Friday, July 15, 2005

என் திருமணம்

கடவுள் அமைத்து வைத்த மேடை - எந்தன்
தோளிலே சூடினேன் கல்யாண மாலை.
கனவிலே கண்ட என் தேவி
கட்டி வந்தாள் வண்ணச் சேலை.

சேலையும் மாலையும் சேர
எத்தனை துன்பங்கள் கண்டோம்.
பிரிக்க ஒர் உலகமே உண்டு ஆயின்
சேர்க்க இங்கெவருமே இல்லை.

மதமென்று சொல்லி ஒரு பக்கம் சாதி
இனமென்று சொல்லி ஒரு பக்கம்.
மொழியென்று சொன்னோரும் உண்டு
எம்காதலைத் தடுப்பதற்கென்று.

சாதகம் சேரவே இல்லை இதில்
கோள்களின் சண்டைகள் தீரவே இல்லை.
செவ்வாயின் தோஷமெனச் சொன்னார் அவள்
செவ்வாயில் (புன்)னகையன்றி வேறொன்றும் காணேன்.

பணம் பொருள் செல்வங்கள் வேண்டாம் உங்கள்
பெண்ணெனும் பெருஞ்செல்வம் தாருங்கள் என்றால்
பிரச்சினை இருக்குதோ என்றார் என்னில்
பைத்தியம் பெரும் பிணி இருக்குமெனக் கொண்டார்.

குடும்பத்தின் தகுதிகள் பார்த்து எங்கள்
இனம் குலம் கோத்திரம் பார்த்துஆயிரம்
சிந்தனை செய்கின்றார் வீணில் எங்கள்
சிந்தை கலந்ததைக் காணார்

உணவிலே வேற்றுமை உண்டு ஆயின்
எங்கள் உணர்விலே வேறுபாடில்லை எங்கள்
கனவுகள் மெய்ப்பட வேண்டும் நிச்சயம்
காதலில் வெற்றியும் கண்டாக வேண்டும்

மனமொத்த வாழ்க்கைதான் வேண்டும் தினம்
மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கிட வேண்டும்இரு
மனம் இணைந்திட்ட பின்னே உலகின்
பிரித்திடும் சக்திகள் என் செய்யக் கூடும்?

மனதிலே வரைமுறை வேண்டும் தினமும்
துணைவரைத் தெய்வமென தொழுதிடல் வேண்டும்
தாலிதான் வேலியென்றில்லை கற்பைப்
பொதுவிலேகொண்டாற் துன்பங்களில்லை.

உறவென்று சொல்லுவார் இல்லை காதல்
உயர்வுணர் நண்பர்கள் உடனோடி வந்தார்
திருமணப் பதிவுடன் ஒன்றாகி விட்டோம் இனிப்
பிரிவுகள் என்றுமே இல்லை.

No comments: