அகத்தியர் யாஹூ வலைக் குழுவில் வந்த ஜெ பி அவர்களது கடிதம். மிக நன்றாக இருந்ததால் இங்கே இடுகிறேன்.
இதுபோல பல நல்ல கருத்துக்கள் இந்த வலைக் குழுவில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.
திஸ்கி எழுத்துருவில் அமைந்தது இந்த வலைக் குழு.
அன்புடன் விச்சு
ஓர் உண்மைச் சம்பவம்.
இளைஞர்களுக்குப் பயனாக இருக்ககூடியது. இதற்காகச் சீனாவுக்குப் போவோம்.
சீனா 1910-ஆம் ஆண்டில் குடியரசு ஆகியது. ஆனால் குடியரசின் தந்தை ஸன் யாட் ஸென் விரைவில் இறந்துபோனதால் நாடே துண்டு துண்டாக விளங்கியது. Wஅர் ளொர்ட்ச் எனப்படும் ஆசாமிகள் சொந்தமாகப் படைகளை வைத்துக்கொண்டு யதேச்சாதிகாரமாக ஆண்டுகொண்டிருந்தனர். அவர்களில் சியாங் காய் ஷெக் என்பவர் டாக்டர் ஸன் யாட் ஸென்னின் சகலை. அத்துடன் அவருடைய க்வோமின்டாங் கட்சியின் தலைவர். ஆகவே வெள்ளைக்கார நாடுகள் சில, அவரையே அதிகாரபூர்வ அதிபராக நினைத்து ஆதரவு கொடுத்தன. நான்கிங் என்னும் நகரத்தைத் தம்முடைய மையமாக வைத்துக்கொண்டிருந்தார். ஷாங்ஹாய் என்பது இன்னொரு பெரும் நகரம் அது open City என்னும் அந்தஸ்தைப் பெற்றது. எல்லா நாட்டினருக்கும் அங்கே தனி இட ஒதுக்கீடு இருந்தது. அங்கே அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் வசித்துவந்தனர். ஹாங்க்காங் என்னும் நகரம் பிரிட்டிஷ் காலனி. மக்காவ் என்பது போர்ட்டுகீஸ்.
பலநாடுகள் சீனாவில் நாட்டாண்மை செலுத்தின. அவற்றில் ஜப்பான் முன்னணியில் இருந்தது.
1939-ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதியாகிய மன்ச்சூரியாவை ஜப்பான் பிடித்துக்கொண்டது. பின்னர் சீனாவின் முக்கியப் பகுதிகளைப் பிடித்துக்கொண்டது.
மிக அநாகரிகமாக மிருகவெறியுடன் ஜப்பானியர் சீன நாட்டைச் சூறையாடினர்; மக்களைக் கொன்று குவித்தனர். எண்பதினாயிரம் பெண்களைக் கற்பழித்தனர். Rape of Nanking என்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் இது.
அந்தக் காலகட்டத்தில் ஷாங்ஹாய் நகரில் ஒரு வெள்ளைக்காரர் ஒரு பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கட்டிக்காத்து வந்தார். பெயர் ஞாபகமில்லை. ஏதோ ஒரு டாம், டிக், அல்லது ஹேரி என்று வைத்துக்கொள்ளலாம்.
வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான கம்பெனிகளையெல்லாம் கலைத்து, அவற்றின் அஸெட்டுகளையெல்லாம் ஜப்பானியருக்கு மாற்றிவிடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். டாமின் கம்பெனியின் அஸெட்டுகளுக்கும் அதே கதி.
இந்த வேலைகளையெல்லாம் மேற்பார்வையிட ஒரு ஜப்பானிய அதிகாரி இருந்தான் அவனுக்குக் கீழே நிறையப்பேர் வேலைசெய்தார்கள்.
அந்த அதிகாரி ஒரு கடற்படைத் தளபதி. காலேஜில் எக்கானாமிக்ஸ் படித்திருந்தான்.ரொம்பவும் கோபக்காரன்.டாம் ஒழுங்காகத்தான் வேலை செய்தார். ஆனால் ஹாங்காங்கில் இருந்த கிளையின் அஸெட்டை அசட்டையாக விட்டுவிட்டார்.
யாரோ அட்மிரலிடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள்.
டாம் அந்தச் சமயத்தில் ஆபீஸில் இல்லை. அவரிடம் அவருக்கு வேண்டப்பட்ட தலைமைக் கணக்காயர் விபரத்தைச் சொன்னார். அட்மிரல் கட்டுக்கடங்காத கோபத்துடன் கண்டதையெல்லாம் காலால் எற்றி உதைத்து உறுமித் தீர்த்துவிட்டானாம். ஜப்பானுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கத்தியிருக்கிறான்.
அப்படிப்பட்ட குற்றத்துக்கு ஆளைப் பிடித்துச் சித்திரவதை செய்வார்கள். பின்னர் தலையை வெட்டிவிடுவார்கள். தலையை எங்காவது நாற்சந்தியில் மூங்கிலில் குத்திவைத்துவிடுவார்கள். அவருடைய நண்பர்களாகிய பல வெள்ளைக்காரர்கள் அந்த மாதிரியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை டாம் கேள்விப்பட்டது ஒரு சனிஞாயிறன்று. விடுமுறை.
பயங்கரமான கவலை டாமுக்கு ஏற்பட்டுவிட்டது.
பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சொந்தமாக ஒரு முறை வைத்திருந்தார்.
அந்த முறைக்கு அடிப்படையாக விளங்கியவை இரண்டே இரண்டு கேள்விகள். அவற்றை டைப் செய்துவைத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கீழே எழுதிக்கொள்வார்.
1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?
2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?
முதல் கேள்விக்குக் கீழே பதிலை எழுதினார்:
1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?
"நாளைக் காலையில் ஜப்பானிய கெம்ப்பித்தாய் போலீஸ் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்யப்போகிறது".
அடுத்த கேள்வியைப் படித்தார்.
2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?
யோசித்தார். யோசித்தார். அப்படி யோசித்தார். பலமணி நேரம் கழித்து நான்கு பதில்களை அந்தக் கேள்வியின்கீழ் எழுதினார்.
1. அந்த அட்மிரலிடம் நானே நேரில் விஷயத்தைச் சொல்லலாம்.
ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாகச் சொல்லச் செய்யலாம். சொல்பவன் ஒழுங்காகச் சொல்லவில்லையென்றால் அட்மிரல் தவறாகப் புரிந்துகொள்வான். இதையெல்லாம் போய் விசாரித்துக்கொண்டிருப்பதற்குப் பதில் சித்திரவதைக்கூடத்துக்கே நேரே அனுப்பிவிட்டு சும்மா இருக்கலாம் என்று அட்மிரல் எண்ணலாம்.
2. ஓடிப்போக முயற்சிக்கலாம்.
இது முடியாத காரியம். எப்போதும் என்னைத் தொடர்ந்து யாராவது வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஓடிப்போனாலும் எங்கே போவது? பார்த்தவுடன் சுட்டுப் போடுவார்கள்.
3. தங்கியிருக்கும் அறையிலேயே இருந்துகொண்டு ஆபீஸ¤க்கே போகாமல் இருந்துவிடலாம்.
ஆளைக் காணாததால் கெம்ப்பித்தாய் ஆட்களை அட்மிரல் அனுப்பிவைப்பான். அவர்கள் பிடித்துக்கொண்டுபோய் அட்மிரலிடம் விடுவார்கள். அவன் சித்திரவதைக் கூடத்துக்கு உடனே அனுப்பிவிடுவான். ஒன்றுமே கேட்கமாட்டான்.
4. எப்போதும்போல் ஒன்றுமே நடக்காததுமாதிரி திங்கட்கிழமைக் காலையில் வழக்கம்போல் ஆபீஸ¤க்குப் போகவேண்டியது. திங்கட்கிழமைக் காலையில் அட்மிரல் ரொம்பவும் பிசியாக இருப்பான். என்னைப் பற்றி சிந்திக்கமாட்டான். அப்படி ஏதும் ஞாபகம் வரும்போது கொஞ்சம் நிதானமாக இருக்கக்கூடும். ஆகவே நேரத்தை இதில் போய் செலவிடுவானேன் என்று எண்ணி பேசாமல் இருந்துவிடக்கூடும். அப்படியே கேட்டாலும் அப்போது அதற்கு ஏற்றவகையில் பதிலைச் சொல்லிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. "தவறு செய்தவன் தைரியமாக ஆபீஸ¤க்கு வருவானா? ஓடிப்போகவல்லவா முயற்சிப்பான். எல்லாரும் அப்படித்தானே செய்கின்றனர்?" என்று நினைப்பான்.
தப்பித்துக்கொள்வதற்கு நான்காம் பதிலில் இடம் இருந்தது.
ஆகவே அதையே செய்வதாக டாம் முடிவு செய்துகொண்டார்.
அதன் பிறகு அவருக்கு இனம் புரியாத பெரும் நிம்மதி ஏற்பட்டது.
ஆகவே திங்கட்கிழமைக் காலையில் டாம் ஆபீஸ¤க்குச் சென்று அவருடைய இருப்பிடத்தில் அமர்ந்திருந்துகொண்டு ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அட்மிரல் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.
டாமை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சிகரெட்டை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய வேலையைப் பார்க்கலானான். நிறைய வேலை.திங்கட்கிழமையல்லவா?
ஆறு வாரங்கள் கழித்து அவனை தோக்கியோவுக்குத் திரும்ப அழைத்துக்கொண்டனர். டாமின் கவலைகளும் பயங்களும் தீர்ந்தன.
அப்புறம் டாம் என்ன ஆனார்?யுத்தம் முடிந்தபிறகு அமெரிக்கா சென்றார்.அவர் எழுதிய கட்டுரையில் அவருடைய ·பார்முலாவைக் கொடுத்திருக்கிறார்.
அதை வைத்து அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க வர்த்தகராக விளங்கினார்.
1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன் என்பதை எழுதிக்கொள்ளவேண்டும்.
2. அதைப் பற்றி நான் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக எழுதிக்கொள்ளவேண்டும்.
3. அதைத் தொடர்ந்து நான் என்னதான் செய்யவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.
4. அதனை உடனடியாக செய்துமுடிக்க முனையவேண்டும்.
அன்புடன்
ஜெயபாரதி
Thursday, May 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
The article has been refurbished and put up in my new Website -
VisvaComplex.com
http://www.visvacomplex.com/Technique_That_Saved_The_Head.html
Dr.S.Jayabarathi
JayBee
Post a Comment