Thursday, March 03, 2022

கோபாலா கோபாலா

 மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு, சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே யுத்தம் முடிந்தது


கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள்


இதெல்லாம் மிகபெரிய பரம்பொருளின் நாடகம் என அவர்கள் எதையும் நினைக்கவில்லை, சிவனை அடியோடு மறந்திருந்தார்கள்


யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான்


யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான்


அங்கேதான் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன், அவனி விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது


தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள், மானிட உருவும் சிங்க உடலும் கொண்ட புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை


அதை தொடர்ந்து காட்சிக்கு வந்தான் கண்ணன்


அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது  பொல்லாதது என்றும் கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான்


12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால்கறக்கட்டும் என  12 ருத்திராட்சங்களை கொடுத்து பீமனை அனுப்ப சொன்னான்


ஆம், அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன்


அந்த ருத்திராட்சத்தை தரையில் வைத்தால் அது லிங்கமாகிவிடும், அதை கண்டு உருகும் மிருகம் அப்படியே பூஜை செய்யும் அப்பொழுது பால்கறக்கலாம் ஆனால் பூஜை முடியும் பொழுது லிங்கம் மிருகம் சீறும் என சொல்லியும் அனுப்பினான் கண்ணன்


அன்று மகா சிவராத்திரி நாளாய் இருந்தது, கண்ணனின் கணக்கு அதில் சரியாய் இருந்தது


பீமன் காட்டுக்குள் சென்று கோபாலா கோபாலா என்றதும் அந்த மிருகம் விரட்டியது பீமன் ஒரு ருத்திராட்சம் வைக்க அது லிங்கமாகும் கொஞ்சநேரம் மெய்மறக்கும் மிருகத்திடம் பீமன் பால் எடுப்பான் பின் அவன் கோபாலா கோபாலா என ஓட மிருகம் விரட்டும்


இப்படி 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பியபின்னும் மிருகம் அவனை விரட்டியது அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கியிருந்தான், அது விடியும் பொழுதாய் இருந்தது காலை 6 மணி ஆகியிருந்தது


ஆனாலும் மிருகம் விரட்ட யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது


இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன்


ஏ மிருகமே 12 சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என  உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று


அய்யய்யோ ஆமாம், லிங்கத்தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து சொன்னது. கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா"


அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து நின்றனர்


இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது


புராணகதை இப்படி இருந்தாலும் 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளி கிடைக்க 12 லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள்


இன்னும் அழுத்தமாக சொன்னால் சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யபட்டிருந்தது


அதில் ஹரியும் சிவனும் ஒன்று எனும் மாபெரும் தத்துவமும் இருந்தது


இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12 லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள்


இதனை பல இனங்கள் பின்னாளில் கைவிட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு


சாலிய மகரிஷி வழிவந்தவர்கள் என தங்களை சொல்லும் சாலியர் இனம் எனும் நெசவாளர் இனம்  அதனை தொடர்ந்தது


சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள்

இது சிவாலய ஓட்டம் என்றாயிற்று


இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, ஆம் இந்தியா முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான்


தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம் போதித்திருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்


சிவராத்திரி முழுக்க இறைவனை அவன் நினைவிலே தேடு என்பதை இதைவிட எப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய முடியும்?


ஆம் அந்த சமூகம் பரிபூரண ஞானசமூகமாய் இருந்திருகின்றது, சிவாலய ஓட்டம் அதைத்தான் சொல்கின்றது


பின்குறிப்பு: யாளி போலவே புருஷா மிருகம் எனும் மனித தலையும் புலி உடலும் கொண்ட சிலைகள் இந்து ஆலயங்களில் உண்டு, சில இடங்களில் அவை கொண்டாடபடுவதும் உண்டு.


(நன்றி: திரு ஸ்டான்லி ராஜன்)

No comments: