Friday, August 19, 2005

95. சிறுகதை - யார் குற்றம்

ராத்திரி முழுக்க தூக்கம் வரவில்லை.. இன்றோடு ஒரு வருடம் முடிகிறது.. காலையில் எழுந்து தொலைக்காட்சியைப் போட்டால் சி.என்.எனில் இதோ அவன் முகம்.. அருகில் என் முகம்.. எதேதோ கதை.. மனசு கல்லாகிப் போச்சு.. எத்தனை அசிங்கங்கள்..

இன்றைக்கு அலுவலகம் போனால் குறைந்த பட்சம் ரெண்டு பேராவது நமுட்டுச்சிரிப்பு சிரிப்பார்கள்.. எவனாவது ஒருத்தனாவது கேட்பான் "என்னப்ப டி வி ல படம் எல்லாம் காமிச்சானே.. பெரிய ஆளுப்பா நீ.." நக்கல் வழிந்தோடும்.. ராமர் (கடவுள் தான்) ஏன் சீதையை தீக் குளிக்கச் சொன்னார் என்று தெளிவாக விளங்குகிறது. என்னால் தீயும் குளிக்க முடியவில்லை.. சொல்வதை நம்பவும் ஆளில்லை. இப்போது நான் உலகப் பிரசித்தி. தப்பான காரணத்திற்காக.. யாருடைய தப்பு அது.. என்னுடையதா..

**********************************

ஆகஸ்ட் பதினேழு.. என் பிறந்ததினம். அலுவலகத்துக்குப் போக வேண்டாம். வேற எங்கயாவது போய் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொன்ன மனைவிக்கு அலுவலக அவசரத்தைக் காரணம் காட்டிக் கிளம்பி வந்துவிட்டேன். காலையிலிருந்து நல்ல மழை. வேலை முடிந்து கிளம்ப எட்டுமணிக்கு மேலாகி விட்டது.

வெளியில் வந்தால் பிரமோத் எதிரில் வந்தான்.

"என்னடா, ரொம்ப வேலை பார்க்கிறாய் போல இருக்கு.." (அது இந்தியும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியில்..நானே மொழிபெயர்த்து விடுகிறேன்).

"ஆமாம். அவசரமான ஒரு பிராஜக்டை முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது.." (நானும் ஆங்கிலத்தில் தான்.. எனக்கு இந்தி தெரியாது.. அவனுக்கு தமிழ் தெரியாது).

அச்சூ.. என்று தும்மினான்.. கைக்குட்டையை எடுத்து முகத்தில் அழுத்திய படியே. அமெரிக்கா வந்து எல்லாரும் காகிதத்துக்கு மாறி விட்டாலும் இவன் மட்டும் இன்னும் கைக்குட்டையுடன்.. திருந்தவே மாட்டான். இதில் அவன் தனித்தன்மையை விட்டுத் தரமாட்டேன் என்று சப்பைக்கட்டு வேறு.

"உனக்கு என்னா ஆச்சு.. இவ்வளவு நேரம்? "

"இன்றைக்கு என்னுடைய நேரம் சரியில்லை.. எவனுக்கோ கணினியில் வேலை பார்க்கத்தெரியவில்லை என்று என்னை அவனுக்கு சொல்லித்தர வைத்துவிட்டார்கள்.. என் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் அது இன்னேரம் இரண்டு மென்பொருள் தொகுப்பு எழுதி யிருக்கும் " என்று சலித்துக் கொண்டான்.

இவனைப் பற்றி.. குஜராத்தியான இவனை அமெரிக்கா வந்த அன்று விமான நிலையத்தில் சந்தித்தேன்..

அன்றிலிருந்து பேசத்தொடங்கியவன் தான்.. இன்று வரை மிக நல்ல நண்பனாக.. இல்லை சகோதரனாகவே மாறி விட்டான். எத்தனையோ உதவிகள்.. உயிரைக் கொடுப்பான் என்று சொல்வார்களே அந்த வகை.. அவனுக்கு ஏற்ற மனைவி சுனிதா..படித்தவலானாலும் எச் 4 * லில் இருப்பதால் வீட்டில். ஒரே குழந்தை ராஜிவ். (அவரைப்போல் ஒரு நல்ல பிரதமர் இன்று வரை இல்லை - பிரமோத்)

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறான்.. என் மனைவி, ஆர்த்திக்கு சுனிதா நல்ல துணை. என் மனைவிக்கு இந்தி தெரியும். இரண்டு பேரும் இந்தியில் என்னைக் கலாய்ப்பது தனிக் கதை..

