தேர்வு முடிவுகள் வந்தாயிற்று. ரமணிக்கு ரொம்ப சந்தோஷம். அவனுடைய விருப்பம் நிறைவேறியது. ரொம்ப ஒன்றும் ஆசைப் படவில்லை.. ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆயிரத்து ஆறு கிடைத்தது. அதற்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்தி பக்கத்து வீட்டு கமலா அவனை விட இரண்டு மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தது தான்.
மதிப்பெண் அட்டை பெற்று வரும் வழியில் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஒரு பதினோறு சுற்று சுற்றி விட்டுத் தான் வீட்டுக்குப் போனான். அழுத்தம் திருத்தமான நம்பிக்கை அந்தப் பிள்ளையார் மேல். தினமும் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்குப் போய் கும்பிட்டு ஆயிரம் மதிப்பெண்ணுக்கு மேல் வாங்க வை என்று வேண்டிக் கொள்வான்.. அதற்கு பலன் கிடைத்து விட்டதாகவே நம்பினான்.
ரமணி சிறு வகுப்புகளில் முதல் மதிப்பெண் வாங்கியவன் தான். பிறகு கிரிக்கெட், சினிமா என்று அன்னிய ஆதிக்கத்தால் கல்வி வளர்ச்சி தடைப் பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி எட்டாம் வகுப்பில் கணிதத்தில் அரை ஆண்டுத் தேர்வில் பெயில் ஆனான். பின்னர் சுதாரித்துக் கொண்டாலும், முதல் மதிப்பெண் பெறுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது..
பத்தாம் வகுப்பில் கண்ணை மூடிக்கொண்டு எண்பது சதவீதத்திற்கு மேல் வாங்குவேன் என்று அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்ததோடல்லாமல் தேர்வுகளுக்கிடையில் திரைப்படம் வேறு பார்த்தான்..முடிவுகள் வந்ததும் எண்பது சதவீததிற்கு ஆறு மதிப்பெண் இன்னும் தேவையாக இருந்தது.. அவன் தந்தையார் பணி புரியும் நிறுவனத்தில் எண்பது சதவீதம் மதிப் பெண் பெற்றால் ஐனூறு ரூபாய் பரிசு கிடைக்கும்.. கமலா பத்தாவதில் அதை வாங்கி விட்டாள்.. இவன் வாங்க வில்லை என்ற ஏக்கம் இருந்தது.. கிரிக்கெட், சினிமா எல்லாம் கட்டுக்குள் வந்தது. இரவு தினமும் ஒரு மணிவரைப் படிப்பான்.
அதற்கு மேல் பிள்ளையாரிடமும் தினமும் ஆயிரம் மதிப்பெண் கேட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குப் பொனதும் அம்மாவிடம் தான் முதலில் இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். பின் எல்லோரும் இவனைச் சூழ்ந்து கொண்டு மதிப்பெண் பற்றிப் பேசினர். லயோலாவா விவேகானந்தாவா என்று பேசிக்கொண்டிருந்தனர்.
எதோ ஒரு இடத்தில் இத்தனை மதிப்பெண்களுக்கும் காரணம் பிள்ளையார் தான் என்று குறிப்பிட்டான். உடனே ராஜு
"சுத்தப் பேத்தல்..கஷ்ட்டப்பட்டு படிச்ச.. மதிப்பெண் கிடைத்தது.. இதுல பிள்ளையார் எங்க இருந்து வந்தார். அப்படி பிள்ளையார் தருவதானால் மானிலத்தில் முதல் மதிப்பெண் கேட்டு வாங்கியிருப்பது தானே" என்றான்..
அவன் ஒரு புது கம்யூனிஸ்ட். கல்லூரி போன பின் சிகரெட் பிடித்துக் கொண்டு கடவுள் பொய் என்று சொல்பவன். ஏன் பொய் என்று கேட்டால் "நீ பார்த்திருக்கியா" என்று கேட்டு விதண்டா வாதம் பண்ணுவான்.. அவன் கூடப் பேசுவது கால விரயம்.. எதுவும் கற்றுக் கொள்ள முடியாது. தெளிவும் பிறக்காது.
ஆனால் இன்றைக்கு அவன் சொன்னது சரியோ என்று தோன்றியது.. ஏன் எனக்கு மானிலத்தில் முதல் மதிப் பெண் வேண்டும் என்று கேட்கத்தோன்றவில்லை? அதுவரை இருந்த மகிழ்ச்சி எல்லாம் காணாமல் போனது.
அம்மா எதோ கேட்க அழைத்தாள்.. முகவாட்டம் கண்டு என்னடா என்றாள்.. சொன்னான். "அவர் அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தான் கிடைக்கும். நீ படிச்சது பிள்ளையார் கிட்ட வேண்டிக் கிட்டது இரண்டுமே காரணம்.." என்றாள்.
இப்போது மானிலத்தில் முதல் இடம் கேட்கவில்லையெ என்ற வருத்தம் மனதை வாட்டியது. இல்லையென்றால் பிள்ளையார் தந்தார் என்பது பொய்.. இரண்டில் ஒன்று தான் நிஜம்.. எது நிஜம்?..
கமலா இவனைப் பார்க்க வந்தாள். என்னாடா ரமணி ரொம்ப சோகமா இருக்க.. மார்க் போதவில்லையா என்று கேட்டாள்.. சிரித்துக் கொண்டெ "இல்ல கமலா டயர்டா இருக்கு" என்றான்..
"ஒன்னு ரெண்டா.. ஆயிரம் மார்க் இல்ல வாங்கியிருக்க.. அப்படித்தான் சோர்வா இருக்கும்" என்று சிரித்தாள்
"கமலா உனக்கு ஒரு கேள்வி.. நீ இவ்வளவு மார்க் வாங்கியதுக்கு யார் காரணம்?" அவளும் தினமும் அவனுடன் கோவிலுக்கு வருபவள் தானே.
அவனை நிமிர்ந்து பார்த்த கமலா சிரித்துக் கொண்டே "நீ தான்" என்றாள்.. "உன்னைவிட நிறைய மார்க் வாங்கணும் என்று தான் கஷ்டப் பட்டுப் படித்தேன். நீ தான் எனக்கு முன்னால் தொங்கிய காரட் "என்றாள். அப்போ இவள் மதிப் பெண் வாங்கியதற்கும் பிள்ளையார் காரணம் இல்லையா?...
சரி விடு என்று நண்பர்களைப் பார்க்கப் போய் விட்டான்.. இரவில் திரும்பி வந்ததும் அப்பா வாழ்த்தினார். "கடைசியா ஒரு பரிசு வாங்கிட்ட என் நிறுவனத்திலிருந்து" என்றார்." எல்லா விண்ணப்பங்களையும் உடனே நிரப்பி அனுப்பிடு"
அவரிடமும் எல்லவற்றையும் சொல்லி அதே கேள்வியைக் கேட்டான்.. "யார் காரணம் என் மதிப்பெண்களுக்கு?"
"உன் முயற்சியை தவிர, உங்கம்மா தான் .. அவள் உனக்கு காப்பி போட்டுக் கொடுத்து, உனக்குள் ஆர்வத்தை வளர்த்து, படி படி என்று படுத்தி எடுத்தது தான் காரணம்" என்றார். இன்னும் மனசு திருப்தி அடையவில்லை.
சிவசுத் தாத்தா அப்பாவின் அப்பா. அந்த அறையின் ஒரு கோடியில் பாயில் படுக்கத் தயார் செய்து கொண்டிருந்தார். அப்பா அங்கிருந்து போனதும் இவனை அழைத்தார்.
"இங்க பாரு ரமணி, நீ மதிப் பெண் வாங்கியதற்கு எல்லாரும் காரணம் பிள்ளையார் உட்பட" என்றார்.
"அப்போ ஏன் மானில முதல் மதிப்பெண் கிடைக்கவில்லை?"
"நீ கேட்கவில்லை அதனால் கிடைக்கவில்லை. நீ உன்னால் எண்பது சதவீதம் தான் வாங்க முடியும் என்று நம்பினாய் அதை பெற எல்லார் உதவியையும் நாடினாய்.. மதிப்பெண் பெற்று விட்டாய். அதாவது உன் குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டாய். கிடைத்ததை வைத்து சந்தோஷப் படு.. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அடுத்த முறைக்கு பெரிய குறிக் கோளாக வைத்துக்கொள். நிச்சயம் வெற்றி பெறுவாய்"
"எல்லாத்துக்கும் நமது தன்னம்பிக்கை தான் காரனம். பிள்ளையாரோ அம்மாவோ கருவிகள்.. உன்னை ஊக்கப்படுத்த மட்டுமே முடியும். உன் பிரச்சினைகளை பிள்ளையார் கவனித்துக் கொள்வார் என்று நினைத்ததால் உன் மன அழுத்தம் குறைந்தது. ரிலாக்ஸ்டாக படிக்க முடிந்தது.. அது தான் வெற்றிக்குக் காரணம்."
அப்படியானால், நான் பிள்ளையார் கோவிலுக்கு போகாமலேயெ இந்த மதிப் பெண் பெற்றிருக்கலாமே?"
"நிச்சயமாக. ஆனால் கடவுள் என்பவர் எல்லா மதங்களிலுமே மனிதர் மனதில் நம்பிக்கையை வளர்த்து, உன்னால் முடியும் என்ற ஒரு எண்ணத்தை தரவே இருக்கிறார்கள். கடவுளை மட்டும் நம்பி படிக்கவில்லையென்றால் இது கிடைத்திருக்கதென்பதை ஒத்துக் கொள்கிறாயா? மிகவும் டென்ஷனான ஒரு சமயத்தில் இந்த நம்பிக்கை பெரிய அளவில் கை கொடுக்கிறது. இதை வெற்றி பெற்ற பிறகு தான் நாம் உணர்கிறோம்.. அதனால் பிள்ளையாரும் உன் தன்நம்பிக்கையை வளர்த்த விதத்தில் உன் மதிப் பெண்ணுக்குக் காரணம். மானில முதன்மை பெற சின்ன வட்டத்தில் யோசிக்காமல் பெரிதாக யோசி.. மேலும் இந்த மதிப் பெண்கள் எல்லாம் ரொம்ப தூரம் வராது.. இன்னும் நிறைய இருக்கிறது வாழ்க்கையில் " என்று கூறி அவர் கையில் வைத்திருந்த "திங்கிங் பிக்" புத்தகத்தையும் அவனிடம் கொடுத்தார்.
புரிந்தால் போலவும் புரியாதது போலவும் இருந்தது.. இது தான் கடவுள் போல..
அடுத்த தேர்வுக்கு கல்லூரியில் முதல் மதிப் பெண் பெறப் பிள்ளையாரே...
அட இங்க பாரு.. திரும்ப சின்ன வட்டத்திலயே யோசிக்கறேன்..
Thursday, August 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment