Saturday, August 20, 2005

98. சிறுகதை - ஒரு தலைவனின் உதயம்

காலையில் காபியுடன் வந்து அமர்ந்தால் செய்தித்தாளில் தேர்தல் செய்திகள் தான்.. வேட்பாளர்கள் பட்டியலை ஒரு கட்சி வெளியிட்டிருந்தது.. குறிஞ்சிப்பாடி யில் யாரு.. தேடினேன்.. எனக்கு யாரையும் தெரியாது.. இருந்தாலும் எங்க ஊர் ஆச்சே..
ஆனந்த ஜோதி.. அட நம்ம ஜோதி.. பழைய ஞாபகங்கள் வந்தது..

*************************************************

ஜோதி என்னுடன் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தான்.. பிறகு நான் ஆங்கில மீடியம் வகுப்புக்குப் போய் விட்டேன்.. அவன் தமிழ் மீடியம் வகுப்பில் படித்தான். எனக்கும் ஜோதிக்கும் நல்ல ஒரு புரிதல்.. பெரிய பையனாக இருந்த ஜோதி வகுப்பில் என்னை யாராவது அடித்தால் தொலைத்து விடுவான்..

அவனுடைய வீட்டில் அவ்வளவு வசதி இல்லை அதனால் என்னுடைய நோட்டு பென்சில் எல்லாம் அவனுக்குக் தருவேன்.. அம்மா கேட்டால் ஜோதிக்கு கொடுத்துவிட்டேன் என்று கூறுவேன்.. சில சமயங்களில் அம்மாவே அவனுக்கும் சேர்த்து வாங்கிக் கொடுத்து விடுவாள்.

அவன் வேறு பள்ளிக் கூடம் போன பிறகு நாங்கள் வீடு மற்றிக் கொண்டு போய் விட்டோம்.. பிறகு ஒன்பதாம் வகுப்பில் ஒரே பள்ளிக் கூடம்.. நேருக்கு நேராக வந்து விட்டால் "என்னடா ராஜா நல்ல இருக்கியா?" என்று கேட்பான்.. ஒரு சிரிப்பு.. அவ்வளவுதான்..
ஒரு முறை பள்ளியில் ஸ்ரைக் வந்த போது ஜோதி முன்னிலையில் வந்து நெய்வெலியில் இருக்கும் 32 பள்ளிக் கூடத்தையும் 8 நாள்கள் மூடி வைத்திருந்தான்.. அவனுடன் அதன் பிறகு பேசக் கூடாது என்று அம்மா சொல்லிவிட்டாள்.. அப்புறமும் சிரிப்புகள் தொடர்ந்தன..

பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றுவிட்டு ஐ டி ஐ படிக்க அவன் போய்விட்டான்.. நான் கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.. ஒரு நாள் பேருந்து நிலையதில் புகை பிடிப்பதற்காகப் போன போது அவனைப் பார்த்தேன்.. மணி பதினொன்று..

"என்னடா ராஜா நல்லா இருக்கியா.."

அவனை நான் எதிர்பார்க்க வில்லை.. சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவன், அவர்கள் வெற்றி பெற்றதும் அந்தப் பகுதியில் இருந்த மாற்று கட்சிக் காரர்களின் கடைகளை எல்லாம் அடித்து உடைத்து விட்டான் என்றும் அவன் இப்போ பழைய ஜோதி இல்லை என்றும் அம்மா சொல்லி இருந்தாள்.

"நல்ல இருக்கேன்டா.. (டா வா.. சொல்லலாமா..கூடாதா...)

"வாடா மாப்ளை, டீ சாப்பிடலாம்.. "

ஒன்றும் சொல்லாமல் அவனுடன் சென்றேன்.. அருகிலிருந்த கடையில் நுழைந்து "டேய் ரெண்டு டீ போடுரா" என்றான்.. கடையை கழுவி பாத்திரம் எல்லாம் கழுவிக்கொண்டிருந்தார்கள்..
நான் "வே..." என்று தொடங்கும் முன் கையை அசைத்து சும்மா இரு என்று சைகை காட்டினான்.. பத்து நிமிடத்தில் டீ வந்தது.. எனக்கு கொஞ்சம் வருத்தம்.. ஒரு அப்பாவி கடைக் காரனை இப்படி படுத்துகிறானே என்று.

"சிகரெட், தண்ணி எல்லாம் வேண்டாண்டா மாப்ளை" என்று அவன் என்னிடம் சொன்னான்.. எனக்கும் அவனிடம் அடிதடி அராஜகம் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமா யிருந்தது.. சொல்லவில்லை.