நடந்து பவோனியா ரயில் நிலையத்திற்கு வந்து விட்டோம். திரும்ப ஒரு அச்சூ...அவன் கைக்குட்டையை எடுத்துத் தும்ம சிரமப்பட்டான்.

"அதைக் கையிலேயே வைத்துக் கொள்ளக் கூடாதா.."

"எல்லாரும் வினோதமாகப் பார்ப்பார்கள்" எல்லாவற்றிற்கும் இது ஒரு கருத்து.. அசிங்கம் பார்ப்பது மிகவும் அதிகம்.. டிப் டாப் ஆகத்தான் அலுவலகம் வருவான். மடிப்புக் கலையாது. பாதையில் சேறோ சகதியோ இருந்தால் ஒரு தெரு சுற்றிக் கொண்டு வருவானே அல்லாமல், அதைத் தாண்டக் கூட மாட்டான். தெளித்துவிட்டால் அசிங்கம்..பன்றி உன் எதிரில் வந்தால் நகர்ந்து போவதில்லையா அது போலத்தான் என்பான். நானும் என் மனைவியும் அவனை திருவாளர் அசிங்கம் என்றே கூப்பிடுவோம்.

மழை பெய்ததால் நடை மேடை கூட கொஞ்சம் சேறாகத்தான் இருந்தது.. இரண்டு ரயில் மாறி வீட்டுக்குப் போக வேண்டும்.. முதல் ரயில் உடனெ வந்து விட்டது.. போகும் போது.. அருகில் இருந்தவர்களைச் சட்டை செய்யாமல் பேசிக்கொண்டே வந்தான்.. நான் கேட்கும் ரகம்..

"ரயில் நிலையப் பிச்சைக் காரனுக்கும் மென்பொருள் கலைஞருக்கும் என்ன ஓற்றுமை?"

"தெரியலையே"

" இரண்டு பேரும் அவர்களைப் போன்றவரைப் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி "நீ எந்த பிளாட்பாரம்?""

****************************

நுவார்க் ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்த ரயிலுக்கு ஓடினோம்.. அதை விட்டால் அடுத்த 30, 40 நிமிடங்களுகுக்கு காத்திருக்க வேண்டியது தான்.. ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.. ஏழு மணியிலிருந்து எல்ல ரயில் களுக்கும் தாமதம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.. இன்றைக்குப் பத்து மணிக்கு மேல்தான் வீடு என்று நினைத்துக் கொண்டேன்.

இப்போது எங்கள் பேச்சு அவன் பார்த்த ஒரு இந்தித் திரைப்படத்தைப் பற்றியதாயிருந்தது.. எதோ ஒரு பாகிஸ்தான் இந்தியப் போர் பற்றியது.. மிகவும் சுவாரசியமாக தும்மல் களுக்கிடையில் விளக்கிக் கொண்டிருந்தான்..

எதோ ஒரு கான் நடிகர், வில்லன் வீசும் குண்டுகளுக்கிடையில் கைத்துப்பாக்கியால் சுட்டு நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். வில்லன் மிகவும் புதிய உத்திகளைக் கையாண்டு இந்தியாவை வீழ்த்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.. மும்பை ரயில் நிலையத்தில் வில்லன் குண்டு வைத்துவிட்டான்.. கதா நாயகன் குண்டைத்தேடிக் கொண்டு..

திடீரென்று "எல்லாரும் தரையில் படுங்கள்" என்று கூவிக்கொண்டு நிறைய போலிஸ் காரர்கள் எங்கலை நால புறமும் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாருடைய இயந்திரத் துப்பாக்கிகளும் எங்களைக் குறி வைத்திருந்தன.

அவர்களின் தலைவன் "இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு தரையில் படு" என்று உத்தரவிட்டான். நான் தயாராகி விட்டேன் படுக்க..

