ஊழிக் காலத்து உலகம் கடலால் சூழப்பட்ட பொழுது எம்பெருமான் அறுபத்து நான்கு கலைகளையும் ஆடையாக உடுத்தி “ஓம்” எனும் பிரணவதோணியில் அம்மை அப்பனாக எழுந்தருளி வந்தபொழுது அந்த ஊழியிலும் அழியாத இத்தலமே மூலமென்று தங்கினார். ஆகையினால் “திருத்தோணிபுரம்” என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
இத்தலத்திற்குரிய பன்னிரு பெயர்களையும் அதன் காரணங்களையும் பல்பெயர்ப் பத்து எனும் தக்கேசிப்பண்ணில் அமைந்த திருப்பிரமபுரப் பதிகத்தில் விளக்குகிறார் ஞானசம்பந்தர்.
இப்பன்னிரு பெயர்களையும் முறையே தொகுத்துக் கூறும் பெரியபுராணப் பாடலைக் காண்க.
பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
அவை பின்வருமாறு: -
1. பிரமபுரம் – பிரமன் வழிபாடு செய்து உய்ந்த காரணத்தால் பெற்ற பெயர்.
2. வேணுபுரம் – (வேணு – மூங்கில்) இந்திரன் சூரபத்மனுக்கு அஞ்சி இறைவனை பூஜிக்க இறைவன் மூங்கிலாய் முளைத்திருந்தமையின் வேணுபுரமாயிற்று.
3. திருப்புகலி – சூரபத்மனுக்கு அஞ்சிய தேவர்கள் அடைக்கலமாகப் புகுந்த இடமாதலால் புகலியாயிற்று.
4. திருவெங்குரு – (வெங்கோ – தருமன்) செங்கோல் ஏந்தி நல்லாட்சி நடத்திய இயமன் பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறியப்படுத்த இத்தலத்தில் இறைவரைப் பூசித்து அருள் பெற்றதால் வெங்குரு எனப் பெயர் வந்தது. சுக்கிரன் பூஜித்து தேவகுருவிற்கு இணையாகப் பேறு பெற்றமையாலும் இப்பெயர் உளதாயிற்று.
5. தோணிபுரம் – ஏழு தீவுகள் கொண்டதாகியிருந்த இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தின்போது, கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழியான இத்திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாமல் நிலைபெற்றிருந்தது. பிரணவத்தோணியில் எம்பெருமான் அம்மையுடன் வந்து தங்கிய இடமானதால் திருத்தோணிபுரம்.
6. திருப்பூந்தராய் - சங்கநிதி, பதுமதிநி என்ற இரு தெய்வங்கள் பூமாலையாய் இருந்து பூஜித்தமையாலும், ஆதிவராஹமான திருமால் தன் கொம்பில் பூமியை ஏற்று வருத்திய பழி நீங்கவும், இரணியனைக் கொன்ற பழி நீங்கவும் பூக்களைக் கொண்டு பூஜித்தமையாலும் இப்பெயர் பெற்றது.
7. சிரபுரம் – பாற்கடலினின்று கடைந்த அமுதத்தினை மோகினியான திருமாலிடமிருந்து தேவர்களுடன் கலந்து முறையின்றி உண்ட சிலம்பனின் சிரம் மோகினியான திருமாலால் வெட்டப்பட்டது. அத்தலை மாத்திரமான இராகு இத்தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றமையால் உண்டானது இப்பெயர்.
8. புறவம் – சிபிச்சக்கரவர்த்தியின் தசையினால் வாழ்வு பெற்ற புறா அப்பாவம் போக்க வழிபட்ட தலம். கெளதம் முனிவர் சாபத்தால் புறா வடிவு பெற்ற பிரசாபதி முனிவன் பூஜித்துப் பெற்ற தலமுமாம்.
9. சீர்காழி – காளிதன் எனும் பாம்பும், நடனத்தில் தோல்வியடைந்த காளியும் பூஜித்துப் பேறு பெற்ற தலமாதலால் உண்டானது இப்பெயர். சீர்காழி முற்காலத்தில் ஸ்ரீகாளிபுரம் என்ற பெயருடன் அழைக்கப் பட்டது. பின்பு, அப்பெயர் மருவி சீர்காழி என்று ஆனது.
10. சண்பைநகர் – துருவாச முனிவர் சாபத்தால் சண்பைக் காடொன்று தோன்ற அப்புற்களையே ஆயுதமாகக் கொண்டு யாதவகுமாரர் போர் செய்து மடிய அப்பழி நீங்க துருவாசர் பூஜித்துப் பேறு பெற்றதால் இப்பெயர் பெற்றது.
11. கொச்சைவயம் – பராசரர் மச்சகந்தியைக் கூடியதால் ஏற்பட்ட நாற்றம் நீங்கும்படி பூஜித்துப் பேறு பெற்றமையால் இப்பெயர் உண்டாயிற்று. (கொச்சை – நாற்றம்)
12. கழுமலம் – உரோமச முனிவர் வழிபட்டு உயிர்கள் மலங்கழுவும் வரம் பெற்றமையால் கழுமலம் என்ற பெயர் பெற்றது. கழுமல வள நகர் என்றும் குறிப்பிடுவர். இத்தலத்தின், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும் , ஊரின் நடுவில் கழுமலையாறும், மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு என்கின்ற ஆறுகள் ஓடி நிலப்பகுதியை வளமானதாகக் கொண்டது.
சட்டைநாதர் :
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார்.
பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார்.
இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், அவரின் செருக்கை அகற்ற, தமது திருக்கரத்தால் விஷ்ணுவின் மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார்.
இதையறிந்த மகாலட்சுமி வடுக பைரவரிடம் மாங்கல்ய பிச்சை கேட்டார்.
மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன்.
பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப்போர்த்தியும் காட்சி தந்தார்.
இதனால் சீகாழி பைரவருக்கு *"சட்டை நாதர்''* என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பர் இத்தலத்தை.
No comments:
Post a Comment