வாழ்க தமிழ் மணம்.. வாழ்க காசி மற்றும் நண்பர்கள்
முதலாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்மணத்துக்கு.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது போல் நீங்கள் இணையத்தில் தமிழ்மணம் வைத்துத் தமிழ் வளர்க்கிறீர்கள். இரண்டும் ஒரே அளவுள்ள முயற்சி தான்..
பதினைந்து ஆண்டுகளாக இதோ எழுதுகிறேன் அதோ எழுதுகிறேன் என்று சொல்லி தள்ளிப் போட்டு வந்த என் ஆர்வம்.. இந்த ஊடகத்தில் பழமானது.. அதற்கு நன்றி.. இது போல் எத்தனையோ சிந்தனை விதைகள் பூக்களாகவும் கனவுகள் பழங்களாகவும் உதவும் முயற்சி இது. நாளைய உலகத்தில் தமிழ்மணத்திலிருந்து வந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக பலரும் வருவார்கள். அவர்களை வளர்த்த பெருமை உங்களையே சாரும்.
தற்போது, வெங்கிட்டு மற்றும் முகமூடி ஒரு புதிய மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறார்கள். எத்தனையொ நல்ல தமிழில் கதைகளும் கவிதைகளும் மனதில் இருந்து வலைப்பூவாய் விரியும் ஒரு அற்புதம். இது போன்ற முயற்சிகள் தமிழை பொதுவாகவும், குறிப்பாக இணையத்திலும் வளர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. இவர்கள் சிறந்த கிரியா ஊக்கிகள்.
வலைப்பதிவாளர்கள் பல இடங்களில் இருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் (மாதம் ஒரு முறை) சந்திதுக் கொண்டால், நம்மில் ஒரு இணைப்பு பெருகும்.. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு கருவியாகவும் அது அமையும்.. (தமிழ்சுரங்கம் என்ற பெயரில் நண்பர் ஒருவர் NJ, USAயில் இதே தமிழ் வளர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்).
மதம் பற்றிய குறிப்பு சிந்திக்க வைக்கிறது.. தமிழை விட்டு மதத்துக்குப் போகும் போது.. தமிழைக் காண முடிவதில்லை.. பலர் தம் மதத்தை நிலை நிறுத்தவும் சிலர் அதைக் குலைக்கவும் வலைப்பதிவுகளைப் பயன் படுத்துவது தவிர்க்கப் பட வேண்டியது.
இப்படி திட்டுவதாலோ அல்லது அதை எதிர்த்து காத்துக் கொள்வதாலோ எதாவது பலன் இருக்கிறதா என்று பாருங்கள். பல நூறு ஆண்டுகளாக இது தொடரும் செயல். சூரியனைப் பார்த்து நாய் தினமும் குறைக்கிறது.. சூரியனுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லை.., நாய்க்கு ஒரு திருப்தி தன் தூக்கத்தைக் கெடுத்தவனை திட்டி விட்டேன் என்று.. நாம் சூரியனாய் இருக்கலாமே..
நம் கடவுள்கள் இவர்கள் திட்டியதால் குறைந்து அழிந்து போவதானால் அது நெடு நாள் முன்னரே நடந்திருக்கும். "கடவுள் இல்லை" என்றதால் கடவுளோ மதமோ அழியவில்லை.. யாருக்கு அதைப் புரியும் பக்குவம் இல்லையோ அல்லது மதத்தின் மேல் கடவுளின் மேல் அழியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இல்லையோ அவர்கள்தான் வாக்குவாதங்கள் செய்கிறார்கள்.
ஒருவரது நம்பிக்கையில் தான் கடவுள், மதம் எல்லாம் வாழ்கிறது.. வாத பிரதிவாதங்களால் இன்னும் இருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கிறோமே அன்றி வளர்ப்பதில்லை.
சாதிகளைப் பற்றி எழுதுபவர்களுக்கும் இது பொருந்தும்.
வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது அது எந்த வகையில் (category) சேரவேண்டும் என்று பிரித்து, வலைப்பதிவை அந்த அடிப்படியிலேயெ பார்க்கும் வசதியும் தரலாம்.
உதாரணத்துக்கு, மதம் ஒரு வகை என்று கொண்டால், தமிழ்மணத்தின் முகப்பில் மதம் என்ற சுட்டி வைத்து அதைத் தேர்ந்து எடுப்பவர்கள் மட்டும் அதனுள் போகும் படிச் செய்யலாம்.
மற்றபடி இந்த தமிழ்மண முயற்சியில் என்னுடைய பங்களிப்பு ஏதும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்.. நான் தயார். (எடுத்துப் போட்டு செய்வது தான் பழக்கம் என்றாலும் எனக்கு எதை யார் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை... அதனால் தான் கேட்கிறேன்)
இப்படி ஒரு அமைப்பை இணையத்தில் நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகள் நன்றிகள்..
இதுதான் எனது நூறாவது பதிவு.. எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து எழுதத் தூண்டிய ரங்காவிற்கு நன்றி.
என்னுடைய எழுத்து களுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக மாலன், முகமூடி, குழலி, துளசி அக்கா, வெங்கட் கண்ணதாசன், தேன் துளி nisha போன்றோருக்கு ஒரு சிறப்பு நன்றி..
என் பதிவை அவர்கள் பதிவுகளில் இணைப்பாகக் கொடுத்திருக்கும் நண்பர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.
அன்புடன் விச்சு
ஒரு நூறு பதிவுகள் இதுவரை.. பல ஆயிரங்கள் இன்னும்
Tuesday, August 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
பதிவுகளை தொடருங்கள். காசிக்கு ஒரு மடல் அனுப்பி கேளுங்கள்.
விச்சு சிறப்பு நன்றியில தவறுதலா என் பேரு வந்திருச்சி பாருங்க ;-))
அப்புறம் இந்த வகை பிரித்தல்ல வர்ற ப்ரச்னை என்னன்னா, சில பேரோட நிறைய பதிவுகள (உதாரணம் என்னுது) எந்த வகையில சேக்க்றதுன்னே தெரியாது..
மத சண்டை விஷயம் பத்தி பாத்தா, நான் மதம் சம்பந்தமான பதிவுகள்ல எட்டி பாத்து ஒரிரு பத்தி படிச்சி அது விஷயம் உள்ள பதிவா இருந்தா மேல படிப்பேன் இல்லையின்னா அப்பீட். அதுதான் சுலபமான வழின்னு எனக்கு தோணுது.
அப்புறம் 100வது பதிவா.. கலக்குங்க.. மேலும் பல பதிவுகள போட்டு தாக்குங்க.
நூறாவது பதிவு தமிழ்மணத்துக்கு வாழ்த்தா அமைஞ்சுடுச்சுல்லே? பேஷ் பேஷ்.
வாழ்த்துக்கள், உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும்
என்றும் அன்புடன்,
துளசி
நன்றி. விச்சு.
//வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும் போது அது எந்த வகையில் (category) சேரவேண்டும் என்று பிரித்து, வலைப்பதிவை அந்த அடிப்படியிலேயெ பார்க்கும் வசதியும் தரலாம்//
இதற்கும் வசதி செய்யப்படுகிறது. விரைவில் வரும் (இப்படியே எத்தனை நாளா சொல்கிறேன்!)
உங்கள் 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ( சொல்ல மறந்துவிட்டேன்! )
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் விச்சு!
-மதி
வாழ்த்துக்கள் விச்சு. சில மாதங்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்த போது நினைத்தும் பார்க்கவில்லை - ஆனால் பயணம் இனிதாக இருக்கிறது :-). நீ எழுதியதைப் போல மதம், கடவுள் பற்றிய சர்ச்சைகளில் நிறைய நேரம் விரயம் ஆகிறது. சிறு வயதில் எழுதிய ஒரு கவிதையின் (எங்கே வீழ்ந்தோம்?) கடைசி இரண்டு வரிகள் மட்டும் ஞாபகம் வருகிறது:
வெந்து மடிந்த மாந்தர் வேண்டிய
அந்த நாளும் வந்திடாதோ?
உன்னுடைய இந்தப் பயணத்தை ஆரம்பிக்க உதவியாக இருந்தது மகிழ்ச்சியாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது. மறுபடியும் வாழ்த்துக்கள்
விச்சு முதலில் நூறு பதிவுகள் பதிப்பித்ததற்கு வாழ்த்துக்கள், இன்னும் இது பல நூறு பதிவுகள் தாண்ட வாழ்த்துகின்றேன், தங்களுடைய கதைகள் மிக நன்றாக உள்ளன.
//அப்புறம் இந்த வகை பிரித்தல்ல வர்ற ப்ரச்னை என்னன்னா, சில பேரோட நிறைய பதிவுகள (உதாரணம் என்னுது) எந்த வகையில சேக்க்றதுன்னே தெரியாது.. //
முகமூடி சொன்னதை அப்படியே ஆமோதிக்கின்றேன், (அனேகமாக இது தான் முதல் தடவையாக இருக்குமென நினைக்கின்றேன்)
நன்றி
karuththuch chonna anaivarukkum nanRi
anbudan vichchu
Post a Comment