Tuesday, May 19, 2020

தேவாரம் நான்காம் திருமுறை முதற் பதிகம் பாடல் 1.

அப்பர் என்று அழைக்கப் படும் திருநாவுக்கரசர் யாத்த பாடல்கள் 4, 5 மற்றும் 6ம்  திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன.

அவர் எழுதிய முதல் பதிகத்தை இப்பதிவில் காண்போம். 

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன், அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.

பொருள்:

திருக்கெடில ஆற்றின் வடகரை  திருவதிகை என்னும் வீரட்டானத் தலத்தில்  எழுந்தருளியிருக்கும் தலைவனே! இந்தப் பிறவியில் அறிந்து கொடுஞ் செயல்களைச் செய்ததாக  எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் கொடிய சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வண்ணம்  என் வயிற்றினுள் குடலாடு ஏனைய உறுப்புக்கள் செயற்படாமல் முடக்கி பெரும் வழி ஏற்படுத்துகிறது.  அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போன்ற  அந்நோயைக்  நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 
******************************************

திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே `கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்` என்று வெளியாயிற்று.
அது கேட்ட முழுமுதற் பொருள், `இக்கூற்று ஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று` என்று குறித்தது.
அதுகேட்ட சுவாமிகள், `அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன்.

இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் (இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்து கிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினை வருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின் வடிவமே ஊர்தியாம் ஏறு)` என்றார்.
`
வேற்றுச் (சமண) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றது எவ்வாறு பொருந்தும் எனின், கூறுதும்.

இது திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு மட்டும் அன்று. புது நெறியிற் புக்க யாவர்க்கும் தொன்னெறியிற் பற்று நீங்காது; புது நெறியில் ஒரு துணிவுண்டாகாது;

பழநெறியிலிருந்தால் இப்பிறவியிலேயே வீடு பெறலாம் என்ற எண்ணம் அகலாது. இஃது உள்ளத்தியற்கை. சைவ சித்தாந்தச் செந்நெறிப்படியும் பரசிவனை
மறவாமை வாய்மையாகின்றது. எவ்வாறு?

``வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.`

என்று அருளினார் பின்னர்  சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அருளினார்

முன்னர். இது முரணுவதே? இதுவும் பலர் வினாவுவதே. `பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்... கழிவரே`,`நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்... புண்ணியன், பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே` என்றவற்றையும் `பல் மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்` என்பது முதலியவற்றையும் ஒருங்குவைத்து நோக்குவார்க்குச் செவ்வன் இறை (நேர்விடை) தோன்றும்.
திருவதிகை வீரட்டானத் திறைவர் வினா:- ஏன் இங்கு வந்தாய்? என்பால் தீர்தற்கு உன்பால் உள்ள குறை என்ன?
மருணீக்கியார்:- அதிகைக் கெடில வீரட்டானத் திறைவரே, இச்சூலை நோய் எனக்குக் கூற்று ஆன வகையை விலக்கமாட்டீர்?

இறைவர்:- `அவர் அவர் வினைவழி அவர் அவர் அநுபவம்` உன்னை இச்சூலை நோய் பற்றி வருத்த, நீ செய்த வினைகள்தாம் காரணம். வினைப்பயனை வினை செய்தவர் அநுபவித்துத்தான் ஆதல் வேண்டும். பயன் அநுபவிக்காமல் இருக்கும் நெறியில் இறைபணி நின்று வினைசெய்திருப்பாயாயின், உன்னை அவ்வினை வருத்தாது. நீ செய்த பல கொடுமைகள் யாவை? அறிவையோ?
மருணீக்கியார்:- கொடுஞ்செயல்களாகச் செய்தன பலவற்றை அறியேன் நான். (அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றவாறு)
இறைவர்:- அபுத்தி பூர்வ புண்ணிய கன்மங்களைச் செய்துவரின், அத்தகைய பாவ கன்மம் விலகும். அது செய்து வருகின்றாயோ?
மருணீக்கியார்:- ஏற்றாய்! (எருதின்மேல் ஏறிவரும்) பெருமானே! பசுபதீ! இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல் அடிக்கே வணங்குவன். வணங்கி வந்தும் அபுத்தி பூர்வ பாவகன்மம் விலகி யொழியாமல் வருத்துகின்றதே!.
இறைவர்:- விலகும் வரையில் வலியைப் பொறுத்துக் கொண்டு தான் இருத்தல் வேண்டும். எவ்வாறு எங்கே உன்னை அது வருத்துகின்றது?
மருணீக்கியார்:- எனக்கும் தோற்றாமல் என் வயிற்றின் உள்ளடியில் குடலொடு துடக்குற்று என்னை முடக்கி யிடுகின்றது. அதனால் அடியேன் வலியைப் பொறுக்கமாட்டாமல் வருந்துகின்றேன்.
இறைவர்:- நீ வருந்தினால், நான் யாது செய்வது?
மருணீக்கியார்:- கெடில நதிக்கரையில் திருவதிகையின் மாநகரில் (பெருங்கோயிலில்) எழுந்தருளிய அம்மானே! ஆண்டீர் நீயிர். அடியேன் யான். அதனால் அடியேனைக் காத்தல் ஆண்டீர்க்குக் கடனாகும்.

கூற்று என்பது உடம்பும் உயிரும் வெவ்வேறு கூறாகச் செய்யுங்காரணம் பற்றிய பெயர். சூலை நோய் உடம்பினின்று உயிரை நீக்கும் அளவு வருத்துவதால் கூற்றெனப்பட்டது. சூலை கூற்று அன்று. கூற்றாயிற்று. அதனால் `ஆயினவாறு` என்றார்.

கயிலையை எடுத்தபோது நெருக்குண்ட இராவணன் அத்துன்பத்தின் நீங்கத் தக்க வழியைக் (கடவுள் இன்னிசையில் சாமகானத்தில் விருப்பன் என்று சொல்லிக்) காட்டிய பழம் பிறவி நிகழ்ச்சியே இச் சூலைக்கு ஏது என்பதை உணர்த்தக் `கூற்று ஆயினவாறு` எனறருளினார் என்பது சிலர் கருத்து.

கொடுமை பல செய்தன - கொடுஞ் செயல்களாகச் செய்தன பல. நான் அறியேன் - அறிந்து செய்தேன் அல்லேன். அறியாமற் செய்தனவாயிருக்கும். அபுத்தி பூர்வ பாவ கன்மம் என்றபடி.

கொடுமை - கொடுஞ்செயல்.
ஏற்றாய் - (ஏறு- விடை) விடையை யுடையாய்; `

சூலை நோய் (வயிற்று வலி) நீங்க அருள் புரியும் திருவதிகை. நடுநாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 7-வது தலமாக விளங்குவது திருவதிகை. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு திருவதிகை இறைவனை மனமுருகி பதிகம் பாடி, திருநாவுக்கரசர் தனது வயிற்று வலி நீங்கி அருள் பெற்ற தலம்.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் என்ற ஊரில் ஒரு சைவக் குடும்பத்தில், புகழனார் -  மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலகவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர்.

மருள்நீக்கியார் வளர்ந்து தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து, தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். 

தமக்கை திலவதியாரோ, தனக்கு மணம்புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார், ஒரு போரில் இறந்துபோக, இனி தனக்குத் திருமணம் வேண்டாம் என்று வெறுத்து, சைவ சமயம் சார்ந்து திருவதிகை சிவஸ்தலத்தில் இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.

தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரியவேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. அவர் தங்கியிருந்த சமண மடத்தில் செய்யப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல், தன்னுடைய தமக்கை இருக்கும் திருவதிகை சென்று முறையிடுகிறார்.

தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி, திருவதிகை இறைவனிடம் அழைத்துச் சென்று, அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி, இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும், கூற்றாயின வாறு விலக்ககிலீர் என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப்பெற்றார்.

No comments: