Wednesday, September 28, 2005

119. நோயின் அறிகுறி

//நான் குஷ்பு இடத்தில் இருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன்.. //தங்கர் இடத்தில் இருந்திருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டீங்களா விச்சு.. மனதைத்தொட்டு சொல்லுங்க

இந்தக் கேள்வி என் மனதில் சில சிந்தனைகளைத் தூண்டியது..

முதலில் அந்த கேள்விக்கு பதில்.. தங்கர் இடத்தில் இருந்தால் முதலில் அது போல பேசி இருக்க மாட்டேன்.. அனைத்துப் பெண்களையுமே தாயென்று எண்ணிய ராம கிருஷ்ண பரமகம்ஸரைப் போன்ற பக்குவம் இல்லை என்றாலும், இவ்வளவு மோசமாக எந்த பெண்ணையும் உருவகித்துக் கூடப் பேசமாட்டேன். அப்புறம் தானே மன்னிப்பு?

இரண்டாவது.. தங்கர் சொன்னது விமர்சனம்.. குஷ்பு சொன்னது கருத்து..சோ ஒரு கேள்விக்கு சென்ற வார துக்ளக்கில் பதில் சொல்லி இருந்தார்.. ஒரு உண்மையை தடுக்க ஒரு பொய் சொல்லுவார் பிறகு பொய்யை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லுவார் என்று.. தங்கர் விஷயம் அப்படித் தான்.. ஒரு பெண்ணுக்கு தரவெண்டிய சம்பளத்தைத் தரவில்லை. அது குறித்து அந்த பெண்ணால்/ அவர் முதலாளியால் நடவடிக்கை எடுக்கப் பட்டபோது அவர் இப்படி ஒரு விமர்சனம் செய்தார். இதே கம்யூனிஸ மொழியில் அதிகார வர்கத்தின் அகங்காரம் என்று சொல்லலாமா?

தன் பங்குக்கு அவர் சரியாக இருந்து மற்றவர் தவறு செய்யும் போது இந்த கருத்தைக் கூறி இருந்தாரென்றால் அவரைப் புரிந்து கொள்ள முடியும்.

(இதையும் சிந்தித்துப் பாருங்கள், ஒரு ஏழைப் பெண்ணின் வயிற்றிலடித்து ஏமாற்ற முயற்சிப்பது நியாயமா.. அவர் தான் அந்தப் பணத்தைக் கொடுத்து அடுத்த நாள் படப்பிடிப்பு நடந்தது.. நடிகை அந்த பணத்தைக் கொடுத்திருக்கலாமே என்றால் நடிகை ஏன் தரவேண்டும்? படமெடுத்து வரும் லாபத்தில் ஒரு பத்து பைசா நடிகைக்கு தரப் போகிறாறா என்ன? அப்புறம் எல்லாரும் 21 நாள் அறிவிப்பு கொடுத்துதான் வேலை நிறுத்தம் செய்வார்களா என்ன? அவர்களுக்குத் தெரிந்த வழியில் வசூல் செய்தார்கள்.. உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் வேலை செய்பவர், எதோ காரணம் சொல்லி (சொல்லாமல்) வேலைக்கு வராவிட்டால், வேலைகள் முடங்கி விட்டன என்று அவர்கள் அனைவரும் இப்படி என்று வகைப் படுத்தி கூறுவீர்களா?)

குஷ்பு தன் கருத்தைக் கூறி இருக்கிறார்.. இதில் தமிழர் பண்பாடு எப்படி பறிபோகும் என்பது ஒரு கேள்வி.. கமலகாசன் சாரிகாவுடன் திருமணம் முறிந்ததும் (அதற்கு முன்பே கூட) இந்த திருமணம் என்ற அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி சேர்ந்து வாழ்தலை ஆதரிக்கும் விதமாகப் பேசி இருக்கிறார். (சரிகாவையெ திருமணம் செய்யாமல் தான் 2 மகள்களைப் பெற்றார் என்பதும் ஒரு நினைவு.. சரியாகத் தெரியாததால் அடைப்புக்குள் இடுகிறேன். தவறாயிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறென்.. உடனே நீக்கவும் செய்கிறேன்). நடிகர் படத்தில் புகை பிடித்தாலே நாடு கெட்டு விடும் காலத்தில், இப்படி ஒரு கருத்து கூறியதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு.. இன்று குஷ்பு சொன்னதை தமிழ்ப் பண்பாட்டில் பொட்டலம் கட்டி கடைத்தெருவில் விற்கிறீர்களே?

நம்முடைய தலைவர்கள் கூட மணம் புரிந்த மனைவியை அரசியல் லாபத்துக்காக "தன் மகளின் தாய்" என்று சபையில் கூறியதும் தமிழ் பண்பாட்டில் தான் வருகிறதோ?

இதே தங்கர் மேல் ஒரு திருச்சி பெண் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு எழுப்பிய போது யாரும் பேசவில்லையே. எழுப்பியவர் பெயர் தெரியாத ஒரு பெண் (அவர் மதம் பற்றி நான் ஏதும் குறிப்பிடவில்லை) என்பது தானே காரணம்.. மடாலயத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்றவர்கள் இதில் புகையே இல்லை என்று கூறியது தமிழனுக்கு தமிழன் செய்யும் உதவி. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.. "ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம்.. அதற்கென்று பெண்ணினமோ.. இது யார் பாவம்? "

மூன்றாவது, ஒரு பதிவில் "அடத் தூ.." என்று ஒரு அன்பர் பின்னூட்டமிட்டிருந்தார்.. சில காலம் முன் ஒரு அமெரிக்க இந்திய குடும்பம் அவர்கள் முதல் பையனுக்கு இந்தியாவில் திருமணம் செய்தார்கள்.. இரண்டு வருடத்தில் அந்த பெண் திரும்ப வந்து விட்டார்.. அந்த அமெரிக்க இந்திய குடும்பம் "அந்த பெண்ணின் வளர்ப்பு சரியில்லை.. அவர் தன் கணவரின் இளைய தம்பியின் முன் நின்று நேருக்கு நேர் பேசுகிறார். மாமனார் முன்னால் நாற்காலியில் அமர்கிறார் " என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. அவர்கள் படிக்காதவர்கள் அல்ல. அந்த இளைய தம்பி தான் உலகத்திலேயே மிக குறைந்த வயதில் மருத்துவர் ஆனவர்.. இது செய்தித் தாள்களில் பரபரப்பயிருந்தது.. அவர்கள் இந்தியா வந்த போது, பெண்ணைக் கொடுமைப் படுத்தியதற்காக கைது செய்யப் பட்டார்கள்..

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. அந்தப் பத்திரிக்கை எடுத்த கருத்துக் கணிப்பில் தமிழகம் சென்ற முறை எடுத்த கணிப்பை விட இது போன்ற விஷயங்களில் மோசமாகி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இவர்கள் எங்கள் வீட்டுப் பெண்கள் இன்னும் ஓடிப் போக வில்லை.. தமிழகம் அதனால் நன்றாகத்தான் இருக்கிறது என்ற வகையில் கருத்து தெரிவிக்கிறார்கள்..

அந்த அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பம் போல தற்கால நடப்புகளிலிருந்து செயற்கையாய் விலகி இருக்காதீர்கள். உங்கள் வீட்டுப் பெண் நாளை வேறு ஒருவருடன் சேர்ந்து இருந்தாலும் என்ன செய்வீர்கள்.. அரிவாளால் வெட்டுவீர்களா.. இல்லை சினிமா போல எங்கள் வீட்டுப் பெண் செத்துப் போய் விட்டாள் என்று சொல்லிவிடுவீர்களா.. எண்பதுகளில் காதல் திருமணம் செய்வது என்பதுகூட ஒவ்வாததாக இருந்தது.. இன்றைக்கு எல்லாரும் ஒத்துக் கொண்டு சாதி மத வேறுபாடின்றி செய்து கொடுக்கிறார்கள்.

முதன் முதலில் அமெரிக்காவில் ஓரினத் திருமணம் செய்து கொண்ட பெண்களில் இந்தியர்கள் இருந்தார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அதிக பட்ச பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எயிட்ஸ் நோய் தாக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறது என்பது பெருமை தரும் செய்தியல்ல.. மாதவியும் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறாள் என்றதற்குத்தான் இந்த "அட தூ". எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவல்லவா... அப்படி பார்த்தால் இந்த செருப்பு துடைப்ப பொராட்டம் என்ன?..


உண்மைகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்கள்தான் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்றால்.. பாவம் தமிழ் பண்பாடு..

இவை அனைத்துக்கும் மேலாக, பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் போது சில கட்டுப் பாடுகளைக் கடை பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதிலும் கருத்து தெரிவித்திருக்க மாட்டேன்.. ஆனால் சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குவதாக, கூறப்பட்ட நோயின் அறிகுறிகளைத் பொய் யென்று அரசியல் லாபத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் சொல்வதால் தான் இந்தப் பதிவுகளெல்லாம். ஓடி ஒளிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை.

இந்தப் பதிவில் சில பின்னூட்டங்களை எடுத்தாண்டிருக்கிறேன்.. இது பொதுவான ஒரு சிந்தனை. அந்தக் குறிப்பிட்ட பதிவர்களுக்கு நான் தரும் பதில் அல்ல

அன்புடன் விச்சு

9 comments:

முகமூடி said...

// உண்மைகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்கள்தான் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்றால்.. பாவம் தமிழ் பண்பாடு.. // நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் விச்சு...

பினாத்தல் சுரேஷ் said...

அருமையான பதிவு விச்சு. ஒவ்வொரு வரியோடும் உடன்படுகின்றேன்.

குறிப்பாக:

//எங்கள் வீட்டுப் பெண்கள் இன்னும் ஓடிப் போக வில்லை.. தமிழகம் அதனால் நன்றாகத்தான் இருக்கிறது//
//மாதவியும் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறாள் //
//பாவம் தமிழ் பண்பாடு..//

நச்சென்று சொல்லி இருக்கிறீர்கள்..

ஆனால், எதற்கும் வாய்ஸ்'இன் பதிவின் லின்க்கை தயாராக வைத்திருங்கள்.. வீட்டுப்பெண் Vs வீதிப்பெண் பிரச்சினை வரக்கூடும்!

துளசி கோபால் said...

என்னப்பா நடக்குது?

குஷ்பு என்ன சொன்னாங்க,'கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாப் பொண்ணுங்களும் செக்ஸ் வச்சுக்கணுமுன்னா?'
இது அவுங்கவுங்க சொந்த விருப்பம் இல்லையா? அப்படி வச்சுக்கறவங்க இந்தக் கழிசடை( ங்கறது தெரியாமத்தான்!)
கிட்டே இருந்து நோய் பிடிச்சுக்கப்போகுது, தேவையில்லாம புள்ளைங்களைவேற பொறந்துறப்போகுது. அதனாலே
ஜாக்கிரதையா இருங்கோ'ன்னு சொன்னது மெய்யாலுமா தப்புங்கறீங்க?

இது உலகத்துலே இருக்கற எல்லாப் பொம்பிளைங்களுக்கும்தானே?

ச்சின்னச்சின்னதா வீடுங்க வச்சுக்கிட்டு இருக்கற ஆம்புளைங்க, குறிப்பா அரசியல்வாதிங்கதான் ச்சும்மா இருக்கற
பொம்பிளைங்களை உசுப்பிவிட்டுகிட்டு கலாட்டா செய்யறாங்க.

விதவைத் திருமணம் செய்யறதை ஆதரிக்கிறீங்கல்லே, அப்ப அந்தப் பொண்ணு ரெண்டாங்கல்யாணம் செய்யறப்ப
'கன்னிப் பொண்ணு'ன்னு விளம்பரம் செய்யணுமா?

அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.

பத்மா அர்விந்த் said...

விச்சு: நன்றி

தெருத்தொண்டன் said...

நன்றி விச்சு..மனம் திறந்திருக்கிறீர்கள்..

வீ. எம் said...

//குஷ்பு சொன்னது கருத்து..//
விச்சு
உங்களின் முன் பதிவிலே, குஷ்பு பேசியதில் எது விமர்சனம் .. எது india today statistics பற்றிய கருத்து...எது தேவையில்லாத குறிப்பு என்று தெளிவாக சொல்லியிருந்தேன்.. அதுக்கும் மேலே அடுத்து ஒரு கருத்து சொல்லிருந்ததாம்.. india today ல் அல்ல, இந்த பிரச்சனை பற்றி கேட்ட போது அதுக்கு பதிலாக ..
அது நான் முழுமையா படிக்கல.. அதனால எதுவும் சொல்ல முடியல.. கேட்ட வரை அது மிக மோசமான விமர்சனம் என்றே தெரிகிறது.. படித்துவிட்டு சொல்கிறேன்..

அங்கே சொன்னது தான்
நல்ல தலை வாழை இலை.. அறுசுவை உணவு , அப்படியே விட்டிருந்தால் நல்ல விருந்து தான்.. ஆனால் என்ன பன்றது.,..அம்மனி ஏதோ மனம் பேதலித்து , குடிக்க தண்ணி வைப்பதற்கு பதிலாக கொஞ்சம் சாக்கடை நீர் வைத்து எல்லாத்தையும் கெடுத்து போட்டது..

வீ. எம் said...

பாண்டி,

இரண்டும் ஓன்றல்ல! இவர் செய்த தவறு வேறு , அவர் செய்த தவறு வேறூ..
.. அதே நேரத்தில் இரண்டையும் சம்பந்தப்படுத்தி பேசவே முடியாது என்று சொல்லிவிடாதீர்கள்..

வீ. எம் said...

பாண்டி,
இங்கே தங்கரா , குஷ்பூவா என்பது அல்ல..

எனக்கு தங்கரும் ஒன்று தான், குஷ்பு ஒன்றுதான்.. இரண்டுமே ஒரே சினிமா குட்டையில் ஊறியவர்கள்..

இருவரும் வினை விதைத்தார்கள்.. இருவருமே வினை அறுக்கட்டும்.. என்று தான் எங்கள் வாதம்..
பாரபட்சம் வேண்டாம் என்பது தான் எங்கள் கருத்து..

ரங்கா - Ranga said...

விச்சு,
நடுநிலைமையோடு பொறுப்பாக எழுதுவதும், விமர்சனம் செய்வதும் அரிதாகிக் கொண்டு வருகிறது. உன் பதிவு அருமை. முன்பு ஒரு முறை நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் பற்றி எழுதிய போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: "நாகரீகம் என்ற பெயரில், போலியான வாழ்க்கை விதத்தில், கலாச்சாரத்தை இழந்து வந்து கொண்டிருக்கிறோம். அதேபோல அரசியலின் தயவால் கலாச்சாரப் பாதுகாப்பு என்ற பெயரில் நாகரீகத்தையும் இழக்க ஆரம்பித்திருக்கிறோம்!"

அரசியல் மற்றும் சுய லாபத்திற்காக (இரண்டும் வேறா என்ன?) கண்டனக் கூட்டம் நடத்துபவர்களையும், கூச்சல் போடுபவர்களையும் பார்க்கும் போது, கிராமத்தில் கூறப்படும் இந்த வசனம் ஞாபகம் வருகிறது: "பகலிலே பசுமாடு தெரியாதவன்(ள்) ராத்திரியிலே எருமைமாடு அடையாளம் காட்டப் போனானாம் (ளாம்)".