அப்பொது பிரமோத் உரக்க.. "இந்த இடம் சகதியாக இருக்கிறது.. நான் அங்கே கம்பத்தில் சாய்ந்து நிற்கிறேன்" என்று கூறி கம்பத்தை நோக்கி செல்ல எத்தனித்தான்.. அய்யோ இவனுக்கென்ன இந்திப் பட கதானாயகன் என்று நினைப்போ.. என்று நான் எண்ணும் போதே.. போலிஸ் காரன் "நோ" என்று அலறினான். நான் உடனே படுத்து விட்டேன்..

திடீரென்று "அச்சூ.." என்று பெரிதாக ஒரு தும்மலும் தொடர்ந்து டப் டப் டப் டப் என்று சுடும் சத்தமும் கேட்டது.. எனக்கருகில் தடால் என்று வந்து விழுந்தான் பிரமோத்.. கண்கள் இரண்டும் என்னைப் பார்த்த படி.. அதில் அதிர்ச்சி இன்னும் நீங்காமல்...
எனக்குப் புரிந்தது.. இவன் கைக் குட்டையை எடுக்க கையை கீழே இறக்கி பாக்கெட்டில் விட்டதை அவர்கள் இவன் ஆயுதம் எடுக்க முயற்சிப்பதாக எண்ணி சுட்டுவிட்டார்கள்.. பயம்..

அய்யோ.. என்ன பைத்தியக் காரத்தனம்.. கீழே படுத்திருக்கக் கூடாதா.. அந்த சட்டையை தூக்கிப் போட்டு வேர வாங்கி இருக்கலாமே.. இப்போ உயிர் போச்சே.. மனம் அரற்றியது.. கண்ணில் நீர் பெருக்கெடுத்தது.. என் உயிர் போனால் போல ஒரு வலி..

அடுத்த அரை மணி நேரத்தில் என்னை ஒரு போலிஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.. அங்கே என்னிடம் எல்ல சட்ட வழி முறைகளையும் சொன்னார்கள்..நீ பேச வேண்டாம். நீ பேசினால் அது வாக்கு மூலமாக எடுத்துக் கொள்ளப்படும் இத்யாதி இத்யாதி.. என் மீதும் பிரமோதின் மீதும் ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்க திட்டம் போட்டதாக வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.. இப்போது எல்லாம் புரிந்தது..நாங்கள் பேசிய சினிமாக் கதை தான் வில்லன்.. பக்கத்தில் இருந்த ஒரு அமெரிக்க கிழவி போலிசுக்குத் தகவல் தந்திருந்தார். நாங்கள் பேசிய எல்லவற்றையும் வரிவரியாகச் சொன்னார்கள்.. "VT" என்பது எந்த ரயில் நிலையத்தின் சங்கேதக் குறிப்பு என்று கேட்டர்கள். அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது.. என் வழக்கறிஞருக்காகக் காத்திருந்தேன்.

மனைவியை அழைத்து விஷயத்தைச் சொன்னேன்.. அவள் தெரிந்த வர்களிடம் ஒரு நல்ல வழக்கறிஞராக கேட்பதாகச் சொன்னாள். கண்ணை மூடி அமர்ந்து கொண்டு தியானம் செய்தேன்.. அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.. கைகளும் கால்களும் விலங்கிடப் பட்டிருந்தது.. தூங்கி விட்டேன்..

ஒரு போலிஸ்காரர் வந்து என் வக்கீல் வந்திருப்பதாகச் சொன்னார்.. அவரைப் பார்க்கப் போன போது சற்று தள்ளி வெளியில் என் மனைவியின் அழுது வீங்கிப் போன முகம் தெரிந்தது.

அவர் ஒரு நல்ல மூத்த அமெரிக்க வழக்கறிஞர். எஙகள் தொகுதி செனட் உறுப்பினரான ஒரு இந்தியரின் வேண்டுகோளுக்கிணங்கி வந்திருப்பதாகச் சொன்னார். என் கதை முழுவதையும் சொன்னேன்.. படத்தின் பெயரைக் கேட்டார்.. எனக்குத் தெரியவில்லை.. சுனிதாவுக்குத் தெரிந்திருக்கும் என்றேன். அப்போது தான் நினைவுக்கு வந்தது.. சுனிதாவுக்குச் சொல்லவே இல்லை..

