Friday, July 15, 2005

கடலுக்கு வேண்டுகோள்

காற்றும் மழையும் கொஞ்சமோ - அலை
கடலும் மீண்டும் பொங்குமோ
பாடு பட்டு வேர்வை சிந்தி தினம்
சேர்த்த செல்வம் தங்குமோ.

உறவு முறைகளை காணுமே - நாளைய
உணவுக்கு வழியும் வேணுமே
நாளை என்பது இருக்குதா இல்லை
செத்து நீரில் மிதக்குதா

கடலை அண்டி வாழ்கிறோம் பெற்ற
தாயை போல காண்கிறோம்
நீயே உந்தன் பிள்ளையை ஒரு
பேயாய் மாறிக் கொல்வதோ

காற்றும் புயலும் தேவலை - உயிர்
கடலில் போனதைத் தேடலை
கடலே வீட்டில் வந்து என்
வாழ்வைத் தின்பது சரியில்லை

உப்பும் மீனும் தந்தவள் எங்கள்
உணவும் உடையும் தந்தவள்
உயிரைத்தந்த தாயினும் எங்கள்
உணர்வில் கலந்து நின்றவள்

தவறு செய்தால் தண்டனை, எங்கள்
தவறு என்ன சொல்லம்மா
உன்னை நம்பி வாழ்கிறோம், தினம்
எம்மைக் காப்பாய் கடலம்மா.

2 comments:

ரங்கா - Ranga said...

சுனாமியை ஒட்டி எழுதிய கவிதை போல் தெரிகிறது. அழகாக எழுதியிருக்கிறாய் - வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

Chandravathanaa said...

சோகம் தோய்ந்திருந்தாலும் அழகிய கவிதை.