Tuesday, August 02, 2005

காதல் விலங்கு (பாகம் 2)

கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்

பாகம் 1 http://neyvelivichu.blogspot.com/2005/07/1.html

அன்புடன் விச்சு

சந்துரு வீட்டில் உணவு ரொம்ப நன்றாக இருக்கும். இருந்தது. திருமணம் பற்றிய கேள்வியே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.. நானூறு பேருக்கு மேல் வருவார்கள் என்று கணக்கிட்டார்கள். வரும் ஆகஸ்டில் வச்சுக்கலாமா என்று என்னிடக் கேட்டார்கள்.. நான் என் நிலைமையை அவர்களுக்கு புரிய வைக்கலாமா என்று யோசிக்கும் போதே சந்துரு அவளுக்கு எப்போவென்றாலும் சரிதான் என்பது போல பதில் சொன்னான்.பிறகு நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்..

வெளியில் வரும் போது சந்துருவின் அம்மா "உன் அப்பா அம்மாவிடம் அடுத்த வாரம் பேசிவிடுகிறோம். நீ இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார்கள். அவர்களைப்பார்த்து சிரித்தேன்.. சந்துருவை பிறகு முறைத்தேன். காரில் வரும் போது திரும்ப என் எண்ணங்களைப்பற்றி அவனிடம் பேசினேன். எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று சொன்னான்.. எனக்கு சரியாய்ப் போக்கிக்கொள்ள வேண்டாம் என்று சொன்னதும் அவனுக்கு அதிசயமாய் கோவம் வந்தது..

"என்ன என்னைப் பிடிக்கலியா?" என்று வினவினான்..

திரும்ப விளக்கினேன். அருகிலிருந்த கடைத் தொகுப்பு ஒன்றில் நுழைந்தான்..எனக்குத் தெரியும்.. அவன் ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்தப் போகிறான் என்பது புரிந்தது. இவனுக்குப் புரிய வைக்க முயற்சிப்பது வீண் என்பதும் புரிந்தது. நன்றாக புரிந்துகொண்டு செயல் படும் அவனுக்கும் இந்த விஷயத்தில் என்னைப் புரியவில்லயே என்பது வருத்தமாக இருந்தது. அவன், கொஞ்ச நாள் ஆனால் சரியாகிவிடுவேன் என்று நினைக்கிறான் போலத் தோன்றியது.. ஐஸ் கிரீமுடன் வாயில் அவன் முத்தமிட்டதும் ஸ்டிராபெரி சுவை இனித்தது. இருந்தும் மனம் லயிக்கவில்லை.
******************************
சாதிகா மூன்று வருடங்களாக எங்களுடன் வேலை பார்க்கிறாள். அவள் கணவன் மிகவும் நல்லவன். நல்லவன் என்றால்.. ம்ம்.. எதுவுமே அவள் இஷ்டம்தான். அவன் இடைப்படுவதே இல்லை.. அவளுக்குத் தன் பெண்மையை நிரூபிக்க குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை வந்தது.. அப்படியே செய்தாள். எல்லா நிலையிலும் 3 மாதத்திற்கு மேல் விடுமுறை எடுக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். குழந்தை 2 மாதம் முன்கூட்டியே பிறந்துவிட்டது..ஆறு மாதத்தில் மொத்தம் 1 வாரம் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை.. குழந்தை தான் முக்கியம் என்னால் முடியுமா தெரியவில்லை என்று கூறுகிறாள்.. எங்கள் வற்புறுத்தலுக்காக பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறாள்.

கணவன் சந்துரு போல நல்லவனாய் இருந்தாலும் நிச்சயமாக மற்ற பிரச்சினைகள் இருக்கவே இருக்கின்றன. மாலையில் சந்துரு என்னை எங்களது வழக்கமான இடத்திற்கு இரவு உணவுக்கு வரும்படி கூறியிருந்தான்.. எனக்குப் போகவே மனசில்லை.. நிறைய வேலை இருக்கிறது. ஒரு விளம்பரப் படம் அடுத்தவாரம் பத்திரிகைகளில் வந்தாக வேண்டும். ஏதோ அவசரம் என்று கூறுகிறான்.. தவிப்பாக இருக்கிறது. இன்றைக்கு முழு இரவும் இங்கெ தான் போல இருக்கிறது.திரும்ப வந்தே ஆக வேண்டும்.
******************

சந்துரு பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டான். அவன் நிறுவனம் பணப் பிரச்சினையில் எக்குத்தப்பாக சிக்கிக் கொண்டு அரசாங்கம் இன்று மூடுமா நாளையா என்று இருக்கிறதாம். இந்த நிறுவனத் திலிருந்து வந்தால் வேலைக்கு கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள் போல இருக்கிறது என்று புலம்பினான். ஆகஸ்ட் கல்யாணம் தான் அவன் பெரிய கவலை. தள்ளிப் போடலாம் என்று சொன்னதும் .. என்ன விளையாடறியா.. அப்பா கொன்று விடுவார் என்று சொன்னான். இது எப்படி.. வேலை இல்லாதவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்யமுடியும் என்று கேட்கத்தோன்றியது. அவனைப்பற்றித் தெரிந்ததால் கேட்காமல் விட்டு விட்டேன்.

என்ன செய்யலாம் .. எதாவது ஐடியா சொல்லேன் என்று கேட்டான். என் நிறுவனத்தில் குமாஸ்தா வாக சேர்ந்து கொள் என்று சொல்லி வெறுப்பேற்றினேன்.. பின்னர் சிறிது ஆலோசனைக்குப் பிறகு தனியாக வியாபாரம் தொடங்கலாமே என்று கூறி பேசினோம். எல்லாம் முடிந்த பின் முதலுக்கு என்ன செய்வது என்று ஒரு ஆலோசனை.. அவனுக்கு அவன் அப்பாவிடம் பணம் கேட்க வேண்டாம். அவன் ஏற்கனவே வீட்டிற்காக கடன் வாங்கி இருந்தான். சரி 11 மணியாச்சு என் வேலை பாக்கியை முடிக்கவில்லை என்றால் நானும் அவன் மாதிரி ஆண்டிப்பண்டாரம் கதைதான் என்றேன்.. அடிக்க வரும் முன் ஓடினேன்..

வேலை முடிந்தாலும் அவனுக்கு எப்படி உதவுவது என்ற் சிந்தனை உள்மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நாளை உஷாவிடம் கேட்கலாம். அலுவலகத்திலேயே தூக்கம் காலையில் உஷா வந்து எழுப்பும் வரை.

No comments: