Friday, May 08, 2020

சிவபெருமான் ஆமையின் ஓட்டை அணிந்து கொண்ட கதை

ஒரு காலத்தில் தேவர் அசுரர் சண்டைகள் தொடர்ந்த நிலையில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் எண்ணிக்கையில் குறைந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்றூ பிரமனுடன் சேர்ந்து யோசித்து,  திருமாலது துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்திரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். 

வேகம் தாளாத வாசுகி தான் விஷத்தைக் கக்கினாள். தேவர்களும் மால் அயனும் வேண்ட  சிவபெருமான் அதை உண்டது வரை அனைவரும் அறிந்ததே. விஷம் வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினார். சிவனது ஆசியுடன் மீண்டும் அமுதம் கடையச் சென்றனர். 

அமிர்தமும் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அரி ய பொருட்களும் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டும் அடையும் வண்ணம் திருமால் மோகினியாக மாறி அசுரர்களை மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். நிற்க. 

இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற ஆமை தன்னால் தான் அமிர்தம் கிடைத்தகதென்று எண்ணி கர்வ மேலீட்டால் ஏழு சாகரங்களையும் கலக்கியது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்து சேற்றையும் உண்டது. 

நடுநடுங்கிய உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து  ஆமையை அழிக்குமாறு வேண்டினர் . உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித் தெடுத்தார். பெருமானே அதன் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த பிரமனின் தலைமாலையின் நடுவே யொருத்தி இணைந்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலாகிய ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான், முருகனிடம் அவ்வாமையை அழிக்கும் படி ஆணை இட்டதாகவும் அவர் அதை அழித்து, அதன் சதைப் பற்றறுத்து, ஓட்டைக் கொணர்ந்து தான் தந்தைக்கு பரிசளித்ததாகவும் ஒரு கதையும் உண்டு, 

No comments: