Friday, June 24, 2005

அப்படி பொடு அருவாள - வள்ளுவர் சொன்ன வர்ணாச்ரமம்

தனது 82வது பிறந்தநாள் விழாவில் கருணாநிதி "திருக்குறளில் எந்தவொரு இடத்திலும் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி கூறப்படவில்லை. ஜாதி பாகுபாட்டிற்கு வள்ளுவர் கருத்தில் இடமில்லை. கடவுளின் தலையில் பிறந்தவன், இடையில், தொடையில், காலில் பிறந்தவன் என்ற வேற்றுமையில்லை. எங்கு பிறந்தாலும் அவன் மனிதனே! எல்லாரும் ஓர் குலம் என்ற கொள்கை உடையவர்' என்றெல்லாம் பேசியுள்ளார்.

ஆனால், திருக்குறளில் 972வது பாடலில், வர்ணாசிரம தர்மத்தைப் பற்றி, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

முற்காலத்தில் உள்ள வர்ண பேதங்கள் இன்றளவும் மறையவில்லை என்பது தான் உண்மை.

வள்ளுவர் மேற்படி குறளில் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்... பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்றேயானாலும், அவரவர் செய்கிற தொழிலைப் பொறுத்து, ஆண்டான், அடிமை என்ற வேறுபாடு இருக்கத் தான் செய்யும். அவர்கள் ஒரே சிறப்புடையவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்பதை கூறியுள்ளார்.

"இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று அவ்வை மூதாட்டி கூறியுள்ள விதமாகவா நாட்டின்
இன்றைய நிலை உள்ளது?

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற எந்தவொரு அரசியல் கட்சியாவது ஜாதியை முற்றிலும் ஒழிக்க முன் வந்ததா? இல்லையே! மாறாக பிராமணர், வெள்ளாளர், கவுண்டர், மறவர், நாடார், பறையர் என்று ஒவ்வொரு குடிமகனின் முதுகிலும் அரசாங்க முத்திரை குத்தி, சான்றிதழும் வழங்கி, அதிலும் சில சிறுபான்மை சமூகத்தினரை முற்படுத்தப்பட்டோர் என்று அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும், சலுகைகளும் அளிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டு, ஏனையோரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் இனம் பிரித்து சலுகைகளை வாரி வழங்கி வருவது ஏன்?

இவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தாலா என்றால் நிச்சயமாக இல்லை... தேர்தல் கால ஓட்டு வேட்டைக்குத் தான்.

வள்ளுவருக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதியின் குடும்பம், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரக் குடும்பங்களில் ஒன்று என்ற உயர் இடத்தை அடைந்த பின்பும், தான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன் என்று மார் தட்டி கூறுவதேன்?

இன்னும் எத்தனை நுõற்றாண்டுகள் ஆனாலும், நம் நாட்டிலிருந்து ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும் முடியாது, ஒழிக்க விடவும் மாட்டார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்பது தான் உண்மை.

இதை சொன்னது எஸ்.கண்ணுபிள்ளை, திருப்பதிசாரம், குமரி மாவட்டத்திலிருந்து. தினமலரில் இப்படி எழுதுகிறார்:

6 comments:

குழலி / Kuzhali said...

//சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற எந்தவொரு அரசியல் கட்சியாவது ஜாதியை முற்றிலும் ஒழிக்க முன் வந்ததா?//

அரசியல் கட்சிகள் வந்துதான் சாதியை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம், உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் அரசியல் கட்சிகள் வந்துதான் மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பீரா?, முதலில் அவரவர்கள் மனதிலிருந்தும் வீட்டிலிருந்தும் சாதியை ஒழிக்க வேண்டும், சாதியை ஒழிக்காவிட்டாலும் பரவாயில்லை, என் சாதிதான் உயர்ந்தது நான் மட்டும் தான் இந்த பணி செய்ய ஆண்டவனால் பணிக்கப்பட்டுள்ளேன், மற்றவர்களெல்லாம் போர்புரிய, துணி வெளுக்க, செருப்பு தைக்க, என பிறப்பினாலே ஒதுக்குவது இல்லை...

அந்த தினமலர் வாசகர் என்ன சொல்ல வருகின்றார், நீங்க மதிக்கின்ற திருக்குறளிலேயே வர்ணாச்சிரமம் வருகின்றது, எனவே நீங்களெல்லாம் அதை பின்பற்றவேண்டுமென்கிறாரா?

மேலும் குறளின் விளக்கத்தை அனர்த்தப்படுத்தியுள்ளார் அவர்
//வள்ளுவர் மேற்படி குறளில் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்... பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்றேயானாலும், அவரவர் செய்கிற தொழிலைப் பொறுத்து, ஆண்டான், அடிமை என்ற வேறுபாடு இருக்கத் தான் செய்யும். அவர்கள் ஒரே சிறப்புடையவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள் என்பதை கூறியுள்ளார்.
//

பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களும் ஒன்றேயானாலும் என மிகத்தெளிவாக வள்ளுவர் கூறியுள்ளார், பிறப்பினால் அவர் தொழிலை பிரிக்கவில்லை, இங்கே பிரச்சினையே பிறப்பினால் தொழிலை பிரிப்பது தானே வர்ணாசிரமம்...

//இன்னும் எத்தனை நுõற்றாண்டுகள் ஆனாலும், நம் நாட்டிலிருந்து ஜாதி, மத பேதங்களை ஒழிக்கவும் முடியாது, ஒழிக்க விடவும் மாட்டார்கள் ஆளும் வர்க்கத்தினர் என்பது தான் உண்மை.//
ஆளும் வர்கத்தினர் என்றால் யாரை சொல்கின்றீர், மதத்தை ஆளும் வர்கத்தினரா? தொழிலை ஆளும் வர்கத்தினரா? நாட்டை ஆளும் வர்கத்தினரா?

தவறாக எண்ணாதீர்,
உங்களுடைய சில பதிவுகள் செய்திகளை மறுபதிவு செய்வதாக உள்ளது, இங்கே வலைப்பூவில் பெரும்பாலானோர் தினமலர், மற்றும் பல இணையதள செய்திகளை படித்துவிடுவர்

NambikkaiRAMA said...

பிறப்பினால் சாதி வேறுபாடு இல்லைதான்..பிற்காலத்தில் தொழில் அடிப்படையில் ஏற்பட்ட சாதி...அதே தொழிலை அக் குஅலத்தினர் செய்து வருபவர்..பின் தொழிழை மாற்றி விட்டு ஜாதியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.அதற்கு நாம் என்னதான் செய்வது? குழலி குரல் கொடுங்கள்.

Thangamani said...

குறளின் பொருளை மாற்றியுள்ளீர்கள். அல்லது அப்படி புரிந்துகொண்டுள்ளீர்கள். வள்ளுவர் குறிப்பிட்ட அந்தக்குறளை எழுதியதின் நோக்கமே பார்பனீயத்தின் பிறப்படிப்படையிலான தொழிலை, உயர்வுதாழ்வை மறுக்கவே என்போரும், அதன் பொருட்டே அவர் உழவுத்தொழிலை உயர்வு படுத்தி எழுதியுள்ளார் என்றும் கூறுவோர் உண்டு.

Anonymous said...

திருவள்ளுவர் சொன்னது இருக்கட்டும். கட்சியில் வர்ணாசிரம தர்மத்தை தவறாமல்
கடைபிடிக்கும் கருணாநிதியா இப்படி பேசினார்?

Boston Bala said...

>>உங்களுடைய சில பதிவுகள் செய்திகளை மறுபதிவு செய்வதாக உள்ளது, இங்கே வலைப்பூவில் பெரும்பாலானோர் தினமலர், மற்றும் பல இணையதள செய்திகளை படித்துவிடுவர் //

நான் செய்திகளையும் இன்ன பிறவையும் மறு-மறு-பதிப்பு செய்தே வலைப் பதிந்து வருகிறேன் ;-) எனவே, உங்களையும் அவ்வாறு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

வலைப் பதிவென்பது உங்கள் இஷ்டம். வெறுமனே கருத்து சொல்லிக் கொண்டிருந்தாலும், 'அவருக்கென்ன... கருத்து கந்தசாமி' என்பார்கள்; சரி, நடந்ததை, நிகழ்ந்ததை எழுதுவோம் என்றால், 'நினைவலைகளில் காலந்தள்ளுபவர்' என்று பட்டம் விழலாம். படம் மட்டுமே போட்டால், செய்திகளை சுட்டு மட்டுமே போட்டால் என்று எப்படி செய்தாலும் ஏதாவது ப்ராண்ட் விழத்தான் செய்யும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, எதைப் பகிரலாம் என்று எண்ணுகிறீர்களோ, அதையெல்லாம் பதிவாக்குங்கள் :-)

இந்த மாதிரி அட்வைஸ் நிறைய கொடுத்தால் 'கிளம்பிட்டான்யா... கட்டளை போடுவதற்கு' என்றும் சொல்லும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது :P

குழலி / Kuzhali said...

அய்யய்யோ பால அண்ணாச்சி நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை,
வெறுமனே செய்திகள் மட்டுமுள்ளதே,
இப்படி செய்திகள் போடும்போது அவருடைய கருத்துக்களையும் சேர்த்து போடலாமே என்றுதான், என்னை கோத்து விட்றாதிங்க அண்ணாச்சி நான் ஓடிப்போயிடறேன்