http://etamil.blogspot.com/2005/06/blog-post_111999293248001172.html
http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_29.html
இன்று இரண்டு பதிவுகளைப் படித்ததும் எனக்கு என் போபால் அனுபவங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது.
போபாலா.. இது ஒரு பெரிய கிராமம். நான் போபாலின் தென் பகுதியில் 2 வருடங்கள் இருந்திருக்கிறேன்..
பாகிஸ்தான் கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பது போன்றவை அங்கே சாதாரணம். பச்சை (அம்மாவுக்கு பிடித்த பாகிஸ்தான் கொடி கலர்தான்) நிறத்தில் வீட்டுக்கு வர்ணம் பூசும் அளவு தீவிரமான முஸ்லிம்கள் நிறைந்த ஊர்.
பாபர் மசூதியை உடைத்த போது நான் அங்கே இருந்திருக்கிறேன். ராத்திரி முழுக்க மொட்டை மாடியில் வீட்டில் இருக்கும் தோசை கரண்டி உட்பட இரும்பு ஆயுதங்களுடன் காவல் இருந்திருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டிருக்கு திரும்பி வந்தபின் இந்தியா அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு 2 மணிவரை மொட்டை மாடியில் டி வி வைத்து ஆட்டம் பார்ப்பதில் நேரம் போகும்.
பகலில் திடீரென்று ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வரும். (பிறகு தெரிந்தது, அவர்கள் பயத்தின் காரணமாக முஸ்லிம்களை மசூதியில் வந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று) தூரம் அதிகமாக இருப்பதால் என்ன தகவல் என்று புரியாது. ஒரு நாள் பரக்கத்துல்லா பல்கலைகழக மாணவர்கள் சைக்கிளில் வந்து இன்று இரவு முஸ்லிம்கள் தாக்க திட்டமிட்டிருக்கிரார்கள் என்று கத்திக்கொண்டே சென்றார்கள். இப்படி தான் செய்திகள் பரவின..
பழைய போபாலில் ஒரு முஸ்லிம் தன் பெட்ரோல் பங்கை இந்துக்களை எரிப்பதற்காக திறந்து விட்டுவிட்டார், ஒரு இந்துப் பெண்ணை அவள் முஸ்லிம் தோழி காப்பாற்றுவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் சகோதரர்களை விட்டு கற்பழித்து கொல்லவைத்தாள், ஒரு பெரிய கோவிலின் விக்ரகங்களை எடுத்து சாக்கடையில் எறிந்து விட்டார்கள், ராணுவம் முஸ்லிம் பகுதிகளில் நுழையவே முடியவில்லை என்றெல்லாம் வதந்திகள்.
மொட்டை மாடியில் நின்று பார்த்தால் நிறைய கரும்புகை தெரியும். பர்கெடாவில் கடையை எரிய விடுகிறார்கள். அங்கே எரிகிறது இங்கே எரிகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ரேடியோவில் தொடர்ந்து அமைதிகாக்கச் சொல்லி செய்திகள் வரும்.
நான் இருந்த இடம், ஓய்வு பெற்ற BHEL தொழிலாளர்கள் நிறைந்த இடமாதலால், அனைவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
தொலைபேசி வேலை செய்ய வில்லை. ராணுவத்தின் பொறுப்பில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாலை சாயும் நேரம். திடீரென்று எங்கள் அடுத்த வீட்டில் இருந்தவர் என் வீட்டு சொந்தக்காரரை அழைத்து நம் பகுதியில் எதோ கலவரமாம். வாருங்கள் போய் தடுக்கலாம் என்று அழைத்தார்.
நாங்கள் இருந்த இடம் இந்துக்கள் நிறைந்த இடம். என் வீட்டுக்காரர் உடனே கான்(khan) சாப் (saab) எங்கே என்று கேட்டார். மூன்றாவது வீட்டில் இருந்த கான் மட்டும் தான் எங்கள் தெருவில் இருந்த ஒரே முஸ்லிம். நாங்கள் மூவருமாக அவர் வீட்டுக்குப் போய் அவரை அழைத்தோம். அவர் வெளியே வந்ததும் "உங்கள் மனைவி குழந்தைகளுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் " என்று எங்கள் வீட்டுகாரர் கூறினார். கான் அதற்கு, "அல்லா கிருபையால் ஒரு கஷ்டமும் வராது, கவலைப்படாதீர்கள்" என்று பதில் சொன்னார்.
என் வீட்டு சொந்தக்காரார் உடனே அவர் வீட்டுக்குள் சென்று "சகோதரி வெளியெ வா, குழந்தைகளை அழைத்துக்கொள், கான் சாபுக்கும் புரியவை.. ஆபத்து வரும் போல இருக்கிறது. அல்லாவும் கணேசும் உங்களை நன்றாகவே வைத்திருப்பார்கள் ஆனால் சில சமயங்களில் நம் அறிவை பயன் படுத்த வேண்டும்" என்று சத்தமாக கத்தி சொன்னார். அந்த அம்மா என்ன நினைத்தார்களோ தெரியாது, "சகோதரர் சொல்வது சரியாக படுகிறது வாருங்கள்" என்று கூறி எங்கள் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள். உடனே கானும் எங்கள் வீட்டுக்கு வந்தார்.
அடுத்த ஒரு மணியில் ஒரு 50 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி பெட்ரோல் சகிதமாகஎங்கள் பகுதியில் ஒரு வீட்டுக்கு நெருப்பு வைத்திருப்பதாக அறிந்து ஓடினோம். எங்களுக்கு முகமூடி அணிந்திருந்த அவர்களில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கடும் வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருந்தன.. அவர்கள் முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு ஓடும் படி கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
நிறைய பேர் அவர்களை (கலவரக்காரர்களை) இங்கே எதுவும் செய்யக்கூடாது. இவர்கள் (முஸ்லிம்கள்) எங்களுடன் இவ்வளவு வருடமாக இருகிறார்கள் எங்கள் நண்பர்கள் என்றெல்லாம் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். பழைய போபாலில் நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு பழி வாங்கியே தீருவோம் என்று பதில் வாதமும் வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் ஒரு பகுதி இதெல்லாம் (வாதிடுவது) காரியத்திற்காகாது என்று கூறிக்கொண்டு அடுத்த தெருவில் புகுந்து ஓடியது. நாங்களும் துரத்திக்கொண்டு ஓடினோம். ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தது. வீட்டின் சொந்தக்காரர் கீழே நின்று பிரிந்து போன கும்பலைத் திரும்பிப்போகச்சொல்லி திட்டிக்கொண்டிருந்தார். முடிந்தால் அவரை (house owner) முதலில் வெட்டிவிட்டு குடித்தனக்காரர்களை எதுவும் செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவருமாக அவர்களை அங்கிருந்து துரத்தினோம். எங்கள் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேரும்வரை அவர்களுடனேயெ சென்றோம். பலத்த வாக்குவாதங்கள் தொடர்ந்தன. எவ்வளவு நாள் காப்பாற்றுவீர்கள் என்று கேட்டுக்கொண்டே போய்விட்டனர். ஒரு குழு அங்கேயே நின்று கண்காணித்துக் கொண்டிருத்தது.
ஒரு குழு மற்ற முஸ்லிம்களை இந்துக்கள் வீட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்தது. அதுவரை முஸ்லிம்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாடியில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அன்று முஸ்லிம்களை காக்க காவல் இருந்தோம்.
இப்படி கலவரத்தின் போது எங்களால் முடிந்த முஸ்லிம் குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த "எங்களால் முடிந்த" எதற்காக என்றால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் கணவர் பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்றிருந்தார். பாகிஸ்தானில் இருந்து வந்திருந்த அவரது மச்சான் வீட்டில் இருந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களிடம் சென்று வேறு யார் வீட்டிற்காவது சென்று விடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவ்ர் (மச்சான்) என்னிடம் துப்பாக்கி இருக்கிறது, யாரும் எங்களை ஏதும் செய்ய முடியாது என்று கூறிருக்கிரார். அவர்கள் வீடு ஊருக்கு வெளியில் கடைசி வீடு.
இரவில் ஒரு பனிரெண்டு மணி இருக்கும். இரண்டு பேர் ஓடிவந்து ஒரு முஸ்லிம் வீட்டில் 5 பேரைக் கொளுத்தி விட்டார்கள் என்று கூறினார்கள்.
உடனே மாடியில் இருந்த எல்லாரும் ஓடினோம். அருகில் செல்லும் போதே சதை எரியும் நாற்றம். ஐந்து உடல்களும் தெருவில் கிடந்தன. எல்லா வீட்டிலும் கதவு ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. யாரும் தொடக்கூடாது.. போலிஸ் வரும். இறந்து விட்டார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. மனம் மிக பாரமாக இருந்தது. காலை 5.30 க்கு போலிஸ் வந்த தாக பின்னர் தெரிந்தது.
27 நாட்களுக்கு ப் பிறகு ஊரடங்கு உத்தரவு 6 மணி நேரம் தளர்த்தப்பட்டது. 2 மாதம் கழித்து 56 சாவுகளுக்குப் பிறகு இதெல்லாம் முடிவுக்கு வந்தது. மனதில் காயங்கள் ஆழமாக பதிந்து விட்டது. அவர்களின் பயமும் வெறுப்பும் அது போன்ற ஒரு இடத்தில் இருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் HEY RAMல் வருமே அது போல ஒரு நிகழ்ச்சிகள் எல்ல குடும்பத்திலும் நடந்திருக்கிறது.. 50 60 வருடமாக கனன்று வரும் நெருப்பு.. குஜராத்திலும் அது தான் நடந்தது.. என் டி டி வி யில் பெண்களும் பக்கத்து வீட்டின் மேல் கல்லெடுத்து எறிவதெல்லாம் பார்த்தேன். போலிஸ் எதுவுமே செய்யமுடியாத நிலை. சுட்டால் கலவரம் அதிகமாகும்.
முஸ்லிம்கள் என்றாலே ஒரு வெறுப்பு. யாராவது இந்த நிலையை மாற்ற முயற்சி செய்தார்களா என்றால் இல்லை. இரண்டு கட்சிகளாக அரசியல் லாபத்துக்காக ஊதி தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது என்றைக்காவது மாறுமா.. எனக்கு நம்பிக்கை இல்லை.
அமெரிக்காவிலும் இதே போல நிலையைத்தான் பார்க்கிறேன். என்றைக்கு எந்தப் போராளி தாக்குவானோ என்று ஒரு பயம். போராளியும் சாதாரண முஸ்லிமும் எல்லாம் ஒன்றுதான் அடையாளம் தெரியும் வரை..
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
பின் குறிப்பு: அந்த ஐந்து பேரும் இறக்க வில்லை. தப்பித்துவிட்டார்கள். குணமாகி வந்ததும் வீட்டை பழைய போபாலுக்கு மாற்றிச் சென்று விட்டார்கள். நிறைய பேர் பழைய போபாலில் இருந்த இந்துக்களுடன் வீடுகளை மாற்றிக்கொண்டு விட்டார்கள். Khan இன்னும் இங்கே தான் இருக்கிறார்..அடுத்த ஜுனில் நானும் டெல்லிக்குச் சென்று விட்டேன். இப்போதும் போபால் என்றால் இந்த நினைவுகள் வருகிறது.
Wednesday, June 29, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல பதிவு! எப்பத்தான் இதெல்லாம் ஓயுமோ? மனுஷன்மனுஷனாக மட்டும் இருக்கக்கூடாதா?
இதேபோலத்தான் 'பூனாவிலும் அப்பப்ப ஏதாவது ஹிந்து முஸ்லீம் கலவரம் வெடித்துக்கொண்டே இருக்கும்!
ஆனால் இவ்வளவு கொடூரமாக இல்லை!
என்றும் அன்புடன்,
துளசி.
எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அழகாக எழுதி இருக்கிறீர்கள் விச்சு.
எனக்கும் சில கலவர அனுபவங்கள் இருக்கின்றன, விரைவில் எழுதுவேன்.
இந்த கலவரங்களைப் பார்த்தபின் ஏற்படும் "Trauma " பற்றியும் எழுதுங்கள்.
கருத்துக்கு நன்றி துளசி அக்கா..
//மனுஷன் மனுஷனாக மட்டும் இருக்கக்கூடாதா?//
நம்பிக்கை குறைவும் பயமும் தான் மனிதர்களை இப்படி எல்லாம் சொல்ல தூண்டுகிறது. பரஸ்பரம் நம்பிக்கை உண்டாக்க என்ன செய்ய வேண்டுமொ அதை செய்வது தான் இதை மாற்ற வழி. வெறுப்பை நீக்க அடுத்தவர்களிடம், நம்முடய மதம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதைப்பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதாவது நேச குமார் செய்வதையும் செய்யக்கூடாது.. நல்லடியார் செய்வதையும் செய்யக்கூடாது. அடுத்தவர் கருத்தை தவறென்று நிரூபிக்க முயற்சிக்கக் கூடாது. அவர் அவர் கருத்து அவர் அவர்களுக்குச் சிறந்தது. என் தாய் அல்லது மனைவி தான் உலகத்திலேயே சிறந்தவள் அதனால் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோமா?
அன்புடன் விச்சு
அன்புள்ள சுரேஷ்,
கருத்துக்கு நன்றி.
//இந்த கலவரங்களைப் பார்த்தபின் ஏற்படும் "Trauma " பற்றியும் எழுதுங்கள்//
நிச்சயம் எழுதுகிறேன். எனது திருமணம் 4 திசம்பர் அன்று நடந்தது. 6 திசம்பர் சென்னையிலிருந்து போபால் சென்று கொண்டிருக்கிறேன்.. இடார்ஸி தாண்டும் போதே ரயிலில் கல் விழத்தொடங்கி விட்டது.. ஒரு suspense thriller பார்த்த அனுபவம்.. அதையும் எழுதுகிறேன். குழலியின் பின்னூட்டதின் (http://www.blogger.com/comment.g?blogID=12534069&postID=111956799971184998)விளைவாக இனிமேல் வெட்டி ஒட்டுவதில்லை என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்..
அன்புடன் விச்சு
இரண்டு முறை படித்து உள்வாங்கி வைத்துக் கொள்ளவைக்கும் பதிவு.
ஊரடங்கு அமலில் இருந்தபோது, போபால் ரயில் நிலையத்தில் இருந்து, பேருந்து நிலையத்துக்கு நடந்து செல்ல முற்பட்டோம். ராணுவத்தால் தடுக்கப்பட்டு, மீண்டும் ரயில் நிலையத்துக்கேக் கொண்டு போய் விட்டது மட்டுமே, என்னுடைய போபால் நினைவுகள். அடுத்த நாள் காலை வழக்கம் போல் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது... இருட்டின பிறகுதான் மீண்டும் ஊரடங்கின் மிரட்சி தென்பட்டது.
மிக நல்ல பதிவு.வெறுப்புக் கொழுந்து விட்டு எரியும் சூழ்நிலையில் எப்படி மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை மனதில் பதியும் சித்திரமாக வர்ணித்திருக்கிறீர்கள். இதை ஏன் நீங்கள் ஒரு சிறுகதையாக எழுத முயற்சிக்கக் கூடாது? அதுவோர் நீடித்த பதிவாக நிலைத்திருக்கும். உங்கள் வலைப்பூவை என் யாகூ வலைப்பூவிலுள்ள பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறேன்.அங்கு வரும் மற்றவர்களும் இதை வாசிக்க முடியுமே
அன்புடன்
மாலன்
நன்றி பாலா,
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் போபாலில்.
அன்புடன் விச்சு
என் நேர்காணலுக்கு சுவையான பதில்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அன்புள்ள மாலனுக்கு
என்பதிவிற்கு பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
உங்களுடைய யாகூ வலைப்பூ முகவரி அறியத்தாருங்கள்.
இப்போது தான் சிறிதளவு எழுத முயற்சிக்கிறேன். கதையாக எழுதவும் முயற்சிக்கிறேன்.
அன்புடன்
விச்சு
//அதாவது நேச குமார் செய்வதையும் செய்யக்கூடாது.. நல்லடியார் செய்வதையும் செய்யக்கூடாது//
நான் என்றுமே என் நம்பிக்கைதான் சிறந்தது அடுத்தவரின் நம்பிக்கைகள் தவறு என்று சொல்லவில்லையே!
என் முதல் பதிவிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளேன், எனது நம்பிக்கையை அவதூறாக விமரிசிக்கும்போது, நான் நம்பியதுலிருந்து அக்குறை தவறு என்று விளக்கும் முயற்சிகள் தான் எனது பதிவென்று.
அவரவர் மார்க்கம் அவரவரோடு! என்பதே இஸ்லாம் சொல்லும் வழிமுறை. அதை நான் மீறியதாக அறிய முடியவில்லை. இருப்பின் அறியப் படுத்தவும், திருத்திக் கொள்கிறேன்.
குறிப்பு: உங்கள் பதிவை முழுதும் படிக்கவில்லை, படித்ததும் பின்னூட்டமிடுகிறேன்.
Post a Comment