Saturday, May 09, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 3

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

மூன்றாம் பாடல்: 

நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர்  நிலா வெண்மதி சூடி
ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருஞ்சொற்பொருள் :

நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த சுருண்டு நீண்ட சடை ஓர் நிலா வெண்மதி - பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ,  பேர் - புகழ்.

பொருள்  :

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரே இனமான  சங்குகளால் செய்யப்பட்ட  வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ எனக்குப் பாலூட்டியவன்.

கங்கையை பகீரதன் மேலுலகத்திருந்து பூமிக்கு கொண்டு வரும் போது, கங்கையின் வேகத்தை பூமி தாளாது என்பதால், சிவனாரிடம் வேண்டிய அவர் தான் சடையில் தாங்கி வேகம் குறைத்து பூமியில் விட்டார் என்பது புராணம்.

சடை மேல் மதியைச் சூடிய அழகு கண்டு விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். இது நாயகி பாவம் எனப்படும்.

மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீர்காழி என்பது.

முதல் ஊர் எனப்படும் சீர்காழியின் பெருமை இங்கே.

சீர்காழியின் பெருமை


      ஊழிக் காலத்து உலகம் கடலால் சூழப்பட்ட பொழுது எம்பெருமான் அறுபத்து நான்கு கலைகளையும் ஆடையாக உடுத்தி “ஓம்” எனும் பிரணவதோணியில் அம்மை அப்பனாக எழுந்தருளி வந்தபொழுது அந்த ஊழியிலும் அழியாத இத்தலமே மூலமென்று தங்கினார். ஆகையினால் “திருத்தோணிபுரம்” என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இத்தலத்திற்குரிய பன்னிரு பெயர்களையும் அதன் காரணங்களையும் பல்பெயர்ப் பத்து எனும் தக்கேசிப்பண்ணில் அமைந்த திருப்பிரமபுரப் பதிகத்தில் விளக்குகிறார் ஞானசம்பந்தர்.

இப்பன்னிரு பெயர்களையும் முறையே தொகுத்துக் கூறும் பெரியபுராணப் பாடலைக் காண்க.

        பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப்
       பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
       வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
       பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.

அவை பின்வருமாறு: -
1.     பிரமபுரம் – பிரமன் வழிபாடு செய்து உய்ந்த காரணத்தால் பெற்ற பெயர்.

2.     வேணுபுரம் – (வேணு – மூங்கில்) இந்திரன் சூரபத்மனுக்கு அஞ்சி இறைவனை பூஜிக்க  இறைவன் மூங்கிலாய் முளைத்திருந்தமையின் வேணுபுரமாயிற்று.

3.     திருப்புகலி – சூரபத்மனுக்கு அஞ்சிய தேவர்கள் அடைக்கலமாகப் புகுந்த இடமாதலால் புகலியாயிற்று.

4.     திருவெங்குரு – (வெங்கோ – தருமன்) செங்கோல் ஏந்தி நல்லாட்சி நடத்திய இயமன் பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறியப்படுத்த இத்தலத்தில் இறைவரைப் பூசித்து அருள் பெற்றதால் வெங்குரு எனப் பெயர் வந்தது. சுக்கிரன் பூஜித்து தேவகுருவிற்கு இணையாகப் பேறு பெற்றமையாலும் இப்பெயர் உளதாயிற்று.

5.     தோணிபுரம் –  ஏழு தீவுகள் கொண்டதாகியிருந்த இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தின்போது, கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழியான இத்திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாமல் நிலைபெற்றிருந்தது.  பிரணவத்தோணியில் எம்பெருமான் அம்மையுடன் வந்து தங்கிய இடமானதால் திருத்தோணிபுரம்.

6.     திருப்பூந்தராய் -   சங்கநிதி, பதுமதிநி என்ற இரு தெய்வங்கள் பூமாலையாய் இருந்து பூஜித்தமையாலும், ஆதிவராஹமான திருமால் தன் கொம்பில் பூமியை ஏற்று வருத்திய பழி நீங்கவும், இரணியனைக் கொன்ற பழி நீங்கவும் பூக்களைக் கொண்டு பூஜித்தமையாலும் இப்பெயர் பெற்றது.

7.     சிரபுரம் – பாற்கடலினின்று கடைந்த அமுதத்தினை மோகினியான திருமாலிடமிருந்து தேவர்களுடன் கலந்து முறையின்றி உண்ட சிலம்பனின் சிரம் மோகினியான திருமாலால் வெட்டப்பட்டது. அத்தலை மாத்திரமான இராகு இத்தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றமையால் உண்டானது இப்பெயர்.

8.     புறவம் – சிபிச்சக்கரவர்த்தியின் தசையினால் வாழ்வு பெற்ற புறா அப்பாவம் போக்க வழிபட்ட தலம். கெளதம் முனிவர் சாபத்தால் புறா வடிவு பெற்ற பிரசாபதி முனிவன் பூஜித்துப் பெற்ற தலமுமாம்.

9.     சீர்காழி – காளிதன் எனும் பாம்பும், நடனத்தில் தோல்வியடைந்த காளியும் பூஜித்துப் பேறு பெற்ற தலமாதலால் உண்டானது இப்பெயர். சீர்காழி முற்காலத்தில் ஸ்ரீகாளிபுரம் என்ற பெயருடன் அழைக்கப் பட்டது. பின்பு, அப்பெயர் மருவி சீர்காழி என்று ஆனது.

10.    சண்பைநகர் – துருவாச முனிவர் சாபத்தால் சண்பைக் காடொன்று தோன்ற அப்புற்களையே ஆயுதமாகக் கொண்டு யாதவகுமாரர் போர் செய்து மடிய அப்பழி நீங்க துருவாசர் பூஜித்துப் பேறு பெற்றதால் இப்பெயர் பெற்றது.

11.    கொச்சைவயம் – பராசரர் மச்சகந்தியைக் கூடியதால் ஏற்பட்ட நாற்றம் நீங்கும்படி பூஜித்துப் பேறு பெற்றமையால் இப்பெயர் உண்டாயிற்று. (கொச்சை – நாற்றம்)

12.    கழுமலம் – உரோமச முனிவர் வழிபட்டு உயிர்கள் மலங்கழுவும் வரம் பெற்றமையால் கழுமலம் என்ற பெயர் பெற்றது. கழுமல வள நகர் என்றும் குறிப்பிடுவர். இத்தலத்தின், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும் , ஊரின் நடுவில் கழுமலையாறும், மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு என்கின்ற ஆறுகள் ஓடி நிலப்பகுதியை வளமானதாகக் கொண்டது.

சட்டைநாதர் :

மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார்.
பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார்.

இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், அவரின் செருக்கை அகற்ற, தமது திருக்கரத்தால் விஷ்ணுவின் மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார்.
இதையறிந்த மகாலட்சுமி வடுக பைரவரிடம் மாங்கல்ய பிச்சை கேட்டார்.

மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன்.

பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப்போர்த்தியும் காட்சி தந்தார்.

இதனால் சீகாழி பைரவருக்கு *"சட்டை நாதர்''* என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பர் இத்தலத்தை.

Friday, May 08, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 2

 தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

இரண்டாம் பாடல்: 

முற்றலாமை இளநாகமோடு என முளைக்கொம்பு அவை பூண்டு         
    வற்றலோடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளங்கவர் கள்வன்     
    கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்       
    பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

அருஞ்சொற்பொருள் :

முற்றலாமை -   ஆமையோட்டை அணிந்த  கதை இங்கே.   வெகு காலம் முன்பு  நடந்த  கூர்ம அவதாரத்தைக்  குறிப்பதாக " முற்றல்" என்று குறிப்பிடப் படுகிறது.

ஏனம்- பன்றி; ஆதிவராகம்

முளை கொம்பு அவை பூண்டு - பிரமனின் வரம் பெற்ற ஹிரணியக்ஷன்  அசுரன் உலகை பாய் போல சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்தான். விஷ்ணு வராக அவதாரம்  எடுத்து  அவனை அழித்து உலகை மீட்டார்.

அரக்கன் மேல் பல் பட்டதால் அவனுடைய குணாதிசயங்கள் மேலிட அந்த வராகம் கர்வம் கொண்டு எதிர்வந்த உயிர்கள் அனைத்தையும் வதைத்து உண்ணத் துணிந்தது.  தேவர்களும், மனிதர்களும் சிவபெருமானிடம் மன்றாட, அவர் வேடனாக வந்து சூலத்தினால் குத்தி, அதன் பல் போன்ற  கொம்பினை உடைத்தெரிந்தார். அடக்கியதை உணர்த்தும் வகையே அக்கொம்பினை தன்னுடைய கழுத்திலிருந்த மாலையில் இணைத்துக் கொண்டார். அதனால் வராகத்தின் கர்வம் அழிந்தது.

இதன் ஒரு வேறுபாடாக , "பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே" என  சிவபெருமான் முருகனிடம் கர்வம் கொண்ட அந்த வராகத்தின் கொம்பினை உடைத்து வரும்படி கூற, முருகன் வராகத்தின் கொம்பினை உடைத்துவந்தார். அதனை சிவபெருமான் அணிந்து கொண்டார் என்று  திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.

எப்படியானாலும் எந்தை  முளைக் கொம்பு போன்ற பன்றியின் கொம்பை  மாலையாக அணிந்தவர்.


வற்றலோடு கலனாப் பலி தேர்ந்து  (கலன்  - பாத்திரம் / திருவோடு)

ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால் சிவனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் பிடித்தது;பிரம்மனின் கபாலம் அவர் கையில் ஒட்டி கொண்டது ; அந்த தோஷம் கழிவதற்கு அவர் பிரம்மனின் கபாலத்தில் பிட்சை எடுத்தார் என்று ஒரு கதை.

(அது தவறு. பிரம்மனின் ஆணவத்தை அடக்க பரமேஸ்வரன் பைரவரை ஸ்ருஷ்டித்தார்;அந்த பைரவர் தான் பிரம்மனின் ஐந்தாவது சிரஸை கொய்தார் என்று ஸ்கந்த, கூர்ம புராணங்கள் தெளிவாகக்  கூறுகின்றன .

பின்,எதற்காக பைரவர் ப்ரஹ்ம கபாலம் ஏந்தி பிக்ஷையெடுத்தார்?
பரமேஸ்வரன் பைரவரை அழைத்து இரண்டு கட்டளைகளை இட்டார்:

 எமது மாயையால் மோஹமடைந்து எம்மை நிந்திக்கும் இந்த பிரம்மனின் தலையை துண்டித்து, அந்த மண்டையோட்டில் கர்வம் கொண்ட தேவர்கள் மற்றும் ரிஷிகளின் ரக்தத்தை பிக்ஷையென வாங்கிக்கொள்(அதாவது பிக்ஷையென்ற பெயரில் அவர்கள் ரக்தத்தை பெற்று அதன்மூலமாக அவர்கள் ஆணவத்தை போக்குவது. நம் ஆணவத்தை தனக்கு பிக்ஷையாக இடும்படி இறைவன் கேட்கிறான்)

இவ்வாறு பைரவரிடம் கூறிவிட்டு, பரமேஸ்வரன் “ப்ரஹ்மஹத்யா” என்ற  ஒரு பெண்ணைப் படைத்து  அவளிடம்  பைரவர் காசி மாநகரை அடையும் வரைக்கும் நீ இவனை பின் தொடர். உனக்கு காசியைத் தவிர எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் உண்டு,.இவன் காசியை அடைந்த க்ஷணத்திலேயே இவனை விட்டு நீ முழுவதுமாக விலகிவிடு.”
 இறுதியாக பைரவர் காசி செல்கிறார்;ஈசனின் கட்டளைப்படியே ப்ரஹ்மஹத்தி அவரை விட்டு விலகி பாதாளம் செல்கிறது.பைரவர் காசியின் காவல் தெய்வம் ஆகிறார்.

சிவபெருமான் இப்படியொரு மிக பெரிய திருவிளையாடலை

1.ரக்தபிக்ஷை கேட்டு தேவர்கள் மற்றும் முனிவர்களின் ஆணவத்தை அழிப்பதற்காகவும்;

2.ப்ரஹ்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் (தவறிழைத்தவர்கள்) திருத்திக் கொள்ளும் வழி காட்டுவதற்காகவும்;

3.காசியின் புகழ் / மேன்மையை விளக்கவும்

நடத்தினார்.

ஈசனின் இந்த விளையாட்டை முழுவதுமாக உணர்ந்த அப்பர் பெருமான் இவ்வாறு பாடினார்:

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்

பணிந்தவர் பாவங்களை போக்குபவனுக்கு எங்ஙனம் ப்ரஹ்மஹத்தி என்னும் பாபம் பற்றும்?ஆதலால் அவன் வெண்டலையிற் பலிகொண்டு திரிந்தது பாவத்தின் காரணத்தால் அல்ல என்பதை வாகீச பெருமான் மிகவும் சூக்ஷ்மமாக தமது தேவாரத்தில் நிலைநாட்டுகிறார்.)

பெற்றம் :  ஆவினம், எருது. (பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து - ஆண்டாள் - திருப்பாவை)

பெரியார்க்கு இலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல்-உலக நூல்களைப் படித்து பெருமை கொள்வதன்று., இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அப்படியே.

இறைவன் புகழை யன்றி வேறொன்றையுங் கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என்னும் போது . `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை' என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது..

கற்றல் கேட்டலுடையார் பெரியார்' எனவே, கற்றல் கேட்டல், அது பற்றிச்  சிந்தித்தல் தெளிதல் முதலியனவும் அடங்கும் .

"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்" என்பது சிவஞான சித்தியார்.

தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தின் மீதமர்ந்து  இருக்கிறார் என்பதாம்.

சிவனாரின் மேனியில் தவழும் பேறு  பெற்ற நாகம் , அதனால் இளமை மாறாதிருக்கிறதாம். திரும்பத் திரும்ப சட்டையை உரிப்பதால், இளமையாகவே இருப்பதாகவும் கொள்ளலாம்.

பொருளுரை : 

வயது முதிர்ந்த ஆமையோட்டினையும், இளநாகத்தையும், பன்றியினது முளை போன்ற கொம்பையும்  அணிந்து, காய்ந்த பிரமனது  கபாலத்தில் பிட்சை கேட்கும்  என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால்தொழுது புகழும் போது  எருதின மீதமர்ந்து அருள் வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனே எனக்கு பாலூட்டியவன் என்கிறார்.

*******************************************************

சிவபெருமான் ஆமையின் ஓட்டை அணிந்து கொண்ட கதை

ஒரு காலத்தில் தேவர் அசுரர் சண்டைகள் தொடர்ந்த நிலையில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் எண்ணிக்கையில் குறைந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்றூ பிரமனுடன் சேர்ந்து யோசித்து,  திருமாலது துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்திரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். 

வேகம் தாளாத வாசுகி தான் விஷத்தைக் கக்கினாள். தேவர்களும் மால் அயனும் வேண்ட  சிவபெருமான் அதை உண்டது வரை அனைவரும் அறிந்ததே. விஷம் வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினார். சிவனது ஆசியுடன் மீண்டும் அமுதம் கடையச் சென்றனர். 

அமிர்தமும் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அரி ய பொருட்களும் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டும் அடையும் வண்ணம் திருமால் மோகினியாக மாறி அசுரர்களை மயக்கி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். நிற்க. 

இதனிடையே மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற ஆமை தன்னால் தான் அமிர்தம் கிடைத்தகதென்று எண்ணி கர்வ மேலீட்டால் ஏழு சாகரங்களையும் கலக்கியது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்து சேற்றையும் உண்டது. 

நடுநடுங்கிய உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து  ஆமையை அழிக்குமாறு வேண்டினர் . உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித் தெடுத்தார். பெருமானே அதன் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த பிரமனின் தலைமாலையின் நடுவே யொருத்தி இணைந்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலாகிய ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான், முருகனிடம் அவ்வாமையை அழிக்கும் படி ஆணை இட்டதாகவும் அவர் அதை அழித்து, அதன் சதைப் பற்றறுத்து, ஓட்டைக் கொணர்ந்து தான் தந்தைக்கு பரிசளித்ததாகவும் ஒரு கதையும் உண்டு, 

Thursday, May 07, 2020

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் பாடல் 1

வணக்கம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தப் பக்கத்திற்கு வருகிறேன்.

எத்தனையோ மாறுதல்கள்.  உடல், மனம், இடம், பொருள், தேவைகள், எண்ணங்கள், உறவுகள், சிந்தனைகள்.

மூத்த மொழியாம் தமிழில் பன்நெடுங்காலமாக எத்தனையோ கலைபபடைப்புகள் மதம் சார்ந்ததும் பண்பாடு சார்ந்தும் நீதி நெறிமுறைகள் சார்ந்தும் படைக்கப் பட்டுள்ளன.

தமிழ் வாழ்க என்று கூறுபவர்கள் கூட இவற்றைப் படித்து பிரித்துணர்ந்து பொருளறிய முடியாதவர்களா யிருக்கிறார்கள்.  என்னால் முடியுமா என்று ஒரு கேள்வி எழுந்தது.  ஒரு நாளைக்கு ஒரு பாடல் வீதம் முயற்சி செய்கிறேன். பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

நானும் பிறர் எழுதியவற்றைப் படித்தும், எனது கற்பனையில் தோன்றும், எண்ணங்களில் கலந்திருக்கும் கருத்துக்களையும்  முடிந்தவரை என்னுடைய நடையில் எழுதுகிறேன். 

எழுதுகையில் எனக்கு என்ன கேள்விகளெல்லாம் எழுந்தனவோ அவற்றிறகெல்லாம் பதில் தேடி அறிந்து கொண்டேன். அவற்றையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எல்லாம் இறைவன் அருள்.

ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்

*********************************************************************************
முதலாம்  திருமுறை. திருப்பிரமபுரத்தில் (சீர்காழியில்)ஞானசம்பந்தர் அருளியது . 

தேவாரம் முதல் திருமுறை, முதல் பதிகம் 

முதற் பாடல் 

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசி என் உ ள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்பணிந்து  ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.


அருஞ்சொற்பொருள்
விடை -  எருது (நந்தி  தேவர் )   தூ -  தூய   சுடலைப்பொடி* - சுடுகாட்டில் இருக்கும்  இறந்த உடலை எரித்த சாம்பல்    ஏடுடையமலாரன்  - இதழ்களையுடைய தாமரைப் பூவில்  அமர்ந்த பிரமன்  பீடு - பெருமை, புகழ்  மேவிய - இருந்த, அமர்ந்த, பெம்மான் -  பெருமான்

தோடுடைய செவியன் என்பதற்கு தோடு அணிந்த  செவியை உடையவன்  என்று  பொருள்.   சில  இடங்களில் தோடுடைய  உடைய செவியுடைய உமா  தேவியை இடப்புறம் உடைய என்றும் பொருள்  கொண்டிருக்கிறார்கள்.

*சுடலை என்பதற்கு சிவன் என்று ஒரு பொருள் உண்டு. (சுடலை மாடன்
என்றால் சுடுகாட்டில்  மாட்டின் (எருதின் ) மீதமர்ந்தான்). சுடுகாட்டில் இருக்கும் சாம்பலைப்  பூசிய சிவன் .

முன்னொரு  நாள் பிரமன் படைப்புத்தொழில்  வேண்டி சிவனடி  பணிந்தது புராணம்.

காதில் தோடு அணிந்து, எருதின் மேல் ஏறி, தூய வெண்மதியை சூடி,    சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன் அன்று பணிந்து பூஜை  செய்ய, அவனுக்கு அருளிய  புகழுடைய திருப்பிரமாபுரம்  என்ற ஊரில் இருக்கும் பெருமானே , எனக்கு பாலமுதூட்டியது என்று கூறுகிறார்.

***********************************************************************************
இந்தப் பாடலைப் பற்றி மேம்மேலும் படிக்கும்போது ஒரு பொருளை எப்படி கசடற கற்பது என்பது புரிகிறது.

தந்தையார் பாலகனைக் கரையில் இருத்தி விட்டு கோபுரமேலுறை பெருமானையும் அன்னையையும் வணங்கி (என் மகவைப் காத்தருள்விரெனும் படியாக) , குளத்திலிறங்கிக் குளிக்கலானார்.  முதல் சில முறைகள் உடனடியாக நீரிலிருந்து வெளியில் வந்த தந்தையார், ஒரு முறை நீண்ட நேரமாக வெளியில் வாராமை கண்டு குழந்தை அழுகிறது.

வேண்டிய பக்தர் குறை தீர்க்கும் அப்பனும் அம்மையும் அழும் குழந்தைக்கு தங்கக் கிண்ணத்தில் பாலூட்டி , அவர் அழுகையை நீக்கி செல்கின்றனர் . பாலூட்டிய தாய் குழந்தையின் வாயைத் துடைக்காமல் விடமாட்டாள். ஆனால் உலகிறக்கிவர் பெருமை உரைக்கும் படியாக, பாலுதட்டில் தங்கும் படியாக விட்டுச சென்றார் என்று ஒரு குறிப்பு.

தந்தையார் வந்து பால் வழியும் வாய் கண்டு , யார் பாலூட்டினாரென வினவ, அக்குழந்தை இப்பாடலைப் பாடியதாக வரலாறு.

தோடுடைய செவியன் என்பதில் தோடுடையவர் தாயாகவும், செவியன் தந்தையாகவும் , சேர்ந்த சொல் மாதொருபாகனையும்  குறிப்பதாம்.

தோடு என்பது மங்கல சொல் .  மங்கலமான பொருளுடனேயே எதனையும் தொடங்க வேண்டும் எனும் முறை கடைபிடிக்கப் பட்டிருக்கிறது.

அழுத குழந்தையை விவரிக்கும் சேக்கிழார் கண்மலர்கள், கைமலர்கள், வண்ணமலர்ச் செங்கனி வாய் அதரம்   என்று விவரிக்கிறார்.  சிவஞானததையும் குழைத்து ஊட்டினார் என்றும் பால் அடிசில் (சோறு) என்றும் கூடக் குறிப்பிடுகின்றார்   (வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இதைப் படிப்போம்.

தோடு, காளை, மதி, விபூதி  மற்றும் ஊட்டிய பாலும் அதனால் பெற்ற ஞானமும் வெண்மை எனக்  குறிப்பதால், வெண்மை நிறம் குறிக்கும் சத்வ குணத்தை இப்பாடல் குறிக்கிறது என்று ஒரு விளக்கம்.

முப்பத்தாறு வார்த்தைகள் கொண்ட இப்பாடல், சைவத்தின் முப்பத்தாறு தத்துவங்களை குறிப்பாலுணர்த்துகிறது.

உள்ளம் கவர் கள்வன் என்பதில், திருடன் தான் திருடிய பொருளை மறைத்து வைப்பான் அது போல என மனமும் அவனுள் மறைந்தது.

தர்ம தேவதை வேண்டியதால் அவரை எருதாகப் படைத்து வாகனமாகக் கொண்டது படைத்தலையும், சந்திரனைக் காத்து சிரசில் தரித்தது காத்தலையும் சுடலைப் பொடியாகிய சாம்பல் அழித்தலையும், கவர்ந்தது மறைத்தலையும் , பிரமனுக்கு அருளியது அருள்தலையும்  கூறி ஐந்தொழிலையும் இறைவன் செய்வதை உணர்த்துகிறது.

விடையேறி, மதிசூடி என்பவை உருவத்தையும் பொடி பூசி உடலை மறைத்தல் மற்றும் கவர்ந்த பொருளை மறைத்தல் ஆகியன அருவத்தையும் குறிக்கின்றன. 

Sunday, January 08, 2012

திரும்பவும் ஒரு முறை

இன்று புத்தகக் கண்காட்சியில் கேபிள் சங்கரைச் சந்தித்தேன். போனதன் முக்கிய காரணமே அதுதான்.  அவருடன் பேசிக்கொண்டிருந்த போது வலைப்பதிவிடுவதை விட்டு விட்டதாக சொன்னேன்.

அவருடைய கருத்துகளைக் கேட்ட பின் மீண்டும் பதிவிட வந்திருக்கிறேன்.

இன்றைய சந்திப்புகளில் கேபிள் சங்கரைத்தவிர ஹரன் பிரசன்னாவை கிழக்கு ஸ்டாலில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு 2 மணிநேரம் சங்கருடன் சுற்றி நிறைய புதிய நண்பர்களை சந்தித்த பிறகு சங்கரே போ என்று துரத்தும் முன் விடை பெற்றேன்.

சுற்றி வரும் போது பெரியார் தி க மலையாள மனோரமா அரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மேலாளரை எப்போது அரங்கை காலி செய்வீர்கள் என்று படுத்திக் கொண்டிருந்தார்கள்.

எனக்கென்னவோ அந்த அரங்கைக் காலி செய்வதால் எந்த மாற்றமும் வரும் என்று தோன்றவில்லை. நாங்கள் போராட்டம் நடதிதினோம் என்று கணக்கு கட்டுவதற்கு உதவலாம்.

இந்தப் போராட்டம் கலைஞர் வீடு முன்னால் தினம் நடத்தி ஆட்சிக்கான ஆதரவை திரும்ப பெற வைக்க முடியுமானால் , மத்திய அரசு நிச்சயம் எதாவது செய்யும் என்றே தோன்றுகிறது.

மலையாள மனோரமா அரங்கை முற்றுகை இடுவதால் நாளை காலை உம்மன் சாண்டிக்கு ஞானம் பிறக்க போகிறதா என்ன .. எல்லாம் தேர்தல் அரசியல்.

Wednesday, August 29, 2007

சானியாவின் அசத்தல் வெற்றி.. தின மலர் style.

சானியாவின் அசத்தல் வெற்றி.. தின மலர் style.

சானியா வென்றதை விட தினமலர் அவருக்கு 3 set கள் விளையாட வாய்ப்பு அளித்தது சிறப்பான செய்தி. படித்துப் பாருங்கள்.



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் : 2ம் சுற்றில் சானியாநியூயார்க் : யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா முன்னேறியுள்ளார்.முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது.பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 27வது இடம்பிடித்துள்ள இந்தியாவின் சானியா மிர்சா, 44வது இடத்திலிருக்கும் எஸ்தோனியாவின் கையா கனேபை சந்தித்தார். துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய சானியா முதல் செட்டை 62 என எளிதாக வென்றார். தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் இரண்டாவது செட்டையும் 67 என தன்வசப்படுத்தினார். இறுதியில் 62, 63 , 61 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை லாரா கிரான்வில்லியை (தரவரிசையில் 60) எதிர்கொள்கிறார்.

Tuesday, May 23, 2006

ஒரு துளி மை



இப்போதும் நம்ம உள்ளுர் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு துளி மையில் ஒட்டுமொத்தமாக வேலை நீக்கம் செய்தார் என்கிற வசனம் கூறுவார்களா.. (செய்தி நன்றி தமிழ் முரசு)


அன்புடன் விச்சு

Sunday, May 21, 2006

உண்மையா பொய்யா

கண்ணால் காண்பதுவும் பொய்யே.. என்று ஒரு பாடல் உண்டு..

இந்த வலையகத்தின் காட்சியைக் கண்டு அது தான் நினைவுக்கு வந்தது.
இது 'FLASH 'ல் அமைந்துள்ளது.

அதில் கணட அறிவிப்புகளைப் பின் பற்றவும். படம் வந்த பின் உங்கள் எலியைச் சிறிது முன்னோக்கி அசைத்தால் படம் நகரும்.. பின்னோக்கி அசைத்தால் அது உன்னொரு அனுபவம்..

அன்புடன் விச்சு

Thursday, May 18, 2006

நம் பிரச்சினைகளுக்கு முடிவு

அகத்தியர் யாஹூ வலைக் குழுவில் வந்த ஜெ பி அவர்களது கடிதம். மிக நன்றாக இருந்ததால் இங்கே இடுகிறேன்.

இதுபோல பல நல்ல கருத்துக்கள் இந்த வலைக் குழுவில் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

திஸ்கி எழுத்துருவில் அமைந்தது இந்த வலைக் குழு.

அன்புடன் விச்சு

ஓர் உண்மைச் சம்பவம்.

இளைஞர்களுக்குப் பயனாக இருக்ககூடியது. இதற்காகச் சீனாவுக்குப் போவோம்.

சீனா 1910-ஆம் ஆண்டில் குடியரசு ஆகியது. ஆனால் குடியரசின் தந்தை ஸன் யாட் ஸென் விரைவில் இறந்துபோனதால் நாடே துண்டு துண்டாக விளங்கியது. Wஅர் ளொர்ட்ச் எனப்படும் ஆசாமிகள் சொந்தமாகப் படைகளை வைத்துக்கொண்டு யதேச்சாதிகாரமாக ஆண்டுகொண்டிருந்தனர். அவர்களில் சியாங் காய் ஷெக் என்பவர் டாக்டர் ஸன் யாட் ஸென்னின் சகலை. அத்துடன் அவருடைய க்வோமின்டாங் கட்சியின் தலைவர். ஆகவே வெள்ளைக்கார நாடுகள் சில, அவரையே அதிகாரபூர்வ அதிபராக நினைத்து ஆதரவு கொடுத்தன. நான்கிங் என்னும் நகரத்தைத் தம்முடைய மையமாக வைத்துக்கொண்டிருந்தார். ஷாங்ஹாய் என்பது இன்னொரு பெரும் நகரம் அது open City என்னும் அந்தஸ்தைப் பெற்றது. எல்லா நாட்டினருக்கும் அங்கே தனி இட ஒதுக்கீடு இருந்தது. அங்கே அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் வசித்துவந்தனர். ஹாங்க்காங் என்னும் நகரம் பிரிட்டிஷ் காலனி. மக்காவ் என்பது போர்ட்டுகீஸ்.

பலநாடுகள் சீனாவில் நாட்டாண்மை செலுத்தின. அவற்றில் ஜப்பான் முன்னணியில் இருந்தது.

1939-ஆம் ஆண்டு சீனாவின் வடபகுதியாகிய மன்ச்சூரியாவை ஜப்பான் பிடித்துக்கொண்டது. பின்னர் சீனாவின் முக்கியப் பகுதிகளைப் பிடித்துக்கொண்டது.

மிக அநாகரிகமாக மிருகவெறியுடன் ஜப்பானியர் சீன நாட்டைச் சூறையாடினர்; மக்களைக் கொன்று குவித்தனர். எண்பதினாயிரம் பெண்களைக் கற்பழித்தனர். Rape of Nanking என்று வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம் இது.

அந்தக் காலகட்டத்தில் ஷாங்ஹாய் நகரில் ஒரு வெள்ளைக்காரர் ஒரு பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைக் கட்டிக்காத்து வந்தார். பெயர் ஞாபகமில்லை. ஏதோ ஒரு டாம், டிக், அல்லது ஹேரி என்று வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான கம்பெனிகளையெல்லாம் கலைத்து, அவற்றின் அஸெட்டுகளையெல்லாம் ஜப்பானியருக்கு மாற்றிவிடும்படி உத்தரவிட்டிருந்தார்கள். டாமின் கம்பெனியின் அஸெட்டுகளுக்கும் அதே கதி.
இந்த வேலைகளையெல்லாம் மேற்பார்வையிட ஒரு ஜப்பானிய அதிகாரி இருந்தான் அவனுக்குக் கீழே நிறையப்பேர் வேலைசெய்தார்கள்.
அந்த அதிகாரி ஒரு கடற்படைத் தளபதி. காலேஜில் எக்கானாமிக்ஸ் படித்திருந்தான்.ரொம்பவும் கோபக்காரன்.டாம் ஒழுங்காகத்தான் வேலை செய்தார். ஆனால் ஹாங்காங்கில் இருந்த கிளையின் அஸெட்டை அசட்டையாக விட்டுவிட்டார்.

யாரோ அட்மிரலிடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்கள்.
டாம் அந்தச் சமயத்தில் ஆபீஸில் இல்லை. அவரிடம் அவருக்கு வேண்டப்பட்ட தலைமைக் கணக்காயர் விபரத்தைச் சொன்னார். அட்மிரல் கட்டுக்கடங்காத கோபத்துடன் கண்டதையெல்லாம் காலால் எற்றி உதைத்து உறுமித் தீர்த்துவிட்டானாம். ஜப்பானுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் கத்தியிருக்கிறான்.

அப்படிப்பட்ட குற்றத்துக்கு ஆளைப் பிடித்துச் சித்திரவதை செய்வார்கள். பின்னர் தலையை வெட்டிவிடுவார்கள். தலையை எங்காவது நாற்சந்தியில் மூங்கிலில் குத்திவைத்துவிடுவார்கள். அவருடைய நண்பர்களாகிய பல வெள்ளைக்காரர்கள் அந்த மாதிரியாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த செய்தியை டாம் கேள்விப்பட்டது ஒரு சனிஞாயிறன்று. விடுமுறை.
பயங்கரமான கவலை டாமுக்கு ஏற்பட்டுவிட்டது.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் சொந்தமாக ஒரு முறை வைத்திருந்தார்.

அந்த முறைக்கு அடிப்படையாக விளங்கியவை இரண்டே இரண்டு கேள்விகள். அவற்றை டைப் செய்துவைத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கீழே எழுதிக்கொள்வார்.

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?

2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?

முதல் கேள்விக்குக் கீழே பதிலை எழுதினார்:

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன்?

"நாளைக் காலையில் ஜப்பானிய கெம்ப்பித்தாய் போலீஸ் என்னைப் பிடித்துக்கொண்டுபோய் சித்திரவதை செய்யப்போகிறது".
அடுத்த கேள்வியைப் படித்தார்.

2. அதற்காக நான் என்ன செய்யமுடியும்?

யோசித்தார். யோசித்தார். அப்படி யோசித்தார். பலமணி நேரம் கழித்து நான்கு பதில்களை அந்தக் கேள்வியின்கீழ் எழுதினார்.

1. அந்த அட்மிரலிடம் நானே நேரில் விஷயத்தைச் சொல்லலாம்.
ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஒரு மொழிபெயர்ப்பாளர் வழியாகச் சொல்லச் செய்யலாம். சொல்பவன் ஒழுங்காகச் சொல்லவில்லையென்றால் அட்மிரல் தவறாகப் புரிந்துகொள்வான். இதையெல்லாம் போய் விசாரித்துக்கொண்டிருப்பதற்குப் பதில் சித்திரவதைக்கூடத்துக்கே நேரே அனுப்பிவிட்டு சும்மா இருக்கலாம் என்று அட்மிரல் எண்ணலாம்.

2. ஓடிப்போக முயற்சிக்கலாம்.
இது முடியாத காரியம். எப்போதும் என்னைத் தொடர்ந்து யாராவது வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஓடிப்போனாலும் எங்கே போவது? பார்த்தவுடன் சுட்டுப் போடுவார்கள்.

3. தங்கியிருக்கும் அறையிலேயே இருந்துகொண்டு ஆபீஸ¤க்கே போகாமல் இருந்துவிடலாம்.
ஆளைக் காணாததால் கெம்ப்பித்தாய் ஆட்களை அட்மிரல் அனுப்பிவைப்பான். அவர்கள் பிடித்துக்கொண்டுபோய் அட்மிரலிடம் விடுவார்கள். அவன் சித்திரவதைக் கூடத்துக்கு உடனே அனுப்பிவிடுவான். ஒன்றுமே கேட்கமாட்டான்.

4. எப்போதும்போல் ஒன்றுமே நடக்காததுமாதிரி திங்கட்கிழமைக் காலையில் வழக்கம்போல் ஆபீஸ¤க்குப் போகவேண்டியது. திங்கட்கிழமைக் காலையில் அட்மிரல் ரொம்பவும் பிசியாக இருப்பான். என்னைப் பற்றி சிந்திக்கமாட்டான். அப்படி ஏதும் ஞாபகம் வரும்போது கொஞ்சம் நிதானமாக இருக்கக்கூடும். ஆகவே நேரத்தை இதில் போய் செலவிடுவானேன் என்று எண்ணி பேசாமல் இருந்துவிடக்கூடும். அப்படியே கேட்டாலும் அப்போது அதற்கு ஏற்றவகையில் பதிலைச் சொல்லிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. "தவறு செய்தவன் தைரியமாக ஆபீஸ¤க்கு வருவானா? ஓடிப்போகவல்லவா முயற்சிப்பான். எல்லாரும் அப்படித்தானே செய்கின்றனர்?" என்று நினைப்பான்.
தப்பித்துக்கொள்வதற்கு நான்காம் பதிலில் இடம் இருந்தது.

ஆகவே அதையே செய்வதாக டாம் முடிவு செய்துகொண்டார்.
அதன் பிறகு அவருக்கு இனம் புரியாத பெரும் நிம்மதி ஏற்பட்டது.
ஆகவே திங்கட்கிழமைக் காலையில் டாம் ஆபீஸ¤க்குச் சென்று அவருடைய இருப்பிடத்தில் அமர்ந்திருந்துகொண்டு ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அட்மிரல் வந்து அவன் இடத்தில் அமர்ந்தான்.
டாமை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். சிகரெட்டை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அவனுடைய வேலையைப் பார்க்கலானான். நிறைய வேலை.திங்கட்கிழமையல்லவா?
ஆறு வாரங்கள் கழித்து அவனை தோக்கியோவுக்குத் திரும்ப அழைத்துக்கொண்டனர். டாமின் கவலைகளும் பயங்களும் தீர்ந்தன.

அப்புறம் டாம் என்ன ஆனார்?யுத்தம் முடிந்தபிறகு அமெரிக்கா சென்றார்.அவர் எழுதிய கட்டுரையில் அவருடைய ·பார்முலாவைக் கொடுத்திருக்கிறார்.

அதை வைத்து அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க வர்த்தகராக விளங்கினார்.

1. நான் எதைப் பற்றி கவலைப்படுகிறேன் என்பதை எழுதிக்கொள்ளவேண்டும்.

2. அதைப் பற்றி நான் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைத் தெளிவாக எழுதிக்கொள்ளவேண்டும்.

3. அதைத் தொடர்ந்து நான் என்னதான் செய்யவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும்.

4. அதனை உடனடியாக செய்துமுடிக்க முனையவேண்டும்.

அன்புடன்

ஜெயபாரதி

Friday, May 05, 2006

தமிழ்த் தேர்தல் 2006


உங்கள் ஓட்டு ரஜினிக்கா கமலுக்கா..

IBN CNN இணைய தளத்தில் தமிழகத்தின் பிரபல புள்ளி யார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன..
http://www.ibnlive.com/qotd.php?vote_id=130

ரஜினி
கமல்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
மருத்துவர் சாந்தா
ஏ ஆர் ரஹ்மான்
விஸ்வனாதன் ஆனந்த்

தற்போது அப்துல் கலாம் அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்..

நீங்களும் ஓட்டளியுங்கள்..

இவர்கள் யாருமே தேர்தலில் நின்று ஓட்டு வாங்கப் போவதில்லை அதனால் தைரியமாக ஓட்டளியுங்கள்.

அன்புடன் விச்சு

பொய்யும் பொய்யர்களும்

நேற்றைய பிரதமரின் பிரசாரத்திற்குப் பிறகு சில விஷயங்கள் பதிலில்லாமல் நெஞ்சை நெருடுகின்றன.

தற்செயலாக இரண்டுமே தயாநிதி, வை கோ தொடர்புடையவை.

தன்னந்தனியாக தலைவன் என்று ஒரு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சி அமைக்கும் தகுதி உடையவர்கள் என்று நான் கருதும் சில தலைவர்களில் இவர்கள் இருவரும் முதன்மையானவர்கள். (சிதம்பரம், திருமா போன்றவர்கள் கட்சி நடத்தலாம்.. ஆட்சியைப் பிடிப்பர்களா என்பது கேள்விக்குறியே. வி.க தேர்தல் முடிந்த பிறகு கட்சியைத் தொடர்ந்து நடத்தட்டும் பிறகு கருத்து கூறுகிறேன்.)

சில காலத்திற்கு முன் வை கோ தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சேர்த்து தி மு க மந்திரி பதவி வாங்கி விட்டது என்றும் அதற்கு தயாநிதி " பிரதமர் வை கோ வைப் பொய்யர் என்று சொன்னார் அது பற்றி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரும் போது குறிப்பிடுவார்" என்றும் கூறி இருந்தார்கள்.

பிரதமர் மறந்து விட்டாரா அல்லது தயாநிதி இதை யார் சரி பார்க்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் (பார்த்தால் மட்டும் என்ன செய்யமுடியும்?) "அடித்து விட்டாரா"?

இதே போல் வை கோ டா டா நிறுவனத்தை தயாநிதி மிரட்டினார் என்று குற்றம் சாட்டிய போது, அவர் மேல் மான நஷ்டவழக்கு தொடர்ந்தார் தயாநிதி.. அது பற்றியும் பிரதமர் தயாநிதியின் BOSS என்ற முறையில் அவர் யாரையும் மிரட்டவில்லை என்று கூறி இருக்கலாம். இது தயா நிதிக்கு நிறைய அனுதாபங்களைப் பெற்றுத் தந்திருக்கும். ஒரு 5 % ஓட்டுகள் (படித்தவர்களின்) கூட அதிகமாக கிடைத்திருக்கலாம்.. இப்பொது அதை சொல்லாமல் விட்டதால் இந்த மான நஷ்ட வழக்கு ஒரு நாடகமோ என்று எண்ண வைக்கிறது. தேர்தல் முடியும் வரை இப்படி ஒரு நாடகமாடி விட்டு, பிறகு இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமே. மக்கள் மனதில் இவர் பக்கம் நியாயம் இருப்பது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்க இது உதவு கிறதே..

