Friday, May 08, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 2

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

இரண்டாம் பாடல்: 

முற்றலாமை இளநாகமோடு என முளைக்கொம்பு அவை பூண்டு         
    வற்றலோடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளங்கவர் கள்வன்     
    கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்       
    பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருஞ்சொற்பொருள் :

முற்றலாமை -   ஆமையோட்டை அணிந்த  கதை இங்கே.   வெகு காலம் முன்பு  நடந்த  கூர்ம அவதாரத்தைக்  குறிப்பதாக " முற்றல்" என்று குறிப்பிடப் படுகிறது.

ஏனம்- பன்றி; ஆதிவராகம்

முளை கொம்பு அவை பூண்டு - பிரமனின் வரம் பெற்ற ஹிரணியக்ஷன்  அசுரன் உலகை பாய் போல சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். விஷ்ணு வராக அவதாரம்  எடுத்து  அவனை அழித்து உலகை மீட்டார்.

அரக்கன் மேல் பல் பட்டதால் அவனுடைய குணாதிசயங்கள் மேலிட அந்த வராகம் கர்வம் கொண்டு எதிர்வந்த உயிர்கள் அனைத்தையும் வதைத்து உண்ணத் துணிந்தது.  தேவர்களும், மனிதர்களும் சிவபெருமானிடம் மன்றாட, அவர் வேடனாக வந்து சூலத்தினால் குத்தி, அதன் பல் போன்ற  கொம்பினை உடைத்தெரிந்தார். அடக்கியதை உணர்த்தும் வகையே அக்கொம்பினை தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார். அதனால் வராகத்தின் கர்வம் அழிந்தது.

இதன் ஒரு வேறுபாடாக , "பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே" என  சிவபெருமான் முருகனிடம் கர்வம் கொண்ட அந்த வராகத்தின் கொம்பினை உடைத்து வரும்படி கூற, முருகன் வராகத்தின் கொம்பினை உடைத்துவந்தார். அதனை சிவபெருமான் அணிந்து கொண்டார் என்று  திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.

எப்படியானாலும் எந்தை  முளைக் கொம்பு போன்ற பன்றியின் கொம்பை  மாலையாக அணிந்தவர்.


வற்றலோடு கலனாப் பலி தேர்ந்து  (கலன்  - பாத்திரம் / திருவோடு)

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால் சிவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் பிடித்தது;பிரம்மனின் கபாலம் அவர் கையில் ஒட்டி கொண்டது ; அந்த தோஷம் கழிவதற்கு அவர் பிரம்மனின் கபாலத்தில் பிட்சை எடுத்தார் என்று ஒரு கதை.

(அது தவறு. பிரம்மனின் ஆணவத்தை அடக்க பரமேஸ்வரன் பைரவரை ஸ்ருஷ்டித்தார்;அந்த பைரவர் தான் பிரம்மனின் ஐந்தாவது சிரஸை கொய்தார் என்று ஸ்கந்த, கூர்ம புராணங்கள் தெளிவாகக்  கூறுகின்றன .

பின்,எதற்காக பைரவர் ப்ரஹ்ம கபாலம் ஏந்தி பிக்ஷையெடுத்தார்?
பரமேஸ்வரன் பைரவரை அழைத்து இரண்டு கட்டளைகளை இட்டார்:

 எமது மாயையால் மோஹமடைந்து எம்மை நிந்திக்கும் இந்த பிரம்மனின் தலையை துண்டித்து, அந்த மண்டையோட்டில் கர்வம் கொண்ட தேவர்கள் மற்றும் ரிஷிகளின் ரக்தத்தை பிக்ஷையென வாங்கிக்கொள்(அதாவது பிக்ஷையென்ற பெயரில் அவர்கள் ரக்தத்தை பெற்று அதன்மூலமாக அவர்கள் ஆணவத்தை போக்குவது. நம் ஆணவத்தை தனக்கு பிக்ஷையாக இடும்படி இறைவன் கேட்கிறான்)

இவ்வாறு பைரவரிடம் கூறிவிட்டு, பரமேஸ்வரன் “ப்ரஹ்மஹத்யா” என்ற  ஒரு பெண்ணைப் படைத்து  அவளிடம்  பைரவர் காசி மாநகரை அடையும் வரைக்கும் நீ இவனை பின் தொடர். உனக்கு காசியைத் தவிர எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் உண்டு,.இவன் காசியை அடைந்த க்ஷணத்திலேயே இவனை விட்டு நீ முழுவதுமாக விலகிவிடு.”
 இறுதியாக பைரவர் காசி செல்கிறார்;ஈசனின் கட்டளைப்படியே ப்ரஹ்மஹத்தி அவரை விட்டு விலகி பாதாளம் செல்கிறது.பைரவர் காசியின் காவல் தெய்வம் ஆகிறார்.

சிவபெருமான் இப்படியொரு மிக பெரிய திருவிளையாடலை

1.ரக்தபிக்ஷை கேட்டு தேவர்கள் மற்றும் முனிவர்களின் ஆணவத்தை அழிப்பதற்காகவும்;

2.ப்ரஹ்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் (தவறிழைத்தவர்கள்) திருத்திக் கொள்ளும் வழி காட்டுவதற்காகவும்;

3.காசியின் புகழ் / மேன்மையை விளக்கவும்

நடத்தினார்.

ஈசனின் இந்த விளையாட்டை முழுவதுமாக உணர்ந்த அப்பர் பெருமான் இவ்வாறு பாடினார்:

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

பணிந்தவர் பாவங்களை போக்குபவனுக்கு எங்ஙனம் ப்ரஹ்மஹத்தி என்னும் பாபம் பற்றும்?ஆதலால் அவன் வெண்டலையிற் பலிகொண்டு திரிந்தது பாவத்தின் காரணத்தால் அல்ல என்பதை வாகீச பெருமான் மிகவும் சூக்ஷ்மமாக தமது தேவாரத்தில் நிலைநாட்டுகிறார்.)

பெற்றம் :  ஆவினம், எருது. (பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து - ஆண்டாள் - திருப்பாவை)

பெரியார்க்கு இலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல்-உலக நூல்களைப் படித்து பெருமை கொள்வதன்று., இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அப்படியே.

இறைவன் புகழை யன்றி வேறொன்றையுங் கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என்னும் போது . `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை' என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது..

கற்றல் கேட்டலுடையார் பெரியார்' எனவே, கற்றல் கேட்டல், அது பற்றிச்  சிந்தித்தல் தெளிதல் முதலியனவும் அடங்கும் .

"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்" என்பது சிவஞான சித்தியார்.

தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தின் மீதமர்ந்து  இருக்கிறார் என்பதாம்.

சிவனாரின் மேனியில் தவழும் பேறு  பெற்ற நாகம் , அதனால் இளமை மாறாதிருக்கிறதாம். திரும்பத் திரும்ப சட்டையை உரிப்பதால், இளமையாகவே இருப்பதாகவும் கொள்ளலாம்.

பொருளுரை : 

வயது முதிர்ந்த ஆமையோட்டினையும், இளநாகத்தையும், பன்றியினது முளை போன்ற கொம்பையும்  அணிந்து, காய்ந்த பிரமனது  கபாலத்தில் பிட்சை கேட்கும்  என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால்தொழுது புகழும் போது  எருதின மீதமர்ந்து அருள் வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனே எனக்கு பாலூட்டியவன் என்கிறார்.

*******************************************************

No comments: