Tuesday, August 16, 2005

சிறுகதை - பார்வைகள் பலவிதம்

"இன்னைக்கு நாள் நன்னாதான் இருக்கு.. ஏன் கேட்கறேள்" குப்புசாமி குருக்கள் எதிரில் இருந்த ஆட்களைப்பார்த்து கேட்டார்.

"ஒன்னுமில்ல அய்யரே.. நம்ம பையன் ஒருத்தனுக்கு கண்ணாலம் கட்டணும் அதுக்காகத்தான்.. இதோ போய் கூட்டிகிட்டு வந்துடறோம் எல்லாம் தயாரா வச்சிக்கிங்க."

கல்யாணமா.. ஒரு அம்பது ரூபா கிடைக்கும் .. என்று சந்தோஷமாக தாலிக் கயிற்றைத் தேடிக்கொண்டு போனார் குருக்கள்.

************************************************
ராஜா டீக்கடையில் உட்கார்ந்து அவன் கட்சி கொடி கட்ட ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தான். அது தான் அவன் கட்சி அலுவலகம். அவர்கள் கட்சித் தலைவருக்கு அடுத்த நாள் பிறந்த நாள். ஐம்பத்து ஐந்து பேருக்கு வேட்டி சேலை கொடுக்கப் போகிறார்கள். அதற்கான பணத்தை அக்கம் பக்கத்துக் கடைகளில் வசூலித்தாகி விட்டது. மைக் செட், விளக்கு எல்லாம் தயார்.. அடுத்த கட்சிக் காரன் செய்ததை விட நன்றாகச் செய்யவேண்டும்.. அது தான் குறிக்கோள்.

அடிதடி தகராறுகளில் அவன் தான் ராஜா.. இப்பொது ஜாதிக் கட்சியின் உள்ளூர் தலைவரான பிறகு புதிய வழி தெரிகிறது.. ஊரில் மரியாதை, மதிப்பு கொஞ்சம் ஏறித்தான் இருக்கிறது.

ஒழுங்கா விழா எடுத்தா வட்டம் மாவட்டம் எதாவது ஆகலாம்.. கொஞ்சம் பணம் புரளும்.. பெரிய ஒப்பந்தக்காரனாவது ராஜாவின் ஒரு கனவு. அப்புறம் எம் எல் ஏ, மந்திரி.. அதெல்லாம் மெதுவா வரட்டும்.

*****************************************************

கல்யாணத்துக்கு ஆட்கள் வந்ததுமே குருக்களுக்கு புரிந்து விட்டது.. எதோ பிரச்சினை வரப்போகிறது.. பெண் என்று அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டவள் அந்த ஊர் ரவுடியான வடிவேலுவின் தங்கை. இரண்டு பேரும் வேறு வேறு ஜாதிக்காரர்கள். பரபரவென்று கல்யாணம் செய்தால் பதினைந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் முடித்து விடலாம். இவாளுக்கு நடுவில் மாட்டிண்டு முழிக்க வேண்டாம்.

"என்னப்பா எதுவும் பிரச்சினை வந்துடாதொன்னோ?.." என்று முதலில் வந்து கேட்டவர்களிடம் மெதுவான குரலில் கேட்டார்..

"நீ நடத்து அய்யரே நாங்க இருக்கோமில்ல.." என்று கூறி ஒரு ஐம்பது ரூபாயை கையில் கொடுத்தான் அவர்களில் ஒருவன்..

பணத்தைப் பார்த்த சந்தோஷத்தில் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார் குப்புசாமி குருக்கள்.

தாலியை எடுத்து கையில் கொடுத்தார்.. அவனும் வாங்கி கட்டினான்.. ஒரு தீபாராதனை காட்டி குங்குமம் விபூதி குடுத்த எல்லாம் முடிஞ்சது. திடீரென்று நிறைய பேர் ஓடி வரும் சத்தம்.. அவர் என்னவென்று திரும்பிப் பார்க்குமுன் ஒரே அமளி.. அவருக்கும் உருட்டுக்கட்டையால் நாலு அடி.. விழுந்தவர் எழுந்து சன்னதியோரமா ஓடிப் போய் கதவை சார்த்திக் கொண்டார்.

"பகவானே, நான் என்ன பண்ணினேன்.. எந்துக்கு இப்படி ஒரு சோதனை.. நீதான் இவாளை எல்லாம் கேட்கணும்" என்று சொல்லி உள்ளே இருந்த விக்ரகத்தைப் பார்த்து கும்பிட்டவருக்கு கண்ணில் நீர் வழிந்தது.. அடியின் வலி...

வெளியில் எல்லாவற்றிற்கும் தயாராக வந்திருந்தவர்களுக்கு இடையில் அடிதடி நடந்து கொண்டிருந்தது.

******************************************

"அண்ணே அண்ணே " மூச்சு வாங்க ஓடி வந்தான் மதி.

"என்னடா?"

"நம்ம ஆளுங்கள வடிவேலு ஆளுங்க அடிக்கறாங்க அண்ணே"
வடிவேலு எதிர் கட்சி.. வேற ஜாதி.. எதோ பிரச்சினை..

"என்னடா பண்ணீங்க?"

"நம்ம சின்னான் அந்த சாந்தி பொண்ண கட்டிக்கணும்னு ஆசை பட்டான் இல்ல.. அவன் கல்யாணத்தில தான் பிரச்சினை ஆகிட்டுது.. வடிவேலு அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டான்"

சின்னான் அவன் ஜாதிக்காரன்.. சாந்தி வேற ஜாதி.. இவனை கல்யாணத்தை நடத்தி வைக்கச் சொன்னான்.. இத்தனை வேலைக்கு நடுவில் முடியாது.. ஒரு வாரம் பொறுத்துக்கோ என்று சொல்லி இருந்தான்..பிரச்சினைன்ன எங்கைல வந்து சொல்லலாமில்ல.சின்னானுக்கு என்ன அவசரம். தன்னிடம் சொல்லவில்லையே என்று கொஞ்சம் கோவம் வந்தது.. ஆனால் அடி படுவது அடுத்த ஜாதிக்காரனிடமாச்சே.. காப்பற்று என்று எதோ ஒரு உணர்வு சொன்னது...இல்லை என்றால் ஜாதிக்காரன் மதிக்க மாட்டான்.

"டேய்.. எல்லாத்தயும் போட்டுட்டு ஓடியாங்கடா.. நம்ம ஆளை அடிக்கிறாங்களாம்"

தோரணம் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அவனுடன் ஓடினார்கள்.

******************************************
ஒரு பத்து பேர் தான் இருந்தார்கள்.. பத்தே நிமிடத்தில் எல்லாரும் துண்டைக்காணும் துணியைக்காணும் என்று ஓட்டம் பிடித்தார்கள்.. என்னேரமும் திரும்ப வரலாம்.. ஒரு பாதுகாப்புக்காக அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டு கட்சி அலுவலகத்துக்கு வந்து விட்டான்.

இரண்டு நாளில் எல்லாம் சரியாகப் போய் விடும்..இது போல எத்தனை மேட்டர் பாத்தாச்சு. ஒரு பஞ்சாயத்து பேசினால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டான். நிறைய தோரணம் கட்டும் வேலை பாக்கி இருக்கிறது..

*****************************

டீக்கடையில் எல்லாருக்கும் டீ வாங்கிக் கொடுத்த மாப்பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தான் ."நம்ம ஜாதிக்காரப் பசங்களோட ராஜா அண்ணன் சரியான நேரத்துல வந்துச்சு.. எல்லாரையும் அடி பிச்சிட்டாங்க இல்ல.."

கோவில் நடையை மூடி விட்டு வீட்டுக்குப் போன குருக்கள் பர்வதம் மாமியிடம் சொல்லிக்கொன்டிருந்தார்.. "என்னையும் அடிச்சுட்டா தெரியுமோல்லியோ. ஸ்வாமியண்ட வேண்டிண்டேன்.. அவர் தான் ராஜா ரூபத்துல வந்து அவாளுக்கு நன்னா குடுத்தார்.".

2 comments:

முகமூடி said...

படைப்பை போட்டியில் சேர்த்துவிட்டேன்... வாழ்த்துக்கள் விஷி...

neyvelivichu.blogspot.com said...

nanRi thala..

nanRi nishaa.. enakku therinthu oru kuppusaamy kurukkaL irukkiRaar.
kuzhanthai thanggaatha vIttil pirantha kuzhanthaiyai, kuppaiyil podugireen enRu kooRi athaRku kuppamma, kuppusaamy enRu peyar vaippathu ella jaathikkum pothuvaana pazhakkam..

anbudan

vichchu