Sunday, May 10, 2020

சந்திரன் ஒரு பிறையுடன் சிவனைச் சரணடைந்த கதை .


சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல கோடி ஆண்டுகள் ) தவம் செய்து பிரம்மனின் அருளைப் பெற்று விதைகள் ,செடிகொடிமரங்கள் மற்றும் சமுத்திரங்களுக்கு அதிபதியானான். 

பிரஜாபதி தட்சனின் இருபத்தியேழு பெண்களை (நட்சத்திரங்கள் )மணந்து கொண்டான். 

திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை வெறுக்கத் தொடங்கினான்.

இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.

இதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சன் கோபம் அதிகரித்தது.


 விஷயம் தெரிந்து கொந்தளித்தார். ஆவேசமானார். சந்திரனின் மீது கடும் கோபம் கொண்டார். ‘உன் உடலானது தேஜஸ் இழந்து, பொலிவிழந்து தேயட்டும்’ என சாபமிட்டார்.
அதைக் கேட்டு சந்திரன், நடுங்கிப் போனான். கெஞ்சினான். துக்கித்துக் கலங்கினான். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. சந்திரன் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கிய சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச் சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் (திங்களூர்) போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .

சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்சய  மந்திரத்தை உச்சரித்து வணங்கினான்.சந்திரன் செய்த பூசையைக் கண்டு மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சந்திரனும் தனது மாமனாரின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொன்னான். அதற்கு பெருமான்  தட்சன் கொடுத்த சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும் அந்த சாபத்திலிருந்து சந்திரன் தப்பவும் முடியாது என்று கூறினார் .ஆனால் சந்திரன், இறைவனிடம் நெக்குருகி ,நெஞ்சுருகி கண்ணீர்மல்கி இறைஞ்சி தான் செய்த தவறுகளை மன்னித்து தனக்கு அருள் புரிந்து கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டான்.சந்திரனின் பக்தியில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார்.எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து(தட்சனின் சாபப்படி ) மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார்.இவ்வாறாக சந்திரன் தன் இழந்த காந்தியைப் பெற்றான் மேலும் சந்திரனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அந்தப் பிறையை, தன் சிரசில் அணிந்து அவனுக்கு பெருமை சேர்த்தார். 
சந்திரன் இழந்த பதினாறு கலைகளும் மீண்டும் அவனிடமே வந்தாலும் கூட, முழுமையான பொலிவுடன் ஐப்பசி பெளர்ணமி நாளில் மட்டுமே சந்திரன் மிகுந்த தேஜஸூடன் காட்சி தருகிறான் என்கிறது புராணம்.
அதுமட்டுமா. சந்திரனின் ஒளி தேய்ந்து கொண்டே வரும். அமாவாசை நாளில் அவனின் ஒளியே இருக்காது. பிறகு வளர்ந்து கொண்டே வரும். பெளர்ணமியில் ஒளிர்வான் சந்திரன். சாப விமோசனம் பெற்ற ஐப்பசி பெளர்ணமியில், கூடுதலாகவே ஜ்வலிப்பான்। 

No comments: