அருணுக்கு எப்படி இந்த செய்தியை எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.. அம்மா காலையில் தொலை பேசியில் சொன்னாது சந்தொஷமான செய்தியா அல்லது சங்கடமான செய்தியா.. விஷ்யம் ஒன்றும் பெரிதாக இல்லை..
"உனக்கு ஒரு வரன் கூடி வந்திருக்கிறது.."
"சரி மேல பேசு. உனக்குப் பிடிச்சிருந்தா பொண்ணு புகைப்படம அனுப்பி வை. பார்த்துட்டு பிடிச்சிருந்தா சொல்லறேன்"
அம்மா சிரித்தாள். குரலில் ஒரு ஆர்வம்."புகைப்படமே வேண்டாம்.. உனக்குப் பிடித்தவள் தான்.."
எனக்குப் பிடித்தவளா.. அப்படி யாருமே இல்லையெ.. காதல் எல்லாம் கசக்கும் பொருள் என்று பெண்ணைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொண்டு நடப்பவனாயிற்றே நான்.
"யாரும்மா அது?"
"திரைப் பட நடிகை மாலதி"
குடும்பப் பாங்கான வேடங்களில் நடிப்பவள் தான். நிஜமாகவெ குத்து விளக்கு போன்ற அழகு. மாராப்பு விலகாமல் நடித்து விருதுகள் எல்லாம் வாங்கிக் குவித்திருந்தாள்.
"எனக்கு கொஞ்சம் அவகாசம் தா.. ரெண்டு நாள் பொறுத்து என் முடிவைச் சொல்லரேன்"
******************
செந்தில் எனக்கு இந்தியாவிலிருந்தே நண்பன்.. பள்ளி நாட்களிலேயே தெரியும் என்றாலும் அமெரிக்கா வந்த பின் தான் நல்ல நண்பனானன்.. இப்போது மனம் விட்டுப் பேசும் அளவு நட்பு.
மாலையில் வீட்டுக்கு வாடா என்றதும் என்னடா பாகற்காய் பிட்லை செய்யப் போகிறாயா என்று கிண்டலடித்தான். காதல் கசக்குமாம் பாகற்காய் இனிக்குமோ என்று கிண்டல் அடிப்பான். காதல் திருமணம் செய்திருந்தான். காதல் இல்லாமல் மனிதரின் வாழ்க்கை வீண் என்ற கட்சிக் காரன்.
ஆறு மணிக்கு வந்தான். வாசலிலேயெ நின்று ஒரு சிகரெட்டை ஊதித் தள்ளிவிட்டு நாற்றத்தையும் உள்ளே கொண்டு வந்தான்.
"அருண் சார், எதுக்கு கூப்பிடீங்க" என்றான் கிண்டலாக.
சொன்னேன்.
என்னைப் பார்த்தான்..
"நானாயிருந்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்"
"ஏன்?"
"என்னால நிம்மதியா இருக்க முடியாது. யாராவது எதாவது சொல்வார்கள்.. மனசு வருத்தப்படும். நாளைக்கு உன் பணம் என் பணம் என்று சிக்கல் வரும்"
"நடிகை என்பதாலயா?"
"ஆமாம், அது நிழல் வாழ்க்கை.. யார் என்ன செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது.."
"மாலதிபற்றி எதுவும் கேள்விப்பட்டதிலையே?"
"இல்லை அவளைப்... " என்னைப் பார்த்தான்.
"எதுவாயிருந்தாலும் சொல்லு"
"அவங்களைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன்" சிரித்தேன்.
"அவள் அவளாகவே இருக்கட்டும் அவங்களாக வேண்டாம்"
" சமீபத்தில்கூட கிரிக்கெட் நட்சத்திரம் அவினாஷுடன் சிங்கப்பூரில் அவள் அடித்த கூத்து பற்றி எழுதி இருந்தார்கள்"
"அப்படி என்ன கூத்து?"
"மழைக்காலம் படப் பிடிப்பிற்காக இவள் போன போது அவனும் அங்கே ஒரு போட்டிக்காக வந்திருந்தானாம். இரண்டு பேரும் ஒரே ஓட்டலில் தங்கியதும்.. கடைத்தெருவில் வண்டி வண்டியாய் அவன் அவளுக்கு பொருள்கள் வாங்கித் தந்ததும்..ஒரு M பொட்ட சிவப்புக் கல் மோதிரம் கூட வாங்கினார்கள்
விரைவில் அவனுடன் திருமணம் என்று கூட எழுதி இருந்தார்கள்.."
"அப்படியா?"
"அதற்கு முன்னாலும் முதல் படத்தில் அவளுடன் நடித்த கதாநாயகனுடன் நிறைய கிசுகிசு வந்தது. அவளை அறிமுகப் படுத்திய இயக்குனரும் அறிமுகப்ப்படுத்தும் நடிகைகளை ஒப்பந்தமிட்டு கொஞ்சம் நாள் தங்கள் சின்ன வீடு மாதிரி வைத்திருப்பார்.. அப்போது அவர் எடுக்கும் படங்கள் எல்லவற்றிலும் அவள் தான் கதாநாயகி..என்றில்லாம் எழுதி இருந்தார்கள். இவளும் அவர் இயக்கத்தில் ஆறு படங்கள் நடித்திருக்கிறாள்.. இன்னோரு வேடிக்கை தெரியுமா.. அவினாஷுடைய அப்பாதான் அவர்"
எனக்கு செந்தில் சொன்னது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது..
"இதெல்லாம் எந்த பத்திரிகையில் படிச்சடா?"
அவன் சொன்ன பத்திரிகை பெயர்களும் பிரபலமானவைகளே..
செந்தில் தேனீர் சாப்பிட்டுவிட்டு கிளம்பிப் போனான்.. மனசு என்னமோ போல இருந்தது.. தொலைக் காட்சிப் பெட்டியைப் போட்டால், மாலதி நடனமாடிக் கொண்டிருந்தாள்.
இவள் நல்லவளா கெட்டவளா?
********************************
அடுத்த முறை தொலை பேசும் போது அம்மாவிடம் இவள் வேண்டாம் என்று சொன்னேன். காரணத்தையும் சொன்னேன்.. அம்மா சரி என்று சொன்னாள்.
இரண்டு நாள் கழித்து மீண்டும் அழைத்தாள்..
"அருண் இந்த பொண்ணு ரொம்ப தங்கமான பொண்ணுடா.. எம் பி ஏ படிச்சிருக்கா.. நல்ல புத்தி சாலி.. யாரோ சொன்னான்னு வேண்டாம்னு சொல்லதே.. கண்ணால் கண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்ன்னு படிச்சதில்லையா.. நானும் நிறைய பேர்கிட்ட விசாரிச்சேன்.. அவளைப் பற்றி ரொம்ப உயர்வாகத் தான் சொல்லராங்க.. நம்ம ராமசாமி மாமா மூலமாகத்தான் இந்த வரன் வந்தது.. அவர் அந்த பொண்ண எனக்கு கொழந்தைல இருந்து தெரியும் ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு சர்டிபிகேட் குடுக்கறார். நீ இந்தியா வரும்போது அவளைப் பார்த்து பேசு.. அப்புறம் முடிவு பண்ணலாம்" என்றாள்.
எங்கம்மாவெ இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் ஒரு முறை பேசித்தான் பார்க்கலாமே என்று தோன்றியது.. கத்தரிக்காயையே பத்து முறை துடைத்துப் பார்த்து வாங்குபவளாச்சே.. சரி என்று சொல்லி வைத்தேன்..
********************************
இரண்டு மாதங்கள் கழித்து இந்தியா போனேன்.. அந்த விடுமுறையில் எனக்கு திருமணம் செய்து விடவேண்டும் என்பதற்காகத்தானே தேடிக் கொண்டிருந்தாள்..
மூன்று நாள் கழித்து மாலதியை சந்திக்க போகலாமா என்று அம்மா கேட்டாள்.. முறையான பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.
அடுத்த நாள் அம்மா அழைத்து தொலை பேசியை கையில் கொடுத்தாள்.
"மாலதி பேசறா.. பேசு " என்றாள்..
தொலை பேசியை மூடிக்கொண்டு.. "என்னம்மா இது?" என்றேன்.. ஆனால் என்ன செய்வது.. பேசியே ஆகவேண்டும்..
"வணக்கம்.. நான் மாலதி பேசறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க அருண்.. என்னை பார்க்கவேண்டும் என்று சொன்னீங்களாம்.. எங்க சந்திக்கலாம்.. "
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. "எங்கள் வீட்டிலோ உங்கள் வீட்டிலோ சந்திக்கலாமே?"
களுக் என்று ஒரு சிரிக்கும் சப்தம் கேட்டது.. "வீட்டில இருந்தா மனசு விட்டு பேச முடியாது.. யாராவது தொந்தரவு செய்து கொண்டே இருப்பர்கள்.. இந்த முகவரிக்கு வாருங்கள் இன்று மாலை 4 மணி பரவாயில்லையா" என்றாள்.
"சரி" ஒரு அப்புறம் பார்ப்போமுடன் முடிந்தது..
மாலையில் சந்திக்கும் போது எதாவது கொடுக்க வேண்டாமா என்று அம்மாவிடம் கேட்டேன்.. மல்லிகைபூ வாங்கிக் கொண்டு போ என்றாள்.. எனக்கு புத்தகம் எதாவது தரலாம் என்றிருந்தது.. கடைக்குப் போய்த் தேடியதில் பட்டுக் கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது.. எனக்குப் பிடித்த கதை..
**************************
நான் 3.55 க்கு அங்கே இருந்தேன்.. நீல ஜீன்ஸ், ஆரஞ்சு நிற சட்டை.. செருப்பு என்று சதாரணமாகத்தான் இருந்தேன்.. கதவைத்தட்டியதும், திறந்தார்கள். திறந்தது அவினாஷ். எனக்கு எதோ பொறி தட்டியது போல இருந்தது.. செந்தில் நினைவுக்கு வந்தான்.
"உள்ள வாங்க..என் பெயர் அவினாஷ். மாலதி இன்னும் இரண்டு நிமிடத்தில் வந்துடுவா..காப்பி அல்லது கூலா எதாவது.. "
நான் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அவல் நடித்த படத்துக்கு பிலிம் பேர் விருது கிடைத்துள்ளதாகப் போட்டிருந்தது..
வாசல் மணி அடித்தது.. உள்ளே வந்தவளைப் பார்த்ததும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை.. சந்தோஷமாகவும் இருந்தது. பதட்டமாகவும் இருந்தது.
சிவப்பு நிற காட்டன் சேலை கட்டியிருந்தாள். சற்று மானிறம் தான்.. திரைப்படத்தில் பார்ப்பது போல தேவதை யாக இல்லை.. அழகாகச் சிரித்தாள்.
"அருண்? நான் தான் மாலதி. சாரி.. காலைல ஒரு படப் பிடிப்பை முடித்துக் கொண்டு வரத் தாமதமாகி விட்டது."
கை குலுக்கினாள். ஒரு இனிமையான மணம். முகப் பூச்செல்லாம் இல்லை.. உதட்டு சாயம் கூட இல்லை.. மறந்து விட்டாளோ..
"என்னை மன்னியுங்கள்" என்று கூறிக் கொண்டு அவினாஷ் வந்தான்..
"எனக்கு வெளியில் அவசர வேலை இருக்கு. நீ போகும் போது பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய் விடு. என்கிட்ட உன்னொரு சாவி இருக்கு" என்றான்.
"சந்தியாவைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயேன்.." என்று கூறிச் சிரித்தவள் என்னைப் பார்த்து.. "இவன் அவினாஷ்.. என் தம்பி.. இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடுகிறான்.. கிரிக்கெட் எல்லாம் பார்ப்பீங்களா?"
கை குலுக்கி விட்டு, அவினாஷ் காணாமல் போனான்.
என்னைப் பற்றி விசாரணை.. பிறகு அவளைப் பற்றி வாழ்க்கைக் குறிப்புகள். பிடித்தது பிடிக்காதது.. சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய அரட்டை.. அமெரிக்காவில் என்ன கிடைக்கும்.. கிடைக்காது.. வாழ்க்கையின் தேவைகள்.. எதிர்பார்ப்புகள்..ஏமாற்றங்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம்.. அவள் நடிப்பது பற்றிக் கேட்டேன்.. சும்மா விளையாட்டுக்கு நடிக்க தன் சித்தப்பா கூப்பிட்டதால் நடிக்கத் தொடங்கியதாகவும்.. அவர் படங்களில் மட்டும் நடித்து வந்ததாகவும்.. இப்பொது சில பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாகவும் சொன்னாள்.. இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வாங்கியிருப்பதாகவும் கூறினாள்.
இவ்வளவு நல்ல நடிகையாக இருந்துவிட்டு கலைச் சேவையைத் தொடர வேண்டாமா என்றதும் அழகாகச் சிரித்தாள்.. எனக்கு கல்யானம் செய்து கொண்டு வேலைக்கு ஆள் கூட வச்சுக்காம நானே சமைத்து துணி துவைத்து வீட்டில் இருக்கத்தான் ஆசை. சும்மா பள்ளிக் கூடத்தில் ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்குவது போலத்தான் இது.. எத்தனை பேர் உஷாவாகவும் ஷைனீ ஆகவும் வருகிறோம்.. அடுத்த திருப்பத்தில் வாழ்க்கை எதாவது புதியதாக வைத்திருக்கும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.. ஒன்றையே செய்தால் மற்ற சுவைகள் தெரியாது.. என்றாள்.
"நடிகர் அமரனைத் தான் நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்ததே?"
என்னை நிமிர்ந்து பார்த்தாள். "இதெல்லாம் படத்தை ஓட்ட சிலர் செய்யும் தந்திரம். சில சமயங்களில் நம் வளர்ச்சி பொறுக்காத சிலரும் இதெல்லாம் செய்வார்கள். அமரனுடைய புத்தி சாலித்தனத்துக்கு அவனை என் வீட்டில் தோட்ட வேலைக்குக் கூட வைத்துக் கொள்ள மாட்டேன்" என்றாள்
"யாருக்குமே அவினாஷ் உங்களுடைய தம்பி என்று தெரியாதா?"
"என் சித்தப்பாவை என் அப்பா தான் வளர்த்தார்..நான் பிறந்தது கூட மதுரை தான். அவரும் படித்துவிட்டு சினிமா எடுக்கப் போறேன் என்று போனது என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை.. தவிர அவர் வேறு ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதும் எல்லா தொடர்புகளும் அறுந்து விட்டன..அதன் பிறகு நாங்களும் சென்னைக்கு வந்து விட்டோம். இதெல்லாம் நடந்து ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இருக்கும். ஒரு சில சொந்தக் காரர்களைத் தவிர யாருக்குமே தெரியாது. ஒரு நான்கு வருடங்கள் முன்பு அப்பா இறந்ததற்கு இரண்டு நாள் கழித்து என் சித்தப்பா விஷயம் தெரிந்து துக்கம் கேட்க வந்தார். அப்போது தான் என்னைப் பார்த்து நடிக்க வருகிறாயா என்றார்."
கடைசியா ஒரு கேள்வி.. காலைல தொலைபேசில பேசும் போது ஏன் சிரிச்சீங்க..
"சாரி.. வேணும்னு இல்ல. அவினாஷ் உங்ககிட்ட பேசறதுக்கு முன்னாடி தான், ஒரு நல்ல இடமாதேர்ந்தெடுத்து வச்சுக்கோ.. அமெரிக்கா காரர் டேட்டிங் போலாம்னு சொல்லுவார்ன்னு சொல்லியிருந்தான். நீங்க வீட்டிலயே சந்திக்கலாம்னு சொன்னதும் சிரிப்பு வந்துடுத்து."
நான் மணியைப் பார்த்ததும் "அய்யோ 3 மணிநேரமா உங்களை அறுத்துவிட்டேன் .. சாரி" என்றாள்.
"நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ஒரு நிபந்தனை இருக்கு? "என்றேன்
நிமிர்ந்து பார்த்தாள்.. விருதுகளை வாங்கித்தந்த அத்தனை முகபாவங்களும் அவள் முகத்தில் இருந்தன..
"திருமணம் முடிந்து கட்டிய புடவையுடன் என்னுடன் வரவேண்டும்.. உன் பணம் எனக்கு வேண்டாம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அது வேண்டாம். இதற்கு ஒப்புக் கொள்வாயா?"
அவள் முகம் இப்பொது அழுது விடுவாள் போல ஆகி யிருந்தது.. "நானும் இதையே தான் உங்களிடம் கேட்பதாக இருந்தேன்.. இதுவரை நான் சம்பாதித்ததை எல்லாம் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு எழுதி வைத்து விடுவேன்" என்று.
நான் அவள் கைகளைப் பற்றிக் கொண்டேன்.. "என்னைப் பிடித்திருக்கிறதா" என்றாள். கையில் கொண்டு வந்திருந்த புத்தகம் நினைவுக்கு வந்தது.. அவளும் ஒரு சிறிய அட்டைப் பெட்டியை என்னிடம் கொடுத்தாள்.. அதில் என் இனிய வருங்காலக் கணவனுக்கு என்ரு இருந்தது.. பிரித்துப் பார்த்தேன். M என்று போட்ட ஒரு சிவப்புக் கல் மோதிரம்.
"என் பதில் இதோ" என்று என் புத்தகத்தை அவளிடம் கொடுத்தென்.. தலைப்பை உரக்கப் படித்தாள்
"நீ மட்டும் நிழலோடு".