இதே நிலை தான் கருத்துக் கணிப்புகளுக்கும்.. எதாவது ஒரு கட்டுப் பாட்டுக்குள் இந்த க. க. வர வேண்டும்.. இல்லைஎன்றால் நான் கூட 25 பேரிடம் கருத்து கணித்தேன் என்று கூறி (தொகுதி எண்ணிக்கையில் ஒரு சதவீதம்.) ஜெ அல்லது மு க 233 இடங்களும் வி.க ஒரு இடமும் வெற்றி பெறுவார்கள் என்று பதிவிடலாம்.. (அதென்ன வி க ஒரு இடம் என்று கேட்கிறீர்களா.. இதுவரை அத்தனை பத்திரிகைகளும் ஒத்துக் கொண்ட ஒரெ விஷயம் அது தான்..)

தேர்தல் பொய்களைக் கட்டுப் படுத்த எதாவது சட்டம் வந்தால் நன்றாக இருக்கும். இந்த முறை ஜெயித்த கட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடத் தடை என்பது போல..

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள். இதெல்லாம் கனவுதான் காணமுடியும் போல ...

அன்புடன் விச்சு

நீல சாயம் வெளுத்துப் போச்சு

ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:தி.மு.க., அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வரத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது நிழலில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும், என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். (Dinamalar)

அப்போ ஜெ சொன்னது சரிதானா.. மத்திய அரசு உதவுவதில்லை. தமிழ்நாட்டு நிதிநிலைமையில் இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்க முடியாது.. 3.50 க்கு வழங்கவே 1300 கோடி செலவாகிறது. ப.சி. வேறு மான்யங்களைக் குறைக்கிறார் என்று..

இந்துஸ்தான் டைம்ஸில் வந்ததாக கூறப்படும் "வாக்குறுதிகளைக் கொடுத்து விடலாம், நிறைவேற்றும் போது பார்த்துக் கொள்ளலாம்" என்பதும் இந்த பேச்சோடு ஒத்துப் போகின்றது போலத் தெரிகிறதே..

யாராயிருந்தாலும் நிறைவேற்ற மட்டார்கள். தி மு க அறிவியல் பூர்வமாக யாரையாவது விட்டு "பொதுமக்கள் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள்" என்று பொது நல வழக்கு போட வைத்து வழங்காது என்று நெல்லை கண்ணன் என்பவர் பேசியதும் நினைவுக்கு வருகிறது..

அய்யோ பாவம் மக்கள்.


வாக்குறுதி. (ஹைக் கூ)

ஏழை நாய்
எலும்புத்துண்டு
அட, இதுவும் ப்ளாஸ்டிக்..

அன்புடன் விச்சு

Saturday, April 29, 2006

தேர்தல் காலம்

இது பத்திரிகைகள் தங்கள் வலையகங்களை காசு கொடுத்துப் படிக்கும் தளமாக மாற்றும் காலம் போலத்தெரிகிறது.

துக்ளக் போல எடுத்ததுமே சந்தா தளமாக இல்லாமல் முதலில் இலவசமாகவும் பின் பதிவு செய்து படிக்கும் தளமாகவும் மாறி இப்போது சந்தா கட்டி படிக்கும் தளமாக பல தளங்கள் மாறும் போல தெரிகிறது.

இன்றைய மாறுதல் நக்கீரன். (www.nakkheeeran) (கவனிக்க: மூன்று e ).

இருபது அமெரிக்க வெள்ளி சந்தா. அறிமுக சலுகையாக 15 வெள்ளி.

அடுத்து குமுதமும் இதே வழியில் போகும் போலத்தெரிகிறது. (தள வடிவமைப்பு மாறியிருக்கிறது இந்த வாரம்)

தேர்தல் முடியும் வரை (என்ன இன்னும் ஒரு வாரம் தான்) தமிழ்முரசும் தினகரனும் சந்தா தளங்களாக மாறாது என்று நினைக்கிறேன். இது தினமலருக்கும் பொருந்தும்.

அது சரி இந்தியாவில் இருந்த போது ஆளுக்கு ஒரு பத்திரிகை வாங்கி பரிமாறிக்கொள்ளுவது பழக்கம்.. இங்கேயும் அப்படிதான் செய்யவேண்டும் போல இருக்கிறது.

பத்து பத்திரிக்கை 20 வெள்ளி என்றால் வரவு செலவு கணக்கில் இடிக்குமே..

இல்லையென்றால் கேபிள் தொலைக்காட்சி போல் யாராவது பொதுவாக சந்தா வசூலித்து பல பத்திரிகைகளை குறைந்த விலையில் தரலாம்.

அடுத்த வலையகத்தேர்தலில் ப ம க இதை இலவசமாக தருவதாக வாக்குறுதி தரலாம். (முக மூடியார் உதைக்க வருமுன் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)

அன்புடன் விச்சு

Thursday, April 27, 2006

இணையத்தில் துக்ளக் - ஒரு கேள்வி

இணையத்தில் துக்ளக் புலி வருது கதை சொல்லி வந்தே விட்டது.
20 அமெரிக்க வெள்ளி சந்தா.

இனிமேல் துக்ளக் குழுவில் யாராவது ஸ்கேன் (தமிழில் தெரியவில்லை) செய்து போட மாட்டார்களா என்று காத்திருக்க வேண்டாம்.

துக்ளக்கிற்கு பாராட்டுகள். லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வருவார் என்று எதிர்பார்ப்போம்.

இந்த வார கேள்வி பதிலில் ஒரு கேள்வி.. எனக்கு புரியவில்லை.. உங்களுக்கு புரிந்தால் விளக்குங்களேன்.

G. பாலசுப்பிரமணியன் சேதுநாராயணபுரம்

கே: ஒ-க்கு அடுத்து தானே ஓ- வரும். இது புரியாமல் சிலர் ஓ-விற்கு அடுத்துதான் ஒ- வரும் என்கின்றனரே?

ப: இவற்றிற்கெல்லாம் முன்பாக 'ஆ'- வருகிறதே! அப்படியானால் BJP க்கு தான் வெற்றி வாய்ப்பா? பலே!

துக்ளக் இணைய தளம். WWW.Thuglak.com

அன்புடன் விச்சு

Sunday, April 16, 2006

தேர்தல் கவிதைகள்

வாக்குறுதி (ஹைகூ )

எலும்புத் துண்டு
ஏழை நாய்
அட இதுவும் பிளாஸ்டிக்

மன்னர்கள்

கையிலே மை
ஊரெல்லாம் பொய்
முடிவுகள் வரும் வரை.

நாங்கள் மன்னர்கள்
ஆனால்
கிரிடம் அவர்கள் தலையில்

கையிலே காசு
விரல் நுனியில் மை
விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.

திருடனா பொறுக்கியா..
தேர்ந்தெடுக்க வாய்ப்பு
ஒரே முடிவு தான்..எனக்கு

நிலம் தருவார் இலவசமாய்
பயிரிட ஆசை தான்
வருவாளா பொன்னி

பட்டினியால் எலிவேட்டை
இனி தினம் மூன்று காட்சி
காணலாம் கலர் டிவியில்

ஓட்டுக்கு நூறு ரூபாய்
வட்டியொடு வசூலிக்க
திறப்பார்கள் கள்ளுக் கடை

முடிவில்லாதது

சத்துணவோடு முட்டை பொங்கலுக்கு வேட்டி சட்டை
இலவசமாய் மின்சாரம் கடன்களெல்லம் ரத்தாகும்
காவிரியில் தண்ணீர் கணக்கின்றி வேலை வாய்ப்பு
எதுவும் நடக்கவில்லை ஏழ்மையும் மாறவில்லை

செருப்பின்றி நடந்தவர்கள் சொகுசுக் கார் வாங்கிவிட்டார்
ஓட்டுப் போட்டு வளர்த்தவர்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டோம்
"என்னாச்சு வாக்குறுதி ஏமாற்றப் பார்க்காதே
சொன்னதைச் செய்யாமல் திரும்பவந்து நிற்காதே "

"ஐயையோ அண்ணாச்சி அப்போ நான் வேற கட்சி
இந்த கட்சி ஆட்சியிலே தேனொடும் பாலோடும்"
ஆட்சிகள் மாறியது ஆண்டுகள் ஓடியது
தேனும் பாலுமென்ன தண்ணீரே ஓடவில்லை

ஊழலென்றார் கோடியென்றார் கூட்டம் கூட்டி திட்டுகின்றார்
அத்தனையும் அதே வரிகள் ஐய்ந்து வருட இடைவெளியில்.
கோட்டைக்குப் போனவர்கள் கோட்டை கட்டி வாழுகின்றார்
வாக்கை அளித்தவர்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும்
மாறவில்லை வாக்குறுதி மாறவில்லை தேர்தல்
நம்பிக்கை இழக்கவில்லை நாட்டு நலன் கருதி
மறக்காமல் வோட்டளிப்போம் மறுபடியும் மறுபடியும்

வனவாசம்.

வேலைப் பளு அதிகமானதோ எழுத நேரம் இல்லாமல் போனதோ வேறு காரணங்கள் எதுவுமே இல்லை.. எழுதத் தோன்றவில்லை எழுதவில்லை.

ஆனால் சில பல கருத்துக் களைப் பற்றி எழுதாமலே இருப்பது நல்லது என்று தோன்றியதாலும் எழுதவில்லை..

இப்போது திரும்ப எழுதலாமா என்று ஒரு எண்ணம். சபலப் பட்டு சர்ச்சைகளில் சிக்கி குமுதம் ரிப்போர்ட்டரில் பேர் வரவேண்டுமா என்பது மற்றொரு சிந்தனை..

இருந்தாலும் மீண்டும் என்பதிவுகள் இடப்படும்.. இதுவரை என் பதிவைப் படித்து கருத்து சொன்னவர்களுக்கும் இப்போது புதியதாக என் பதிவைப் படிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.

வழக்கம் போல கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் விச்சு.

Wednesday, January 04, 2006

என்னுடைய பிரச்சினை

மொத்ததில் எனக்குத்தான் பிரச்சினை போல இருக்கிறது.

நேற்று "கண்ட நாள் முதல்" என்று ஒரு படம் பார்த்தேன். திரும்பவும் நல்ல கதை, நடிப்பு.. மொத்தத்தில் நல்ல படம்..

ஆனால் அதிலும் கதாநாயகியுடைய சகோதரி கல்யாணத்துக்கு முன்னால் கர்ப்பமாகி விட்டு வீட்டை விட்டு ஓடிப் போகிறார்.. என்ன கொடுமையடா சாமி இது.. எனக்கு ஏன் இந்த சோதனை.. நான் பார்க்கும் படங்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறதா.. விமர்சனங்களில் நல்ல படம் என்று சொன்ன படங்களைத்தானே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.

அடுத்து உள்ளம் கேட்குமே, வணக்கம் தலைவா அல்லது கஸ்தூரிமான் இந்த மூன்றில் இது போல காட்சி அமைப்பில்லாத படம் எது என்று யாராவது சொல்லுங்களேன். அதைப் பார்க்கிறேன்.

ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார்.

குஷ்பு சொன்னது.."ஆள் கிடைக்கவில்லை என்றாலும் கடைத்தெருவில் நின்றாவதுபிடிங்க" என்று சொன்ன மாதிரி இருந்தது...

ஆனா சரியாப் பார்த்தா அப்படி குஷ்பு சொல்லவில்லை.. உங்கள் அடிமனதில் குவிந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் தான் சொல்லுகின்றன நண்பரே.. உங்களுக்கே நீங்கள் சொல்வது தவறு என்று தோன்றுவதால் தானே பெயரை மறைத்து பின்னூட்டமிடுகிறிர்கள்..

அது சரி குஷ்பு வுக்கு பண்பாடு கற்றுத்தருபவர்களுக்கு ஒரு கேள்வி.. மறப்போம் மன்னிப்போம்னு சொன்னதும் நம்ம பண்பாடு தானுங்களே.. வசதியா மறந்துட்டோமா.. என்னமோ மாமியார் மருமகள் மண்குடம் பொன்குடம்னு எதோ அசந்தர்ப்பமா நினைவுக்கு வருது..

கருத்து என்பது ஏப்பம் அல்ல யார் வேண்டுமென்றாலும் விடுவதற்கு என்று தலைவரே சொன்னபிறகு நான் எல்லாம் கருத்து சொல்லலாமா..
மன்னிச்சுக்கோங்க..

அன்புடன் விச்சு

Tuesday, January 03, 2006

குஷ்புவும் இயக்குனர் சேரனும்

சமீபத்தில் தவமாய்த்தவமிருந்து படம் பார்த்தேன்.

கதை நன்றாக இருக்கிறது. பலருடைய நடிப்பும் அபாரம். இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாமோ என்னமோ.

ஒரு விஷயம் உறுத்தியது.

திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச்சொன்னதை எதிர்த்து ஊரைக்கூட்டிய (துடைப்பத்தோடும் தான்) தமிழ் பண்பாட்டுக் காவலர்கள், சேரன் படிக்கும் போதே உறவு வைத்துக் கொண்டு அந்தப் பெண் கர்ப்பமாகி வீட்டைவிட்டு ஓடிப் போவதாகக் காட்டியதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாதது ஏனோ.. (பாதுகாப்பாக உறவு வைத்தால் தான் தவறோ)

திரைப்படங்களில் புகை பிடித்தால் பார்ப்பவர்கள் மனது கெட்டு விடும் என்று கூறுபவர்களுக்கு, திரைப்படத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுவார்கள் என்று தோன்றாதது விந்தையே..

உங்கள் எண்ணத்தை எழுதுங்கள்..

அன்புடன் விச்சு

Tuesday, November 01, 2005

தீபாவளியும் ரம்ஜானும்



உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி மற்றும் ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.


அன்புடன் விச்சு.