Tuesday, July 19, 2005

காதல் விலங்கு (பாகம் 1)

நீதிமன்ற வாசலில் ஒரு பெரிய கூட்டம். எல்லார் கண்களும் ஒரே விஷயத்தை எதிர் பார்த்து காத்திருக்கின்றன. ஜானகிக்கு என்ன தண்டனை கிடைக்கும்? தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன் ஜானகி யார்? அவளுக்கு எதற்கு தண்டனை என்று பார்ப்போம்.
************************
இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜானகி கம்பியில் மாட்டியிருந்த உடைகளை அளைந்து கொண்டிருந்தாள்.. எதை உடுத்துவது என்று முடிவு செய்ய முடியவில்லை. உடையை முடிவு செய்ய முடியலையா? எதையுமே முடிவு செய்ய முடியலயா என்று மனம் தவித்துக் கொண்டிருந்தது.

சந்துரு ரொம்ப நல்லவன் தான்.. 21 வருடமாகத் தெரியும். பக்கத்து தெருவில் தான் இருக்கிறான். அதே பள்ளி , கல்லூரியில் தான் இருவரும் படித்தார்கள். அவன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களையும் நன்றாகத் தெரியும்.. அவர்களுக்கும் இவளை நன்றாகத்தெரியும். சந்துருவுக்கு எதிலும் குறைவில்லை.. 6 அடிக்கு மேல் உயரம்..எம் பி ஏ படித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை.. அப்பாவுக்கு நல்ல வியாபாரம்.. ஒரு சகோதரி மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே இருவரும் சேர்ந்து பழகத் தொடங்கி காதலாக மாறி இன்று வேணுமா என்ற கேள்விக்கு வந்திருக்கிறது.

ஜானகிக்கும் எந்த குறையும் இல்லை.. அவன் படித்த அதே கல்லூரியில் தான் அவளும் எம் பி ஏ படித்தாள். நல்ல அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாள். மூன்று தோழிகள் சேர்ந்து ஒரு விளம்பர நிறுவனம் நடத்தி வந்தார்கள். சென்ற வருடம் வேகமாக வளரும் 100 சிறு நிறுவனங்களில் அவர்களது நிறுவனமும் இடம் பிடித்திருந்தது.

இன்றைக்கு சந்துரு அவளை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். பல நாட்களாக முடிவு செய்த விஷயம் தான்.. போன வாரம் அவன் இவள் வீட்டுக்கு வந்திருந்தான். திருமணம் பற்றி பேசினார்கள். அதிலிருந்து தான் இந்த தயக்கம், குழப்பம் எல்லாம்.

இந்த குடும்பம் என்ற மாயையில் சிக்க வேண்டுமா.. குழந்தை வந்தால் தொழில் என்ன ஆகும்.. தினக் காப்பகத்தில் குழந்தையை விட வேண்டியது தானா.. அதுவும் என்னைப் போலவே அப்பா அம்மா பாசத்துக்காக ஏங்குமா.. அது போல ஒரு கஷ்டம் தான் தரப் போகிறோம் என்றால் குழந்தை எதற்கு.. திருமணம் செய்தால் குழந்தை பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். சமூகத்தின் கண்ணில் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தால் எதோ பிரச்சினை என்பது போலப் படும். சந்துருவிடம் இதைச் சொன்னால் "நதி வரும் போது பாலத்தைப் பற்றி யோசி" என்று சொல்கிறான்.

திருமணம் ஒரு சிக்கல் என்று சாராவின் திருமணம் நிரூபித்தது. சாரா, ஜானகியின் கல்லூரித்தோழி. தோழிகளாகச் சேர்ந்து நிறுவனம் தொடங்கியதும் அதில் இருந்த நாலாவது நபர். கல்லூரி முடிந்ததும் ஜேம்ஸை திருமணம் செய்து கொண்டாள். குடும்பத்தையும் தொழிலையும் சேர்ந்து கவனிப்பது கஷ்டமாக இருந்தது. ஜேம்ஸ் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தொழில் முறையாக தேவை ஏற்பட்டது. மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதித்தனர். ஆனால் சாராவுக்கு தொழிலை விட்டு போவதா என்று ஒரு தயக்கம்.. கொஞசம் நாள் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தனர். 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொண்டனர். ஜேம்ஸ்க்கு மனைவி உடனிருக்க வேண்டும் என்று தோன்றத் தொடங்கியது.. நீ என்னுடனேயே வந்துவிடு.. தொழில் எல்லாம் வேண்டாம் என்று கூறினான். இது ஒரு பெரிய பிரச்சினை ஆனது.. பிறகு, எல்லாரும் அறிவுரை கூறிய பின் சாரா அவளுடைய விருப்பங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஜேம்சுடன் சென்றுவிட்டாள்..

அவள் இடத்தில் நான் இருந்தால் என்று ஜானகி அடிக்கடி மனதுக்குள் பெரிய வாக்கு வாதமே நடத்துவாள். அந்த வாக்கு வாதங்களின் விளைவுதான் இந்த மன உளைச்சல். இந்த சந்துரு வைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரச்சினை வந்தால் விட்டுவிட்டு போய்விட முடியாது. உடைந்து போய் விடுவான்.. இப்போதே எல்லா விஷயங்களிலும் விட்டுக்கொடுத்து விடுவான். ஆனால் அவர் ஒரு குழந்தைப் பைத்தியம். இப்போதே 4 குழந்தைகள் தேவை என்று தேவைப்பதிவும் செய்தாயிற்று.

தொலைபேசி கிணுகிணுத்தது. சந்துரு தான்.. "10 நிமிஷத்தில் தயாராக இரு போகலாம்".. ஜீன்ஸ் தான் போடுவேன், இந்திய உடை கிடையாது என்று சொன்னதும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டான். இதை வைத்து ஒரு சின்ன சண்டை போட்டு வரமாட்டேன் என்று சொல்லலாம் என்றால் என் திட்டத்தில் மண்...உனக்கு எது சரியோ அதைச் செய் என்று பொத்தாம் பொதுவில் கூட சொல்ல வில்லை. ஜீன்ஸ் போட்ட இளவரசியா.. இன்னிக்கி எனக்கு ராஜ யோகம் என்று சொன்னான். இவனை என்ன செய்ய.. என் உதவிக்கு யாராவது வாருங்களேன். ********************************************
கொஞ்சம் மெது மெதுவாக (நேரம் கிடைக்கும் பொது) தொடரும்
இது என் முதல் கதை. தொடரவேண்டுமா என்றும் பின்னூட்டமிட்டும் நட்சத்திரங்களை சொடுக்கியும் சொல்லுங்கள்

3 comments:

குழலி / Kuzhali said...

முதல் முயற்சி என்றாலும் ஆரம்பம் நன்றாக உள்ளது, எழுத எழுத இன்னும் நன்றாக வரும்

neyvelivichu.blogspot.com said...

குழலி,

உங்களை திரும்பப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..

உங்களுடைய கருத்தை ஏற்று தான் வெட்டி ஒட்டும் பங்களிப்புகளை பெரிதும் குறைத்திருக்கிறேன்.. நிறைய என்னுடைய எழுத்தாக்கம் தான்.. இரண்டு கதைகள் எழுதி வருகிறேன்..

தூண்டுதலுக்கு நன்றி

அன்புடன்

விச்சு..

பத்மா அர்விந்த் said...

வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.