அவரிடம் அதையும் சொன்னென்.. என் மனைவியை சுனிதாவுடன் இருக்கச் சொல்லுமாறும் கேட்டுக் கொண்டேன். அடுத்த நாள் காலையில் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு திரும்பிப் போனார்.. வாசலைப் பார்த்தேன்.. யாரும் தென் பட வில்லை..

அடுத்த நாள் நீதிபதியிடம் எனக்கு காவலில் வைக்க அனுமதி கேட்டு வழக்கு வந்தது.. என்னை சிறையில் இருந்த படியே தொலைக் காட்சிப் பெட்டி வழியே நீதிமன்றத்தில் காட்டினார்கள்.

என்னிடம் ஆயுதம் இல்லை.. நான் சினிமாக் கதை தான் பேசினேன் என்றெல்லாம் என் வழக்கறிஞர் வாதிட்டார்.. ஆனால் விசாரணைக்கு இன்னும் பதினைந்து நாள் நேரம் கேட்ட அவர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளப் பட்டு எனக்கு ஜாமின் மறுக்கப் பட்டது.

அடுத்த பதினைந்து நாளும் நரகம். தினமும் வழக்கறிஞர் வருவார்.. என்னிடம் விசாரிப்பார்கள்..
புதியதாக எதாவது தகவல் கேட்பார்கள்.. ஒரு நாள் 'அப்துல் நஸீர்' யாரென்று கேட்டார்கள். எனக்கு அப்படி யாரையும் தெரியவில்லை. பிரமோத் அமெரிக்கா வந்த புதிதில் அவனுடன் தங்கி இருந்திருக்கிறான்.. பிறகு அவன் திரும்ப இந்தியா சென்று விட்டான்.. அவனைத் தேடினால் கிடைக்க வில்லை..

இவர்களுக்கு சந்தேகம்.. அவன் தான் எங்களுடைய தீவிரவாதிக் கூட்டாளியோ என்று.. சுனிதா என் வீட்டில் தான் இருப்பதாக வக்கில் சொன்னார்..

பிரமோதின் உடல் போலிஸ் கட்டுப்பாட்டில் தானிருக்கிறது.. வழக்கறிஞரை சுனிதாவிடம் அப்துல் நஸீரைப் பற்றிக் கேட்கச் சொன்னேன்.. ப்ரமோதின் ஈ-மெயில்களில் அவன் ஈ-மெயில் கிடைக்கலாம் என்றேன். கிடைத்தது.. அவனுக்கு மெயில் அனுப்பியதும் அவன் உடனே தொலை பேசினான்.. வக்கில் மூலம் அவன் இருக்குமிடம் போலிஸுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அடுத்த முறை விசரணையின் போது, சரியான ஆதாரங்கள் இல்லாததால் என்னை விடுவிக்கச் சொல்லி என் வழக்கறிஞர் வாதிட்டார்.. போலிஸ் தரப்பில் எதையும் பெரிதாக நிரூபிக்க முடியவில்லை.. ஆனாலும் எதேதோ காராணங்கள் (என் இந்திய வாழ்க்கை பற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை அதனால் நான் தீவிரவாதி இல்லை என்று நிரூபிக்கவில்லை) என்னை நாடு கடத்தும் படி அரசு வக்கில் கேட்டார்.. நான் பொது நலத்தைக் கெடுக்கும் (public nuisense) வகையில் நடந்ததாகக் கூறினார்கள். அப்படியே தீர்ப்பும் ஆனது.. என் வழக்கறிஞர் இதை எதிர்த்து வழக்குப் போடலாம் என்றார்.. எனக்கு இங்கிருக்க விருப்பமில்லை.

தவறாக சுட்டதற்காக ஒரு வழக்கு பதிவு செய்து ஒரு பம்மாத்து வித்தை காட்டினார்கள். போலிஸின் பயம் நியாயமானது தான்.. பிரமோதின் செய்கை தான் தவறு என்று தீர்ப்பு வந்தது. மொத்தமாக 3 மாதங்கள் என்னை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.. சிறை முழுக்க சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்.

இந்திய அரசின் அனுமதியுடன் என்னை நாடு கடத்தினார்கள். என் மனைவியும் சுனிதாவும் அவள் குழந்தையும் அதற்கு முன்னரே திரும்பி விட்டார்கள். நண்பர்கள் பலர் என் பொருள்களை விற்கவும், வழக்கறிஞருக்கு சம்பளம் கொடுக்க பணம் திரட்டவும் பெரிதும் உதவினார்கள்..

திரும்பி இந்தியாவுக்கு வந்தால்.. என் பாஸ்போர்ட் ரத்து செய்யப் பட்டிருந்தது. இறங்கிய உடனே ரகசியமாக ஒரு வழியே அழைத்துச் செல்ல உதவினார்கள்.. வாசலில் ஒரு ஆயிரம் காமிராக்கள் காத்திருந்ததாக என் மனைவி பிறகு கூறினாள்.

இயல்பான வாழ்க்கைக்கு வர ஒரு இரெண்டு மாதம் ஆனது.. என் நிறுவனம் என்னை திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டது. சுனிதாவுக்கும் மும்பையில் ஒரு வேலை கொடுத்தார்கள்.

உலகப் புகழ் பெற்று விட்டேன் என்று என் அலுவலகத்தில் ஒருத்தர் ஒரு நாள் சொன்னார்.. என் முகத்தைப் பார்த்ததும், மன்னிப்புக் கேட்டு காணாமல் போனார்.. வாழ்க்கை பழைய மாதிரி ஆகவில்லை.. நிறையக் காக்கைகளுக்கு என் புண்ணைக் கொத்துவதில் இன்பம் கிடைத்தது.

நிறையக் கோவம் வந்தது.. இயலாமை. எல்லா இடங்களிலும் ஒரு தயக்கம். பயம்.. என் அமெரிக்க கனவுகள் உடைந்த வருத்தம்.. இதற்கு மேலாக நான் செய்யாத ஒன்றுக்காக எனக்கு தண்டனை கொடுத்தத்தான் என்னை மிகவும் துன்புறுத்தியது.

சின்ன வயசில் பேப்பரில் பேர் வரவேண்டும் என்று ஒரு விருப்பம் உண்டு.. அதற்காகத் தான் கிரிக்கெட் ஆடவே செய்தேன்.. 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் எடுத்த செய்தித்தாள் துண்டு எல்லாம் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது பேர் தெரியாத ஊரில் இருக்கும் கையெழுத்துப் பத்திரிகையில் கூட என் பேர் அடி பட்டது. ஏன் வந்ததோ என்று வருத்தம்.

என் வாழ்க்கை இனி பழைய படி மாறுமா.?

***************************************

நினைவலைகளை என் மனைவியின் குரல் கலைத்தது..

"என்ன ஆபீஸ் போகலியா.."

டி வி யைக் காட்டினேன் .. புரிந்து கொண்டாள்.. "இன்னிக்கி உங்க பிறந்த நாள்.. எங்கேயாவது வெளில போலாம்.. ஒரு மாறுதலா இருக்கும். ஆபீசுக்கு விடுமுறை சொல்லிடுங்க.."

"சரி"

போன வருஷம் இப்படி நல்ல பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா.. மனம் ஏங்கியது..

3 comments:

neyvelivichu.blogspot.com said...

* H4 is a dependent visa.. those who are in this visa cannot work.

i missed this in the story footer..

anbudan vichchu

துளசி கோபால் said...

விச்சு,

வரவர உங்க கதைகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கிறது.

தினம் ஒரு கதையா? பேஷ் பேஷ்.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

ரங்கா - Ranga said...

விச்சு,
இந்தக் கதையை முதலில் சொல்லும் போதே சொன்னேன் - இது எழுத்தில் நன்றாக வரும் என்று. ஏமாற்றவில்லை - மிகவும் நன்றாக வந்திருக்கிறது!

தினம் ஒரு கதை - தூள் கிளப்பு! :-)