ரஜினி அப்படி விடமட்டாரே..
இந்த கலைஞன் கண்ணீர் கதை அவர் வரை போக வில்லையா..
சம்பாதித்த பல கோடி களில் சில லட்சங்கள் இவருக்கு தரக்கூடாதா..
கூடிய விரைவில் செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம்.
****************************************
சந்திரமுகி - ஒரு கண்ணீர் கதை
மதுமுட்டம். இந்தப் பெயரைச் சொன்னால் நம்மில் பலருக்கு யாரென்று தெரியாது. சந்திரமுகியின் ஒரிஜினல் கதாசிரியர் இவர்தான். இவர் எழுதிய ‘மணிச்சித்திரதாழ்’ மலையாளத்தில் சக்கைப் போடு போட, அதை கன்னடத்தில் ‘ஆப்த மித்ரா’வாக மாற்றினார்கள். தமிழில் ‘சந்திரமுகி’. இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட். நிறைய பணம் சம்பாதித்துக் கொடுத்தன. ஆனால் ஒரிஜினல் கதாசிரியர் மதுமுட்டமின் நிலை...? வாருங்கள் சந்திப்போம்.
கேரளா ஆலப்புழாவில் ஒரு சிறிய வாடகை வீடு. சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த மதுமுட்டமிற்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. கதை எழுதும் ஆர்வத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் தானே சமைத்து அக்மார்க் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருகிறார்.
உங்களுடைய ‘மணிசித்திரதாழ்’தான் ‘ஆப்தமித்ரா’, ‘சந்திரமுகி’ என்று உருமாறியது உங்களுக்குத் தெரியுமா?
‘‘என்னுடைய ‘மணிசித்திர தாழ்’ கதையை தழுவித்தான் ‘ஆப்த மித்ரா’ கன்னடப் படத்தை எடுத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்த சமயம், மோகன்லால் என்னிடம், ‘சௌந்தர்யா கடைசியாக நடித்து வந்தது மணிசித்திரதாழின் ரீமேக்கில்’ என்று சொன்னபோது என் தலையில் இடி இறங்கியதுபோன்று இருந்தது. மணிசித்திரதாழை தழுவி எடுத்திருக்கிறார்களா என்று அப்போதுதான் அதிர்ச்சி அடைந்தேன்! எனக்கு அதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதற்குமுன் சொல்லவில்லை.’’
‘ஆப்த மித்ரா’ உங்க கதை என்று தெரிந்ததும் என்ன செய்தீர்கள்?
‘‘மணிசித்திரதாழின் தயாரிப்பாளரான நவோதயா அப்பச்சன், அந்தக் கதைக்கான உரிமையை விற்று விட்டார். இது பற்றி தெரிந்த இயக்குநர் பாசில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடவே, அப்பச்சன் அதற்கு ஈடாக ஒரு தொகையைத் தந்து பாசிலைச் சமாதானப்படுத்தி விட்டார். இதெல்லாம் எனக்கு பின்னர்தான் தெரிந்தது. இந்த விஷயத்தை அப்பச்சனும்என்னிடம் சொல்லவில்லை. பாசிலும் சொல்லவில்லை.’’
சந்திரமுகி கதையும் உங்களுடைய கதைதான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?
‘‘‘ஆப்த மித்ரா’ திரைப்படம் ஏகப்பட்ட லாபத்தை வாரிக் கொடுத்தது. அதை இயக்கிய பி.வாசு தமிழில் ‘சந்திரமுகி’ படத்தை எடுத்து வந்த போது, ‘குமுதம்’ இதழில் ‘பழைய கதையை தூசி தட்டி சம்பாதித்தார்கள்’ என்று செய்தி வந்தது. அதைப் படித்து விட்டு என் நண்பர்கள் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்கள்.
உடனே நான் இயக்குநர் பாசிலைக் கேட்டபோது, பாசில் என் வீடு தேடி வந்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், நான் அவரைப் பார்த்து, ‘எனக்குத் துரோகம் இழைத்து விட்டீர்கள்’ என்று சத்தம் போட்டு அவரை அனுப்பிவிட்டேன்.
உங்கள் குழந்தையை அடுத்தவர்கள் தட்டிப் பறித்துக்கொண்டு, ‘குழந்தை எங்களுடையது’ என்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அந்த நிலையில்தான் நானும் உள்ளேன்! இது பற்றி அதிகமாகப் பேச இயலாது. ஏனென்றால் இப்போது நான் நீதி மன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்துள்ளேன்.’’
சரி, உங்களின் ‘மணிச்சித்திரதாழ்’ கதை மூன்று மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. கதை உருவானது எப்படி?
‘‘திருச்சூர் பக்கம் ‘சாந்தன் கதைகள்’ என்று பேய்க் கதைகள் சொல்லப்படுவதுண்டு. என்னுடைய அம்மா இந்தக் கதைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதைகள் எல்லாம் என் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அவற்றின் தாக்கம்தான் ‘மணிச்சித்திரதாழ்’. கிட்டத்தட்ட மூணு வருஷமாகியது அந்தக் கதையை உருவாக்க. ரசிச்சு ரசிச்சு செஞ்சேன்.
மணி சித்திரதாழ் கதையில் சந்திரமுகி ரோலின் பெயர் ‘நாகவல்லி’. தஞ்சாவூரில் நடன மங்கையாக இருக்கும் நாகவல்லியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்த சங்கரன் தம்பி (இவர்தான் ராஜா) வலுக்கட்டாயமாக நாகவல்லியை கடத்தி வந்து வைப்பாட்டியாக்கிவிடுகிறார்.
நாகவல்லி தன்னுடைய காதலன் ராமநாதனை தன் மாளிகைக்கு அருகிலேயே குடி வைத்து விடுகிறார். இதைக் கண்டு பிடித்து சங்கரன் தம்பி, காதலனையும், நாகவல்லியையும் கொன்று விடுகிறார். (கதையை சொல்லும்போதே மதுமுட்டம் அழத் துவங்குகிறார்) அந்தக் கதை என் உயிரில் கலந்துவிட்டது.’’
சந்திரமுகி படம் பார்த்தீர்களா?
‘‘சங்கனாச்சேரியில் படம் பார்த்தேன். சந்திரமுகியில் தொடக்கத்திலிருந்தே ரஜினி வருகிறார். அவரை மையப்படுத்தியே படம் எடுத்துள்ளார்கள். ஆனால் மணிச்சித்திரதாழில் இந்த ரோலை செய்த மோகன்லால் படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்து தான் வருவார். பிரபு கேரக்டரில் சுரேஷ் கோபியும், ஜோதிகா ரோலில் ஷோபனாவும் நடித்திருந்தார்கள். ஷோபனா நிஜமாகவே பயமுறுத்தியிருந்தார். அதற்காக அவருக்கு அவார்டு கிடைத்தது.
எது எப்படியோ என்னுடைய கதை பலருக்கு வாழ்வு தந்துள்ளது. நிறையப் பேர் இதனால் பலனடைந்து விட்டு என்னை மட்டும் மூலையில் தள்ளி விட்டார்கள்’’ என்று சொல்லும்போது மதுமுட்டத்தின் கண்கள் மீண்டும் கலங்குகின்றன.
அவர் கண்ணீரைத் திரையுலகத்தினர் துடைப்பார்களா?
நன்றி குமுதம்
அன்புடன் விச்சு
Saturday, June 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரஜினி செய்தி போனால் கண்டிப்பாக செய்தி வரும்.. ஆனால் போகுமா ? ஆண்டவனை பிராத்திக்க வேண்டியது தான்..
மூலம் தெரியாமலா ரஜினி சந்திரமுகியில் நடித்து விட்டார்?ரஜினியை விடுங்கள். கதாசிரியனை எந்த இயக்குநர்கள் தான் மதிக்கிறார்கள்.
Post a Comment