Tuesday, May 23, 2006

ஒரு துளி மை



இப்போதும் நம்ம உள்ளுர் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு துளி மையில் ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்தார் என்கிற வசனம் கூறுவார்களா.. (செய்தி நன்றி தமிழ் முரசு)


அன்புடன் விச்சு

Sunday, May 21, 2006

உண்மையா பொய்யா

கண்ணால் காண்பதுவும் பொய்யே.. என்று ஒரு பாடல் உண்டு..

இந்த வலையகத்தின் காட்சியைக் கண்டு அது தான் நினைவுக்கு வந்தது.
இது 'FLASH 'ல் அமைந்துள்ளது.

அதில் கணட அறிவிப்புகளைப் பின் பற்றவும். படம் வந்த பின் உங்கள் எலியைச் சிறிது முன்னோக்கி அசைத்தால் படம் நகரும்.. பின்னோக்கி அசைத்தால் அது உன்னொரு அனுபவம்..

அன்புடன் விச்சு

Thursday, May 18, 2006

நம் பிரச்சினைகளுக்கு முடிவு

அகத்தியர் யாஹூ வலைக் குழுவில் வந்த ஜெ பி அவர்களது கடிதம். மிக நன்றாக இருந்ததால் இங்கே இடுகிறேன்.

இதுபோல பல நல்ல கருத்துக்கள் இந்த வலைக் குழுவில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

திஸ்கி எழுத்துருவில் அமைந்தது இந்த வலைக் குழு.

அன்புடன் விச்சு

ஓர் உண்மைச் சம்பவம்.

இளைஞர்களுக்குப் பயனாக இருக்ககூடியது. இதற்காகச் சீனாவுக்குப் போவோம்.

சீனா 1910-ஆம் ஆண்டில் குடியரசு ஆகியது. ஆனால் குடியரசின் தந்தை ஸன் யாட் ஸென் விரைவில் இறந்துபோனதால் நாடே துண்டு துண்டாக விளங்கியது. Wஅர் ளொர்ட்ச் எனப்படும் ஆசாமிகள் சொந்தமாகப் படைகளை வைத்துக்கொண்டு யதேச்சாதிகாரமாக ஆண்டுகொண்டிருந்தனர். அவர்களில் சியாங் காய் ஷெக் என்பவர் டாக்டர் ஸன் யாட் ஸென்னின் சகலை. அத்துடன் அவருடைய க்வோமின்டாங் கட்சியின் தலைவர். ஆகவே வெள்ளைக்கார நாடுகள் சில, அவரையே அதிகாரபூர்வ அதிபராக நினைத்து ஆதரவு கொடுத்தன. நான்கிங் என்னும் நகரத்தைத் தம்முடைய மையமாக வைத்துக்கொண்டிருந்தார். ஷாங்ஹாய் என்பது இன்னொரு பெரும் நகரம் அது open City என்னும் அந்தஸ்தைப் பெற்றது. எல்லா நாட்டினருக்கும் அங்கே தனி இட ஒதுக்கீடு இருந்தது. அங்கே அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் வசித்துவந்தனர். ஹாங்க்காங் என்னும் நகரம் பிரிட்டிஷ் காலனி. மக்காவ் என்பது போர்ட்டுகீஸ்.

பலநாடுகள் சீனாவில் நாட்டாண்மை செலுத்தின. அவற்றில் ஜப்பான் முன்னணியில் இருந்தது.

1939-ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதியாகிய மன்ச்சூரியாவை ஜப்பான் பிடித்துக்கொண்டது. பின்னர் சீனாவின் முக்கியப் பகுதிகளைப் பிடித்துக்கொண்டது.

மிக அநாகரிகமாக மிருகவெறியுடன் ஜப்பானியர் சீன நாட்டைச் சூறையாடினர்; மக்களைக் கொன்று குவித்தனர். எண்பதினாயிரம் பெண்களைக் கற்பழித்தனர். Rape of Nanking என்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் இது.

அந்தக் காலகட்டத்தில் ஷாங்ஹாய் நகரில் ஒரு வெள்ளைக்காரர் ஒரு பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கட்டிக்காத்து வந்தார். பெயர் ஞாபகமில்லை. ஏதோ ஒரு டாம், டிக், அல்லது ஹேரி என்று வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான கம்பெனிகளையெல்லாம் கலைத்து, அவற்றின் அஸெட்டுகளையெல்லாம் ஜப்பானியருக்கு மாற்றிவிடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். டாமின் கம்பெனியின் அஸெட்டுகளுக்கும் அதே கதி.
இந்த வேலைகளையெல்லாம் மேற்பார்வையிட ஒரு ஜப்பானிய அதிகாரி இருந்தான் அவனுக்குக் கீழே நிறையப்பேர் வேலைசெய்தார்கள்.
அந்த அதிகாரி ஒரு கடற்படைத் தளபதி. காலேஜில் எக்கானாமிக்ஸ் படித்திருந்தான்.ரொம்பவும் கோபக்காரன்.டாம் ஒழுங்காகத்தான் வேலை செய்தார். ஆனால் ஹாங்காங்கில் இருந்த கிளையின் அஸெட்டை அசட்டையாக விட்டுவிட்டார்.

யாரோ அட்மிரலிடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள்.
டாம் அந்தச் சமயத்தில் ஆபீஸில் இல்லை. அவரிடம் அவருக்கு வேண்டப்பட்ட தலைமைக் கணக்காயர் விபரத்தைச் சொன்னார். அட்மிரல் கட்டுக்கடங்காத கோபத்துடன் கண்டதையெல்லாம் காலால் எற்றி உதைத்து உறுமித் தீர்த்துவிட்டானாம். ஜப்பானுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கத்தியிருக்கிறான்.

அப்படிப்பட்ட குற்றத்துக்கு ஆளைப் பிடித்துச் சித்திரவதை செய்வார்கள். பின்னர் தலையை வெட்டிவிடுவார்கள். தலையை எங்காவது நாற்சந்தியில் மூங்கிலில் குத்திவைத்துவிடுவார்கள். அவருடைய நண்பர்களாகிய பல வெள்ளைக்காரர்கள் அந்த மாதிரியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த செய்தியை டாம் கேள்விப்பட்டது ஒரு சனிஞாயிறன்று. விடுமுறை.
பயங்கரமான கவலை டாமுக்கு ஏற்பட்டுவிட்டது.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சொந்தமாக ஒரு முறை வைத்திருந்தார்.

அந்த முறைக்கு அடிப்படையாக விளங்கியவை இரண்டே இரண்டு கேள்விகள். அவற்றை டைப் செய்துவைத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கீழே எழுதிக்கொள்வார்.

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?

2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?

முதல் கேள்விக்குக் கீழே பதிலை எழுதினார்:

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?

"நாளைக் காலையில் ஜப்பானிய கெம்ப்பித்தாய் போலீஸ் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்யப்போகிறது".
அடுத்த கேள்வியைப் படித்தார்.

2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?

யோசித்தார். யோசித்தார். அப்படி யோசித்தார். பலமணி நேரம் கழித்து நான்கு பதில்களை அந்தக் கேள்வியின்கீழ் எழுதினார்.

1. அந்த அட்மிரலிடம் நானே நேரில் விஷயத்தைச் சொல்லலாம்.
ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாகச் சொல்லச் செய்யலாம். சொல்பவன் ஒழுங்காகச் சொல்லவில்லையென்றால் அட்மிரல் தவறாகப் புரிந்துகொள்வான். இதையெல்லாம் போய் விசாரித்துக்கொண்டிருப்பதற்குப் பதில் சித்திரவதைக்கூடத்துக்கே நேரே அனுப்பிவிட்டு சும்மா இருக்கலாம் என்று அட்மிரல் எண்ணலாம்.

2. ஓடிப்போக முயற்சிக்கலாம்.
இது முடியாத காரியம். எப்போதும் என்னைத் தொடர்ந்து யாராவது வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஓடிப்போனாலும் எங்கே போவது? பார்த்தவுடன் சுட்டுப் போடுவார்கள்.

3. தங்கியிருக்கும் அறையிலேயே இருந்துகொண்டு ஆபீஸ¤க்கே போகாமல் இருந்துவிடலாம்.
ஆளைக் காணாததால் கெம்ப்பித்தாய் ஆட்களை அட்மிரல் அனுப்பிவைப்பான். அவர்கள் பிடித்துக்கொண்டுபோய் அட்மிரலிடம் விடுவார்கள். அவன் சித்திரவதைக் கூடத்துக்கு உடனே அனுப்பிவிடுவான். ஒன்றுமே கேட்கமாட்டான்.

4. எப்போதும்போல் ஒன்றுமே நடக்காததுமாதிரி திங்கட்கிழமைக் காலையில் வழக்கம்போல் ஆபீஸ¤க்குப் போகவேண்டியது. திங்கட்கிழமைக் காலையில் அட்மிரல் ரொம்பவும் பிசியாக இருப்பான். என்னைப் பற்றி சிந்திக்கமாட்டான். அப்படி ஏதும் ஞாபகம் வரும்போது கொஞ்சம் நிதானமாக இருக்கக்கூடும். ஆகவே நேரத்தை இதில் போய் செலவிடுவானேன் என்று எண்ணி பேசாமல் இருந்துவிடக்கூடும். அப்படியே கேட்டாலும் அப்போது அதற்கு ஏற்றவகையில் பதிலைச் சொல்லிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. "தவறு செய்தவன் தைரியமாக ஆபீஸ¤க்கு வருவானா? ஓடிப்போகவல்லவா முயற்சிப்பான். எல்லாரும் அப்படித்தானே செய்கின்றனர்?" என்று நினைப்பான்.
தப்பித்துக்கொள்வதற்கு நான்காம் பதிலில் இடம் இருந்தது.

ஆகவே அதையே செய்வதாக டாம் முடிவு செய்துகொண்டார்.
அதன் பிறகு அவருக்கு இனம் புரியாத பெரும் நிம்மதி ஏற்பட்டது.
ஆகவே திங்கட்கிழமைக் காலையில் டாம் ஆபீஸ¤க்குச் சென்று அவருடைய இருப்பிடத்தில் அமர்ந்திருந்துகொண்டு ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அட்மிரல் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.
டாமை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சிகரெட்டை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய வேலையைப் பார்க்கலானான். நிறைய வேலை.திங்கட்கிழமையல்லவா?
ஆறு வாரங்கள் கழித்து அவனை தோக்கியோவுக்குத் திரும்ப அழைத்துக்கொண்டனர். டாமின் கவலைகளும் பயங்களும் தீர்ந்தன.

அப்புறம் டாம் என்ன ஆனார்?யுத்தம் முடிந்தபிறகு அமெரிக்கா சென்றார்.அவர் எழுதிய கட்டுரையில் அவருடைய ·பார்முலாவைக் கொடுத்திருக்கிறார்.

அதை வைத்து அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க வர்த்தகராக விளங்கினார்.

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன் என்பதை எழுதிக்கொள்ளவேண்டும்.

2. அதைப் பற்றி நான் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக எழுதிக்கொள்ளவேண்டும்.

3. அதைத் தொடர்ந்து நான் என்னதான் செய்யவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.

4. அதனை உடனடியாக செய்துமுடிக்க முனையவேண்டும்.

அன்புடன்

ஜெயபாரதி

Friday, May 05, 2006

தமிழ்த் தேர்தல் 2006


உங்கள் ஓட்டு ரஜினிக்கா கமலுக்கா..

IBN CNN இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபல புள்ளி யார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன..
http://www.ibnlive.com/qotd.php?vote_id=130

ரஜினி
கமல்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
மருத்துவர் சாந்தா
ஏ ஆர் ரஹ்மான்
விஸ்வனாதன் ஆனந்த்

தற்போது அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்..

நீங்களும் ஓட்டளியுங்கள்..

இவர்கள் யாருமே தேர்தலில் நின்று ஓட்டு வாங்கப் போவதில்லை அதனால் தைரியமாக ஓட்டளியுங்கள்.

அன்புடன் விச்சு

பொய்யும் பொய்யர்களும்

நேற்றைய பிரதமரின் பிரசாரத்திற்குப் பிறகு சில விஷயங்கள் பதிலில்லாமல் நெஞ்சை நெருடுகின்றன.

தற்செயலாக இரண்டுமே தயாநிதி, வை கோ தொடர்புடையவை.

தன்னந்தனியாக தலைவன் என்று ஒரு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சி அமைக்கும் தகுதி உடையவர்கள் என்று நான் கருதும் சில தலைவர்களில் இவர்கள் இருவரும் முதன்மையானவர்கள். (சிதம்பரம், திருமா போன்றவர்கள் கட்சி நடத்தலாம்.. ஆட்சியைப் பிடிப்பர்களா என்பது கேள்விக்குறியே. வி.க தேர்தல் முடிந்த பிறகு கட்சியைத் தொடர்ந்து நடத்தட்டும் பிறகு கருத்து கூறுகிறேன்.)

சில காலத்திற்கு முன் வை கோ தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து தி மு க மந்திரி பதவி வாங்கி விட்டது என்றும் அதற்கு தயாநிதி " பிரதமர் வை கோ வைப் பொய்யர் என்று சொன்னார் அது பற்றி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரும் போது குறிப்பிடுவார்" என்றும் கூறி இருந்தார்கள்.

பிரதமர் மறந்து விட்டாரா அல்லது தயாநிதி இதை யார் சரி பார்க்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் (பார்த்தால் மட்டும் என்ன செய்யமுடியும்?) "அடித்து விட்டாரா"?

இதே போல் வை கோ டா டா நிறுவனத்தை தயாநிதி மிரட்டினார் என்று குற்றம் சாட்டிய போது, அவர் மேல் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் தயாநிதி.. அது பற்றியும் பிரதமர் தயாநிதியின் BOSS என்ற முறையில் அவர் யாரையும் மிரட்டவில்லை என்று கூறி இருக்கலாம். இது தயா நிதிக்கு நிறைய அனுதாபங்களைப் பெற்றுத் தந்திருக்கும். ஒரு 5 % ஓட்டுகள் (படித்தவர்களின்) கூட அதிகமாக கிடைத்திருக்கலாம்.. இப்பொது அதை சொல்லாமல் விட்டதால் இந்த மான நஷ்ட வழக்கு ஒரு நாடகமோ என்று எண்ண வைக்கிறது. தேர்தல் முடியும் வரை இப்படி ஒரு நாடகமாடி விட்டு, பிறகு இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமே. மக்கள் மனதில் இவர் பக்கம் நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்க இது உதவு கிறதே..

இதே நிலை தான் கருத்துக் கணிப்புகளுக்கும்.. எதாவது ஒரு கட்டுப் பாட்டுக்குள் இந்த க. க. வர வேண்டும்.. இல்லைஎன்றால் நான் கூட 25 பேரிடம் கருத்து கணித்தேன் என்று கூறி (தொகுதி எண்ணிக்கையில் ஒரு சதவீதம்.) ஜெ அல்லது மு க 233 இடங்களும் வி.க ஒரு இடமும் வெற்றி பெறுவார்கள் என்று பதிவிடலாம்.. (அதென்ன வி க ஒரு இடம் என்று கேட்கிறீர்களா.. இதுவரை அத்தனை பத்திரிகைகளும் ஒத்துக் கொண்ட ஒரெ விஷயம் அது தான்..)

தேர்தல் பொய்களைக் கட்டுப் படுத்த எதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கும். இந்த முறை ஜெயித்த கட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடத் தடை என்பது போல..

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள். இதெல்லாம் கனவுதான் காணமுடியும் போல ...

அன்புடன் விச்சு

நீல சாயம் வெளுத்துப் போச்சு

ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வரத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது நிழலில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும், என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். (Dinamalar)

அப்போ ஜெ சொன்னது சரிதானா.. மத்திய அரசு உதவுவதில்லை. தமிழ்நாட்டு நிதிநிலைமையில் இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்க முடியாது.. 3.50 க்கு வழங்கவே 1300 கோடி செலவாகிறது. ப.சி. வேறு மான்யங்களைக் குறைக்கிறார் என்று..

இந்துஸ்தான் டைம்ஸில் வந்ததாக கூறப்படும் "வாக்குறுதிகளைக் கொடுத்து விடலாம், நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம்" என்பதும் இந்த பேச்சோடு ஒத்துப் போகின்றது போலத் தெரிகிறதே..

யாராயிருந்தாலும் நிறைவேற்ற மட்டார்கள். தி மு க அறிவியல் பூர்வமாக யாரையாவது விட்டு "பொதுமக்கள் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள்" என்று பொது நல வழக்கு போட வைத்து வழங்காது என்று நெல்லை கண்ணன் என்பவர் பேசியதும் நினைவுக்கு வருகிறது..

அய்யோ பாவம் மக்கள்.


வாக்குறுதி. (ஹைக் கூ)

ஏழை நாய்
எலும்புத்துண்டு
அட, இதுவும் ப்ளாஸ்டிக்..

அன்புடன் விச்சு

Saturday, April 29, 2006

தேர்தல் காலம்

இது பத்திரிகைகள் தங்கள் வலையகங்களை காசு கொடுத்துப் படிக்கும் தளமாக மாற்றும் காலம் போலத்தெரிகிறது.

துக்ளக் போல எடுத்ததுமே சந்தா தளமாக இல்லாமல் முதலில் இலவசமாகவும் பின் பதிவு செய்து படிக்கும் தளமாகவும் மாறி இப்போது சந்தா கட்டி படிக்கும் தளமாக பல தளங்கள் மாறும் போல தெரிகிறது.

இன்றைய மாறுதல் நக்கீரன். (www.nakkheeeran) (கவனிக்க: மூன்று e ).

இருபது அமெரிக்க வெள்ளி சந்தா. அறிமுக சலுகையாக 15 வெள்ளி.

அடுத்து குமுதமும் இதே வழியில் போகும் போலத்தெரிகிறது. (தள வடிவமைப்பு மாறியிருக்கிறது இந்த வாரம்)

தேர்தல் முடியும் வரை (என்ன இன்னும் ஒரு வாரம் தான்) தமிழ்முரசும் தினகரனும் சந்தா தளங்களாக மாறாது என்று நினைக்கிறேன். இது தினமலருக்கும் பொருந்தும்.

அது சரி இந்தியாவில் இருந்த போது ஆளுக்கு ஒரு பத்திரிகை வாங்கி பரிமாறிக்கொள்ளுவது பழக்கம்.. இங்கேயும் அப்படிதான் செய்யவேண்டும் போல இருக்கிறது.

பத்து பத்திரிக்கை 20 வெள்ளி என்றால் வரவு செலவு கணக்கில் இடிக்குமே..

இல்லையென்றால் கேபிள் தொலைக்காட்சி போல் யாராவது பொதுவாக சந்தா வசூலித்து பல பத்திரிகைகளை குறைந்த விலையில் தரலாம்.

அடுத்த வலையகத்தேர்தலில் ப ம க இதை இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம். (முக மூடியார் உதைக்க வருமுன் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)

அன்புடன் விச்சு

Thursday, April 27, 2006

இணையத்தில் துக்ளக் - ஒரு கேள்வி

இணையத்தில் துக்ளக் புலி வருது கதை சொல்லி வந்தே விட்டது.
20 அமெரிக்க வெள்ளி சந்தா.

இனிமேல் துக்ளக் குழுவில் யாராவது ஸ்கேன் (தமிழில் தெரியவில்லை) செய்து போட மாட்டார்களா என்று காத்திருக்க வேண்டாம்.

துக்ளக்கிற்கு பாராட்டுகள். லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவார் என்று எதிர்பார்ப்போம்.

இந்த வார கேள்வி பதிலில் ஒரு கேள்வி.. எனக்கு புரியவில்லை.. உங்களுக்கு புரிந்தால் விளக்குங்களேன்.

G. பாலசுப்பிரமணியன் சேதுநாராயணபுரம்

கே: ஒ-க்கு அடுத்து தானே ஓ- வரும். இது புரியாமல் சிலர் ஓ-விற்கு அடுத்துதான் ஒ- வரும் என்கின்றனரே?

ப: இவற்றிற்கெல்லாம் முன்பாக 'ஆ'- வருகிறதே! அப்படியானால் BJP க்கு தான் வெற்றி வாய்ப்பா? பலே!

துக்ளக் இணைய தளம். WWW.Thuglak.com

அன்புடன் விச்சு

Sunday, April 16, 2006

தேர்தல் கவிதைகள்

வாக்குறுதி (ஹைகூ )

எலும்புத் துண்டு
ஏழை நாய்
அட இதுவும் பிளாஸ்டிக்

மன்னர்கள்

கையிலே மை
ஊரெல்லாம் பொய்
முடிவுகள் வரும் வரை.

நாங்கள் மன்னர்கள்
ஆனால்
கிரிடம் அவர்கள் தலையில்

கையிலே காசு
விரல் நுனியில் மை
விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.

திருடனா பொறுக்கியா..
தேர்ந்தெடுக்க வாய்ப்பு
ஒரே முடிவு தான்..எனக்கு

நிலம் தருவார் இலவசமாய்
பயிரிட ஆசை தான்
வருவாளா பொன்னி

பட்டினியால் எலிவேட்டை
இனி தினம் மூன்று காட்சி
காணலாம் கலர் டிவியில்

ஓட்டுக்கு நூறு ரூபாய்
வட்டியொடு வசூலிக்க
திறப்பார்கள் கள்ளுக் கடை

முடிவில்லாதது

சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை
இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு
எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை

செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்
ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்
"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே
சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "

"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி
இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"
ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது
தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை

ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்
அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.
கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்
வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
மாறவில்லை வாக்குறுதி மாறவில்லை தேர்தல்
நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி
மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்

வனவாசம்.

வேலைப் பளு அதிகமானதோ எழுத நேரம் இல்லாமல் போனதோ வேறு காரணங்கள் எதுவுமே இல்லை.. எழுதத் தோன்றவில்லை எழுதவில்லை.

ஆனால் சில பல கருத்துக் களைப் பற்றி எழுதாமலே இருப்பது நல்லது என்று தோன்றியதாலும் எழுதவில்லை..

இப்போது திரும்ப எழுதலாமா என்று ஒரு எண்ணம். சபலப் பட்டு சர்ச்சைகளில் சிக்கி குமுதம் ரிப்போர்ட்டரில் பேர் வரவேண்டுமா என்பது மற்றொரு சிந்தனை..

இருந்தாலும் மீண்டும் என்பதிவுகள் இடப்படும்.. இதுவரை என் பதிவைப் படித்து கருத்து சொன்னவர்களுக்கும் இப்போது புதியதாக என் பதிவைப் படிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.

வழக்கம் போல கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் விச்சு.

Wednesday, January 04, 2006

என்னுடைய பிரச்சினை

மொத்ததில் எனக்குத்தான் பிரச்சினை போல இருக்கிறது.

நேற்று "கண்ட நாள் முதல்" என்று ஒரு படம் பார்த்தேன். திரும்பவும் நல்ல கதை, நடிப்பு.. மொத்தத்தில் நல்ல படம்..

ஆனால் அதிலும் கதாநாயகியுடைய சகோதரி கல்யாணத்துக்கு முன்னால் கர்ப்பமாகி விட்டு வீட்டை விட்டு ஓடிப் போகிறார்.. என்ன கொடுமையடா சாமி இது.. எனக்கு ஏன் இந்த சோதனை.. நான் பார்க்கும் படங்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறதா.. விமர்சனங்களில் நல்ல படம் என்று சொன்ன படங்களைத்தானே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.

அடுத்து உள்ளம் கேட்குமே, வணக்கம் தலைவா அல்லது கஸ்தூரிமான் இந்த மூன்றில் இது போல காட்சி அமைப்பில்லாத படம் எது என்று யாராவது சொல்லுங்களேன். அதைப் பார்க்கிறேன்.

ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்.

குஷ்பு சொன்னது.."ஆள் கிடைக்கவில்லை என்றாலும் கடைத்தெருவில் நின்றாவதுபிடிங்க" என்று சொன்ன மாதிரி இருந்தது...

ஆனா சரியாப் பார்த்தா அப்படி குஷ்பு சொல்லவில்லை.. உங்கள் அடிமனதில் குவிந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் தான் சொல்லுகின்றன நண்பரே.. உங்களுக்கே நீங்கள் சொல்வது தவறு என்று தோன்றுவதால் தானே பெயரை மறைத்து பின்னூட்டமிடுகிறிர்கள்..

அது சரி குஷ்பு வுக்கு பண்பாடு கற்றுத்தருபவர்களுக்கு ஒரு கேள்வி.. மறப்போம் மன்னிப்போம்னு சொன்னதும் நம்ம பண்பாடு தானுங்களே.. வசதியா மறந்துட்டோமா.. என்னமோ மாமியார் மருமகள் மண்குடம் பொன்குடம்னு எதோ அசந்தர்ப்பமா நினைவுக்கு வருது..

கருத்து என்பது ஏப்பம் அல்ல யார் வேண்டுமென்றாலும் விடுவதற்கு என்று தலைவரே சொன்னபிறகு நான் எல்லாம் கருத்து சொல்லலாமா..
மன்னிச்சுக்கோங்க..

அன்புடன் விச்சு

Tuesday, January 03, 2006

குஷ்புவும் இயக்குனர் சேரனும்

சமீபத்தில் தவமாய்த்தவமிருந்து படம் பார்த்தேன்.

கதை நன்றாக இருக்கிறது. பலருடைய நடிப்பும் அபாரம். இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாமோ என்னமோ.

ஒரு விஷயம் உறுத்தியது.

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச்சொன்னதை எதிர்த்து ஊரைக்கூட்டிய (துடைப்பத்தோடும் தான்) தமிழ் பண்பாட்டுக் காவலர்கள், சேரன் படிக்கும் போதே உறவு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி வீட்டைவிட்டு ஓடிப் போவதாகக் காட்டியதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏனோ.. (பாதுகாப்பாக உறவு வைத்தால் தான் தவறோ)

திரைப்படங்களில் புகை பிடித்தால் பார்ப்பவர்கள் மனது கெட்டு விடும் என்று கூறுபவர்களுக்கு, திரைப்படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்று தோன்றாதது விந்தையே..

உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்..

அன்புடன் விச்சு