Wednesday, August 17, 2005

சிறுகதை - எது முகமூடி

புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்

என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?

உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு

இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...

அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தா காதல்னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..

தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..

மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..

உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?

இல்லைண்ணா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்
வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.

வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, என் வகுப்பில் தான் படிக்கிறார். ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்

நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???

அப்படி இல்லைண்ணா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..

எந்த ஊரு பையன்??

இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....

என்ன சாதி ?

"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..

"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?

இல்லைண்ணா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....

அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

இல்லைண்ணா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..

அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................

ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ...

அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொளெரென அறைந்தான்.. "என்னடி பண்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்."
..
"முடியதண்ணா.. நான் அவரை தான் கல்யா...."

அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,
கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொண்ணுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ, என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.". முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..

ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்..

" பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு.."

உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..
"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மணிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"படாரென லைனை கட் செய்தான்...

"சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா..."

"சரிங்க ", தலையாட்டினாள்....

கோபத்தில் கண்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...

தூங்கிப் போனான். காலையில் போன் வந்தது.

"பையன் முரண்டு பிடிச்சான்.. நான் தேவியைக் காதலிக்கவெல்லாம் இல்லை. அது வேற ஆள் என்றான். ரெண்டு தட்டு தட்டினேன். போய்ட்டான் பாடிய எரிச்சிட்டேன்.. மேட்டர் ஓவர்."

கீழே வந்து தேவியைப் பார்த்தான். தூங்கிக்கொண்டிருந்தாள். சரளா விடம் சொன்னான் "மேட்டர் ஓவர்". திரும்பிப் பார்த்தால் தேவி..சலனமே இல்லாமல் இருந்தாள்.. புயலுக்கு முன்னே அமைதியோ?.

" உன் சாதி வெறி ஜெயிச்சிடிச்சில்ல.. இப்போ என்ன காலேஜ் போக விடு.. நீ மாப்பிள்ளை பாரு .. வருசம் முடிஞ்சதும் கல்யாணம் வைச்சுக்கலாம்.."

அவனால் நம்ப முடியவில்லை.. இருந்தாலும் அவள் நடவடிக்கைகள் நம்பிக்கை தருவதாகத் தான் இருந்தது. ஒரு வாரம் ஆள் போட்டுக் கண்காணித்தான்.. எதுவும் பிரச்சினை இல்லை..

ஆறு மாதத்தில் தேர்வுகள் முடிந்தது. அடுத்தநாள்

"உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்.. தயாராக இரு.. "

"சரிண்ணா.. போய் புதுசா ஒரு சேலை வாங்கிக்கவா?"

"காதல் சாதி" யின் வெற்றியில் மிதந்தவனாய் சொன்னான். "சரி .. சீக்கிரம் வந்துடு"

மூன்று மணிக்கு சரளாவிடமிருந்து போன்.

"தேவி இன்னும் திரும்ப வரலைங்க"

மூன்றே காலுக்கு திரும்ப போன்..

"ஒரு கடிதம் வசிட்டுப் போயிருக்கங்க.. "

கார் ஓட்டியபடியே செல் தொலைபேசியில் சொன்னான்

"படி"

"அண்ணா, நான் ரவியைத்தான் காதலித்தேன்.. அண்ணி அன்று பார்த்ததும் அவனைத்தான். சுந்தர் என் காதலுக்கு தொந்தரவாக இருந்தான். சரி நீ கோவப்பட்டதும் எதாவது செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஆனால் கொன்றுவிடுவாய் என்று எதிர் பார்க்கவில்லை. இப்போதும் என் வக்கீலிடம் என் வாக்கு மூலம் நீ எப்படி எதற்காக சுந்தரைக் கொன்றாய் என்று எழுதி கொடுத்திருக்கிறேன்.. எனக்கு எதாவது என்றால் அது போலீசுக்குப் போகும்..

அதனால் என்னைத் தேட வேண்டாம்..

கடைசியாக..

"சாதிகள் இல்லையடா அண்ணா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

அடுத்த படத்துக்கு கதை வசனம் எழுத உதவும்.."

பொண்ணுதானேன்னு நினச்செ இல்ல.. நான் பாரதியின் புதுமைப் பெண்.

அன்புடன் (ரவியின்) தேவி

கடிதத்தைக் கேட்டதும் தலை சுற்றியது.

பின் குறிப்பு: இது வி எம் எழுதிய முகமூடி http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html சிறுகதையின் தழுவல்.. (தழுவலா.. பாதி கதையெ சுட்டது தான்னு சொல்றது கேட்குது..) சாதி ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ரியலிசம் ஆனாலும் எனக்கு ஏற்பில்லை.. அதனால் மாற்றி விட்டேன்.. இதற்கு பரிசு உண்டானால் வி எம்க்கு கொடுங்கள்.
அன்புடன் விச்சு

No comments: