Thursday, May 07, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 1

வணக்கம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பக்கத்திற்கு வருகிறேன்.

எத்தனையோ மாறுதல்கள்.  உடல், மனம், இடம், பொருள், தேவைகள், எண்ணங்கள், உறவுகள், சிந்தனைகள்.

மூத்த மொழியாம் தமிழில் பன்நெடுங்காலமாக எத்தனையோ கலைபபடைப்புகள் மதம் சார்ந்ததும் பண்பாடு சார்ந்தும் நீதி நெறிமுறைகள் சார்ந்தும் படைக்கப் பட்டுள்ளன.

தமிழ் வாழ்க என்று கூறுபவர்கள் கூட இவற்றைப் படித்து பிரித்துணர்ந்து பொருளறிய முடியாதவர்களா யிருக்கிறார்கள்.  என்னால் முடியுமா என்று ஒரு கேள்வி எழுந்தது.  ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முயற்சி செய்கிறேன். பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

நானும் பிறர் எழுதியவற்றைப் படித்தும், எனது கற்பனையில் தோன்றும், எண்ணங்களில் கலந்திருக்கும் கருத்துக்களையும்  முடிந்தவரை என்னுடைய நடையில் எழுதுகிறேன். 

எழுதுகையில் எனக்கு என்ன கேள்விகளெல்லாம் எழுந்தனவோ அவற்றிறகெல்லாம் பதில் தேடி அறிந்து கொண்டேன். அவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எல்லாம் இறைவன் அருள்.

ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்

*********************************************************************************
முதலாம்  திருமுறை. திருப்பிரமபுரத்தில் (சீர்காழியில்)ஞானசம்பந்தர் அருளியது . 

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

முதற் பாடல் 

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உ ள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.


அருஞ்சொற்பொருள்
விடை -  எருது (நந்தி  தேவர் )   தூ -  தூய   சுடலைப்பொடி* - சுடுகாட்டில் இருக்கும்  இறந்த உடலை எரித்த சாம்பல்    ஏடுடையமலாரன்  - இதழ்களையுடைய தாமரைப் பூவில்  அமர்ந்த பிரமன்  பீடு - பெருமை, புகழ்  மேவிய - இருந்த, அமர்ந்த, பெம்மான் -  பெருமான்

தோடுடைய செவியன் என்பதற்கு தோடு அணிந்த  செவியை உடையவன்  என்று  பொருள்.   சில  இடங்களில் தோடுடைய  உடைய செவியுடைய உமா  தேவியை இடப்புறம் உடைய என்றும் பொருள்  கொண்டிருக்கிறார்கள்.

*சுடலை என்பதற்கு சிவன் என்று ஒரு பொருள் உண்டு. (சுடலை மாடன்
என்றால் சுடுகாட்டில்  மாட்டின் (எருதின் ) மீதமர்ந்தான்). சுடுகாட்டில் இருக்கும் சாம்பலைப்  பூசிய சிவன் .

முன்னொரு  நாள் பிரமன் படைப்புத்தொழில்  வேண்டி சிவனடி  பணிந்தது புராணம்.

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, தூய வெண்மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூஜை  செய்ய, அவனுக்கு அருளிய  புகழுடைய திருப்பிரமாபுரம்  என்ற ஊரில் இருக்கும் பெருமானே , எனக்கு பாலமுதூட்டியது என்று கூறுகிறார்.

***********************************************************************************
இந்தப் பாடலைப் பற்றி மேம்மேலும் படிக்கும்போது ஒரு பொருளை எப்படி கசடற கற்பது என்பது புரிகிறது.

தந்தையார் பாலகனைக் கரையில் இருத்தி விட்டு கோபுரமேலுறை பெருமானையும் அன்னையையும் வணங்கி (என் மகவைப் காத்தருள்விரெனும் படியாக) , குளத்திலிறங்கிக் குளிக்கலானார்.  முதல் சில முறைகள் உடனடியாக நீரிலிருந்து வெளியில் வந்த தந்தையார், ஒரு முறை நீண்ட நேரமாக வெளியில் வாராமை கண்டு குழந்தை அழுகிறது.

வேண்டிய பக்தர் குறை தீர்க்கும் அப்பனும் அம்மையும் அழும் குழந்தைக்கு தங்கக் கிண்ணத்தில் பாலூட்டி , அவர் அழுகையை நீக்கி செல்கின்றனர் . பாலூட்டிய தாய் குழந்தையின் வாயைத் துடைக்காமல் விடமாட்டாள். ஆனால் உலகிறக்கிவர் பெருமை உரைக்கும் படியாக, பாலுதட்டில் தங்கும் படியாக விட்டுச சென்றார் என்று ஒரு குறிப்பு.

தந்தையார் வந்து பால் வழியும் வாய் கண்டு , யார் பாலூட்டினாரென வினவ, அக்குழந்தை இப்பாடலைப் பாடியதாக வரலாறு.

தோடுடைய செவியன் என்பதில் தோடுடையவர் தாயாகவும், செவியன் தந்தையாகவும் , சேர்ந்த சொல் மாதொருபாகனையும்  குறிப்பதாம்.

தோடு என்பது மங்கல சொல் .  மங்கலமான பொருளுடனேயே எதனையும் தொடங்க வேண்டும் எனும் முறை கடைபிடிக்கப் பட்டிருக்கிறது.

அழுத குழந்தையை விவரிக்கும் சேக்கிழார் கண்மலர்கள், கைமலர்கள், வண்ணமலர்ச் செங்கனி வாய் அதரம்   என்று விவரிக்கிறார்.  சிவஞானததையும் குழைத்து ஊட்டினார் என்றும் பால் அடிசில் (சோறு) என்றும் கூடக் குறிப்பிடுகின்றார்   (வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இதைப் படிப்போம்.

தோடு, காளை, மதி, விபூதி  மற்றும் ஊட்டிய பாலும் அதனால் பெற்ற ஞானமும் வெண்மை எனக்  குறிப்பதால், வெண்மை நிறம் குறிக்கும் சத்வ குணத்தை இப்பாடல் குறிக்கிறது என்று ஒரு விளக்கம்.

முப்பத்தாறு வார்த்தைகள் கொண்ட இப்பாடல், சைவத்தின் முப்பத்தாறு தத்துவங்களை குறிப்பாலுணர்த்துகிறது.

உள்ளம் கவர் கள்வன் என்பதில், திருடன் தான் திருடிய பொருளை மறைத்து வைப்பான் அது போல என மனமும் அவனுள் மறைந்தது.

தர்ம தேவதை வேண்டியதால் அவரை எருதாகப் படைத்து வாகனமாகக் கொண்டது படைத்தலையும், சந்திரனைக் காத்து சிரசில் தரித்தது காத்தலையும் சுடலைப் பொடியாகிய சாம்பல் அழித்தலையும், கவர்ந்தது மறைத்தலையும் , பிரமனுக்கு அருளியது அருள்தலையும்  கூறி ஐந்தொழிலையும் இறைவன் செய்வதை உணர்த்துகிறது.

விடையேறி, மதிசூடி என்பவை உருவத்தையும் பொடி பூசி உடலை மறைத்தல் மற்றும் கவர்ந்த பொருளை மறைத்தல் ஆகியன அருவத்தையும் குறிக்கின்றன. 

No comments: