அவ்வப்போது சில வார்த்தைகள் மனதில்
நிற்கும். யாராவது.. அது பற்றி பேசினால் மகிழ்ச்சியாக
இருக்கும் .
இன்று காலை அது போல ஒன்று நடந்தது..
அலுவலகத்தில் ஒரு பெண்ணின் அலை பேசியில் தகவல் தரும் சப்தம் ஒலித்தது. அஸ்தல விஸ்டா என்று.
அந்தப் பெண்ணிடம் இந்த ஒலியை ஏன் வைத்திருக்கிறாய்
என்று கேட்டேன். ஏதோ ஒரு காரணம் சொன்னாள். புரியாத ஒரு வார்த்தையை வைக்க வேண்டும் என்று.
இந்த வார்த்தை ஒரு ஸ்பானிஷ் மொழி
வார்த்தை. குவாடமாலா நாட்டிற்கு போயிருந்த போது இது போன்ற பல வார்த்தைகளை அன்றாட செயல் பாடுகளை எளிதாக்குவதற்காக
கற்றுக் கொண்டேன்.
ஆர்னோல்டு
சுவார்செனேகர் ஒரு திரைப்படத்தில் இந்த வார்த்தையை
பயன் படுத்தி இதை மிகவும் விளம்பரப் படுத்தி இருப்பார். டெர்மினேடர் 2 என்று நினைவு.. ஹஸ்தல விஸ்தா பேபி
என்று திரும்ப திரும்ப சொல்லுவார்..
முதல் இரண்டு வார்த்தைகள் தான் ஸ்பானிஷ் மற்றது ஆங்கிலம் என்று ஒரு முறை யாரிடமோ சொல்லி
அவர் முறைத்த பிறகு தான் புரிந்தது.
இந்த வார்த்தைக்கு மீண்டும் சந்திக்கும்
வரை என்று பொருள் கொள்ளலாம். ஹஸ்தா (h உச்சரிப்பில் வரும் )
என்றால் (அது )வரை . இந்த வார்த்தைக்கு
(மீண்டும் ) பார்க்கும் வரை.. சந்திக்கும் வரை என்று பொருள்
ஸ்பானிஷ் மொழியிலே ஹஸ்தா என்பதன்
பின்னால் லூயேகோ (அப்புறம் பார்க்கலாம்) , ப்ரோன்டோ (விரைவில் ), மன்யானா (நாளை) என்பது போல வரும்.
தமிழில் சிலர் “வரேன்” என்றோ “பார்க்கலாம்” என்றோ கூறுவார்கள். போய்விட்டு
அல்லது மீண்டும் என்ற வார்த்தைகள் ஒளிந்து கொண்டிருக்கும்.
ஹஸ்தா என்பது தமிழில் சிலரது பெயராகவும்
இருக்கிறது.. ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
ஹஸ்தம் என்றால் கை என்றும் பொருள்
படும். அபய ஹஸ்தம் என்பது கடவுளின் அருள் வழங்கும்
கை.
ஒரு சிறிய வார்த்தை தான். நிறைய
சிந்தனைகளைத் தூண்டி விட்டது.