Monday, May 11, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 5

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

ஐந்தாம் பாடல் :

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்த எனது உள்ளங்கவர்கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்த ஓர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம்  மேவிய பெம்மான் இவன் அன்றே.

அருஞ்சொற்பொருள் :

ஒருமை பெண்மை உடையன்:   ஒரு  பாகத்தில் பெண்ணாகிய உமையை உடையவன்

பொருள்  :

தன்  திருமேனியிலே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், பேரூழி காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ எனக்குப் பாலூட்டியவன்.

மற்றுமொரு விளக்கம் :   தனது உடலின் ஒரு புறத்தில் உமை அன்னையை ஏற்றுக்கொண்டுள்ள இறைவனின் தலைமுடியின் ஒரு பாகம் சடையாகவும் மற்றொரு பாகம் பெண்களது குழலாகவும் உள்ளது. அவனை பெண்மை உடையவன் என்றும், சடையன் என்றும், இடபத்தை வாகனமாகக் கொண்டவன் என்றும் பலவாறு எனது தோழியர்கள் புகழ்ந்து கூறவே, அவர்களது பேச்சினைக் கேட்ட நானும், பெருமான் பால் காதல் கொண்டு அவனது திருவுருவத்தை எப்போதும் நினைத்தவாறு மனதினில் சுமந்து கொண்டேன். அதனால் அவர் எனது உள்ளத்தைக் கவர்ந்தவராக திகழ்கின்றார். இவ்வாறு எனது மனதினைக் கவர்ந்த கள்வர் யார் என்று நீங்கள் வினவுவரேல், நான் அதற்கு விடை கூறுகின்றேன். முற்றூழி காலத்தில் கருமை நிறம் கொண்ட கடல் பொங்கி வந்து அனைத்து உலகினையும் மூழ்கடித்த போதும், தோணிபுரமாக மிதந்த பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பொருந்தி உறையும் பெருமான் தான், எனது உள்ளம் கவர்ந்த கள்வராக, எனது பெருமைக்குரிய தலைவராக விளங்குகின்றார்.

ஒருமை என்ற சொல்லினை பெண்மை மற்றும் சடையன் ஆகிய இரண்டு சொற்களுடன்  சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.  உடலில் ஒருபாகத்தில் உமையம்மைக்கு இடம் தந்ததும்,  பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமா யிருத்தலின் இரண்டிற்குமேற்பச்சடையன் என்றார்.

தனது தோழிகள்,  பெண்மைக்கு புகழ் சேர்க்கத் தனது மனைவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டவன் என்றும் பலவாறு பெருமானைப் புகழ்ந்து பேசவே, அவர்களது பேச்சினைக் கேட்ட தானும் பெருமான் பால் காதல் கொண்டு, அவனது திருவுருவத்தை எப்போதும் தனது மனதினில் நினைத்து சுமந்தவாறு, தனது உள்ளத்தை அவனிடம் இழந்ததாக சம்பந்த நாயகி இங்கே கூறுகின்றாள்.

தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக் கொண்டான் என்பார் `அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்`

  தனது இயல்பினில் நீர் வண்ணமற்றது; எனினும் கரையிலிருந்து கடலினைக் காணும் நமக்கு, அருகினில் நீலநிறத்துடனும் தொலைவில் கருமை நிறம் பெற்று இருப்பதாகவும் தோன்றுகின்றது. கருமை என்பது கடலின் இயல்பான நிறம் அன்று, அது ஒரு தோற்றமே என்பதை உணர்த்தும் வண்ணம் கருமை பெற்ற கடல் என்று இங்கே கூறுகின்றார்.

இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடலாகும்.


No comments: