Thursday, May 14, 2020

இராவணன் கைலாய மலையைத் தூக்க முயன்ற கதை

இராவணன் சிறந்த சிவபக்தன் ... ஒரு சமயம் கர்வம் கொண்டு கையிலை மலையை பெயர்த்து எடுக்க துணிந்தான் .. தன் வலிமையை காட்ட.... இறைவன் தன் பெருவிரல் கொண்டு நிலத்தினை அழுத்த வே வலி தாங்க முடியாமல் கதறினார் ..

எனினும் இறைவன் மீது கொண்ட அன்பால் வீணை மீட்டி இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்தான் ...  அந்த வட மொழிப் பாடலின் தமிழ் பொருள் இங்கே .

இவ்வாறாக கையிலாய மலையை இராவணன் தூக்கும் கைலாச பர்வத வாகனத்தில் சுந்தரேஸ்வார் கைலாச வாகனம் அல்லது கையிலாச வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த வாகனத்தில் அதிகாரபீட ராவண வாகனம், கைலாசபீட ராவண வாகனம் என்ற இருவகை காணப்படுகிறது.


பத்து தலைகளுடனும், இருபது கைகளுடனும் சிவ பக்தனான இராவணன் வீணையை மீட்டியபடி இருப்பதாக வடிவமைக்கப்பெறும் வாகனம் அதிகார பீட இராவண வாகனமென்றும், இராவணன் கயிலையை சுமந்து இருப்பது போல வடிவமைக்கப்படும் வாகனம் கைலாசபீட ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.


இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அதன் அடியில் அவனை வைத்து அழுத்தி அலற வைத்ததும் சிவபெருமானின் திருவடி!

மார்கண்டேயருக்காக காலனைக் காலால் உதைத்து அவன் உயிரை வாங்கியதும் சிவபெருமானின் அதே திருவடிதான்!

ஒரே திருவடி இராவணனிடம் ஒரு மாதிரியும், மார்கண்டேயருக்காகக் காலனிடம் ஒரு மாதிரியும் செயல் படுகிறதே!

அப்பர் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இராவணன் விஷயத்தில் இறைவனது திருவடி மிக மிக இலேசாகத்தான் மலையை அழுத்தியதாம்! அதை “இறைச் செற்ற” என்ற சொற்களால் காட்டினார். இறை என்றல் இங்கே மிக இலேசாக என்று பொருள். அதற்கே இராவணன் மலையடியில் மாட்டிக் கொண்டு “ஓ” என்று அலறி அழுதான்.

அதனால் வடமொழியில் அலறி அழுதவன் என்ற பொருளில் இராவணன் என்று பெயரிட்டனர். தமிழில் இராவணன் என்ற சொல் இரவைப் போன்ற கரு நிறத்தவன் என்ற பொருளைத் தரும். இரண்டிலும் இரு வேறு பொருள்.
இவன் தவறு செய்து விட்டான்; அதை உணர்ந்தான்; தவறு செய்து விட்டேன் என்னைக் காப்பாற்று என்று சிவனுக்கு விருப்பமான இசையில் துதி செய்தான்.

இராவணன் இசையில் வல்லவன் என்று சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன, எனவே இசையால் துதிக்கிறான். எதனால் இது அவனுக்கு இயன்றது? பழக்கம் தான்; அவன் சிவனடியான்; நாடோறும் சிவபூசை செய்து சிவனை இசையால் துதிப்பவன். எனவே துன்பம் வந்த போது தான் வணங்கும் சிவனைத் துதிக்கிறான்.

இந்த  பின்னணியில், இராவணன் சிவனைத் துதிக்க சிவபெருமான் அவனுக்கு இரங்கி புறப்பகை விலக்க வாளும், உட்பகை விலக்கி வாழ்நாளும் அளித்தான் என்பது புராணக்கதை. இதை மேற்கோள் காட்டாத இலக்கியமே இல்லை.

இங்கே ஒளிந்துள்ள இறையியல் இயற்கைப் பேருண்மை இது தான். எல்லா சிவனடியார்களும் ஒரே பக்குவத்தில் இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. எனவே பக்குவக் குறைபாட்டால் சிவனடியார்களும் தவறு செய்வதுண்டு. தவறு என்பது அறியாமல் செய்வது; தப்பு என்பது அறிந்தே செய்வது. தப்பு செய்தால் இயற்கையும், இறையும் தப்பு தப்பு என்று தப்பிவிடும். செய்த தவறு திருத்தப்படுமானால் இறையருள் உப்பி விடும். இது ஒரு மெய்ஞான இயற்பியல் உண்மை!

இங்கே இராவணன் கதையில் இந்த மெய்ஞான இயற்பியல் உண்மையாக எது ஒளிந்துள்ளது என்பதைக் காண்போம்.

1) சிவனடியார் ஆனாலும் தவறுவது இயற்கை, சுந்தரரை விறண்மிண்டரும், ஏயர்கோன் கலிக்காமரும் எதிர்க்கவில்லையா? ஆனால் முடிவில் தவற்றை உணர்ந்து திருந்தினால் அருளலாம் என்பது இறைவன் உணர்த்தும் முதல் நியதி.

2) அடுத்து இயற்கையின் அமைப்பை சிதைத்தால் இறைவன் அதே இயற்கையைக் கொண்டு தண்டிப்பான். இமயமலை இராவணனை என்ன செய்தது? அதைப் பெயர்ப்பது இயற்கையைச் சிதைப்பது அல்லவா? ஆகவே அதனடியிலேயே இராவணன் மாட்டிக் கொண்டு அலறினான் என்று கதையைக் காட்டினர் பெரியோர்.

இப்போது நடப்பதும் அதுதான்! இயற்கையை நாம் மிகவும் சீரழித்து விட்டோம்! இராவணனை மலையடியில் அழுத்தியது போல கரோனாவை விட்டு வீட்டுக்குள் மனித இனத்தையே அழுத்தி வைத்திருக்கிறான் இறைவன்;

இதனால் இயற்கை சீராகிக் கொண்டிருக்கிறது. வானவெளியில் உள்ள ஓசோன் ஓட்டை தானாக அடைந்து சீராகி உள்ளது. கங்கைப் பேரியாறு தெளிந்திருக்கிறது. நமக்கு அது இயற்கை; அதுவே இறைவனது செயற்கை. அதைச் சிதைத்தால் விடுவானா?

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இதில் அப்பர் இன்னொரு பாடலில் மற்றொரு உண்மையையும் உணர்த்துகிறார். “கரைந்து கைதொழு வாரையும் காதலன்; வரைந்து வைதெழு வாரையும் வாடலன்” என்று பாடுகிறார் அப்பர்.

இதன் பொருள் துதிப்பதற்காக அவன் மதிப்பவன் அல்லன்; வைததற்காக கொய்பவனும் அல்லன். இகழுரையும் புகழுரையும் அவனுக்கு ஒன்றே! அவன் தான் கடவுள்!

எனவே தன் இருப்பிடத்தைப் பெயர்த்தவன் என்பதால் இராவணனை மலையடியில் சிவன் அழுத்தினான் என்றால் அது கடவுள் செயலாகாது. அவனன்றி அணுவையும் அசைக்க முடியாது என்னும் போது சிவனை இராவணன் அசைத்துவிட முடியுமா? அப்படியானால் இதற்கு என்ன பொருள்? இயற்கை என்பது இறைவனின் ஒரு திட்டமிட்ட செயற்கை. அதைச் சிதைப்பது இறைவனது ஒரு திட்டத்தை சிதைப்பது. அதற்கு இயற்கை வழியாகவே தண்டனை உண்டு என்பதைக் காட்டியது தான் அதன் உட்பொருள். இதை உணர்ந்து தான் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்றும், இயற்கைக்கு மாறானது இறைக் கொள்கை ஆகாது என்றும் எழுதி வைத்தனர். அந்த கதையே தான் இராவணன் கதையும் இன்றைய கரோனா கதையும்..
பிறகு இராவணன் இசை பாடி துதித்த போது அவனுக்கு வாளும், வாழ்நாளும் கொடுத்தான் என்றால் சிவன் துதிக்கு மயங்குபவன் என்று ஆகி விடாதா என்று கேட்கலாம். இயற்கைக்கு மாறுபட்ட போது தவறாது தண்டனை! அடுத்து தவற்றைத் திருத்தி இயற்கையோடு இசைந்தான் என்பதை இசையால் உய்ந்தான் என்று காட்டியது கதை.

அதிலும் சிவனடியான் என்ற காரணத்தாலும், தவறைத் திருத்திக் கொள்வான் என்பதனாலும் திருவடி கொண்டு இலேசாக அழுத்தினான் என்பதை “இறைச் செற்ற சேவடி” என்று பாடிக் குறிப்பிட்டார் அப்பர்.

ஆனால் மார்க்கண்டேயர் கதையில் சிவனடியார் என்று அறிந்து தீங்கு செய்ததால் இலேசாக அல்லாமல், காலனை சிவபெருமான் சீறித் திருவடியால் உதைத்து நீறாக்கி விட்டான்; அதாவது உயிரையே பறித்து விட்டான் என்று பாடினார் அப்பர். ஒரே சேவடி ஒருவனை இலேசாக எற்றியது; இன்னொருவனை எட்டி உதைத்து உயிர் பறித்தது; இதன் உட்பொருள் என்ன என்று யோசி என்று குறிப்பு கொடுத்து இருக்கிறார் அப்பர்.

 இந்த பாடலில். சிவனடியார் தவறு செய்து திருந்தினால் சிவன் திருவடி தட்டிச் சரிசெய்து அருள் தரும்; சிவனடியார்க்கே தீங்கு செய்தால் அதே திருவடி உயிரையே பறித்துவிடும் என்று மெய்ஞான இயற்பியல் உண்மைதான் மேற்கண்ட இரண்டு புராணக் கதைகள் மூலம் பனி நுனியாகக் காட்டின. அங்கே புகுந்து ஊடுருவிப் பார்த்தால் ஆழமான பேருண்மை புரியும் என்றதை அப்பர் அற்புதமான குறிப்புடன் பாடிக் காட்டினார்! என்னே அவரது அருட்புலமைத் திறம்!!

*********************************************************************

இன்னும் ஒரு நிகழ்வு, இதே கதை சார்ந்தது, குறிஞ்சிக்கலி  பாடலில் வருகிறது. 

இந்நிகழ்வை, கபிலர் தான் பாடும் கலித்தொகைப் பாடலுக்கான உவமையாகப் பயன்படுத்தி ஒரு குறுங்காவியமாக்கி இருக்கிறார்.

குறிஞ்சிநிலப் பெண்கள் அருவியில் நீராடவும், மலர்களைக் கொய்யவும், தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக் காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள்.  குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள்.

தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள் தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர். தினையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கும் பெண்களிடம், அவ்வழியாக தன் பிடியிலிருந்து தப்பித்து வந்த மானையும் யானையையும் பற்றி வினவி, அவை சென்ற திசையறிந்து இளைஞர்கள் அவற்றை வேட்டையாடுவார்கள். யானைகள் தப்பித்து வரும் பொழுது, தன் வசமிழந்து வயல்களுக்குள் நுழைந்து விட்டால், அவை தினைப்புனத்திற்கும், அங்கிருக்கும் பெண்களுக்கும் துன்பத்தைத் தந்து விடும்.. எனவே இளைஞர்கள், அவை வயல்களுக்குள் நுழைந்து விடாமல் இருக்க, அவற்றை விரட்டிய படியே இருப்பர்.

இத்தினைப் புனக்காவல் அறுவடைக் காலம் வரை தொடரும். இக்காவலின் போது ஏற்பட்ட சந்திப்பினால், காதல் கொண்ட தலைவியும் தலைவனும் பகல் வேளையில் சந்திக்க இயலாததால், இரவு நேரத்தில் தோழியின் உதவியோடு சந்தித்துக் கொள்வர்.

இப்படி ஒரு தலைவியும், தலைவனும் தனியிடத்தே பல முறை சந்திப்பதற்கு துணை புரிந்த ஒரு தோழி, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.

அவர்கள் தொடர்ந்து ஊரார் அறியாமல் இரவிலே சந்திப்பது தொடர்ந்தால், தலைவியின் நிலை ஆபத்தாக முடியும் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தி திருமணத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்துகிறாள். தலைவியை நிரந்தரமாக பெறுவதற்கு ஒரே வழி திருமணமே என்பதைத் தலைவன் உணருமாறு எடுத்துரைக்கிறாள். இப்பாடலில் வரும் தோழி தலைவனிடம், சுற்றி வளைத்து, இரண்டு நிகழ்ச்சிகளை கூறுகிறாள். பின், தலைவியின் நிலையை எடுத்துரைத்து, அவனைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறாள்.

இப்பாடலில் தோழியின் கூரிய அறிவும், சொல்லாற்றலும் தலைவி குறித்த அக்கறையின் வெளிப்பாடும், இனி இரவில் சந்திப்பது நடக்காது என்ற உறுதியும், தலைவன் இனி தாமதிக்க முடியாது என்ற நெருக்கடியும், தலைவனிடமிருந்து பெறும் திருமண உறுதியும், அதை தலைவியிடம் சொல்லி மகிழும் மனநிறைவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தலைவன் தோழியிடம் வழக்கம்போல் கேட்டு நிற்கிறான்.

இதோ தோழி தலைவனிடம் கூறும் செய்திகள்:

‘தலைவனே நான் இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி கூறுகிறேன் கேள். ஒன்று நீ அறிந்த புராண செய்திதான். அது சொல்லும் உண்மை நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும். ஒருமுறை சிவபெருமான் தன் மனைவி உமாதேவியோடு கயிலை மலையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இராவணன், தன் பலத்தைக் காட்ட விரும்பினான். உடனே, கயிலை மலையைப் பெயர்த்து அப்படியே தூக்கிவிட முயன்றான். தன் கைகளை அம்மலைக்கு அடியில் செலுத்தி பெயர்க்க முயன்றான்.  ஆனால், சிவபெருமான் இராவணனின் ஆணவத்தை அடக்க, தன் கால் பெருவிரலால் மலையை அழுத்தினார். இதனால், இராவணனின் கைகள் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. துன்புற்றான். வருந்தினான்”என்று இந்த கதையைக் கூறுகிறாள். தலைவியைத் தலைவன் சந்திப்பதற்கும் இக்கதைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமலா தோழி இக்கதையைச் சொல்லியிருப்பாள்? என்ன வாசகர்களே உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

இராவணனைப் போல தலைவனும், தலைவியை எப்போதும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்து இறுமாந்திருந்தான். தோழியின் உதவியினால் இரண்டு மூன்று முறை தலைவியை எளிதாகச் சந்தித்திருந்திருக்கிறான். தலைவியைச் சந்திப்பது ஒரு பெரிய செயலல்ல என நினைத்துக் கொண்டிருக்கிறான். . அதனால், இரவுக் சந்திப்பிலேயே தன் வாழ்க்கையைத்  தொடர்ந்திடலாம் என தொடர்ந்து கொண்டிருக்கிறான்.

ஆனால், இனி இது இயலாது. அவன் நினைப்பது போல் நடக்காது. தன் நிலை அறியாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவன் தலைவியின் நிலையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உலகைக் காக்கும் சிவபெருமான், கட்டை விரலை அழுத்தி இராவணன் செயலை தடுத்துவிட்டதைப் போல, தலைவியைக் காக்வேண்டிய பொறுப்பிலுள்ள தோழியும், இரவு தொடர்பை மறுத்து தலைவியுடனான சந்திப்பை தடுத்து விட முடியும் என்பதை மறைமுகமாக இக்கதை மூலம் புலப்படுத்துகிறாள். கையை வெளியே எடுக்க முடியாமலும், மலையை பெயர்க்க முடியாமலும் இராவணன் தவித்து துன்புற்று வருந்துவதைப்போல, தலைவியை மறக்க இயலாமல், அவளைச் சந்திக்கவும் இயலாமல் இனி தலைவனும் துன்புற நேரிடும் என்பதை இக்கதை மூலம் நயமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல் எடுத்துரைக்கிறாள்.

தலைவனுக்கு இது புரியாமல் போனாலும் போகலாம். அல்லது புரிந்தும் புரியாததுபோல் இருக்கலாம். எனவே, தோழி இன்னொரு நிகழ்ச்சியின் மூலமும் நன்றாக புரியுமாறு கூறுகிறாள். தன் கருத்தை புலப்படுத்துவதில் இத்தோழிக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்றே கூறலாம்.

அவள் கூறும் இன்னொரு நிகழ்ச்சியைக் கேளுங்கள். தலைவனிடம் கூறுகிறாள். ‘ஒரு யானை இருந்ததாம் அது மதம் பிடித்த யானை. அதற்கு எப்படி மதம் பிடித்தது? அது அப்போதுதான் ஒரு புலியோடு போரிட்டு வென்றிருந்தது. அப்போர் மிகக் கடுமையான போர். பலத்த பெரிய காயங்களைப் பெற்று அது புலியை வென்றிருந்தது. காயங்கள் தந்த வருத்தத்தோடு, அது தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தூக்கத்தில் புலி வந்து தாக்குவது போல ஒரு கனவு கண்டது. உடனே அது வெகுண்டு எழுந்தது. பெருஞ்சீற்றத்தோடு சுற்றுப்புறத்தை நோக்கியது. தொலைவில் ஒரு வேங்கை மரம் மஞ்சள் நிற பூக்களோடு நிறைந்து நின்றிருந்தது. அந்த வேங்கை மரத்தின் கரிய வண்ணமும், அதில் இருந்த மஞ்சள் வண்ணப் பூக்களும் சேர்ந்து, தூக்க கலக்கத்தில் வெருண்டிருந்த யானைக்கு வேங்கை புலியை நினைவுபடுத்தியது. உடனே, அம்மரத்தை புலியென நினைத்து சீற்றம் கொண்டது. அதனைநோக்கிப் பாய்ந்து சென்றது. தன் வலிய கொம்புகளால், புலியின் வயிற்றைக் குத்திக் கிழிக்க முயன்றது. முடியாத நிலையினால் வலி பொறுக்க முடியாமல் பிளிறியது. அச்சத்தம் மலை முகடுகளெல்லாம் எதிரொலித்து, அக்காட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தது. நீயும் வேங்கை மரங்களும், மதயானைகளும் நிறைந்த நாட்டைச் சார்ந்தவன் தானே. இதுபோன்ற காட்சியை நீயும் கண்டிருப்பாய் அல்லவா?’ என்று தலைவனைப் பார்த்துத் தோழி கேட்கிறாள்.

இங்கு ‘யானை’ தான் தலைவன் அவனுக்கு பிடித்த ‘மதம்’ தான் காதல். முன்பு வென்ற புலியை போல் இப்போதும் புலியை வென்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் யானையைப் போல, (தலைவியை முன்பு எளிதாக அடைந்தது போல) இப்போதும் அடைந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இம்முறை அப்படி நடக்காது ஒன்றும் வேலைக்கு ஆகாது. மரத்திலிருந்து கொம்புகளை எடுக்க நினைக்கும் யானையும் துன்புறுவது சிலமணி நேரம்தான். யானை கொம்புகளை மரத்திலிருந்து எடுத்துவிட்டால் சுதந்திரமாகத் திரியும். உண்மையான இன்பத்தைப் பெறும்.  அதுபோல அவர்களாக சென்று மாட்டிக்கொண்ட களவு என்னும் மரத்திலிருந்து விடுபட இருவரும் பிரிவுத் துன்பத்தைச் சந்திக்கத்தான் வேண்டும். களவு மணத்திலிருந்து விடுபட்டுவிட்டால், தலைவி திருமணத்தின் வழி அவனுக்கு உரிமையாகி விடுவாள் உண்மையான இன்பத்தை யானையைப் போல தலைவனும் பெறுவான் என்கிறாள்.

துன்பமும் இன்பமும் தலைவனுக்கு மட்டுமல்ல தலைவிக்கும் உரியது. துன்பநிலை மாறி இன்பநிலை மட்டும் இனி எய்தவேண்டும் என்கிறாள். இத்தோடு விட்டுவிட்டாளா? அவள் தலைவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். களவுக் காலத்தில் இருவரும் சந்தித்த இன்ப துன்பங்களை ஒரு பட்டியலே போட்டுக் காட்டி, தலைவனைத் திருமணத்திற்கு நாள் குறிக்கச் செய்துவிடுகிறாள்.

தலைவனைப் பார்த்து, ‘நீ இரவு நேரத்தில் வருகிறாய் கடும் இரவு நேரங்களில் காட்டு வழி எப்படி இருக்கும்? கொடிய நச்சுப்பாம்புகள் நிறைந்திருக்கும். ஆனால் தலைவியின் மீது கொண்ட காதலால், அந்த நச்சுப்பாம்புகளை நினைத்து நீ பயப்படுவது இல்லை. அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. துணிவோடு நீ வருகிறாய். ஆனால் தலைவி உன்போல் அஞ்சாமல் இருக்க முடியுமா? நீ வரும் வழியை நினைத்து நினைத்து அவள் பயப்படுகிறாள். நீ வரும் வரை அவள் உயிர் அவளிடம் இருப்பதில்லை. நீ வரும் காட்டு வழிக்கு உன் பாதத்தைத் தாங்கச்  சென்று விடுகிறது. அச்சத்தினால் பொலிவிழந்து போகிறாள். அப்போது அவள் படும் துன்பத்தை காணப் பொறுக்க முடிவதில்லை .அப்போது,’நீரற்ற பாலைவனம் எப்படி இருக்குமோ’. அவள் அப்படி இருக்கிறாள். ஒரு வழியாக உன்னைப் பார்த்தபின் தான் அவள் நிம்மதி அடைகிறாள். அப்போது ‘மழை பொழிந்த வயல் எப்படி இருக்குமோ’  அப்படி மகிழ்ச்சியோடு பொலிவு பெற்று விளங்குகிறாள். அழகாகக் காட்சியளிக்கிறாள். அந்த அழகு அவளை விட்டு நீங்காமலிருக்க ஏதாவது ஒரு வழி உண்டா? தெரிந்தால் அதை எனக்குக் கூறு. தன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் அவளோ,உன்னிடம் காட்டுவழி வர வேண்டாம் என இறைஞ்சுகிறாள். நீ வேறு வழியில் வரப்போவதாகக் கூறுகிறாய்.

மீண்டும் நீ விடியற் காலையில் சென்று விடுகிறாய். மறுநாள் இரவு மீண்டும் வேறொரு கொடிய வழியில் வருகிறாய். மலைச்சாரல் நிறைந்த அந்த வழியானது, கொலை செய்வதற்குச் சிறிதும் அஞ்சாத கொடிய கள்வர்கள் நிறைந்த வழி. அவர்களைக் கண்டு நீ பயப்படாமல் இருக்கலாம். ஆனால் உன்மீது காதல் கொண்ட தலைவி பயப்படாமல் இருக்க முடியுமா? கள்வர்களால் உனக்கு ஏதாவது துன்பம் நேருமோ எனப் பயந்து அவள் நிலைத் தடுமாறிப் போகிறாள். பயந்த அவளைப் பார்க்கும் பொழுது ‘இளமையிலே வறுமையின் கொடிய தாக்குதலுக்கு ஆளானவன் எப்படி இருப்பானோ’ அப்படி வறட்சியாய் காணப்படுகிறாள். உன்னைப் பார்த்த பின்தான் அவளுக்கு போன உயிர் திரும்ப வருகிறது. அப்போது அவள் “இறைவனின் அருளினால் வளமான வாழ்க்கையைப் பெற்றவனைப் போல“ ஆனந்தத்துடன் தென்படுகிறாள். அந்த ஆனந்த நிலை அவளை விட்டு நீங்காமலிருக்க உனக்கு ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு.

கொடிய மலைச்சாரல் வழியிலும் வரவேண்டாம் என உன்னிடம் தலைவி வேண்டிக் கொள்கிறாள். நீயோ, மறுநாள் கரிய இருள் சூழ்ந்திருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து வருகிறாய். நீ வரும்வரை அவள் நிலை எப்படி இருந்தது தெரியுமா? “செல்வமிருக்கும்போது பிறருக்கு உதவாதவன் மூப்புக் காலத்தில் யார் உதவியும் இன்றி எப்படி துன்பத்தில் துயருருவானோ “அப்படி துயரம் நிறைந்து இருந்தாள். நீ வந்த பின்பு,“ பிறரது துன்பம் உணர்ந்து பொருளைக் கொடுக்கவல்லவனிடம் செல்வம் சென்று சேர்ந்தால் அவன் வாழ்க்கை எப்படியிருக்குமோ“ அப்படி பொலிவுடன் காணப்பட்டாள்’.

இப்படி இரவு நீ வரும்வரை துயருருவதும், வந்து சென்றபின் பகலில் மகிழ்வதுமாக இருக்கும் இவளைப் பார்த்து ஊரார் என்ன நினைப்பர்? மேலும், இப்படி தலைவன் வரும் வழியை நினைத்து எத்தனை நாள் தலைவி துயர் அடைவாள்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? தலைவியிடம் வாட்டமும் வனப்பும் மாறி மாறி தோன்றுவது அயலாரின் பழிச் சொல்லுக்கு ஆளாக்கி விடும் அல்லவா? இப்படியிருந்தால் எப்படியும் ஊரில் அவர்கள் களவு வெளிப்பட்டு விடும். அதற்கு இடம் கொடுக்கலாமா? அது தலைவனுக்கு அழகா? மற்றவர்கள் புறம் பேசாமலிருக்க, ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு எனத் தலைவனை நோக்கிக் கேட்கிறாள் தோழி.

பின்னர் இப்படியெல்லாம் தலைவனிடம் கேட்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவன் என்ன பதில் கூறியிருப்பான்? தலைவியின் மனம் படபடக் என அடித்துக் கொள்கிறது. தோழி, தலைவியைக் கள்ளத்தனமாகப் பார்த்துச் சிரிக்கிறாள்.

தோழியின் கேள்விகளில் உள்ள நியாயத்தினை உணர்ந்த தலைவன், ‘வேங்கைப் பூக்கள் மலரும் காலத்தே தலைவியை மணக்க உறுதியாக வருவேன்’ என்று கூறித் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்றிருக்கிறானாம்.

(இவ்வாறாகத் தோழி தலைவியின் வருத்தத்தைத் தன் நுண்ணறிவினாலும், பேச்சு சாமர்த்தியத்தாலும் போக்குகிறாள்.) இதோ அப்பாடல்……

இது ஒரு தோழி கூற்றுப் பாடல். பாடியவர் கபிலர்.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல

5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், 10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.
‘தலைவலி மருத்தீடு’- திருப்புகழ்)
வயிரவிவனப் பாடல் ஒன்றில், ‘‘சிறந்த
கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயற்சித்த வீரனாகிய இராவணனின் உடல் நெரிந்து
துன்புற தமது கால் விரல்களைச் சற்றே அழித்து
ஊன்றிய அரன்’’ என்ற பொருளில்,
‘‘அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊணும்
அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே’’

No comments: