Monday, August 10, 2026

பிராரப்த விதி

ரயில் பயணம் எப்போதும் பல சுவாரசியமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தும். அன்று பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் வந்தே பாரத்  எக்ஸ்பிரஸில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தாள் அந்த ஜென்-ஜி (Gen-Z) பெண். ஜீன்ஸ், டி-ஷர்ட், கையில் ஐபோன், காதில் ஏர்பாட்ஸ் என ரொம்பவே ட்ரெண்டியாக இருந்தாள்.


அவள் பெயர் சுதா. சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐ.டி நிறுவனத்தில் ஃபைனான்ஸ் பிரிவில் பணியாற்றுகிறாள்.


நட்பாகப் பேச்சைத் தொடங்கும் பொருட்டு, "பி.காம் முடிச்சிருக்கீங்க... அப்புறம் ஏன் சி.ஏ (CA) படிக்கல?" என்று இயல்பாகக் கேட்டேன்.


அவள் லேசாகச் சிரித்துக்கொண்டே ஏர்பாட்சைக் கழற்றிப் பையில் வைத்தாள். "எனக்கு அதுல எல்லாம் ஆர்வம் இல்லை சார். சும்மா ஒரு வேலை, மாசம் ஒரு சம்பளம்... அவ்வளவுதான்."


"ஏன்? சி.ஏ முடிச்சா நல்ல எதிர்காலம் இருக்குமே?"


"சார், நீங்க அப்படியே எங்க சொந்தக்காரங்க மாதிரியே கேள்வி கேட்கிறீங்க!" என்று சத்தமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒருவிதத் தனித்துவமான சுதந்திரமும் சுட்டித்தனமும் இருந்தது.


பேச்சு மெல்லப் புத்தகங்கள் பக்கம் திரும்பியது. "உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?" என்றேன்.


"ஜெயகாந்தன்!" என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னாள். இந்தத் தலைமுறைப் பெண் ஜெயகாந்தனை விரும்பிப் படிக்கிறாள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு புரட்சி காரமான சிந்தனை விரும்புகிறாள் 


"எங்க அப்பா சென்னையில் ஒரு புரோகிதர்," என்று உரையாடலைத் தொடர்ந்தாள். "என்னைப் பார்த்தா ஒரு சாஸ்திரிகளோட பொண்ணு மாதிரி தெரியாதுல? ஆனா அதுதான் உண்மை."


"வீட்டுல உங்களை எதுவும் சொல்றதில்லையா?"


"அப்பாவுக்கு நான் இவ்வளவு சுதந்திரமா இருக்கிறதுல சில சங்கடங்கள் உண்டு. அவரை வைத்து நிறைய பிரச்சினைகள் உண்டு. . மேல் சாவினிஸ்ட் பர்ஸன் ... சுருக்கமா சொன்னா MCP! எங்க அப்பாவும் அப்படிப்பட்டவர்தான்..." என்று சொல்லிவிட்டு உடனே நிதானித்தாள். "சே! MCPங்கிறது ரொம்பக் கடுமையான வார்த்தை. நம்ம ஊர்ல ஆண்களுக்கு சின்ன வயசுல இருந்தே வீட்டு வேலையெல்லாம் கத்துத் தர்றதே இல்லை சார்.அவருக்கு வீட்ல சொல்லித்  தராதது குடும்பத்தோட குறைதானே தவிர, அது அவரோட தனிப்பட்ட தவறில்லை."


அந்தப் பயணத்தின் பாதி நேரத்திற்கு மேல் அவளுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. "ஒரே நிமிஷம் சார்..." என்று சொல்லிக் போனை எடுப்பதும், காரிடாருக்கு ஓடுவதும், பதற்றத்துடன் பேசுவதுமாகவே இருந்தாள். அப்படி ஒருமுறை போன் பேசச் சென்றவள், ரயிலின் கூட்டத்திற்குள் மெல்ல மறைந்தே போனாள். அதற்குப் பிறகு அவளைப் பார்க்கவே முடியவில்லை.


வீட்டிற்குச் சென்றதும் என் மனைவியிடம் அந்தப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டேன்.


"அந்தப் பொண்ணு யாரையோ தீவிரமாக் காதலிக்கிறான்னு நினைக்கிறேன். கண்டிப்பா அவங்க அப்பா சம்மதிக்க மாட்டார்னு அவளுக்கு நல்லாவே தெரியும். ஜெயகாந்தன் எல்லாம் சொல்றா. பள்ளியிலோ  இல்ல கல்லூரியிலோ   வந்த காதல் போல இருக்கு. பையன் பெரிய புத்திசாலியோ அல்லது பெரிய தகுதியோ உள்ளவன் இல்லை போல. அதனால்தான் அந்தப் பொண்ணு தன் படிப்பைக் கூட பி.காமோட நிறுத்திட்டு, கிடைத்த வேலைக்குப் போயிட்டான்னு தோணுது," என்றேன்.


என் மனைவி "எல்லாம் உங்க கற்பனை!" என்று சிரித்துக்கொண்டே நகர்ந்தாள்.


இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே உணவுக்கூடத்தில் எனக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவர் பெயர் சுந்தர சாஸ்திரிகள்.


சாப்பிட்டுக் கொண்டே இயல்பாக உரையாடினோம். வீடுகளில் நடக்கும் பூஜைகள், கல்யாணங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார்.  "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா சாஸ்திரிகளே?" என்று கேட்டேன்.


சாஸ்திரிகள் ஒரு பெரிய பெருமூச்சை விட்டார். "ஒரு பொண்ணு சார். இப்போதெல்லாம் ரொம்ப விசித்திரமா நடந்துக்கிறா. வீட்டுக்கு வந்தா எல்லார் கிட்டயும் கத்தறா, லேட்டா வர்றா... சாஸ்திர சம்பிரதாயத்துக்கு அப்பாற்பட்டு யாரையோ கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாளோ என்னவோ தெரியல. மனசே சரியில்லை சார்..." என்றார் வேதனையுடன்.


எனக்குள்ளே ஏதோ பொறி தட்டியது. சுதா அவளுடைய அப்பா பேர் சுந்தரம் என்று தான் சொன்னாள்.


"சார்... உங்க பொண்ணு பேரு சுதாவா? ஃபைனான்ஸ்ல ஒரு ஐ.டி கம்பெனில வேலை பார்க்கிறாளா?"


அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார். "உங்களுக்கு அவளைத் தெரியுமா? ஐயோ... கொஞ்சம் அவகிட்ட எடுத்துச் சொல்லுங்களேன் சார்! பெத்தவங்க எப்பவும் பிள்ளைகளோட நல்லதைத்தானே நினைப்போம்..."


நான் மெலிதாகப் புன்னகைத்தேன். "சாஸ்திரிகளே, நீங்கள் கர்மாவை நம்புகிறீர்களா?"


"நான் ஒரு புரோகிதன். வைதீக தொழிலில் இருப்பவன். கர்ம வினையை நான் நம்பாமல் வேறு யார் நம்புவது?" என்றார்.


"அப்படியென்றால் எனக்கு ஒரு சந்தேகம். பூர்வ ஜென்மத்தில் தீவிரமாக காதலித்த இருவர், இந்த ஜென்மத்திலும் சந்திக்க நேர்ந்தால் அதே நபரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்களா?"


"நிச்சயமாக! பூர்வ ஜென்ம பந்தம் இந்த ஜென்மத்திலும் தொடரும். அதே நபர்தான் வாழ்க்கைத் துணையாக வருவார்," என்றார் உறுதியாக.


"சரி, ஒருவேளை பூர்வ ஜென்மத்தில் தர்மத்தின் வழியில் நடந்த ஒருவர், தன் துணையாக இருந்தவர் தர்மத்தை விட்டு விலகித் தவறான வழியில் சென்றிருந்தாலும்... இந்த ஜென்மத்தில் சந்திக்கும் போது இருவருக்கும் மீண்டும் காதல் வருமா?"


சாஸ்திரிகள் யோசித்து, "ஆம்... அதீத விருப்பமும் வெறுப்பும் தான் பிறவிகளை உண்டாக்குகிறது.  பார்த்த மாத்திரத்திலேயே காதல் வரும். திருமணமும் நடக்கும்," என்றார்.


"ஆனால் தர்மத்தை விட்டு விலகிப் போனவரின் நிலை இந்த ஜென்மத்தில் எப்படி இருக்கும்?"


"அவர் வேறு ஏதேனும் வர்ணத்திலோ அல்லது நிலையிலோ பிறந்து தடுமாறலாம். ஆனால் தர்மத்தைப் பின்பற்றியவர் அதே நிலையில் பிறப்பார்."


"அப்படியென்றால், இவர்கள் இருவரும் இந்த ஜென்மத்தில் இணைய வேண்டும் என்று யார் தீர்மானிப்பது?"


"எல்லாம் அந்த இறைவனின் சித்தம்... பிராரப்த விதி!" என்றார்.


நான் அவரைப் பார்த்து மென்மையாகக் கேட்டேன், "சாஸ்திரிகளே, இந்த வயதில் நீங்கள் பந்தம், பாசம் எல்லாவற்றையும் தாண்டி இறைவன் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்க வேண்டாமா? நாமாக முடிவெடுக்க என்ன இருக்கிறது? 'சும்மா இரு' என்று நமக்குச் சொல்லப்பட்டதுதானே... அதுவும் வைதீகம், புரோகிதம் செய்யும் உங்களுக்கு இது தெரியாததா? இறைவனின் சித்தமும், பூர்வ ஜென்மக் கர்மாவும் அப்படியிருக்கும்போது... நீங்கள் ஏன் அதை மாற்ற முயற்சிக்கிறீர்கள்? எப்படி இருந்தாலும் நடக்கவேண்டியது நடந்தேதானே தீரும்? நாம எதிர்க்காமல் ஆதரித்து விட்டால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கலாமே "


சுந்தர சாஸ்திரிகள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார். சில நொடிகள் அமைதி நிலவியது.


கண்களில் லேசான கலக்கத்துடன், "மற்றவர்களுக்குச் சொல்வது சுலபம் சார்...என் தலையில் ஆதரிக்கணும் என்று எழுதி இருந்தால் அது நடக்கும் , இல்லை என்றால் " என்று மெல்லிய குரலில் சொன்னார்.


பிறகு எதுவும் பேசாமல் அமைதியானார். தன் கரங்களைக் கூப்பி, "நமஸ்காரம்" என்று கூறிவிட்டு மெதுவாக எழுந்து நகர்ந்தார்.


அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் ஒரு தெளிவு இருந்தது—அந்தத் திருமணம் நிச்சயமாக நடக்கும்!

No comments: