குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார். சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
அவர் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வைக்கும் மக்கள் அதை எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதாகக் கொள்கிறார்கள் என்பது சிந்தனைக்குறியது.
சமீபத்தில் வந்த அன்னியன் திரைபடத்திற்கு வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களைப் படித்த போது, பலர் அதில் சாதி பற்றியும் சிலர் தொழில் நுட்பம் பற்றியும் எழுதி இருந்தார்கள்.. யாருமே தனி மனித ஒழுக்கக் குறைவைப்பற்றி அதில் கூறப்பட்ட கருத்துக்களைக் குறித்து எதுவுமே எழுத வில்லை. தனிமனித ஒழுக்கக் குறைவைப் பற்றி இப்படித்தான் கூற வேண்டும் என்றோ இதைப் பற்றிக் கூறுவதால் என்ன நடந்துவிடப் போகிறது என்றோ நினைத்தார்களோ?
இந்தியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். நமக்கு இதெல்லாம் தவறு என்று உறைக்காமலேயே போய் விட்டது என்று. அடுத்தவர் உயிர் போகும் போது "னிற்கிறேன், காயமடைந்தவரைக்கொண்டு வா" என்று கூறி அவர் கொண்டு வருவதற்குள் சென்ற வனுக்கு தண்டனை தருவது தப்பு. அவருக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். தெருவில் கிடப்பவருக்கு உதவுவதா அவர் வேலை என்று ஒரு வலைப் பதிப்பிலும், ஒரு பத்திரிகையிலும் கூட எழுதி இருந்தார்கள். நம் சிந்தனை இவ்வளவு தானா.
அந்த நபரைக் கொன்று அவரது தவறைப் புரியவைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு உயிர் போகும் போது காப்பாற்றக் கூட கணக்கு பார்ப்பது நம்முடைய மனிதாபிமானம் எவ்வளவு கீழே பொய் விட்டது என்பதைக்காட்டுகிறது. அதை நியாயப் படுத்துவதை என்னவென்று சொல்வது.
நமக்கு என்று வராதவரை, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்து சொல்பவர்கள் நாம். காணாமல் போன ஒரு 5 வயதுப் பையனைத்தேடி ஒரு ஊரில் உள்ளவர்கள் மூன்று நாட்கள் தேடியதாக அமெரிக்க பத்திரிகையில் படிக்கும் போது நம் ஊரில் " நாம என்ன செய்யரதுங்க. போலீஸ்ல சொல்லுங்க தேடித்தருவாங்க " என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.
இங்கே (USA) உதவி வண்டிகள் வரும்போது எவ்வளவு பரபரப்பான சாலையிலும் , எந்த வேளையிலும் சாலையை விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும். அவர்கள் போன பிறகு தான் செல்ல முடியும். அண்ணா சாலையில் உதவி வண்டிகள் வரும்போது போட்டி போட்டு அதன் முன்னால் செல்லும் ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.
நமக்கு எல்லாம் பணமாகிவிட்டதோ என்று கூடத் தோன்றுகிறது. இந்த நிலையில் இந்த உறுதிமொழிகள் சொல்லும் நாள் தவிர மற்ற நாட்களில் நினைவாவது இருக்குமா?
அன்புடன்
விச்சு
மக்கள் பின்பற்ற கலாம் அறிவித்த உறுதிமொழிகள்கோவை, ஜூலை 8-
கோவையில் நடந்த விழாவில் மக்கள் பின்பற்ற வேண்டிய 7 உறுதி மொழிகளை கூறினார் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
கோவை மணிமேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்த சிறுதுளி அமைப் பின் பசுமைப் பயணத் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவைப் பொருத்தவரை நாளொன் றுக்கு 5 லட்சம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்த உறுதிமொழிகளை வழிபாட்டுத் தலங்களில் தனித்தனி அறிவிப்பு பல கையாக வைப்பதன் மூலம் பக்தர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இதைப் படிக்கும் 10 சதவிகிதம் பேர் அவற்றில் ஏதாவது ஒன் றைப் பின்பற்றினாலே நாட்டில் அமைதி நிலவும், சமுதாயம் தழைத்தோங் கும் என்றார் அவர்.
அவர் கூறிய உறுதி மொழிகள்:
1. என் வாழ்நாளில் 5 மாணவர்களையாவது 3 ஆண்டுகளுக்கு எனது பொறுப்பில் படிக்க வைப் பேன்.
2. எனது வீட்டின் அருகே உள்ள சிறு குளங்களைப் புனரமைக்கும் பணிகளைச் செய்வேன்.
3. உறவினர்களுடனான அனைத்துப் பகைமையையும் விட்டு விடுவேன். நீதி மன்றங்களில் தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெறுவேன்.
4. ஐந்து பழ வகை மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
5. சூதாட மாட்டேன்; போதைக்கு அடிமையாக மாட்டேன்.
6. எனது குடும்பத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சம கல்வி அளிக்க பாடுபடுவேன்.
7. நேர்மையாக வாழ்வேன்; ஊழலை ஒழிக்கப் பாடுபடுவேன்.
நன்றி: விடுதலை
Saturday, July 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment