Sunday, May 10, 2020

திரிபுரம் - முப்புரம் எரித்த கதை


தாரகன் என்ற அசுரனின் மகனான  தாரகாசுரன் என்பவன் கடுந்தவம் புரிந்து, பிரம்மனிடம் வரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். இவனை முருகன் அழித்தொழித்தார்.

அழிக்கப்பட்ட தாரகாசுரனுக்கு மூன்று அசுர பிள்ளைகள். (மால்யவான், சுமாலி, மாலி என்றும் கூறப்படுகிறார்கள்)

தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி என்ற இந்த மூவரும் பிரம்மனை வேண்டி தவம் புரிந்ததில், பிரம்மன் மகிழ்ந்து, மூவருக்கும் தலா ஒன்று என மூன்று பறக்கும் நகரங்களை (முப்புரங்கள்) அளித்தார்.

மூன்று புரங்களும் கோடி வருடங்களுக்கொரு முறை கண் சிமிட்டும் நேரும் கூடிப் பிரியும், அந்த நேரத்தில் ஒரே பாணத்தால் மூன்று புரங்களையும் அழிப்பவனால் எங்களுக்கு மரணம் என்பது வரம்.

வெகு காலம் தேவர்களையும், சகல உலகங்களையும் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர். அனைவரின் முயற்சிகளும் பல முறை தோற்று, அவர்களின் கொடுங்கோல் நல்லவர்களையும் ஹிம்சை செய்ய தொடங்கின. 

துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானை சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

இந்த மூன்று அசுரர்களை அழிய வேண்டுமென்றால், தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை சிவனுக்கு அளித்தால் மட்டுமே, சிவனால் அவர்களை அழிக்க முடியும்.

போருக்குச் செல்ல, பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரினை உருவாக்கச் சொன்னார் சிவன். இந்த மிகப்பெரிய தேரினில், பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மன்தான் தேரோட்டி. கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, அக்னி, வாயு தேர்ச்சக்ரங்களின் கடையாணியாகவும்  காஷ்டை, முஹூர்த்தம் என்ற கால அளவுகள் அம்பின் முன், பின் பகுதிகளாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார் சிவன்.

அப்போது முப்புரத்தில் (பறக்கும் நகரங்கள்) மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், அருகருகே வந்து ஒரே இடத்தில் நின்றன.

மூன்று அசுரர்களும் சிவனுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களைப் பார்த்த சிவன், அவர்களை அழிப்பதற்கு, வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதியை பெற்றுத்தான், சிவனால் அசுரர்களை அழிக்க முடியும் என்பதை எண்ணி அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த சிவன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு சிவனை தாங்கிக்கொண்டார்.

பெரும் ஆர்ப்பாட்டத்தோடு தேர் புறப்படத்தொடங்கியதும் அச்சாணி முறிந்து பயணம் தடைபட்டது (இடம் சென்னை-செங்கல்பட்டு வழியில் இருக்கும் அச்சிறுப்பாக்கம்). விநாயகரை வணங்கி, அனுமதி பெறாமல் தொடங்கியதை உணர்ந்து சிவபெருமான் அவரை வணங்கி அனுமதி கோரினார். தேரில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டி, அக்னி, வாயுவை அம்பின் நுனி, அடிப்பகுதிகளாக மாற்றி, கால ஓட்டத்தை நடத்தும் காஷ்டை, முஹூர்த்தத்தை அச்சாணிகளாகக் கொண்டு பயணத்தை தொடரச்சொன்னார்.

பெரும் எதிர்பார்ப்போடு, நாம் பல கோடி ஆண்டுகள் சாதிக்க முடியாது, அடிமைப்பட்டு கிடந்ததை இவர் நல்லபடியாக முடிக்கணுமே, எப்படி செய்யப்போறார்னு தேவர்களும், எவரும் பற்பல யோசனைகளில் இருந்த போது மீண்டும் ஒரு முறை சிவன் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம் எரித்து) எரித்து சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பாராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார்.

தங்கள் உதவி இல்லாமலேயே சிவன், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

 பெரும் தவம், வரங்கள் பெற்று உயர்ந்த நிலையிலிருக்கும் போதும் தர்மம் தவறினால், எவராலும் முடியாது என்ற திமிர் நிமிஷத்தில் எதிர்பாராத விதத்தில் விளையாட்டாய் முடிந்து விடும், முடிக்கப்படும்.

இதன் உன்னோரு கருத்தாக , திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் திருமூலர் இப்படி  உரைக்கிறார்.

நமக்கு பிறவி ஏற்பட காரணமாய் இருப்பது முக்குணங்களினால் விளையும் கர்மவினைகளே. இவை அநாதி காலமாய் நம்முள்ளே இருந்துகொண்டு ஒவ்வொரு யோனியிலும் நம்மை பிறக்க வைக்கிறது.

தத்துவ விளக்கத்தில் சத்துவ குணத்தை தங்கமாகவும், ரஜோ குணத்தை வெள்ளியாகவும், தமோ குணத்தை இரும்பாகவும் உருவகிப்பர். இந்த மூன்று கோட்டைகளும் முக்குணங்களினால் விளையும் கர்ம வினையை குறிப்பன.

இவற்றில் ஒன்றை விடுத்து மற்றவைகளை அழித்தாலும், நமக்கு பிறவி உண்டு. பிறவிப்பெருங்கடலை நீந்தவேண்டுமென்றால் இம்மூன்று கர்மவினைகளையும் ஒரு சேர அழிக்கவேண்டும்.

இது இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும். இவ்வாறு நமது கர்ம வினைகளை அழித்து பிறவியில்லா பேரின்ப நிலையை அளிப்பதே திரிபுரம் எரித்த திருவிளையாடலின் உட்பொருள்.

முப்புரம், அல்லது த்ரிபுரம் என்பது Triad (Observer, Observed, Observing) என்ற நம் மனதில் உள்ள முடிச்சுக்கள் (knots), இவையெல்லாம் தனி தனி என்று பார்க்கும் தன்மை. சமாதி நிலையை அடையும் பொழுது, இந்த மூன்று நிலையும் மறைந்து விடுகிறது. இது சிவத்தை அடைவது, பேரானந்தம் அடைவது என்று சொல்வர். எல்லாம் ஒன்றே என்ற நிலையை அடைந்தால், முப்புரத்தை சிவன் எரித்தாக கொள்வர். ஏனென்றால் அவனின்றி இது நடக்காது.

குறிப்பு: மூன்று புரங்களை ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களின் விளைவு என்றும் கூறுவர்

No comments: