Saturday, May 16, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 10

முதல் திருமுறை, முதல் பதிகம், பத்தாவது பாடல்:

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா   
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்    
மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப்    
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள்:


பொறியில்=அறிவற்ற;


பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள்
புறங்கூற - நேர்நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமை யாய்ச் சொல்ல. 
நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. 
ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. 

பொருள்:


புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக் களைச் சொல்லித் திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னு மாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

அறிவற்ற சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பெருமைக்குரிய செயல்களை (பலி ஏற்பது போன்ற செயல்கள்) சரியாக புரிந்து கொள்ளாமல், பிழைபட்ட கருத்துக்களை சொல்லி வந்த போதும், அத்தகைய சொற்களால் மயங்கி தங்களது மனம் போன போக்கில் உலகத்தவர் பலரும் பழித்து கூறிய போதிலும், அத்தகைய சொற்களை பொருட் படுத்தாது உலகத்தவருக்கு உய்யும் வாப்பினை அளிக்கும் பொருட்டு பெருமான் தொடர்ந்து உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், எனது உள்ளத்தைக் கவர்ந்து விட்டார்.

தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நாடி வந்த மதயானை மருளும் வண்ணம் அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதைக் கண்ட அனைவரும், யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாமல் போர்த்துக் கொள்ளும் இவர் என்ன பித்தரா என்று எண்ணினராகிலும், யானையின் பசுந்தோலால் பெருமானுக்கு கேடு ஏதும் விளையாததைக் கண்டு ஈது என்ன மாயம் என்று வியந்தனர்.


இந்த பாடலில் பித்தர் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சுந்தரரும் இறைவனை பித்தா என்று தனது முதல் பதிகத்தில் நமது நினைவுக்கு வருகின்றது.

யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று சம்பந்தர் அழைத்தார் போலும்.


பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தமால் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.


சமணர்களின் கொட்டத்தை அடக்கி, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுவதே சம்பந்தப் பெருமான் அவதரித்த நோக்கம் என்பதால், பாடல்தோறும் சமணர்கள் மற்றும் புத்தர்களின் தவறான கொள்கை பெரும்பாலான பதிகங்களின் பத்தாவது பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது.


புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங் கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத் தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார். 

யானையின் தோல்  போர்த்த கதை

கஜாரி சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். இதனை சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. இந்த வடிவம் சிவபெருமானின் வீரத்தினை விளக்கும் எட்டு வடிவங்களில் (அட்ட வீராட்ட வடிவங்களில்,  (பிரம்மனின் சிரம் கொய்தது, யானைத் தோல் போர்த்தியது உள்ளிட்ட சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களை, அட்ட வீரட்டான தலங்கள் என்பர்)  ஒன்றாகப் போற்றப்படுகிறது. வழுவூர்ரில் நிகழ்ந்தது யானைத்தோல் போர்த்திய கதை.  மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.


தருகானவத்து முனிவர்களின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிச்சாண்டவ வடிவினை ஏற்றுச் சென்றார். வனத்தில் பிச்சாண்டவரைக் கண்ட முனிப்பத்தினிகள் கற்புநெறி தவறி அவருடன் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிச்சாண்டவர் மீது தங்களுடைய தவ வலிமையால் எண்ணற்ற கொடிய உயிர்களையும், பொருட்களையும் ஏவினர். மான், புலி ஆகிய மிருகங்களைத் தொடர்ந்து மதங்கொண்ட யானையை அனுப்பினர்.
சிவபெருமான் அட்டாமாசித்திகளுள் ஒன்றான அணிமா சக்தியால் மிகவும் சிறியதாக மாறி, யானையின் வயிற்றுக்குள் சென்றார். அதனுள்லிருந்து மாவுருவம் கொண்டு வயிற்றைக் கிழித்து வெளியே வந்தார். யானையின் தோலை தன்னுடைய ஆடையாகப் போர்த்திக் கொண்டார், இந்த வடிவத்தினை கஜாரி என்கிறானர்.
சிவன் யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்திக் காணப்படுவார்.
                கயமுகாசுரன் யானை வடிவங்கொண்டு மேருமலையில் பிரம்மனை நோக்கி தவஞ்செய்தான். சிவபிரான் தவிர மற்ற ஒருவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் யாவரும் அஞ்சும்படி யானை வடிவில் கயமுகன் வந்தான். இதைக் கண்ட உமாதேவி அஞ்சினாள். சிவன் உக்கிர வடிவமெடுத்து அவனை அழித்தார். யானையின் தோலை உரித்துப் போர்த்தருளினார். 

இதனைஇப்புராணத்தின் வழி யானைத் தோலை உரித்ததுமனிதனின் அகத்திலுள்ள அழுக்குகளை நீங்கல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.

No comments: