Wednesday, June 15, 2005

நான் ரஜினி, நீ கமல்

இன்னும் ஒரே வாரம். யாவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட ‘அந்நியன்’ வெள்ளித்திரையைத் தொடுகிறது. ‘ஸ்மார்ட்’ சீயான், ‘மஜா’வாக அடுத்தபடத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார். கலகலப்பாக ‘துறுதுறு’வென்று பேசினார் விக்ரம்.

இதோ இப்போ ‘அந்நியன்’ ரீலீஸ்ன்னு வந்தாச்சு, கடைசிக்கட்ட பரபரப்பு எப்படியிருக்கு?

‘‘அப்படியே உருக்கி எடுத்த உழைப்பு. கிட்டத்தட்ட ஒண்ணேகால் வருஷம். அதைக்கூட கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்தபடம் ‘மஜா’வுக்குள்ளே இறங்கிடலாம்னு தோன்றிவிட்டது. ஆனால் சென்னையில் எங்கே பார்த்தாலும் அந்நியன் ஹோர்டிங்ஸ். யாரும் என் பார்வையிலிருந்து தப்ப முடியாது. இந்தப்படத்தில் ஷங்கர் என்ன அளவு சிந்தித்தார், எவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டார். நான் எவ்வளவு உழைப்பைக் கொட்டினேன். அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைச்சிட்டு, இந்த புரொடியூசர் கிடைச்சாரே, அதைத்தான் பெரிய புண்ணியம், பாக்கியம்னு நினைக்கிறேன்.’’

இன்னும் இதுமாதிரி பெரிய கேரக்டர் செய்யணும்னு தோணுதா? அப்பாடா ‘போதும்டா சாமி’ன்னு சோர்வு வருதா?

‘‘எனக்கு சாகசங்கள் பிடிக்கும். எந்த அனுபவத்தையும் தராத கேரக்டர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய! அந்நியனையே பாருங்க, இவ்வளவு பெரிய படம், பெரிய ஆக்ஷன். என்னைக் கவர்ந்தது கேரக்டரோட பெரிய விஸ்தீரணம். அந்த விஷயத்தில்தான் மனசு நிறைஞ்சு நிக்குது.’’

ஒரே படம். விதவிதமான நிஜமான முகத்தோற்றங்கள். வெவ்வேறு தோற்றம், வேறுபட்ட பாவங்கள், கோபம் தெறிச்சு, படு காதலாக எப்படி மாத்திக்க முடியுது?

‘‘இன்னிக்கு காலையில் கூட தூக்கம் வரவில்லை. பக்கத்தில் அசந்து தூங்கிட்டு இருந்த ஷைலாவை எழுப்பி பேசிட்டு இருந்தேன். ‘கனாகண்டேன்’ பார்த்தோம். பிருதிவிராஜ் ரோலைப்பத்திப் பேசிட்டு இருந்தோம். அந்த ரோலுக்கு மறைமுகமாக என்னை முயற்சி பண்ணாங்க என்று கேள்விப்பட்டேன். ‘நான் நடிச்சிருந்தால் எப்படியிருக்கும்’ என்று ஷைலாகிட்டே கேட்டேன். ‘நீ எப்படி இருப்பாய்னு தெரியாது. நீ மூஞ்சியை மாத்திடுவாய். எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவாய்னு தெரியாது’ன்னு சொல்லிச் சிரிச்சாங்க. அவங்களுக்கே நான் ஒவ்வொரு தடவையும் என்ன வடிவத்தில் இருப்பேன்னு தெரியலை. அது கடவுளோட பரிசு.’’

‘கில்லி’ விழாவில் ரஜினி, ‘உங்களையும், விஜய்யையும் சேர்த்துப் பார்க்கும்போது எனக்கு நானும், கமலும் முன்னாடி இருந்த காலத்தை நினைவுபடுத்துகிறது’ என்றார். அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

‘‘ரஜினி எதையும் பேச்சுக்காகன்னு சொல்ல மாட்டார். நானும் விஜய்யும் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு விஜய்யை தூரத்தில் இருந்து பார்த்தாலும், அருகில் பார்த்தாலும் பிடிக்கும். எனக்கும் விஜய்க்கும் ரஜினிசார் செய்த கௌரவம்தான் அந்தப் பேச்சு. அவர் பெரிய ஆக்டர். தன் மனசில் இருக்கிறதை வெளிப்படையாகப் பேசுவதே பெரிய விஷயம். எங்க விஷயத்தில் அது நடந்திருக்கு.’’

ரஜினி குறிப்பிட்டபடி பார்த்தால் இதில் யார் ரஜினி, யார் கமல்?

‘‘அவர் விஜய்யாகவும், நான் நானாகவும் இருந்திட்டுப்போறோம். ம்ம்ம்..... சரி. விஜய் ரஜினியாக இருக்கட்டும். நான் கமலாக இருந்துக்கிறேன். நான் ரஜினியோட ரசிகன். ஆனால் கமல்தான் என் குரு. ரஜினி சாரைப் பாருங்களேன், அவர் நிக்கிற, பேசுகிற, யோசிக்கிறதில் கூட என்னமாதிரி ஸ்டைல் பாருங்க. எல்லா நடிகர்களுக்கும் கமல் மாதிரி இருந்தாகணும் என்று தோணும். வேண்டாம் சார், விஜய், விஜய்யாகவே இருக்கட்டும். விக்ரம் விக்ரமாகவே இருக்கட்டும்.’’

இந்திப்படம் செய்யப்போறதா கேள்விப்பட்டோமே?

‘‘கோவிந்த் நிஹாலனி சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தார். என்னமாதிரி படம் செய்யலாம், எது எல்லாம் சாத்தியம்னு பேசினோம். கேதன் மேத்தாவும் பேசினார். இப்போ அவசரமாக இல்லை. உள்ளே ஒரு நடிகன் உட்கார்ந்து தீனி கேட்டுட்டு இருக்கான் இல்லையா, அவன் திமிறி எழுந்திருக்கும்போது செய்வேன்.’’


குமுதத்தில் வந்த விக்ரம் பேட்டி..

அன்புடன் விச்சு

1 comment:

dondu(#11168674346665545885) said...

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருவர் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். இது பற்றி போன வருடம் ஒரு பதிவு கொடுத்திருந்தேன். பார்க்க: http://dondu.blogspot.com/2004/12/inevitable-pairs-in-tamil-cinema.html#comments

இபோது விக்ரமின் பேட்டி. சுவாரசியமாக இருக்கிறது. நான் என் பதிவில் கூறியபடி கமலும் ரஜனியும் இன்னும் தளத்தில் இருப்பதால் இப்போதைக்கு அடுத்த ஜோடியைப் பற்றிப் பேசுவது வெறும் கருத்து பரிமாறலாகத்தன் இருக்கும் என நினைக்கிறேன். அதன் காரணத்தையும் மேலே குறிப்பிட்ட என் பதிவில் எழுதியிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)