பிறகு.. குடும்பத்தினர் பற்றி விசாரித்து விட்டு.. பிரிந்து போனோம்.. அப்புறம் வேலை கிடைத்து நான் ஊர் ஊராகப் போகத் தொடங்கினேன்.. என் பெற்றோரும் நெய்வேலியை விட்டு சென்னை சென்று விட்டனர்.. பங்குனி உத்திரத்திற்கு வில்லுடையான் பட்டு* வரும் போது யாரையாவது பார்த்தால் தான்.

***********************************************

சென்ற முறை நெய்வேலி போனது ஐந்து வருடங்களுக்கு முன்..
அப்போது பெரியார் சிலைக்கருகில் அவன் தம்பி செல்வத்தைப் பார்த்தேன்.

"ஜோதி எங்கடா" என்றதும்

"அது தெரியாதா உனக்கு அவன வெட்டிட்டாங்க என்றான்"

உடனே அவன் வீட்டுக்குப் போய் ஜோதியையும் பார்த்தேன்.. போகும் வழியில் அவன் ஒப்பந்தக் காரனாய் இருப்பதும், தியேட்டர் குத்தகை எடுத்திருப்பதையும் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் செல்வம் சொன்னான். ஒப்பந்தக் காரன் என்பதால் நெய்வேலியிலேயெ வீடு கொடுத்திருந்தாகள்.

வாசலில் கையில் கட்டுடன் ஜோதி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.. என்னை பார்த்ததும் அவன் முகத்தில் ஆச்சர்யம்..

"வாடா ராஜா.. எப்படி இருக்க?.. தம்பி தங்கச்சி எல்லாம் சௌக்கியமா? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?"

சிரித்துக் கொண்டெ.. "எல்லாரும் சௌக்கியம்.. நீ என்ன பண்ணர.. கையில என்ன காயம்? என்றேன். முதலில் ஒன்றும் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தவன்.. பிறகு எனக்கு விஷயம் தெரியும் என்று தெரிந்ததும் சொல்லத் தொடங்கினான்.

"வடகுத்து தங்கராசு தெரியும் இல்ல.. அவன் ஆளுங்க டவுன் ஷிப்க்குள்ள ஒரு பள்ளிக்கூடப் பொண்ணை கற்பழிச்சிட்டாங்க.. அந்த பொண்ண அப்படியெ அம்மணமா தண்ணி டாங்க் பக்கத்துல போட்டுட்டு ஓடிட்டாங்கன்னு பசங்க சொன்னங்க.. டீ கடையில் நாங்க நாலு பேரு அங்க போய் பாத்த அது நிஜம் தான்..அந்தப் பொண்ணு துடிச்சிகிட்டு இருந்தது. அன்னிக்கி வாலி பால் விளையாட டவுசர் போடிருந்தேன்.. உடனே என் லுங்கி சட்டையை கழட்டி அந்த பொண்ணுக்கு போட்டு விட்டு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போனேன்.. அவங்க அய்யா எதோ நான் தான் செஞ்சுட்ட மாதிரி என்ன பாத்தார்.. போலிஸ்ல சொல்லுங்கன்னு சொன்னா..இங்க ஒன்னும் நடக்கலன்னு சொல்லிட்டார்.. எனக்கு மனசு வருத்தமா போச்சி.. இன்னிக்கி இவங்கள விட்டா.. நாளைக்கி நம்ம வீட்டுப் பொண்ணுஙளுக்கும் இதே கதிதான்னு தோணிச்சு.. அவன் ஆளுங்க நாலு பேரை வெட்டினோம்.. இருட்டில சாராயம் குடிச்சுக் கிட்டிருந்தாங்க.. அவங்களுக்கு யாரு வெட்டினாங்கன்னு கூடத் தெரியாது.. ஆனா அரசல் புரசலா எல்லாரும் நாந்தான் வெட்டினேன்ன்னு பெசிக்கிட்டாங்க.. போலிஸும் என்னைப் பிடிச்சு விசாரிச்சாங்க.. ஒன்னும் தேறலை..

வெளில வந்து ஒரு வாரத்துல குடும்பத்தோட படம் பார்க்கப் போய்க்கிட்டிருந்தேன்.. பாமிலிய உள்ள அனுப்பிட்டு வண்டிய நிப்பாட்ட வந்தப்பொ மூணு பேர வந்து அரு வாளால வெட்டினாங்க.. அருவாள கைல பிடிச்சுட்டேன்.. கை கொஞ்சம் ஒட்டிக் கிட்டிருந்தது.. அவ்வளோதான்.. கத்தினதும்.. தியேட்டர்ல இருந்த நம்ம ஆளுங்க ஓடி வந்து அவங்களைப் பிடிச்சிட்டாங்க.. கையை வச்சி தச்சிட்டங்க.. நல்ல ஆறிட்டுது.. நேத்து தங்கராசையும் கைது பண்ணீட்டாங்க.. அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா.. "என்றான்..

எனக்கு வியப்பாக இருந்தது. வெட்டினேன் வெட்டினான்ன்னு எவ்வளோ சாதாரணமாச் சொல்லரான்.. ஆனா.. அந்த பொண்ணுக்காக மனசு கஷ்டப்பட்டுதுன்னு சொன்னானே.. இது தான் பழைய ஜோதி..காமராஜர் மாதிரி இல்லைன்னாலும் கொள்ளை மட்டுமே அடிக்கற அரசியல் வாதியாக இருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டேன்..

கொஞ்ச நாள் கழித்து ஒரு எம் எல் ஏ வோ ஒரு அமைச்சரோ நமக்கு வேண்டப்பட்டவங்களா இருப்பங்கன்னும் நினைச்சுக் கிட்டேன்..

* வில்லுடையான் பட்டு என்பது நெய்வேலியில் இருக்கும் ஒரு முருகன் கோவில்.. இங்கே முருகன் கையில் வில்லுடன் இருப்பார்.. வேல் இல்லை.. வருடா வருடம் பங்குனி உத்திரம் திருவிழா.. ஒரே விழா இது தான் நெய்வேலியில்.. நெய்வேலி குறிஞ்சிப்பாடி ரிசர்வ் தொகுதியின் கீழ் வருகிறது.

3 comments:

குழலி / Kuzhali said...

//வில்லுடையான் பட்டு//
பங்குனி உத்திர திருவிழா அருமையாக இருக்கும்.

அது சரி விச்சு இந்த கதை உண்மை கதை மாதிரி இருக்கின்றதே?!

// நெய்வேலி குறிஞ்சிப்பாடி ரிசர்வ் தொகுதியின் கீழ் வருகிறது.//
தகவலுக்காக, குறிஞ்சிப்பாடி தனி(ரிசர்வ்) தொகுதியல்ல, தற்போதைய ச.ம.உ. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விச்சு, நெய்வேலி தென்னாற்காடு மாவட்டத்திலேயே ஒரு வித்தியாசமான ஊர், மாவட்டத்தின் மற்ற ஊர்களை விட அதிக வளர்ச்சி எல்லா விதத்திலும் இருக்கும். அங்கே தினம் தினம் நடக்கும் சம்பவங்களை வைத்து ஆயிரமாயிரம் கதை எழுதலாம்.

நன்றி

குழலி / Kuzhali said...

சொல்ல மறந்துவிட்டேனே, கதை நன்றாக இருந்தது.

neyvelivichu.blogspot.com said...

ஜோதி இருக்கிறான்..

கொஞ்சம் உண்மை.. நிறைய கற்பனை.. தேர்தலில் நின்றவன் நிஜமாகவே அந்த தப்பைச் செய்தவன். இரண்டு முறை போட்டியிட்டுத் தோற்றுப் போனான்

தட்டிக் கேட்டவன் வெட்டவில்லை..

அந்தப் பெண் பள்ளிக்குப் போனபோது அவள் ஆசிரியை "இத்தனை நடந்ததுக்கு நாண்டுகிட்டு சாகலாம் "ன்னு சொன்னதாலே, படிப்பு அடுத்தனாளே முடிந்து விட்டது.. பத்து நாளில் திருமணம் செய்து விட்டார்கள்.

ஜோதியை அரிவாளால் வெட்டி கையில் காயம் வந்தது.. அவன் ஒரு கட்சியின் வட்டமாகவோ ஒன்றியமாகவோ இருக்கிறான். என் மனதை மிகவும் பாதித்த பாத்திரம் ஜோதி.. உண்மையில் தன் உடைகளை உடனே அந்த பெண்ணிற்காக கொடுத்தவன்.

குறிஞ்சிப் பாடி, சிதம்பரம் இரண்டுமே தனித் தொகுதிகள் தான் என்று ஒரு நினைவு..

நிறைய கடலூர் நண்பர்கள் எனக்கு உண்டு.. எல்லாம் புனித சூசையப்பர் பள்ளியில் படித்தவர்கள். என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்கள்.. பொன்னப்பன் வேல் முருகன் என்று இரண்டு பேர் அப்பொதைய தெ. ஆ. அணிக்கு கிரிக்கெட் விளையாடுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா தெரியவில்லை

அந்த நாள் ஞாபகம்..

அன்புடன் விச்சு