Tuesday, May 12, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 6

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

ஆறாம் பாடல்:

 மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி மழு ஏந்தி
 இறை கலந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடு உயர் சோலைக் கதிர் சிந்து அப்
பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் 


அருஞ்சொற்பொருள் :

இறை=முன்கை, மணிக்கட்டு;: 
சோர=ஒவ்வொன்றாக கழன்று விழ; 
கறை=இருள்; 
கடி= நறுமணம்; 


 பொருள் :ஒலி வடிவினதான வேதத்தைப் பாடியவாறும் நடனம் ஆடியவாறும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவாறும் வந்த பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டிருந்த    எனக்கு  அவரை அடைய முடியாத ஏக்கத்தினால் எனது உடல் மெலிய எனது முன்கைகளில் அணிந்திருந்த தரம் வாய்ந்த வெண் சங்கு  வளையல்கள். நழுவி விழுகின்றன. 

இவ்வாறு எனது வளையல்களையும் உள்ளத்தினையும் கவர்ந்த கள்வர். 

சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவாது இருள் சூழும்  வண்ணம் அடர்ந்து  நெருங்கி வளர்ந்துள்ள நறுமணம் மிகுந்து சோலைகளில் பிறைச் சந்திரன், தனது கதிர்கள் சிந்தும் வண்ணம்  உலாவும் பிரமாபுரத் தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ எனக்குப்  பாலூட்டியவன். 


பாடுவது வேதம், செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடு எனக் கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப் பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க.

நல்ல தரம் வாய்ந்த. செழித்து வளர்ந்த சோலைகளில் மரங்கள் நெருங்கி அடர்த்து காணப்படுவதால் அவைகளை ஊடுருவிக் கொண்டு சூரியன் மற்றும் சந்திரனின்  வெளிச்சம் செல்ல முடியாமல் இருண்டு காணப்படுகின்றன என்பதை உணர்த்தும் வண்ணம் இருள் நிறைந்த சோலைகள் என்று கூறுகின்றார்.

மழு - தவறிழைத்தாரைத் தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு; ஆயுதமுமாம். 

தாருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அகற்ற, சிவபெருமான் சென்ற போது ரிஷிகள் தவவலிமையால் ஏவிய புலியை உரித்து ஆடை அணிந்து கொண்டதாகவும், கொல்ல ஏவிய மழுவினை தனது ஆயுதமாக ஏற்றுக்கொண்டதாகவும் சைவ நூல்கள் கூறுகின்றன.
மழுவை ஏந்துதல் சிவனுடைய அடையாளமாகவும், சிவ வடிவங்களான வீரபத்ரர்பைரவர் போன்றோரின் அடையாளமாகவும் கூறப்பெறுகின்றன.
சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் பின் இருகைகளில் ஒன்றில் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார். சிவ வடிவங்களை அடையாளம் காண்பதற்கு இந்த ஆயுதம் பயன்படுகிறது.
சிவபெருமானின் ஆடைக்கும், பூசைப் பொருள்களுக்கும் உரியவரான சண்டிகேசுவரர் இந்த ஆயுதத்தினை கொண்டுள்ளார்.

No comments: