Tuesday, June 07, 2005

அப்படி போடு அருவாள.. அங்கீகாரம் தேவையாம் அரவாணியாக..

அரவாணிகள் கொண்டாடும் பால் ஊற்றும் திருவிழா!

சென்னை : ஆணாக இருந்தவர் அறுவை சிகிச்சை செய்து அரவாணியாக மாறியதை அங்கீகரிக்கும் பால் ஊற்றும் திருவிழா சென்னையில் விடிய விடிய கோலாகலமாக நடைபெற்றது.

பெற்ற மகள் பூப்பெய்தியதும், நாள் குறித்து, பத்திரிகை அச்சடித்து உற்றார் உறவினர்களுக்கு வினியோகித்து தங்கள் சமுதாயத்திற்கு தெரிவிக்கும் வகையில் மஞ்சள் நீராட்டு விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல் ஆண் ஒருவர் அறுவை சிகிச்சையின் மூலம் அரவாணியாக மாறும்போது, அதை அரவாணிகளின் சமூகத்திற்கு அறிவிக்கும் வகையில் பால் ஊற்றும் திருவிழாவாக அரவாணிகள் கொண்டாடுகின்றனர்.

இந்த வினோத திருவிழா சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தத்தெடுத்த மகள்கள் சத்யா, வித்யாவுக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து அருணா என்ற அரவாணிபால் ஊற்றும் திருவிழாவை நடத்தினார். இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக அரவாணிகளின் உற்றார் உறவினர்களுக்கு பத்திரிகை அச்சடித்து வினியோகிக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் தத்தெடுத்த மகள்களை மேடையில்அமர வைக்கின்றனர். உற்றார் உறவினர்கள் ஒன்று கூடி நலங்கு (மஞ்சள், மருதாணி, சீயக்காய், எண்ணெய்) வைத்துவிட்டு வரும் அரவாணிகள் ஆரத்தி எடுத்து மொய் பணம் வைக்கின்றனர். இந்த விழா மூலம் சத்யா, வித்யா அரவாணிகளாக அங்கீகரிக்கப் படுகின்றனர்.

பின்னர் அரவாணிகள் தங்களது கவலைகளை மறந்து விடிய விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடுகின்றனர். விடியற்காலையில் தத்தெடுக்கப்பட்ட மகள்களை நீராட்டுகின்றனர். கடந்த நாற்பது நாட்களாக நகைகள் கூட அணியாமல் இருந்த அவர்களுக்கு வண்ண வண்ண சேலைகள் கட்டியும், நகைகள் மற்றும் மலர்களால் ஜடை தைத்து அலங்கரிக்கின்றனர்.
அதன் பின்னர் அரவாணிகள் மாத்தா (காளி) பூஜை செய்து படையல் போடுகின்றனர். மாத்தாவை வணங்கி, தத்தெடுத்த மகள்கள் பால் குடங்கள் சுமந்து வர, அவர்களை சூழ்ந்துகொண்டு அரவாணிகள் மாத்தா பற்றிய பாடல்களை பாடி அழைத்து செல்கின்றனர். சூரிய உதயத்திற்கு முன்பு கடற்கரையில் கடல் தாய்க்கு கற்பூரம் ஏற்றி வணங்குகின்றனர்.

தலையில் சுமக்கும் குடத்தில் எடுத்து வந்த பாலை கடலில் ஊற்றி விட்டு, கடல் தண்ணீரை எடுத்துக் கொள்கின்றனர். திரும்பி பார்க்காமல் வந்ததும் மாத்தாவை வணங்கிவிட்டு, தங்களுக்கு பிடித்த பெண் சாயலில் இருக்கும் அரவாணிகளின் முகத்தை பார்த்து கண்ணை திறக்கின்றனர்.

அதன் பிறகு தத்தெடுத்த மகள்கள் முழு அரவாணிகளாக சுதந்திரமாக நகரில் உலா வரலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேஷியா, மும்பை, புனே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் அரவாணிகள் ஏராளமாக வந்திருந்தனர்.

ஜாதி இல்லை; மதமும் இல்லை : அரவாணிகளுக்கு வசிக்க நிரந்தர வீடுகள் இல்லாததால் நாடோடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஜாதி, மதம் என்பது கிடையாது. அரவாணிகளில் அனைத்து மதத்தவர்களும் உள்ளனர். இவர்களுக்கு குறிப்பிடும் படியான விழா அரவாணிகளாக அங்கீகரிக்கப்படும் பால் ஊற்றும் திருவிழா மட்டும்தான்.

இந்த விழாவில் நாடோடியாக சுற்றித் திரியும் அரவாணிகள் ஒன்று கூடுகின்றனர். சமுதாயத்தில் அனுபவிக்கும் துன்பங்களை எல்லாம் மறந்து தங்கள் உறவினர்களை சந்திக்கும்போது ஏற்படும் சந்தோஷம் அளவிடற்கரியது. அப்போது, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான். அதன் பிறகு மீண்டும் நாடோடி வாழ்க்கையை தொடர்கின்றனர்.

(இதுல என்னமோ இருக்கு.. இல்லன்னா யாராவது மாறுவாங்களா?)

"பயணச் சலுகை... ஓய்வூதியம்...' அரசுக்கு அரவாணிகள் கோரிக்கை :பால் ஊற்றும் விழாவில் அரவாணியாக அங்கீகரிக்கப்பட்ட வித்யா கூறுகையில்,"எனது சொந்த ஊர் திருச்சி. பெற்றோர் என்னை வெறுக்கவில்லை. குடும்பத்துடன் வசித்து வந்தபோதே டிகிரி முடித்து, கருத்து கணிப்பு குறித்த பணியில் ஈடுபட்டேன். அப்போதும் பேன்ட், சட்டை அணிந்து தான் செல்வேன். பி.எச்.டி., படிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அதில் முழு ஈடுபாடு இல்லை. அரவாணியாக அங்கீகரித்த பிறகு பி.எச்.டி., படிக்க ஆர்வமாக உள்ளேன்' என்றார்.

செங்கல்பட்டை சேர்ந்த சுடர் பவுண்டேஷனை நிர்வகிக்கும் பிரியா பாபு (அரவாணி) கூறியதாவது:

கண்ணாடி கலைக் கூடம் சார்பில் அரவாணிகள் சமுதாயத்தில் எங்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை விளக்கும் வகையில் "மனசின் அழைப்பு' நாடகத்தை அரசு உயரதிகாரிகள் முன்பு நடத்தி காட்டினோம். அதன் பிறகு தான் எங்களுடைய நிதர்சனத்தை புரிந்து கொண்டு உதவ முன்வந்தனர். மும்பை, கடப்பா ஆகிய பகுதிகளில் அரவாணிகளுக்கு டாக்டர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மார்பகம் பெரிதாவதற்காக மாத்திரை உட்கொள்கிறோம். இவை சட்டவிரோதமாக செய்யப்படும்போது சில சமயம் சிறுநீர் வெளியேறுவதில் பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது.

அரவாணிகளுக்கு அரசு பொது மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். எங்களை போலீசார் பிடிக்கும்போது ஆண்கள் அல்லது பெண்கள் சிறையில் வைக்க முடியாமல் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். சமுதாயத்தில் நாங்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறோம். இதனால், மனரீதியாக பாதிக்கப்படுகிறோம். இதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரியா பாபு கூறினார்.

அரவாணி தனம் கூறுகையில்,"எம்.ஏ., வரலாறு படித்துவிட்டு, என்.ஜி.ஓ., நிறுவனத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கொருக்குப்பேட்டையில் வசித்து வரும் நான், எனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். 2007ம் ஆண்டில் எய்ட்ஸ் இல்லாத உலகம் படைக்க பாடுபட்டு வருகிறோம். என்னை யாராவது கிண்டல் செய்தால் அவர்களின் வழியிலேயே சென்று அவர்களை திருத்த முயற்சிப்பேன்' என்றார்.

அரவாணிகள் அரசுக்கு முன் வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள்:
தமிழகம் முழுவதும் அரவாணிகளுக்கென்று வீடுகளை ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

அரவாணிகளை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் பெண் மற்றும் ஆண் அரவாணிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எல்லாருக்கும் இடஒதுக்கீடு செய்வதுபோல் அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மூத்த குடிமகன்கள் ரயில், பஸ்களில் சலுகைகள் வழங்குவதுபோல் அரவாணிகளுக்கும் 40 வயதுக்குமேல் சலுகைகள் வழங்க வேண்டும். அரவாணிகளுக்கு வாழ்நாளின் இறுதி கட்டத்தை கழிக்க ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு ஆணை பிறப்பித்தால் சமூகத்திலும் அங்கீகாரம் கிடைப்பதோடு, பாதுகாப்புடன் வாழமுடியும் என்று அரவாணிகள் தெரிவித்தனர்.

(இன்னும் பெண்களுக்கே இதுல பாதி சமாசாரம் கிடைக்க மாட்டேங்குது.. ஒரு நூறு வருஷம் ஆகும்...)

1 comment:

SnackDragon said...

//அரவாணிகளை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் பெண் மற்றும் ஆண் அரவாணிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எல்லாருக்கும் இடஒதுக்கீடு செய்வதுபோல் அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மூத்த குடிமகன்கள் ரயில், பஸ்களில் சலுகைகள் வழங்குவதுபோல் அரவாணிகளுக்கும் 40 வயதுக்குமேல் சலுகைகள் வழங்க வேண்டும். அரவாணிகளுக்கு வாழ்நாளின் இறுதி கட்டத்தை கழிக்க ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு ஆணை பிறப்பித்தால் சமூகத்திலும் அங்கீகாரம் கிடைப்பதோடு, பாதுகாப்புடன் வாழமுடியும் என்று அரவாணிகள் தெரிவித்தனர்.
//
மிகச் சரியான கருத்து.