தமிழுக்கு இவர் செய்த தொண்டுகள் சிறப்பானவை.. அரசியல் தலைவர் அல்லது திரைப்பட நடிகர் அல்ல என்பதால் தான் இந்த நிலையோ.. தமிழுக்கு சிறப்பு சேர்த்த வலம்புரி ஜான் வறுமையில் தான் இறந்தார்.. முழுநேர அரசியல் தொடர்பில்லாத தமிழ் அரங்கேறாதோ?
அன்புடன் விச்சு
தினமலரில் வந்த கட்டுரை:
அழிந்து போகும் நிலையில் உ.வே.சா., வீடு தமிழுக்கு தொண்டுக்கு கிடைத்த பரிசா இது?
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே.சா., வீடு இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறது. அரசுடமையாக்கப்பட்ட பின்பும் இந்த நிலையில் உள்ள அந்த வீட்டைப் பார்க்கும் தமிழ் ஆர்வலர்கள் மிகவும் நொந்து போய் உள்ளனர்.
"தமிழ்த் தாத்தா' என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதய்யர் தான் பிறந்த ஊரான உத்தமதானபுரத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக ஊரின் முதல் எழுத்தான "உ'வை தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டார். தஞ்சை பாபநாசம் அருகே உத்தமதானபுரம் உள்ளது. இவரது தந்தை வேங்கடசுப்பிரமணிய அய்யர், தாய் சரஸ்வதி அம்மாள். 19.2.1855ல் பிறந்த உ.வே.சா, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை குருவாக கொண்டவர். இன்றைக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய நுõல்களை படித்து தமிழறிவை வளர்த்துக் கொண்டு இலக்கியவாதிகளாக லட்கணக்கானோர் வலம் வருகின்றனர். இந்த அரிய இலக்கியப் பொக்கிஷங்களை சிந்தாமல் சிதறாமல் உலகுக்கு எடுத்து தந்தவர் உ.வே.சா.தான். அவர் தமிழ்மொழிக்கு உயிரூட்டிய விடிவெள்ளி.
காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஓலைச்சுவடி தான் நடைமுறையில் இருந்தது. பதப்படுத்தப்பட்ட பனைஓலையில் எழுத்தாணியால் எழுதி பயன்படுத்தி வந்தனர்.
அறிஞர் ராமசாமி முதலியார் என்பவரிடம் பாடம் கேட்க வந்த உ.வே.சா.வை பார்த்து "சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி' படித்திருக்கிறாயா என்று அவர் கேட்டார். அந்தக் கேள்வியே சாமிநாதய்யரை ஓலைச்சுவடிகளை தேடத் துõண்டியது.
ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்த சாமிநாதய்யருக்கு அவை கரையான் அரித்தும், மழையில் நனைந்தும் கண்ட இடங்களில் துõக்கி எறியப்பட்டும் கிடந்ததைக் கண்டு மனம் பதறினார். அரிய பொக்கிஷங்களான இவற்றை பேணிக் காக்காவிட்டால் காலப்போக்கில் இவை முற்றிலும் அழிந்து வருங்கால சந்ததியினர் இந்த இலக்கியங்களைப் பற்றி அறியாமலே போய்விடுவர் என்று பதை பதைத்தார்.
எனவே, அவர் பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று அரிய ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டினார். இவ்வாறு அவருக்கு பத்துப்பாட்டு, புராணங்கள் 14, பிரபந்தங்கள் 42, இலக்கண நுõல்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி நுõல்களாக பதிப்பித்தார். இந்த நுõல்களெல்லாம் இன்றைக்கு காசு கொடுத்தால் எளிதாக கிடைப்பதற்கு காரணமே உ.வே.சா.தான். அவருடைய பெரும் முயற்சியால் தமிழுக்கு கிடைத்த கருவூலங்கள் அவை.
அவரது புலமையை அறிந்து அன்றைய அரசு 1906ம் ஆண்டு "மகா மகோ உபாத்தியாய' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி கவுரவித்தது. தமிழ் நெஞ்சங்களோ இவரை, "தமிழ்த்தாத்தா' என்று பட்டம் வழங்கி அன்புடன் அழைத்தனர். தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ. வே.சா., 1942ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி மறைந்தார். சென்னையில் இவர் வசித்த வீடு "தியாகராச விலாசம்' என்ற பெயரால் உள்ளது. சென்னையில் இவரது பெயரால் நுõலகம் ஒன்றும் இயங்கி வருகிறது.
தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த அந்த தமிழ்த்தாத்தா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த வீட்டின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?.
தமிழ் ஆர்வலரும், கலை விமர்சகருமான பாபநாசம் எழுத்தாளர் வீ.பி.கே.மூர்த்தி(69) என்பவர் பொதுமக்களின் கோரிக்கையான உ.வே.சா.வீட்டை அரசுடைமையாக்கி அதை நினைவு சின்னமாக்க வேண்டும். அதில் நுõலகம் வைக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு இப்போது வயது 30 ஆண்டுகள்.
இரண்டாவது முறையாக முதல்வரான ஜெயலலிதா விரைவில் உ.வே.சா.வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கி ஆணை பிறப்பித்தார். இந்த அறிவிப்பு வந்த நேரத்தில் உ.வே.சா. வீடு அவரது உறவினர்கள் வசம் இருந்தது. அந்த நேரத்தில் அந்த வீட்டை பிரித்து சீரமைக்கும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். அரசு உத்தரவை காண்பித்து அதிகாரிகள் வீட்டை முற்றுகையிட்டனர். உ.வே.சா உறவினர்களிடம் வீட்டை விலை பேசினர். வீடு பிரித்தது பாதி, பிரிக்காதது பாதியுமாக கிடந்த நிலையில் வீடு கைமாறியதாக தெரிகிறது. அதன்பின் அந்த வீட்டை சீரமைக்கும் பணி தொடரவில்லை. போட்டது போட்டபடி சிதிலமடைந்து கிடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி பெய்த மழையில் வீட்டின் மாடியின் முன்பகுதி இடிந்து விழுந்தது. தற்போது வீட்டின் உள்ளேயே போக முடியாத நிலை உள்ளது. அதேபோல வீட்டின் பின்பக்க வழியாகவும் போக முடியவில்லை. கடந்த மே மாதம் பெய்த மழையில் வீட்டு சுவர்கள் பல இடிந்து விழுந்தன. மூங்கில்கள் பெயர்ந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்போது வீடு பாழடைந்து பாம்புகள் குடிபுகுந்து விட்டன.
தற்போது தமிழ்த்தாத்தா வசித்த வீட்டில் பாதி தான் உள்ளது. முன்பகுதியில் ஓடுகள் விழுந்து குவிந்து கிடக்கின்றன. வாசற்கதவை திறந்து உள்ளே போக முடியாது. வேறுவழியாக சிரமப்பட்டு உள்ளே நுழைந்து பார்த்தால் ஓட்டு மாடி பாதி இடிந்து விழுந்தும் மற்றொரு பாதி எந்த நேரமும் விழத் தயாராகவும் உள்ளன. உள்வாசல் சுவர் முற்றிலும் விழுந்து கிடக்கிறது.
வீட்டின் அளவே சுமார் 30 அடி அகலம் 100 அடி நீளம் தான் இருக்கும். இதை சீரமைப்பது அரசுக்கு பெரிய சுமையாக இருக்காது என்றே தோன்றுகிறது.
மூர்த்தியின் ஆதங்கம்:
தமிழ் ஆர்வலரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான வீ.பி.கே.மூர்த்தி கூறியதாவது:
உத்தமதானபுரத்தில் நடைபெறும் பூஜைக்காக அங்கு அடிக்கடி செல்வேன். அப்போதெல்லாம் தமிழ்த்தாத்தா வீட்டை பார்த்து வருவேன். நாளுக்கு நாள் அந்த வீடு இடிந்து விழுவது என் உயிர் போவது போல் இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா மனம் வைத்தால் இதற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். வீடு புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு அடையும் நாளில் உ.வே.சா. வீட்டோடு அவரது படத்தையும் போட்டு சிறப்பு தபால்தலை வெளியிட வேண்டும். தமிழுக்கு மகுடம் சூட்டிய தமிழ்த்தாத்தாவுக்கு இதன்மூலம் நமது அரசும் மகுடம் சூட்டிய பெருமை கிடைக்கும் என்றார்.
Tuesday, June 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment