Sunday, May 10, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 4

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

நான்காம் பாடல்

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்
உண் மகிழ்ந்து பலி தேரிய வந்தது எனது உள்ளங்கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மலிந்த வரை மார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருஞ்சொற்பொருள் :

விண் மகிழ்ந்த -  விண்ணில் ஆர்ப்பரித்து  அடுத்தவர்களுக்கு துன்பம் விளைவித்ததால் மகிழ்ந்து (திரிபுரம் எரித்த கதை இங்கே )

மண் மகிழ்ந்த அரவம் -  மண்ணாலான புற்றில் வாழும் பாம்பு 

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் (திரிபுரம் ) கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரம கபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவனே எனக்குப் பாலூட்டியவன். 

No comments: