"இதெல்லாம் எந்த பத்திரிகையில் படிச்சடா?"

அவன் சொன்ன பத்திரிகை பெயர்களும் பிரபலமானவைகளே..

செந்தில் தேனீர் சாப்பிட்டுவிட்டு கிளம்பிப் போனான்.. மனசு என்னமோ போல இருந்தது.. தொலைக் காட்சிப் பெட்டியைப் போட்டால், மாலதி நடனமாடிக் கொண்டிருந்தாள்.

இவள் நல்லவளா கெட்டவளா?

********************************

அடுத்த முறை தொலை பேசும் போது அம்மாவிடம் இவள் வேண்டாம் என்று சொன்னேன். காரணத்தையும் சொன்னேன்.. அம்மா சரி என்று சொன்னாள்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் அழைத்தாள்..

"அருண் இந்த பொண்ணு ரொம்ப தங்கமான பொண்ணுடா.. எம் பி ஏ படிச்சிருக்கா.. நல்ல புத்தி சாலி.. யாரோ சொன்னான்னு வேண்டாம்னு சொல்லதே.. கண்ணால் கண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்ன்னு படிச்சதில்லையா.. நானும் நிறைய பேர்கிட்ட விசாரிச்சேன்.. அவளைப் பற்றி ரொம்ப உயர்வாகத் தான் சொல்லராங்க.. நம்ம ராமசாமி மாமா மூலமாகத்தான் இந்த வரன் வந்தது.. அவர் அந்த பொண்ண எனக்கு கொழந்தைல இருந்து தெரியும் ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு சர்டிபிகேட் குடுக்கறார். நீ இந்தியா வரும்போது அவளைப் பார்த்து பேசு.. அப்புறம் முடிவு பண்ணலாம்" என்றாள்.

எங்கம்மாவெ இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் ஒரு முறை பேசித்தான் பார்க்கலாமே என்று தோன்றியது.. கத்தரிக்காயையே பத்து முறை துடைத்துப் பார்த்து வாங்குபவளாச்சே.. சரி என்று சொல்லி வைத்தேன்..

********************************

இரண்டு மாதங்கள் கழித்து இந்தியா போனேன்.. அந்த விடுமுறையில் எனக்கு திருமணம் செய்து விடவேண்டும் என்பதற்காகத்தானே தேடிக் கொண்டிருந்தாள்..

மூன்று நாள் கழித்து மாலதியை சந்திக்க போகலாமா என்று அம்மா கேட்டாள்.. முறையான பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.

அடுத்த நாள் அம்மா அழைத்து தொலை பேசியை கையில் கொடுத்தாள்.

"மாலதி பேசறா.. பேசு " என்றாள்..

தொலை பேசியை மூடிக்கொண்டு.. "என்னம்மா இது?" என்றேன்.. ஆனால் என்ன செய்வது.. பேசியே ஆகவேண்டும்..

"வணக்கம்.. நான் மாலதி பேசறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க அருண்.. என்னை பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களாம்.. எங்க சந்திக்கலாம்.. "

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. "எங்கள் வீட்டிலோ உங்கள் வீட்டிலோ சந்திக்கலாமே?"

களுக் என்று ஒரு சிரிக்கும் சப்தம் கேட்டது.. "வீட்டில இருந்தா மனசு விட்டு பேச முடியாது.. யாராவது தொந்தரவு செய்து கொண்டே இருப்பர்கள்.. இந்த முகவரிக்கு வாருங்கள் இன்று மாலை 4 மணி பரவாயில்லையா" என்றாள்.

"சரி" ஒரு அப்புறம் பார்ப்போமுடன் முடிந்தது..

மாலையில் சந்திக்கும் போது எதாவது கொடுக்க வேண்டாமா என்று அம்மாவிடம் கேட்டேன்.. மல்லிகைபூ வாங்கிக் கொண்டு போ என்றாள்.. எனக்கு புத்தகம் எதாவது தரலாம் என்றிருந்தது.. கடைக்குப் போய்த் தேடியதில் பட்டுக் கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது.. எனக்குப் பிடித்த கதை..

**************************
நான் 3.55 க்கு அங்கே இருந்தேன்.. நீல ஜீன்ஸ், ஆரஞ்சு நிற சட்டை.. செருப்பு என்று சதாரணமாகத்தான் இருந்தேன்.. கதவைத்தட்டியதும், திறந்தார்கள். திறந்தது அவினாஷ். எனக்கு எதோ பொறி தட்டியது போல இருந்தது.. செந்தில் நினைவுக்கு வந்தான்.

"உள்ள வாங்க..என் பெயர் அவினாஷ். மாலதி இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்துடுவா..காப்பி அல்லது கூலா எதாவது.. "

நான் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவல் நடித்த படத்துக்கு பிலிம் பேர் விருது கிடைத்துள்ளதாகப் போட்டிருந்தது..

வாசல் மணி அடித்தது.. உள்ளே வந்தவளைப் பார்த்ததும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை.. சந்தோஷமாகவும் இருந்தது. பதட்டமாகவும் இருந்தது.
சிவப்பு நிற காட்டன் சேலை கட்டியிருந்தாள். சற்று மானிறம் தான்.. திரைப்படத்தில் பார்ப்பது போல தேவதை யாக இல்லை.. அழகாகச் சிரித்தாள்.
"அருண்? நான் தான் மாலதி. சாரி.. காலைல ஒரு படப் பிடிப்பை முடித்துக் கொண்டு வரத் தாமதமாகி விட்டது."
கை குலுக்கினாள். ஒரு இனிமையான மணம். முகப் பூச்செல்லாம் இல்லை.. உதட்டு சாயம் கூட இல்லை.. மறந்து விட்டாளோ..

"என்னை மன்னியுங்கள்" என்று கூறிக் கொண்டு அவினாஷ் வந்தான்..

"எனக்கு வெளியில் அவசர வேலை இருக்கு. நீ போகும் போது பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விடு. என்கிட்ட உன்னொரு சாவி இருக்கு" என்றான்.

"சந்தியாவைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயேன்.." என்று கூறிச் சிரித்தவள் என்னைப் பார்த்து.. "இவன் அவினாஷ்.. என் தம்பி.. இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுகிறான்.. கிரிக்கெட் எல்லாம் பார்ப்பீங்களா?"
கை குலுக்கி விட்டு, அவினாஷ் காணாமல் போனான்.

என்னைப் பற்றி விசாரணை.. பிறகு அவளைப் பற்றி வாழ்க்கைக் குறிப்புகள். பிடித்தது பிடிக்காதது.. சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய அரட்டை.. அமெரிக்காவில் என்ன கிடைக்கும்.. கிடைக்காது.. வாழ்க்கையின் தேவைகள்.. எதிர்பார்ப்புகள்..ஏமாற்றங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம்.. அவள் நடிப்பது பற்றிக் கேட்டேன்.. சும்மா விளையாட்டுக்கு நடிக்க தன் சித்தப்பா கூப்பிட்டதால் நடிக்கத் தொடங்கியதாகவும்.. அவர் படங்களில் மட்டும் நடித்து வந்ததாகவும்.. இப்பொது சில பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாகவும் சொன்னாள்.. இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வாங்கியிருப்பதாகவும் கூறினாள்.

இவ்வளவு நல்ல நடிகையாக இருந்துவிட்டு கலைச் சேவையைத் தொடர வேண்டாமா என்றதும் அழகாகச் சிரித்தாள்.. எனக்கு கல்யானம் செய்து கொண்டு வேலைக்கு ஆள் கூட வச்சுக்காம நானே சமைத்து துணி துவைத்து வீட்டில் இருக்கத்தான் ஆசை. சும்மா பள்ளிக் கூடத்தில் ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்குவது போலத்தான் இது.. எத்தனை பேர் உஷாவாகவும் ஷைனீ ஆகவும் வருகிறோம்.. அடுத்த திருப்பத்தில் வாழ்க்கை எதாவது புதியதாக வைத்திருக்கும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.. ஒன்றையே செய்தால் மற்ற சுவைகள் தெரியாது.. என்றாள்.

"நடிகர் அமரனைத் தான் நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்ததே?"

என்னை நிமிர்ந்து பார்த்தாள். "இதெல்லாம் படத்தை ஓட்ட சிலர் செய்யும் தந்திரம். சில சமயங்களில் நம் வளர்ச்சி பொறுக்காத சிலரும் இதெல்லாம் செய்வார்கள். அமரனுடைய புத்தி சாலித்தனத்துக்கு அவனை என் வீட்டில் தோட்ட வேலைக்குக் கூட வைத்துக் கொள்ள மாட்டேன்" என்றாள்

"யாருக்குமே அவினாஷ் உங்களுடைய தம்பி என்று தெரியாதா?"

"என் சித்தப்பாவை என் அப்பா தான் வளர்த்தார்..நான் பிறந்தது கூட மதுரை தான். அவரும் படித்துவிட்டு சினிமா எடுக்கப் போறேன் என்று போனது என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை.. தவிர அவர் வேறு ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் எல்லா தொடர்புகளும் அறுந்து விட்டன..அதன் பிறகு நாங்களும் சென்னைக்கு வந்து விட்டோம். இதெல்லாம் நடந்து ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இருக்கும். ஒரு சில சொந்தக் காரர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. ஒரு நான்கு வருடங்கள் முன்பு அப்பா இறந்ததற்கு இரண்டு நாள் கழித்து என் சித்தப்பா விஷயம் தெரிந்து துக்கம் கேட்க வந்தார். அப்போது தான் என்னைப் பார்த்து நடிக்க வருகிறாயா என்றார்."

கடைசியா ஒரு கேள்வி.. காலைல தொலைபேசில பேசும் போது ஏன் சிரிச்சீங்க..

"சாரி.. வேணும்னு இல்ல. அவினாஷ் உங்ககிட்ட பேசறதுக்கு முன்னாடி தான், ஒரு நல்ல இடமாதேர்ந்தெடுத்து வச்சுக்கோ.. அமெரிக்கா காரர் டேட்டிங் போலாம்னு சொல்லுவார்ன்னு சொல்லியிருந்தான். நீங்க வீட்டிலயே சந்திக்கலாம்னு சொன்னதும் சிரிப்பு வந்துடுத்து."

நான் மணியைப் பார்த்ததும் "அய்யோ 3 மணிநேரமா உங்களை அறுத்துவிட்டேன் .. சாரி" என்றாள்.

"நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ஒரு நிபந்தனை இருக்கு? "என்றேன்

நிமிர்ந்து பார்த்தாள்.. விருதுகளை வாங்கித்தந்த அத்தனை முகபாவங்களும் அவள் முகத்தில் இருந்தன..

"திருமணம் முடிந்து கட்டிய புடவையுடன் என்னுடன் வரவேண்டும்.. உன் பணம் எனக்கு வேண்டாம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அது வேண்டாம். இதற்கு ஒப்புக் கொள்வாயா?"

அவள் முகம் இப்பொது அழுது விடுவாள் போல ஆகி யிருந்தது.. "நானும் இதையே தான் உங்களிடம் கேட்பதாக இருந்தேன்.. இதுவரை நான் சம்பாதித்ததை எல்லாம் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு எழுதி வைத்து விடுவேன்" என்று.

நான் அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.. "என்னைப் பிடித்திருக்கிறதா" என்றாள். கையில் கொண்டு வந்திருந்த புத்தகம் நினைவுக்கு வந்தது.. அவளும் ஒரு சிறிய அட்டைப் பெட்டியை என்னிடம் கொடுத்தாள்.. அதில் என் இனிய வருங்காலக் கணவனுக்கு என்ரு இருந்தது.. பிரித்துப் பார்த்தேன். M என்று போட்ட ஒரு சிவப்புக் கல் மோதிரம்.

"என் பதில் இதோ" என்று என் புத்தகத்தை அவளிடம் கொடுத்தென்.. தலைப்பை உரக்கப் படித்தாள்

"நீ மட்டும் நிழலோடு".

Wednesday, September 28, 2005

119. நோயின் அறிகுறி

//நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. //தங்கர் இடத்தில் இருந்திருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டீங்களா விச்சு.. மனதைத்தொட்டு சொல்லுங்க

இந்தக் கேள்வி என் மனதில் சில சிந்தனைகளைத் தூண்டியது..

முதலில் அந்த கேள்விக்கு பதில்.. தங்கர் இடத்தில் இருந்தால் முதலில் அது போல பேசி இருக்க மாட்டேன்.. அனைத்துப் பெண்களையுமே தாயென்று எண்ணிய ராம கிருஷ்ண பரமகம்ஸரைப் போன்ற பக்குவம் இல்லை என்றாலும், இவ்வளவு மோசமாக எந்த பெண்ணையும் உருவகித்துக் கூடப் பேசமாட்டேன். அப்புறம் தானே மன்னிப்பு?

இரண்டாவது.. தங்கர் சொன்னது விமர்சனம்.. குஷ்பு சொன்னது கருத்து..சோ ஒரு கேள்விக்கு சென்ற வார துக்ளக்கில் பதில் சொல்லி இருந்தார்.. ஒரு உண்மையை தடுக்க ஒரு பொய் சொல்லுவார் பிறகு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லுவார் என்று.. தங்கர் விஷயம் அப்படித் தான்.. ஒரு பெண்ணுக்கு தரவெண்டிய சம்பளத்தைத் தரவில்லை. அது குறித்து அந்த பெண்ணால்/ அவர் முதலாளியால் நடவடிக்கை எடுக்கப் பட்டபோது அவர் இப்படி ஒரு விமர்சனம் செய்தார். இதே கம்யூனிஸ மொழியில் அதிகார வர்கத்தின் அகங்காரம் என்று சொல்லலாமா?

தன் பங்குக்கு அவர் சரியாக இருந்து மற்றவர் தவறு செய்யும் போது இந்த கருத்தைக் கூறி இருந்தாரென்றால் அவரைப் புரிந்து கொள்ள முடியும்.

(இதையும் சிந்தித்துப் பாருங்கள், ஒரு ஏழைப் பெண்ணின் வயிற்றிலடித்து ஏமாற்ற முயற்சிப்பது நியாயமா.. அவர் தான் அந்தப் பணத்தைக் கொடுத்து அடுத்த நாள் படப்பிடிப்பு நடந்தது.. நடிகை அந்த பணத்தைக் கொடுத்திருக்கலாமே என்றால் நடிகை ஏன் தரவேண்டும்? படமெடுத்து வரும் லாபத்தில் ஒரு பத்து பைசா நடிகைக்கு தரப் போகிறாறா என்ன? அப்புறம் எல்லாரும் 21 நாள் அறிவிப்பு கொடுத்துதான் வேலை நிறுத்தம் செய்வார்களா என்ன? அவர்களுக்குத் தெரிந்த வழியில் வசூல் செய்தார்கள்.. உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் வேலை செய்பவர், எதோ காரணம் சொல்லி (சொல்லாமல்) வேலைக்கு வராவிட்டால், வேலைகள் முடங்கி விட்டன என்று அவர்கள் அனைவரும் இப்படி என்று வகைப் படுத்தி கூறுவீர்களா?)

குஷ்பு தன் கருத்தைக் கூறி இருக்கிறார்.. இதில் தமிழர் பண்பாடு எப்படி பறிபோகும் என்பது ஒரு கேள்வி.. கமலகாசன் சாரிகாவுடன் திருமணம் முறிந்ததும் (அதற்கு முன்பே கூட) இந்த திருமணம் என்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி சேர்ந்து வாழ்தலை ஆதரிக்கும் விதமாகப் பேசி இருக்கிறார். (சரிகாவையெ திருமணம் செய்யாமல் தான் 2 மகள்களைப் பெற்றார் என்பதும் ஒரு நினைவு.. சரியாகத் தெரியாததால் அடைப்புக்குள் இடுகிறேன். தவறாயிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறென்.. உடனே நீக்கவும் செய்கிறேன்). நடிகர் படத்தில் புகை பிடித்தாலே நாடு கெட்டு விடும் காலத்தில், இப்படி ஒரு கருத்து கூறியதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு.. இன்று குஷ்பு சொன்னதை தமிழ்ப் பண்பாட்டில் பொட்டலம் கட்டி கடைத்தெருவில் விற்கிறீர்களே?

நம்முடைய தலைவர்கள் கூட மணம் புரிந்த மனைவியை அரசியல் லாபத்துக்காக "தன் மகளின் தாய்" என்று சபையில் கூறியதும் தமிழ் பண்பாட்டில் தான் வருகிறதோ?

இதே தங்கர் மேல் ஒரு திருச்சி பெண் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு எழுப்பிய போது யாரும் பேசவில்லையே. எழுப்பியவர் பெயர் தெரியாத ஒரு பெண் (அவர் மதம் பற்றி நான் ஏதும் குறிப்பிடவில்லை) என்பது தானே காரணம்.. மடாலயத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்றவர்கள் இதில் புகையே இல்லை என்று கூறியது தமிழனுக்கு தமிழன் செய்யும் உதவி. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.. "ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம்.. அதற்கென்று பெண்ணினமோ.. இது யார் பாவம்? "

மூன்றாவது, ஒரு பதிவில் "அடத் தூ.." என்று ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார்.. சில காலம் முன் ஒரு அமெரிக்க இந்திய குடும்பம் அவர்கள் முதல் பையனுக்கு இந்தியாவில் திருமணம் செய்தார்கள்.. இரண்டு வருடத்தில் அந்த பெண் திரும்ப வந்து விட்டார்.. அந்த அமெரிக்க இந்திய குடும்பம் "அந்த பெண்ணின் வளர்ப்பு சரியில்லை.. அவர் தன் கணவரின் இளைய தம்பியின் முன் நின்று நேருக்கு நேர் பேசுகிறார். மாமனார் முன்னால் நாற்காலியில் அமர்கிறார் " என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. அவர்கள் படிக்காதவர்கள் அல்ல. அந்த இளைய தம்பி தான் உலகத்திலேயே மிக குறைந்த வயதில் மருத்துவர் ஆனவர்.. இது செய்தித் தாள்களில் பரபரப்பயிருந்தது.. அவர்கள் இந்தியா வந்த போது, பெண்ணைக் கொடுமைப் படுத்தியதற்காக கைது செய்யப் பட்டார்கள்..

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. அந்தப் பத்திரிக்கை எடுத்த கருத்துக் கணிப்பில் தமிழகம் சென்ற முறை எடுத்த கணிப்பை விட இது போன்ற விஷயங்களில் மோசமாகி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இவர்கள் எங்கள் வீட்டுப் பெண்கள் இன்னும் ஓடிப் போக வில்லை.. தமிழகம் அதனால் நன்றாகத்தான் இருக்கிறது என்ற வகையில் கருத்து தெரிவிக்கிறார்கள்..

அந்த அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பம் போல தற்கால நடப்புகளிலிருந்து செயற்கையாய் விலகி இருக்காதீர்கள். உங்கள் வீட்டுப் பெண் நாளை வேறு ஒருவருடன் சேர்ந்து இருந்தாலும் என்ன செய்வீர்கள்.. அரிவாளால் வெட்டுவீர்களா.. இல்லை சினிமா போல எங்கள் வீட்டுப் பெண் செத்துப் போய் விட்டாள் என்று சொல்லிவிடுவீர்களா.. எண்பதுகளில் காதல் திருமணம் செய்வது என்பதுகூட ஒவ்வாததாக இருந்தது.. இன்றைக்கு எல்லாரும் ஒத்துக் கொண்டு சாதி மத வேறுபாடின்றி செய்து கொடுக்கிறார்கள்.

முதன் முதலில் அமெரிக்காவில் ஓரினத் திருமணம் செய்து கொண்ட பெண்களில் இந்தியர்கள் இருந்தார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அதிக பட்ச பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எயிட்ஸ் நோய் தாக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது பெருமை தரும் செய்தியல்ல.. மாதவியும் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறாள் என்றதற்குத்தான் இந்த "அட தூ". எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவல்லவா... அப்படி பார்த்தால் இந்த செருப்பு துடைப்ப பொராட்டம் என்ன?..


உண்மைகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்கள்தான் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்றால்.. பாவம் தமிழ் பண்பாடு..

இவை அனைத்துக்கும் மேலாக, பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் போது சில கட்டுப் பாடுகளைக் கடை பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதிலும் கருத்து தெரிவித்திருக்க மாட்டேன்.. ஆனால் சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குவதாக, கூறப்பட்ட நோயின் அறிகுறிகளைத் பொய் யென்று அரசியல் லாபத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் சொல்வதால் தான் இந்தப் பதிவுகளெல்லாம். ஓடி ஒளிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை.

இந்தப் பதிவில் சில பின்னூட்டங்களை எடுத்தாண்டிருக்கிறேன்.. இது பொதுவான ஒரு சிந்தனை. அந்தக் குறிப்பிட்ட பதிவர்களுக்கு நான் தரும் பதில் அல்ல

அன்புடன் விச்சு

Monday, September 26, 2005

118. குஷ்பு சொன்னது..

குஷ்பு என்ன சொன்னார்..

இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்,

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதில் பெங்களூரை விட சென்னை பின் தங்கியிருந்தது. இப்போது சென்னைப் பெண்களும் செக்ஸ் பற்றிய மனத் தடைகளை கடந்து வருகின்றனர். செக்ஸ் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேச முடிகிறது.

ஒரு பெண் தனது பாய் பிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அதை தன் பெற்றோரிடம் சொல்லலாம். தங்களது பெண் சீரியஸான ஒரு உறவை வைத்திருக்கும்போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.

கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் எங்கள் உறவு குறித்து நிச்சயமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள். குழந்தைகள் எங்களுடனேயே தூங்குவதால் எங்களுக்கென்று நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிருக்கிறது.

மண வாழ்வில் ஈடுபடும் பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடையச் செய்வது தான் ஆனந்தம். சில தம்பதிகள் செக்ஸ் புத்தகங்கள், படங்களைப் பார்த்து இன்பத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது.

பெண்கள் தங்கள் செக்ஸ் விருப்பங்களைப் பேசினால் அவர்களைத் தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டிக்கு பல பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஷ்பு, தனது கருத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தையும், தமிழ்ப் பெண்களையும் கேவலப்படுத்தி விட்டார், அவமானப்படுத்தி விட்டார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குஷ்புவின் கலாச்சார இழிவுப் பேட்டியைக் கண்டித்து தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்புவை தமிழகத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷமிட்டனர்.

தமிழ்ப் பெண்களுக்கு மாசு கற்பிக்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தமிழ்ப் படங்களில் கூட அப்படிப்பட்ட வேடங்களில் நான் நடித்ததில்லை. இந்தியா டுடே நடத்திய சர்வேயின் முடிவுகளின் அடிப்படையில் அதுகுறித்து நான் வேதனையுடன் தெரிவித்த கருத்துக்கள் அப் பத்திரிக்கையில் தவறாக வந்து விட்டது.

யாரையும் புண்படுத்துவதற்காக அப்படி நான் பேசவில்லை. இந்த விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக வரும் என்று நான் நினைக்கவில்லை. இப்பிரச்சினை வந்ததையடுத்து நான் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டதாக வெளியான தகவல் எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது. 3 மாதத்திற்கு முன்பே திட்டமிட்ட பயணம் அது.

தமிழ்ப் பெண்களின் மனதைப் புண்படுத்தும்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் குஷ்பு அழுதவாரே.

பெண்களை இழிவாக பேசியதற்காக நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப் பேற்று நடிகர் சங்கப் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் தமிழ்ப் பாதுகாப்பு இயக் கத்தை சேர்ந்த பெண்கள் சென்னையில் நேற்று நடிகர் சங்கம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் குதித்தனர்.

பெண்களை பற்றி இழிவாக பேசிய குஷ்பு கைது செய்யப்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பு பெண்களை இழிவாக பேசியதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்கத் தலைவர் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். நடிகர் சங்கத்திற்கு விடுமுறை நாள் என்பதால் அங்கு யாரும் இல்லை.

இதற்கிடையே குஷ்புவுக்கு எதிராக பாமகவும் போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இதுகுறித்து பாமக மகளிர் சங்க தலைவி சக்தி கமலாம்பாள் விடுத்துள்ள அறிக்கையில், நடிகை குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களின் வாழ்முறையையும் கேவலப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.


அவரது கருத்தைக் கண்டித்து அவரது வீட்டு முன்பு மகளிர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம். தான் கூறியுள்ள கருத்துக்களுக்காக குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் கேட்காவிட்டால், தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக பிரமாண்டமான அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.


இது தினமலர் மற்றும் தட்ஸ் தமில் வலைப் பக்கங்களிலிருந்து எடுதாளப் பட்டிருக்கிறது.

இதைப் பார்க்கும் போது சில கேள்விகள் மனதில் வருகின்றன..

1.குஷ்பு என்ன சொன்னார் என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை.. மேலெ வந்திருக்கும் செய்தி சரியான தாக இருந்தால், அவர் தமிழர் பண்பாடு பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை.. யாராவது உண்மையான கட்டுரையைப் தட்டச்சு செய்து அல்லது scan செய்து இட முடிந்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.

2. தமிழகத்தில் இந்தியா டுடேய் படிப்பவர்கள் எத்தனை பேர்? இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிந்தெ இருக்காது இவர்கள் விளம்பரப் படுத்தாவிட்டால்.. ஆக இவர்கள் குறிக்கோள் இந்தக் கருத்து தமிழ் மக்களிடையே பரவக் கூடாது என்பதல்ல..

3. நம் வலைப் பதிவுகளில் குழலி இது பற்றிய பதிவில் "சகஜம்" என்ற பதத்தைக் கையாண்டிருக்கிறார்..

"குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், "

இந்த பேட்டியில் அது போன்ற கருத்துக்கள் கூறப்படவில்லை.

4. அதே பதிவில் "எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!" என்றும் கேட்டிருக்கிறார்

இதுவும் திரித்தல் தானே.. இவர் தங்கர் ஆதரவாளர் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

5. அதில் பின்னூட்டமிட்ட ஒருவர் "முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண்ணின் கருத்தை வைத்து 'இஸ்லாமிய நெறி'யை இகழ்ந்துரைக்க ஒரு வாய்ப்பு என்று சரி காண்கிறவர்கள்.ஆனால் இந்த பி.ஜே.பிக்காரர்கள் 'தமிழுணர்வால்' தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல" என்று கூறிருக்கிறார்.. இதில் மதமோ, குறிப்பிட்ட கட்சியோ எங்கு வந்தது என்று தெரியவில்லை

6. குஷ்பு சொல்லித்தான் தமிழர் பண்பாடு வாழவோ வீழவோ வேண்டும் என்பதைப் பார்க்கும் போது, தமிழர் பண்பாடு மேல் ஒரு நம்பிக்கை இன்மை வருகிறது..

7. கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான் இந்த கருத்தில் அவர் பெண்ணின் கன்னித்திரை பற்றிக் கூறியதாகவே படுகிறது. சமீபத்தில் திருமணத்தில் இதனால் பிரச்சினை வருகிறதென்று அறுவை சிகிச்சை செய்து கன்னித் திரையை செப்பனிட்டுக் கொள்கிறார்கள் என்று படித்த நினைவு.. நம் ஊர்களில் இன்னமும் முதலிரவுக்குப் பிறகு படுக்கையில் இரத்தக் கறை தேடும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

8. தினமலர் இன்று ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது பார்க் ஓட்டலில் குடித்துக் கும்மாளமிடும் ஒரு கும்பல் பற்றி.. இவர்கள் எல்லாம் குஷ்பு பேட்டியைப் படித்து தான் இப்படி செய்தார்கள் என்று நல்ல வேளையாக யாரும் கூறவில்லை.

9. கற்பை அவர் அவர் மனசாட்சிக்கு விட்டு விடுதல் நலம்.. தேன்துளி இது பற்றி அருமையாக எழுதி இருக்கிறார். பிறறால் ஒழுக்கங்கள் நடைமுறைப்படுத்தப் படும் போது தான் வன்முறை தலை தூக்குகிறது. இது குறித்த ஒரு செய்தி என் பதிவில்http://neyvelivichu.blogspot.com/2005/08/105.html

10. விஜயகாந்த் ராஜினாமா வேண்டுகொள் பற்றி படித்ததும் "தென்னை மரத்தைப் பற்றி கட்டுரை எழுதத் தெரியாதவர் பசு பற்றிய கட்டுரை எழுதி.. பசுவை தென்னை மரத்தில் கட்டுவோம் " என்று சொன்ன கதை நினைவுக்கு வந்தது..

இது மொத்தமும் ஒரு அரசியல் கூட்டணி ஒரு நடிகரை எதிர்க்கப் பயன்படுத்தும் செயல் முறைகள் என்று தோன்றுகிறது.. இது குஷ்பு கற்பைப் பற்றி சொன்னது மட்டு மல்ல.. நாளை எதாவது படத்தில் ஆங்கிலத்தில் வசனம் வந்தால் கூட போராட்டம் நடத்துவார்கள்..

இவர்கள் நிஜமாகவே இந்த விஷயத்தில் அக்கறை உள்ளவர்களாயிருந்தால் தமிழகத்தில் அழகிகள் கைது என்று செய்தி வராது. இது அரசியல் லாபத்துக்கு மட்டுமே செய்யப்படும் கூத்து.. யாருக்கோ அடுத்த தேர்தலில் அதிக இடங்கள் கேட்க வேண்டும்.. குஷ்பு மாட்டிக் கொண்டார்.. இன்னும் நிறைய பேர் வருவார்கள்.

நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. அவருக்கும் அரசியல் ஆசை இருப்பது போல் தோன்றுகிறது.. அதனால் தான் உடனே மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

அன்புடன் விச்சு

Thursday, September 22, 2005

117. சானியாவும் '-' குத்தும்.

நேற்று சானியாவின் பாலி, கொல்கொத்தா போட்டிகளின் தோல்வி குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். சானியா சானியா

இந்தப் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள கருத்து நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. இதுவரை வந்துள்ள ஐந்து வாக்குகளில் நான்கு "-" வாக்குகள்..

"-" வாக்கு அளிப்பவர்கள் அதற்கான காரணத்தையும் கூறினால் இது போன்ற தவறான கருத்துக்களைத் (??)திருத்திக்கொள்ள உதவும்....

இந்தக் கருத்து இருவரைத்தவிர யாருக்குமெ என் கருத்துக்கள் பிடிக்காமல் போனது விந்தை..

விளையாட்டில் மதம் நுழைவதை ஆதரிக்கும் பலர் (இந்த பதிவை எதிர்த்து வாக்களித்தவர்களை வேறு என்ன சொல்வது) அரசியலில் மதம் கலப்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஒரு பெண்ணின் மன உளைச்சலைத் தரும் இது போன்ற விஷயஙளை ஆதரிக்கும் அவர்களே, பெண் விடுதலை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

சுதந்திர நாட்டில் ஒரு இனத்தில் பிறந்ததற்காக ஒரு பெண்ணின் வளர்ச்சி தடைப் பட வேண்டுமா.. இவர்களுக்கு தடை சொல்லும் மக்கள் ஏன் தீவிரவாதிகளுக்கும் நிழல் மனிதர்களுக்கும் தடை சொல்வதில்லை..
மதம் எல்ல வற்றையும் தட்டிக் கேட்க்க வேண்டும் இல்லை எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். வலியவர் தவறு செய்தால் பார்த்துக்கொண்டிருப்பதும் ஏமாந்த எளியவரை துன்பப்டுத்துவதும் தவறு..

அனனிமஸ் பின்னோட்டமிருந்தால் இந்த சிங்கங்கள் அசிங்கமான தங்கள் கருத்துக்களை அழகாக இட்டிருப்பார்கள்.. நேரில் நின்று பேசினால் பெயர் கெட்டுவிடுமே என்று எண்ணும் கூட்டம்..

உங்கள் கருத்தில் தெளிவாயிருங்கள்.. எந்த மேடையிலும் பதிவிலும் முகம் காட்டி பெயர் சொல்லி கருத்து சொல்வதில் பயம் இருக்காது.

இங்கே பதிபவர்கள் எல்லாரும் வளர்ந்த முழு மனிதர்கள் (adults) தான்.. குழந்தைகளோ விடலைப் பிள்ளைகளோ இல்லை. தெரியாமல் செய்தால் தான் தவறு தெரிந்தே செய்வது குற்றம். ஒரு பதிவைத் தவறு என்று குறிப்பிட உங்களுடைய பக்க நியாயத்தையும் மற்ற வலைப்பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பெயர் சொல்லி கருத்து சொல்வதில் என்ன பயம்..

துணிவே துணை.. துணிந்து பெயரிட்டு எழுதுங்கள்.

அன்புடன் விச்சு

116. சானியா சானியா











வெற்றி பெற்ற பொழுதெல்லாம் பதிவு போட்ட நான் இப்போது தோற்றதுக்கும் பதிவு போடுகிறேன்.


இந்தப் பெண் குட்டைப் பாவாடை அணிய வில்லை என்று ஒரு பத்திரிகை முதல் சுற்று வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருந்தது.. இவர்கள் அடித்த கூத்து மனதில் எந்த விதமான உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது கேள்வி. பாலியில் தோற்றதற்கும் இங்கே தோற்றதற்கும் அது தான் காரணமோ என்றும் தோன்றுகிறது.

இவரது உடைகளைக் கட்டுப் படுத்தத் தொடங்கினால் கடைசியில் இவரும் கறுப்பு முக்காட்டிற்குள் ஒளிந்து கொண்டு பிள்ளை பெறும் இயந்திரமாக வேண்டியது தான்..

முழு உடை அணிந்து கொலை கொள்ளை சூதாட்டம் ஆடினாலும் கண்டு கொள்ளாத மதம், நன்றாக ஆடிப் பெயர் பெற்றார் என்றதும் முன்னால் வந்து முகத்தைக் காட்டுவதேன்.. நிழல் மனிதர்கள் பலரும் இவர்கள் மதத்தவர்கள் தானெ.. அவர்களுக்கு ஒரு தடை உத்தரவு தரலாமே.. ஏன் செய்யவில்லை?

அய்யா இந்த பெண்ணை விட்டு விடுங்கள்.. அவரது திறமையை வீணாக்கி விடாதீர்கள்..இந்த கருத்துக் கணிப்பு அமெரிக்க ஓப்பனில் எடுக்கப்பட்டது.. நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் இவரை கறுப்பு மேகங்கள் சூழ்ந்து மறைக்க வேண்டாம்..

அன்புடன் விச்சு

Monday, September 19, 2005

115. அழகான ராட்சசியே

இந்தப் படங்களில் இருக்கும் பெண் யார்..



சிவாஜி படத்துக்கு சங்கர் கண்டு பிடித்திருக்கும் புதுமுகம்?



































இவ்வளவு அழகா..







இவர் என்ன பாலிவுட்டின் புதிய ஐஸ்வர்யா ராயா?

எந்த சினிமாவில் நடிக்கிறார்..

உங்கள் கேள்விகள் புரிகிறது..

இவர் தான் தரன்னும் கான் என்று வலையில் மின்னஞ்சல் மூலம் பரப்பப்பட்டு வந்தது..

இவர் பெயர் தமன்னா பாட்டியா. இவர் தெலுங்கு படங்களில் (எனக்கு தெரிந்து ப்ரதர்) நடிப்பவர்.







அருகில் தரப்பட்டிருக்கும் புகைப்படம் தான் தரன்னும் கான் என்று தெரிய வருகிறது. சமீபத்தில் கிரிகெட் பெட்டிங்க்காக கைது செய்யப்பட்டவர்.. பார் நடனக் காரி.. முத்தைய்யா முரளிதரன் பெயரும் இதில் கிசுகிசுக்கப் படுகிறது..
இந்த பெட்டிங் தீ எத்தனை ஆட்டக்காரர்களின் வாழ்வை எரிக்கப் போகிறதோ?

அன்புடன் விச்சு

தரன்னும் கான் வெளியில் (நீதிமன்றத்திற்கு) போகும் போது கறுப்பு உடை அணிந்து (புர்கா) சென்றார் என்பது குறிப்பிடத்த்தக்கது. நடனம் ஆடும் போதும் அதே உடை தான் அணிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

Saturday, September 17, 2005

114. வாத்துப் போட்டி.

வாத்துப் போட்டி.

இது நிஜமாகவே வாத்துப் போட்டி..

ரப்பர் வாத்துப் போட்டி.

குளிக்கும் தொட்டியில் (bath tub) நீர் நிரப்பி குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது தொட்டியில் மிதக்க விடப்படும் பொம்மை இந்த ரப்பர் வாத்து (rubber duckie) .

கானடாவின் ஒட்டாவா நகரில் வருடம் தோறும் வசந்த காலத்தில் பனி உருகும் போது இந்த போட்டி நடத்தப் படுகிறது.. (நம்ம கனடா வலைப்பதிவாளர்கள் யாருமே இதைப் பற்றி எழுதவில்லையே?)

ஒரு கன்டைனெரில் பொம்மை வாத்துக்கள் நிரப்பப் பட்டு ஆற்றில் கொட்டப்படும்..

முதலில் வரும் வாத்துகள் மேல் பணம் கட்டியவருக்குப் பரிசு.. 5 $ கட்டணம். இதில் வரும் பணம் குழந்தைகள் கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவ மனைக்கு வழங்கப் படுகிறது..

இது போக, Hawaiiலும் ஒரு போட்டி நடக்கிறது.. இதன் வருமானம் செரிபரல் பால்சீ நோய் கழகத்திற்கு வழங்கப் படுகிறது.

மேலும் பல சிறு ஊர்களிலும் பல பொது நல காரணங்களுக்கு பணம் பெற இதே போல் போட்டிகள் நடத்தப் படுகின்றன..

நம்ம ஊரிலும் நடத்தப் படுகிறதா? விவரம் அறிந்தவர்கள் கூறுங்கள். (தண்ணி எங்கெ இருக்கிறது என்கிறீர்களா?)

சரி அப்படி என்ன இந்த ரப்பர் வாத்துகளுக்கு கிராக்கி என்று கேளுங்கள்.. உங்கள் குழந்தைகளை கேட்டுப் பாருங்கள்.. சேசமெ தெருவில் (sesame street) இருக்கும் ஏர்னி (Ernie) என்ற பொம்மை (puppet) யின் நண்பன்..

அவர்

Rubber Duckie, you're the one,
You make bathtime lots of fun,என்று பாடுவார்..

தமிழில்..

ரப்பர் வாத்தே, நீ என் நண்பன்
குளிக்கும் பொழுது உன்னால் இன்பம்..(எப்படி மொழிபெயர்ப்பு.. மொழி பெயர்த்தலுக்கு ஒரு போட்டி வைக்கலாம்)


அன்புடன் விச்சு

மீண்டும் சுஜாதா..

கற்றதும் பெற்றதும் எழுதி சுஜாதா எதைப் பெற்றரோ இல்லையோ நிறைய சர்ச்சைகளைப் பெற்றிருக்கிறார்.

சில காலம் முன்பு வலைப்பதிவில் சுஜாதா சொன்னது தவறு என்று பல பதிவுகள் காணக் கிடைத்தது.

இப்பொது காலச்சுவடில் ஒரு கட்டுரை. http://tamil.sify.com/kalachuvadu/aug05/fullstory.php?id=13911806
படித்துப் பாருங்கள்.. அதைப் படித்ததும் எனக்கும் சில கருத்துக்கள் தோன்றின..

1. "நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள் போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபýக்கும்.
யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாளதாசர் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்.'(ஆனந்த விகடன் 17.4.05)

அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களாக இருக்கும். ஆதாரம் காட்டுங்கள் ஆதாரம்!!

கோம்பை எஸ். அன்வரின் கடிதம்: "விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்"

2.நம்மை ஆண்ட ஜரோப்பியக் காலனிய ஆதிக்கவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியோடும் மத ரீதியாகப் போரிட்ட தங்களுடைய வரலாற்றின் பிரதிபýப்பாக இந்திய வரலாற்றை எழுதும்போது தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளுடன், பாரபட்சமாகவே எழுதியுள்ளனர் என்பதை நன்கறிந்தவன் நான். அத்தகைய வரலாற்றைக் காலனிய ஆதிக்கத்திýருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மவர்கள் சிலர் அறியாமையிலும் பலர் அரசியல் சுயநோக்குடனும் பின்பற்றிவருகின்றனர். இத்தகைய தவறான வரலாற்றுத் தகவல்களால் நாம் இந்தியப் பிரிவினை, மதக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என்று அதன் பலனை இன்னமும் அனுபவித்துவருகின்றோம்.

அப்படியே கீழ ஒருத்தர் எழுதி இருக்காரு பாருங்க.. இதே இங்கிலீஷ் காரன் எழுதிய சரித்திரம்..

3. 'முகம்மதியர்கள் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது, மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் படையெடுப்பு என்ற வார்த்தை கொலை, கொள்ளை போன்றவற்றையே நமக்கு நினைவுபடுத்தக்கூடியது. அது மட்டுமன்றி முகம்மதியர்கள் படையெடுப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர் என்ற தவறான கருத்தையும் இது சித்தரிக்கின்றது.

தமிழகத்திலேயே வாழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழக அரசர்களின் படைகளில்கூடத் தமிழக முஸ்ýம்கள் இடம்பெற்றிருந்தபோது 'முகம்மதியப் படையெடுப்பு' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகத் தவறானதாகவே படுகின்றது.

அட அப்படிஎல்லாம் நடக்கவே இல்லைங்க.. எல்லா முஸ்லிமும் இந்தியாலயே தான் உற்பத்தியானாங்க.. சிவாஜி குரு கோபிந்த்சிங் எல்லாம் வெள்ளக் காரன் எழுதின கதை. இந்தியாவில எந்த முஸ்லிம் அரசரும் படைஎடுக்கவே இல்லை.. இந்துக்கள் வரலாறை மாற்றி எழுதிவிட்டாங்க..

4. தவிரவும் இந்திய வரலாற்றில் 'முகம்மதியர் படையெடுப்பு' என்றால் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு என்ற மாயை உள்ளது. வரலாற்றைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் சேர, சோழர், பாண்டியர், சாளுக்கியர், ஹொய் சாலர்களின் படையெடுப்புகளிலும் கொலை, கொள்ளை, கோயில் இடிப்பு மற்றும் சிலைகளை அபகரித்தல் போன்றவை நடந்தேயுள்ளன.
11ஆம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு குறித்து அங்கலாய்க்கும் மேற்கு சாளுக்கியக் கல்வெட்டுக்களைப் படித்துப் பாருங்கள். அதேபோல் 15ஆம் நூற்றாண்டில் கýங்க மன்னன் கபிலேஸ்வர கஜபதியாவானின் தமிழகப் படையெடுப்பில் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டு அங்குள்ள ஆபரணங்களும், சிலைகளும் அபகரிக்கப்பட்டன. இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களுடன் கூடிய வரலாற்று நிகழ்வுகளை எம்மால் எடுத்து வைக்க இயலும். ஆனால் இது அன்றைய கால கட்டத்தின் இயல்பு என்பதாலும், ஆறிப்போன இரணங்களை மீண்டும் கிளறுவதாக அமையும் என்ற பொறுப்புணர்வினாலும் தவிர்க்கிறோம்.

பாத்தீங்களா.. எத்தனை மன்னர்கள் செஞ்சிருக்காங்க.. முஸ்லிம் மன்னர்கள்செய்ததும் அதுதான்.. இதுக்கு போய் தப்பு சொல்லிகிட்டு..

அது சரி.. முதல் பத்தில இதெல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு அடுத்த பத்தில மத்தவங்களும் செஞ்சிருக்காங்கன்னு எழுதினா என்ன அர்த்தம்?

5.இத்தகைய சிந்தனையுடனே திரு. சுஜாதா மேற்கோள் காட்டியுள்ள 'கோயில் ஒழுகு' நூலை பெறப்பெற்று வாசித்தோம். முதýல் கண்ணில்பட்டது எண்ணிக்கைப் பிழை. நூýல் குறிப்பிடப்பட்டுள்ள 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள், 13,000 ஆக சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் உயர்ந்திருக்கிறார்கள். இதனை அச்சுப் பிழை என்று ஒதுக்கிவிடலாம்.

பதிமூன்றாயிரமா?.. பன்னிரெண்டாயிரம் பேர் தான் செத்தார்கள்.. அதனாலென்ன.. ஆயிரம் பேரை அதிகமாக கொன்ற சுஜாதா ஒழிக.

6. நூலைப் புரட்டுகையில் இன்னொரு குறிப்பும் நமது கண்ணில்பட்டது. பக்கம் 468இல் 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்' என்பது 'பன்னீராயிரம் குடிமக்களுடைய தலையைத் துண்டிக்கப்பட்ட நிகழ்ச்சி என்று பொருள்படும்' என்று விளக்கம் காணப்படுகிறது. ஆக 12,000 குடிமக்கள் ஸ்ரீவைஷ்ணவர்களாக அவதாரம் எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை.

சுஜாதாவும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். வைஷ்ணவர்கள் எல்லாரும் பிராமணர்கள் அல்ல.. உதாரணம் காந்தி.. திருப்பதி பாலாஜியை வழிபடும் பெரும்பாலானவர் வைஷ்ணவர்கள் தான். அது சரி.. சாதாரணமக்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா..

7. இவ்வாறாகப் பல கேள்விக்குரிய முரண்பாடுகளுடன், சங்கப் பரிவாரத்தின் பத்திரிகையான 'பாஞ்சஜன்ய'த்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்த 'கோயிலொழுகு' நூல் ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சார்யர்

உண்மை இதோ.. அவர் பஞ்ஜஜன்யத்தில் கட்டுரை எழுதினால் அவருடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை.

8. ஜெ. ராஜா முகமதுவின் கடிதம்: 'ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ' ஆனந்த விகடன் 17.4.05 இதழில் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபýக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்ý சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்ýம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்ýம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை.

ஆறாவது குறிப்பை பாருங்க.. அன்வர் எதோ ஒரு செய்யுளுக்கு விளக்கம் குடுத்திருக்காரே.. அது சமய குறிப்பா.. சரி சரி.. வரலாறு இல்லை..



9. அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திýருந்து சுஜாதா எடுத்தார்?

10. திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்ý சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிýல் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்ýணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?

துலுக்க நாச்சியாரோட தான் தினமும் காலை உணவு இன்னிக்கும் திருவரங்கத்தில.. ரொட்டிதான் சாப்பிடரார்.. அது சரி அதுக்கும் இதுக்கும் என்னங்க தொடர்பு.. விட்டா ஜார்ஜ் புஷ் கெட்டவர்னு எழுதினாரா சுஜாதா இந்த கட்டுரைலன்னு கேட்பீங்க போல இருக்கே

11. இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாýக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார்.

யாரோ மசூதில சொல்லி கொடுத்தி சொல்லராப்போல இல்ல எல்லாரும் ஒரெ கருத்த சொல்லராங்க.


சுஜாதாவின் எதிர்வினைகள்

12. "இப்போது தயங்குகிறேன்'ஆனந்த விகடன் 1.5.05 மற்றும் 17.4.05 இதழ்களில் பிரசுரமான க-பெ விஷயங்களுக்கு வந்த கடிதங்களில் குறிப்பிடத்தக்கவை இவை ...
... அடுத்து, குறும்படம் தயாரிக்கும் கோம்பை எஸ். அன்வர் நுங்கம்பாக்கத்திýருந்து ஒரு நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். 'கோயில் ஒழுகு' பிரதியை வாங்கி வாசித்ததாகவும், 'அதில் 12,000 பேர் கொல்லப்பட்டதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. 13,000 என்று ஒரு ஆயிரம் ஜாஸ்தியாகச் சொல்ýவிட்டீர். குடிமக்கள் தலைதான் வெட்டப்பட்டதாக அந்த நூýல் உள்ளது. எப்படி அவர்களை ஸ்ரீவைஷ்ணவராக்கினீர்? மொத்தச் செய்தியின் சரித்திர ஆதாரமே தப்பானது. முரண்பாடுகள் கொண்டது. இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது விஷ வித்துக்களை விதைப்பது போலாகும்' என்று எழுதியுள்ளார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றால் அந்தணர்கள் மட்டுமல்ல, திருமாலைத் தொழுபவர்கள் அனைவரையும் அப்படிச் சொல்வோம். அவர்கள் காலைப் பிடித்துக் கொள்வோம்! பார்க்க எ.பி.க.

தமிழ்க் கொலை, விஷவித்து, விபரீதக் கற்பனை விரிப்பு ... இன்னும் என்னவெல்லாம் பரிசுகள் காத்திருக்கின்றனவோ! ஒன்று மட்டும் சொல்ல முடிகிறது ...

இந்தப் பகுதி மிக மிக உன்னிப்பாக மிகப் பலரால் படிக்கப்படுகிறது. எப்படாப்பா தப்பு வரும் என்று ஜனங்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, முஸ்ýம்கள் பற்றி எதுவுமே சொல்லக் கூடாது.

அது தான் உண்மை.. முஸ்லிம் களைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாது. உ.பி அளவு முஸ்லிம்கள் இங்கெ இல்லை. இருந்தால் இது ஒட்டு தரும் ஒரு அரசியல் பிரச்சினை ஆகி சுஜாதாவுக்கு தூக்குக் கயிறு மாட்டியிருப்பார்கள்.

சானியா மிர்சா அணியும் உடையை மாற்றா விட்டால் கொல்கொத்தாவில் விளையாட விட மாட்டோம் என்று ஒரு கும்பல் மிரட்டி இருக்கிறது. கேட்டால் நமது வலைப்பூ அன்பர்கள் அவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்.. ஆனால் இந்துக்களைப் பற்றி பேசும் போது ஷிவ சேனாவும் குஜராத்தும் தான் குறிப்பிடப்படும்.. கோவையிலும் இந்துக்கள் தான் குண்டு வெடித்தார்கள்..

எங்கேயோ இடிக்கிறதே.. 90 சதவீதம் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் இனத்தின் அடையாளம்.. தேடிப் பாருங்கள்.. தெரியும்.

Friday, September 16, 2005

மகாலட்சுமியும் ஆந்தையும்

எல்லாரும் வாத்து பதிவே போட்டால் நன்றாக இருக்காது என்று என் சார்பில் ஒரு ஆந்தை பதிவு.

ஒரு மாதம் இந்தியனாபோலிசில் இருந்து திரும்ப நியூஜெர்சி வந்தால் போதும் என்றாகி விட்டது.. ஊர் மிக மிக பொறுமை. எனக்கு தாங்கவில்லை..

அங்கே ஒரு குழந்தைகள் அருங்காட்சியகம் இருக்கிறது. உலகத்திலேயே மிகப் பெரியதாம். அமெரிக்காவில் யாராவது உலகத்திலேயே என்று கூறினால் நாங்கள் எந்த உலகத்தில் என்று கேட்பது வழக்கம். ஏனென்றால் அங்கே உலக அளவில் என்று குறிப்பிடப்படும் விளையாட்டுகள் எல்லாம் அவர்கள் மானிலங்களுக்குள்ளே தான் நடக்கும். நியூயார்க்கைத் தாண்டி எதுவுமே இல்லை இந்த நாட்டில்.

ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் , இராக் போன்ற நாடுகளுடன் சண்டையிட்டதே அமெரிக்கர்களின் பூகோள அறிவை விருத்தி செய்யத்தான் என்று ஒரு நகைச்சுவையும் உண்டு.

சரி விஷயத்திற்கு வருவோம்.

அந்த அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படம் எடுத்தேன். தீபாவளி பற்றி ஒரு குறிப்பு இருந்தது.. அதில் மகாலட்சுமி ஆந்தையுடன் இருப்பது போல ஒரு படம் இருந்தது.. வழக்கமாக யானை தான் பார்த்திருக்கிறேன்.. சரஸ்வதியானால் ஒரு மயில் இருக்கும். ஆண்டாள் அல்லது மீனாட்சி ஆனால் கிளி இருக்கும். இது ஏன் ஆந்தை .. விஷயம் தெரிந்தவர்கள் விளக்குங்கள்.







ஜப்பான் நாட்டில் வைக்கப் படும் கொலு பற்றியும் ஒரு படம் இருந்தது..



















இந்தியானாபோலிஸில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நம்ம காந்தித் தாத்தாவின் மூன்று குரங்கு பொம்மை வேறு மாதிரி இருந்தது..

இதற்கென்ன அர்த்தம்..

போர் புரிவதாக முடிவு செய்து விட்டால், ஆதாரங்களைப் பார்க்காதே.. ஐ நா சபை மற்ற உலக நாடுகள் சொல்வதை கேட்காதே, அடுத்த தேர்தலில் இதைத் தவிர எதைப் பற்றியும் பேசாதே என்றா?

அன்புடன் விச்சு

அட வாத்து





நான் வாத்து நான் வாத்து என்கிட்ட சொல்லி புண்ணியமில்லைன்னு அம்பிகா பாக்யராஜுக்கு வரி கொடுத்து பாடச் சொல்லுவார்..
















எல்லாரும் வாத்து பதிவு போட்டச்சு.. என்கிட்ட வாத்து படம் இல்லை அதனால சீகல் படம் போடறேன்.

இது சுதந்திர தேவி சிலைக்கு அருகில் நியூயார்க்கில் எடுக்கப் பட்டது

அன்புடன் விச்சு

Wednesday, September 14, 2005

110.நன்றி

நன்றி

தமிழில் தட்டச்சத் தெரியாது என்று கூறி இத்தனை வருடமாக எழுதாமல் இருந்த என்னை தமிழ்மணம் என்ற வலைபூ தளத்தைக் காட்டி எழுதத் தூண்டிய ரங்காவிற்கும்

குப்பைகளை வெட்டி ஒட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த என்னை உங்கள் கருத்தை எழுதுங்கள் என்று வழிப்படுத்திய குழலி க்கும்

கதை கவிதை எழுத வருமா என்ற சந்தேகத்தை உடைத்து எழுதிப்பார் என்று சவால் விட்ட நாராயணன் வெங்கிட்டு மற்றும முகமூடி ஆகியோருக்கும்

என் பதிவுகளைப் படித்து ஆர்வமூட்டிய இன்ன பிற நண்பர்களுக்கும் என்னுடைய இந்த ஊக்கப் பரிசு காணிக்கையாகிறது.

தொடர்ந்து என் பதிவைப் படியுங்கள்.. உங்கள் கருத்தை எழுதுங்கள். உங்கள் கருத்துகள் படிக்கற்களாகவும் வாழ்த்துக்கள் தோரணமாகவும் என்பதிவை அலங்கரிக்கும்.

நான் போபால் கலவரம் பற்றிய பதிவை எழுதியதும், நிறைய பேர் என்னை பாராட்டினார்கள்.. முதல் பரிசு பெற்ற கதையாக எழுதிய அவருடைய அனுபவத்தையும் சுரெஷ் அந்த பதிவில் நினைவு கூர்ந்திருந்தார். இவை அனைத்துக்கும் மேலாக மாலன் இட்ட பின்னூட்டத்தில் இதை கதை யாக எழுதலாமே என்று எழுதி என் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டி விட்டார்..

ஒரு கதை எழுத வேண்டும் என்று இரண்டு கதைக் களங்களை சிந்தித்து வந்தேன்.. ஒன்று "காதல் விலங்கு" என்ற பெயரில் மூன்று பாகங்கள் எழுதப்பட்டு, இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது
இறுதி பாகம் எழுத நேரமில்லாமல் நிற்கிறது. இரண்டாவது "யார் குற்றம்" என்ற கதை. இது லண்டனில் பிரசில் நாட்டவர் சுடப் படுவதற்கு முன்பாகவெ சிந்திக்கப் பட்டு விட்டது. இதை பற்றி நண்பர் ரங்காவிடம் கூறி ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே லண்டன் நிகழ்வு.. ரங்கா இடை விளையாட்டாக "விச்சு நினைக்கிறான் வெற எவனோ செய்யரான்" என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

"அரசதிகாரம் மேற்கொண்ட அபத்தமான நடவடிக்கைக்காக, அந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் ஏன் குற்ற உணர்விற்கு, அவமான உணர்விற்கு உள்ளாக வேண்டும் என்பது விளங்கவில்லை" என்று மாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இது போன்ற ஒரு சுழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கும் கதாபாத்திரமாகவே கதாநாயகன் இருக்கிறான். எத்தனை சொன்னாலும் "நெருப்பில்லாமல் புகையாது" என்று பேசி புண்ணைக் கொத்தும் காக்கைகள் இருக்கும் வரை ராமர்கள் சீதையை தீக்குளிக்க வைப்பார்கள் என்பது தான் என் எண்ணம். இதனால் என்ன வந்தது என்று எண்ணும் மனப் பக்குவம் அவனுக்கு (என் கதாநாயகனுக்கு )இல்லை. நான் இங்கு (அமெரிக்காவில்) பார்த்த பலரின் பாதிப்பு தான் அந்த பாத்திரம்.

இரண்டாவது கதையான "சின்ன வட்டம் " என் அனுபவமே. அதில் என் கருத்துகளை சேர்த்து எழுதியிருந்தேன். தாத்தா கூறிய "Thinking big", எதாவது கருத்து கூறவேண்டும் என்று நான் நினைத்ததால் வந்தது. அது கதையின் ஆழத்தை நோக்கத்தை குறைத்தது, மாலன் கருத்தை படித்த பிறகு எனக்கும் விளங்குகிறது.

பரிசு பெற்ற இந்த கதைகளைப் பற்றி மாலன் எழுதிய கருத்துக்கள் ஒரு கதைக்கும் சிறந்த கதைக்கும் இடைப்பட்ட வேறு பாடுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வளவு தூரம் ஆய்ந்து பரிசு வழங்கிய மாலன் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

எனக்காக ஒரு சிறப்புப் பரிசை ஏற்படுத்திய முகமூடி அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சமீபத்தில் நெய்வேலி சித்ரா எழுதி இருந்தது போல, பரிசு மட்டும் மகிழ்ச்சி தரும் விஷயமல்ல, நம் கதைகூட எதோ ஒரு வழியில் சிறப்பானதாக இருக்கிறது என்ற எண்ணமும் நிறைய ஆர்வத்தைத் தூண்டும்.. மாலன் முதலில் ஒரு 10 கதைகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியிருந்தார். அவற்றில் ஐந்து தெரிந்து விட்டது. மற்ற ஐந்தையும் தெரிவிக்கலாமே. மற்றவர்களுக்கும் இது ஊக்கம் தருவதாயிருக்கும் என்பது என் எண்ணம். இதில் செயல் முறை இன்னல்கள் இருக்குமாயின் என் ஆர்வக்கோளாறை மன்னிக்கவும்.

நண்பர் Sanjeeth (in the feedback of the prize announcement) சொன்னது போல, தமிழ்மணமெ இது போல் ஆண்டிற்கொருமுறையோ இரு முறையோ போட்டிகள் நடத்தலாமெ.. இதற்கு என்னாலான பங்களிப்பைச் செய்ய / தரத் தயாராக இருக்கிறேன்.

என் கதை இரண்டாம் பரிசு பெறும் என்று நினைத்ததாக எழுதி இருந்த "தேன் துளி" பத்மா அரவிந்துக்கு ஒரு சிறப்பு நன்றி. என் மேல் இவ்வளவு பேர் நல்லெண்ணம் வைத்திருப்பதைப் பார்க்கையில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.

இந்தப் போட்டியில் கதை எழுதி பங்குகொண்ட அனைத்து சக போட்டியாளர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் என்னுடைய நன்றியும் பாராட்டுகளும்.

இறுதியாக, என் கதையைப் படித்து விட்டு, அமெரிக்காவில் இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது என்று பல நிகழ்வுகளின் மூலம் தெரிந்தும் அதைப் பற்றிப் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட உன் கதா பாத்திரங்களுடையது தான் குற்றம் என்று தீர்ப்பளித்த என் மனைவிக்கும் நன்றி. இந்த தீர்ப்புக்கு அப்பீலே இல்லை

அன்புடன் விச்சு

Saturday, September 10, 2005

109. தெருவில் கிடைத்தது

தெருவில் கிடைத்தது

நேரமிலலை, அதனால் ஆளைக் காணவில்லை.. நான் இங்கே தான் இருக்கிறேன் என்று சொல்ல ஒரு பதிவு.

நான் ரசித்த நான்கு அறிவிப்புகள்..

அமெரிக்க நெடுஞ்சாலைகளிலிருந்து..

அன்புடன் விச்சு




Friday, September 02, 2005

108. மீண்டும் சானியா வெற்றி


மீண்டும் சானியா வெற்றி

இதுவரை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் எட்டிய அதிக பட்ச உயரம் இது..

அடுத்த சுற்றில் மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாட வேண்டி வரும்.. மரியாவிற்கு எதேனும் நோவு வந்து இவருக்கு கிச்சான் தராத வரை.. இதுவே இந்த வருடத்தில் கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் அதிக பட்ச வெற்றி.

போன பதிவில் எழுதிய புள்ளி விவரங்களைக் காட்டிலும் இந்த முறை பலத்த முன்னேற்றம். வாழ்த்துக்கள்.

அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இறுதி நிலவரம் sania mirza def marion bartoli 7-6 (4), 6-4.

அன்புடன் விச்சு

Thursday, September 01, 2005

107. பெட்ரோல் விலை என்ன?

பெட்ரோல் விலை என்ன?

இதை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கேட்டால் ஒவ்வொரு முறையும் ஒரு புது பதில் கிடைக்கும் இப்போது அமெரிக்காவில்..

போன வாரம் ஒரு நண்பர் அவர் அமெரிக்கா வந்த போது 65 சென்டாக இருந்தது என்று கூறி பெருமூச்சு விட்டார். (ஏழாண்டுகளுக்கு முன்)

இந்த ஒரு வருடத்தில் தான் இவ்வளவு ஏற்றம்.. ஈராக் போருக்குப் பிறகு..

இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் இந்தியானாபோலிஸில் 2.19 என்றிருந்தது மாலையில் 2.39 ஆகி அடுத்த நாள் 2.52 ஆகியது.. பிறகு இரண்டு வாரத்தில் 2.63 வரை சென்று திடீரென்று நேற்று 3.20 ஆகிவிட்டது.

இன்றைய செய்தித்தாளில் http://www.bloomberg.com/apps/news?pid=10000086&sid=a30ae27372WU&refer=latin_americaஅது 3.50லிருந்து 4 வரைப் போகும்.. ஏனென்றால் கட்ரினாவின் வரவால் லூசியானா மாகாணத்தில் எண்ணை சுத்தீகரிப்பு நிலையங்கள் பழுதடைந்திருக்கின்றன.. அவற்றில் எளிதில் சீர் செய்யக்கூடியவை ஒரு வாரத்திலும், சற்று கடினமானவை 4 வாரங்களிலும் சீராகும். அது வரை பெட்ரோல் தட்டுபாடு (நம்ம ஊர் மாதிரி வரிசையில் நிற்க வேண்டாம்.. பெட்ரோல் வரத்து குறையும் அவ்வளவே) இருக்கும் என்று கூறி இருந்தார்கள்.

ஆனால் லூசியானா மாகாணத்தில் இன்னும் மின் நிலை சீரடைய வில்லை.. அது சீரடைவதில் கால தாமதம் ஏற்பட்டால், பெட்ரோல் விலை 6 டாலர் வரைப் போகும் என்று ஒருவர் கருத்து கூறி இருக்கிறார்.

நம்ம ஊர் போல நடந்தோ (மிகவும் தூரம் அதிகம்) பேருந்திலோ (அது காலை / மாலை மட்டும் ஓடும் வண்டி) போக முடியாத இடங்கள் இவை.. தொல்லை தான்..

நாளை திரும்ப நியூ ஜெர்சி போய் விடுவேன்.. அங்கே இன்னும் விலை குறைவாகவே (ம்ற்ற மாகாணங்களை விட) இருக்கும்.. பொது பேருந்து / ரயில் வசதியும் நன்றாக இருக்கும். ஒரு ஆறுதல் தான்

இதற்கிடையில் புஷ்க்கு ஓட்டுப் போட்டீர்கள் அல்லவா, அனுபவியுங்கள் என்று சிலர் பேசுவது கேட்கிறது. அட இது நம்ம ஊர் கதை..

அது சரி.. இந்த விலை உயர்வு உலக அளவில் எதிரொலிக்குமே. மணி சங்கரைய்யர் (இவர் மும்பைக் காரரா.. அவர்கள் மட்டும் தான் இன்னும் ஐயர் என்று ஜாதிப் பேர் வைத்துக் கொள்கிறார்கள்) என்ன செய்யப் போகிறார்? இடது சாரிகள் என்ன செய்யப் போகிறார்கள்.. கலைஞர் என்ன செய்யப் போகிறார்..

அன்புடன் விச்சு

106.சானியாவின் வெற்றி - ஒரு விமர்சனம்




சானியா மிர்ஸா இரண்டாவது சுற்றில் வெற்றி..



சானியாவிற்கு வாழ்த்துக்கள். இது வரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத ஒன்றைச் செய்திருக்கிறார்.

அடுத்த (3rd) சுற்றிலும் அவருக்கு மரியன் பார்டோலி என்பவருடன் மோதும் வாய்ப்பு. 21 வயதாகும் இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இவரதும் அதிக பட்ச சாதனை மூன்றாவது சுற்றில் ஆடியது தான். தற்போது 43ம் இடத்தில் இருக்கிறார். (சானியா 42இல்). இதிலும் வெற்றி பெறும் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.



அடுத்த (4th) சுற்றில் அனேகமாக உலக முதல் இடத்திலும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவார் என்று கணிக்கப்படுபவருமான (ஆட்ட தரவரிசைப் படி) மரியா ஷரபோவாவைச் சந்திப்பார். யாருக்குத் தெரியும் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம் (இது நம்பிக்கையா.. பேராசையா?)

இரண்டாவது சுற்றில் வென்று அடுத்த சுற்றில் பிரவேசிக்கும் இந்த வேளையில் அவரது விளையாட்டு எவ்வளவு நன்றாக இருந்தது என்பது ஒரு கேள்வி.. கீழே இருக்கும் விவரங்களைப் பாருங்கள்.. எதிலுமே (சரி சரி.. ஒரு விஷயம் தவிர) சானியா முன்னணியில் இல்லை.. அதிக பட்ச ஓட்டுகள் வாங்கினாலும் தொகுதிகளில் ஜெயிக்காத அரசியல் தலைவர் போல் மரியா கேமரின் தோற்றுப் போனார்.












இது அடுத்த சுற்றில் தாஙுமா..

என்ன இருந்தாலும் எங்கள் நாட்டுப் பெண்.. (பாரதியார் பாணியில் "வாராது வந்த மாமணி). ஜெயிக்க வாழ்த்துக்கள்..

அன்புடன் விச்சு