ரயில் பயணம் எப்போதும் பல சுவாரசியமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தும். அன்று பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தாள் அந்த ஜென்-ஜி (Gen-Z) பெண். ஜீன்ஸ், டி-ஷர்ட், கையில் ஐபோன், காதில் ஏர்பாட்ஸ் என ரொம்பவே ட்ரெண்டியாக இருந்தாள்.
அவள் பெயர் சுதா. சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் ஃபைனான்ஸ் பிரிவில் பணியாற்றுகிறாள்.
நட்பாகப் பேச்சைத் தொடங்கும் பொருட்டு, "பி.காம் முடிச்சிருக்கேளே... அப்புறம் ஏன் சி.ஏ (CA) படிக்கல?" என்று இயல்பாகக் கேட்டேன்.
அவள் லேசாகச் சிரித்துக்கொண்டே ஏர்பாட்சைக் கழற்றிப் பையில் வைத்தாள். "எனக்கு அதுல எல்லாம் ஆர்வம் இல்லை அங்கிள். சும்மா ஒரு வேலை, மாசம் ஒரு சம்பளம்... அவ்வளவுதான்."
"ஏன்? சி.ஏ முடிச்சா நல்ல எதிர்காலம் இருக்குமே?"
"அங்கிள், நீங்க அப்படியே எங்க சொந்தக்காரங்க மாதிரியே கேள்வி கேட்கிறீங்க!" என்று சத்தமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒருவிதத் தனித்துவமான சுதந்திரமும் சுட்டித்தனமும் இருந்தது.
பேச்சு மெல்லப் புத்தகங்கள் பக்கம் திரும்பியது. "உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?" என்றேன்.
"ஜெயகாந்தன்!" என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னாள். இந்தத் தலைமுறைப் பெண் ஜெயகாந்தனை விரும்பிப் படிக்கிறாள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது.
"எங்க அப்பா மயிலாப்பூர்ல ஒரு புரோகிதர். பேரு சுந்தர சாஸ்திரிகள்," என்று உரையாடலைத் தொடர்ந்தாள். "என்னைப் பார்த்தா ஒரு சாஸ்திரிகளோட பொண்ணு மாதிரி தெரியாதுல? ஆனா அதுதான் உண்மை."
எனக்கு ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது. அட, சுந்தர சாஸ்திரிகளா! மயிலாப்பூரில் இருக்கும் அவர் எனக்கு பல ஆண்டுகளாகவே நன்கு அறிமுகமானவர்தான். ஆனால், அடையாரில் இருக்கும் எனக்கு, அவருடைய குடும்பத்தைப் பற்றியோ அவருக்கு இப்படி ஒரு மகள் இருப்பது பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் அந்த விபரத்தை சுதாவிடம் உடனடியாக வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், நான் அவளுடைய அப்பாவிற்கு அறிமுகமானவன் என்று தெரிந்தால், அவள் மனம்திறந்து பேசாமல் போனைப் பார்த்துக்கொண்டு அமைதியாகிவிடக்கூடும்.
"வீட்டுல உங்களை எதுவும் சொல்றதில்லையா?" என்று ஒன்றும் தெரியாதவன் போலக் கேட்டேன்.
"அப்பாவுக்கு நான் இவ்வளவு சுதந்திரமா இருக்கிறதுல சில சங்கடங்கள் உண்டு. ஒரு பெண் சுதந்திரமா இருந்தா பொறுக்காது , மேல் சாவினிஸ்டிக் பர்ஸன்ஸ் ... சுருக்கமா சொன்னா MCP! எங்க அப்பாவும் அப்படிப்பட்டவர்தான்..." என்று சொல்லிவிட்டு உடனே நிதானித்தாள். "சே! MCPங்கிறது ரொம்பக் கடுமையான வார்த்தை. நம்ம ஊர்ல ஆண்களுக்கு சின்ன வயசுல இருந்தே வீட்டு வேலையெல்லாம் கத்துத் தர்றதே இல்லை சார். அவருக்கு வீட்ல சொல்லித் தராதது குடும்பத்தோட குறைதானே தவிர, அது அவரோட தனிப்பட்ட தவறில்லை."
தொடர்ந்து பேசியவள் தன் மனதில் உள்ள முதன்மையான விஷயத்திற்கு வந்தாள். "உண்மையைச் சொல்லப்போனா சார்... என்னோட காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்தன் என்மேல உயிரையே வச்சிருக்கான். தீவிரமாக் காதலிக்கிறான். ஆனா அவா நம்மாவா இல்லை . எங்க வீட்ல இதை ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரியும். வீட்ல இப்படியே அதிகமா பிரஷர் பண்ணிக்கிட்டே இருந்தாங்கன்னா, இன்னும் ரெண்டு மாசத்துல நாங்க ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகாரத தவிர . வேற வழியில்லை..." என்றாள் ஒருவித உறுதியுடன்.
அந்தப் பயணத்தின் பாதி நேரத்திற்கு மேல் அவளுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. "ஒரே நிமிஷம் அங்கிள்..." என்று சொல்லிக் போனை எடுப்பதும், காரிடாருக்கு ஓடுவதும், பதற்றத்துடன் பேசுவதுமாகவே இருந்தாள். அப்படி ஒருமுறை போன் பேசச் சென்றவள், ரயிலின் கூட்டத்திற்குள் மெல்ல மறைந்தே போனாள். அதற்குப் பிறகு அவளைப் பார்க்கவே முடியவில்லை.
வீட்டிற்குச் சென்றதும் என் மனைவியிடம் அந்தப் பயணத்தைப் பற்றியும், ரயிலில் சந்தித்தது நம் மயிலாப்பூர் சுந்தர சாஸ்திரிகளின் மகள்தான் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டேன்.
என் மனைவி யோசித்துவிட்டு, "அந்தப் பொண்ணு ஏதோ அவசரப்பட்டு முடிவு எடுக்கப் போகுது. சுந்தர சாஸ்திரிகள் நமக்கு தெரிஞ்சவர்தானே... நீங்களே அவர்கிட்ட நேரடியாகப் பேசி இந்த விஷயத்தைப் புரிய வைக்கக் கூடாதா?" என்று யோசனை கூறினாள். அதுவே சரியான வழி என்று எனக்கும் பட்டது.
அடுத்த நாள் மாலை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். ஸ்வாமி தரிசனம் முடித்த பிறகு பிரதக்ஷிணம் வரும் போது, பிரகாரத்தில் சுந்தர சாஸ்திரிகள் சிந்தனை வயப்பட்டு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
நான் அவர் அருகில் சென்று அமர்ந்து, "என்ன சாஸ்திரிகளே, ரொம்ப யோசனையா இருக்கீங்க?" என்று பேச்சைத் தொடங்கினேன்.
சாஸ்திரிகள் நிமிர்ந்து பார்த்து, "வாங்கோ அண்ணா, எப்படி இருக்கேள்? என்று விசாரித்து விட்டு , ஒண்ணும் இல்லை... இந்த காலத்துப் பிள்ளைகளை நினைச்சாத்தான் கவலையா இருக்கு..." என்றார் வேதனையுடன்.
நான் மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, "சாஸ்திரிகளே, நீங்கள் கர்மாவை நம்புகிறீர்களா?" என்றேன்.
"நான் ஒரு புரோகிதன். வைதீக தொழிலில் இருப்பவன். கர்ம வினையை நான் நம்பாமல் வேறு யார் நம்புவது?" என்றார்.
"அப்படியென்றால் எனக்கு ஒரு சந்தேகம். பூர்வ ஜென்மத்தில் தீவிரமாக காதலித்த இருவர், இந்த ஜென்மத்திலும் சந்திக்க நேர்ந்தால் அதே நபரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்களா?"
"நிச்சயமாக! பூர்வ ஜென்ம பந்தம் இந்த ஜென்மத்திலும் தொடரும். அதே நபர்தான் வாழ்க்கைத் துணையாக வருவார்," என்றார் உறுதியாக.
"சரி, ஒருவேளை பூர்வ ஜென்மத்தில் தர்மத்தின் வழியில் நடந்த ஒருவர், தன் துணையாக இருந்தவர் தர்மத்தை விட்டு விலகித் தவறான வழியில் சென்றிருந்தாலும்... இந்த ஜென்மத்தில் சந்திக்கும் போது இருவருக்கும் மீண்டும் காதல் வருமா?"
சாஸ்திரிகள் யோசித்து, "ஆம்... அதீத விருப்பமும் வெறுப்பும் தான் பிறவிகளை உண்டாக்குகிறது. பார்த்த மாத்திரத்திலேயே காதல் வரும். திருமணமும் நடக்கும்," என்றார்.
"ஆனால் தர்மத்தை விட்டு விலகிப் போனவரின் நிலை இந்த ஜென்மத்தில் எப்படி இருக்கும்?"
"அவர் வேறு ஏதேனும் வர்ணத்திலோ அல்லது நிலையிலோ பிறந்து தடுமாறலாம். ஆனால் தர்மத்தைப் பின்பற்றியவர் அதே நிலையில் பிறப்பார்."
"அப்படியென்றால், இவர்கள் இருவரும் இந்த ஜென்மத்தில் இணைய வேண்டும் என்று யார் தீர்மானிப்பது?"
"எல்லாம் அந்த இறைவனின் சித்தம்... பிராரப்த விதி!" என்றார்.
நான் அவரைப் பார்த்து மென்மையாகக் கேட்டேன், "சாஸ்திரிகளே, உங்கள் மகள் சுதாவைப் பற்றித்தான் கேட்கிறேன். இந்த வயதில் நீங்கள் பந்தம், பாசம் எல்லாவற்றையும் தாண்டி இறைவன் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்க வேண்டாமா? நாமாக முடிவெடுக்க என்ன இருக்கிறது? 'சும்மா இரு' என்று நமக்குச் சொல்லப்பட்டதுதானே... அதுவும் வைதீகம், புரோகிதம் செய்யும் உங்களுக்கு இது தெரியாததா? இறைவனின் சித்தமும், பூர்வ ஜென்மக் கர்மாவும் அப்படியிருக்கும்போது... நீங்கள் ஏன் அதை மாற்ற முயற்சிக்கிறீர்கள்? எப்படி இருந்தாலும் நடக்கவேண்டியது நடந்தேதானே தீரும்? நாம் எதிர்க்காமல் ஆதரித்து விட்டால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கலாமே!"
சுந்தர சாஸ்திரிகள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார். தனக்கு மட்டுமே தெரிந்த குடும்ப விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்றும், நான் கூறிய ஆன்மீகத் தர்க்கத்தின் ஆழத்தையும் எண்ணி சில நொடிகள் மெளனமானார்.
அவரது முகம் சோகமாக மாறியது. கண்களில் லேசான கலக்கத்துடன், "மற்றவர்களுக்குச் சொல்வது சுலபம் அண்ணா... என் தலையில் அவா கல்யாணத்தை ஆதரிக்கணும் என்று எழுதி இருந்தால் அது நடக்கும், இல்லை என்றால்..." என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.
பிறகு எதுவும் பேசாமல் அமைதியானார். தன் கரங்களைக் கூப்பி, "நமஸ்காரம்" என்று கூறிவிட்டு மெதுவாக எழுந்து நகர்ந்தார்.
அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் மனதில் லேசான கவலை இருந்தாலும், என் வார்த்தைகள் அவர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எனக்குள் ஒரு தெளிவு இருந்தது—அவர் தன் கண்டிப்பான மனநிலையை விட்டுவிட்டு, தன் மகளின் திருமணத்தை நிச்சயம் நடத்தி வைப்பார்!