Wednesday, May 13, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 7

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம்

ஏழாம் பாடல்:

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த   
உடை முயங்கும் அரவோடு உழி தந்து எனது உள்ளம் கவர் கள்வன்     
கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன்னம் சிறகு அன்னம்   
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

அருஞ்சொற்பொருள் :

சடைமுயங்கு புனலன் - சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன்-திருக்கரத்தில் அனலை உடைய வன், உடை முயங்கும் அரவு - ஆடையின் மேல் இறுகக் கட்டிய கச்சை யாகிய பாம்பு, சதிர்வு=பெருமை; கானல்=கடற்கரை சோலை; உழிதந்து=திரிந்து; பெடை=பெண்பாலைக் குறிக்கும் சொல், இங்கே பெண் அன்னத்தை குறிக்கின்றது. கழி=உப்பங்கழி;;

பொருள்:

தனது சடையினில் கங்கை நதியைக் கலந்து வைத்திருப்பவனும், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடனமாடும் பெருமையினை உடையவனும், தனது ஆடையின் மேல் கச்சாக இறுகக் கட்டிய பாம்பினை உடையவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினை கொள்ளை கொண்டு விட்டான்; உப்பங்கழிகளும் குளிர்ந்த சோலைகளும் சார்ந்துள்ள கடற்கரையினில் தன்னுடைய துணைகளுடன் கலந்து திரியும் அழகிய சிறகுகளை உடைய அன்னங்கள் பொருந்திய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறையும் பெருமானே எனக்கு பாலூட்டியவன்.

இந்த பாடலில் நமக்கு அச்சத்தை ஊட்டும் இரண்டு பொருட்கள்  பெருமானுடன் இணைந்து இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. பாம்பு மற்றும் நெருப்பு ஆகிய இவை இரண்டே அந்த பொருட்கள். இந்த இரண்டு பொருட்கள் இருப்பினும், தனது உள்ளத்தை பெருமானிடம் பறிகொடுத்ததாக சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள்.

ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க  நெருப்பு பாம்பு  முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவரது  பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லா உயிரகளின்  பகைநீக்கியாளும் வன்மையையும் பற்றிப் பேசுகிறது. .

பிரமபுரத்தில் கங்கையை தான் சடையில் இருத்தி  உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியாயிருந்து மற்ற உயிர்க்குப் போகத்தைப் புரிய, ஆழகான சிறகை  உடைய அன்னங்களும் தத்தம் பெடைகளை கலந்து திரிக்கின்றன என்பது  `அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பதைக் குறிக்கிறது.

No comments: