Friday, May 15, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 9

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

ஒன்பதாம்  பாடல்:

தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும்    
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்    
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்    
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள் :

மாலொடு தண்தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் என்று பிரித்துப் பொருளறிய வேண்டும் .

மால் தாள்காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க.

தாணுதல்=தாள்+நுதல், நுதல்=நெற்றி; தாள்=திருப்பாதங்கள்; திருவடியும் திருமுடியும்.

தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும்பொருட்டு; இறைவனைக் காணும்பொருட்டு என்பாரும் உளர். 

நீளுதல் என்ற சொல் எதுகை கருதி நீணுதல் என்று திரிந்தது;

நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். 

ஒழிய - செயலற்றுப்போக. நிமிர்ந்தான் - அண்ணாமலையாய் உயர்ந்தவன். 
வாணுதல்=வாள்+நுதல், ஒளி பொருந்திய நெற்றி; செய் மகளிர்=சிவந்த உடல் கொண்ட மகளிர்; 

பொருள்:

தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதை அறியும் முயற்சியில், வாதம் செய்து கொண்டிருந்த தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில், பன்றியாக மாறிய திருமாலும் அன்னமாக உருவெடுத்த பிரமனும் நெடுந்தூரம் சென்ற போதும் அவர்களால் தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை; அவ்வாறு அண்ணாமலையாக நிமிர்ந்தவன் எனது உள்ளம் கவர் கள்வனாக உள்ளான்.

என் உள்ளம் கவர் கள்வனாய் விளங்கு பவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

தம்முள் யார் பெரியவன் என்பதைக் கண்டறிய பிரமனும் திருமாலும் முயற்சி செய்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. 

மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது தானும் வையத்த வருள் ஒருத்தியாயிருக்க, மற்றவர்களுக்குக் கிடைக்காத பேறாக்கிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்கிறார். .

பிரமனும் திருமாலும் இறைவனின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் தோல்வி அடைந்து திகைத்து நின்ற நிகழ்ச்சி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப் பெருமானின் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது.

கல்விக்கு அதிபதியாக விளங்கும் நாமகளை மனைவியாக உடையவர் பிரமன். மேலும் அவரும் தினமும் வேதம் ஓதுபவராக உள்ளார். எனவே கல்வி அவரது வலிமையாக கருதப் படுகின்றது.

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் இலக்குமி தேவி திருமாலின் மனைவி. எனவே செல்வத்தின் அடையாளமாக அவர் கருதப் படுகின்றார். அவர்கள்; இருவரும் தங்களுக்கு உள்ள வலிமையினால், தங்களது வலிமை மீது செருக்கு கொண்டவர்களாய் இறைவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர்.

இறைவன் கல்விக்கும் செல்வத்திற்கும் மயங்காதவன் என்பதையும் அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அவன் கட்டுப்படுவான் என்பதை உணராமல் அவர்கள் முயற்சி செய்த போது, அவர்களால் காண முடியவில்லை;

பின்னர் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனிடம் இறைஞ்சி வேண்டியபோது இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் என்பது புராணம். எனவே இறைவன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு மட்டுமே அருள் புரிவார் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம்.

எனவே தான் அன்புடன் இறைவன் வணங்க வேண்டும் என்ற இந்த செய்தி பதிகம் தோறும் சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது.

இதனை உணர்த்தும் சேக்கிழாரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த பதிகத்து பாடலில், தன்னைத் துதிக்கும் உலகத்தவருக்கு பெருமான் அருள் புரிகின்றார் என்று குறிப்பிட்டு பெருமானை துதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார். 

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்    
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்    
இழிவாகும் கரு விலங்கும் பறவையுமாய் எய்தாமை     
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்   . 




No comments: