தீபாவளிக்கு 4 நாள் முன்னால். 10 வருடங்களுக்கு முன்னால். என் பெண் மற்றும் பிள்ளைக்கு திருமணம் ஆவதற்கு
முன்னால்.. இத்தனை முன்னால் களுக்கு
முன்னால் , ஒரு இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய ஒரு சைக்கிளால்
விளைந்த கதை.
திடீரென்று ஃப்யூஸ் பெட்டியிலிருந்து புகை வந்தது.. உடனே எலெக்டரிசியன். தீபாவளி அவசரத்தில் யாருமே கிடைக்க வில்லை..
பக்கத்து வீட்டு பெரியவர் ஒரு தொலைபேசி எண்ணைக்
கொடுத்தார்..
அவனை அழைத்து அவன் வருவதற்கு முன்னால், “சுருக்”காக என் சைக்கிளின் கதை.
நான் சிறுவனாக இருந்த போது, எங்கள்
ஊரில் சைக்கிள்கள்தான் முக்கிய பயண வாகனம். எல்லாரிடமும் ஒன்றோ ஒன்றுக்கு
மேற்பட்டதோ இருக்கும்.
எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தா என்று தந்தையை தொந்தரவு செய்து ஒரு நாள் “வா
போய் வாங்கிக் கொண்டு வரலாம்” என்று
சொன்னார். கடைத் தெருவுக்கு போவார் என்று
பார்த்தால், கடைசி வீட்டின் கதவைத் தட்டினார்.
ஒரு பெரியவர் வெளியே வந்து, வா ஸ்வாமிநாதா , இவன் தான் உன் பிள்ளையா என்று
கேட்ட படி கதவைத் திறந்து உள்ளே அழைத்துச் சென்றார்.
பரஸ்பரம் உபசாரம் முடிந்த பிறகு, இந்த ரூமில் இருக்கிறது. போய் எடுத்துக் கொள் என்று சொல்லி கை காட்டினார்..
ஒரு புதியதும் இல்லாத ஆனால் பயன் படுத்திய அறிகுறியே தெரியாத ஒரு சைக்கிள்
அங்கே இருந்தது. கிடைக்காத பொருள் கிடைத்த பெருமை , சந்தோஷம், கொஞ்சம் வருத்தம்
(புத்தம் புதுசு இல்லையே), எல்லாம் நிறைய, அதை ஒட்டிக் கொண்டு வீடு வந்து
சேர்ந்தோம்.
அன்றிலிருந்து நான் அந்த சைக்கிளை ஒரு முறையாவது ஓட்டாத நாட்கள் குறைவு.. சென்னைக்கு வந்ததும்
இங்கேயும் எடுத்து வந்து விட்டேன்.
அந்த சைக்கிளில் ஸ்ரீ ராம் என்று
ஆங்கிலத்தில் பாத்திரங்களில் பொறிப்பது
போல பொறித்திருக்கும்.
நான் ஸ்ரீராமும் நானுமா கடைத்தெரு வரை போய் விட்டு வருகிறேன் என்று சொல்லும்
போது என் மனைவி, பின் என் குழந்தைகள் எல்லாரும் ஒரு மாதிரி சிரிப்பார்கள்.
என் வீட்டில் 5 ஆவது உருப்படி என்று
வைத்துக் கொள்ளுங்களேன்.
ரொம்ப நேரமாக எலெக்ட்ரீஷியன் வரலையே என்று என் மனைவி என் சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்தாள் . வெளியில் போய
நின்றதும் என் வயதை ஒத்த ஒருவர் என்னிடம்
வது 18 ம் நம்பர் வீடு இது தானா என்று கேட்டார் .. ரொம்ப தெரிந்த முகமாய்
இருந்தது..
ஆமாம், நீங்கள் தான் எலெக்ட்ரீஷியனா என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தோம்..
வாசலில் நின்ற சைக்கிளை பார்த்து விட்டு, அவர் நின்று விட்டார்.
உள்ளே வாங்க என்று சொன்னதும், அரை மனசாக அந்த சைக்கிளைப் பார்ப்பதை விட்டு
விட்டு பிரியா மனமில்லாமல் வருவது போல உள்ளே வந்தார்..
அடுத்த 30 நிமிடங்களில் வேலையை முடித்து விட்டார். என்னிடம் பணம் பெற்றுக்கொள்ளும் பொது , “சார்
தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த சைக்கிள் உங்களிடம் எப்படி?” என்று கேட்டார்.
நான் உடனே ஏன் அய்யா ஏதாவது பிரச்சினையா என்று கேட்டேன்.
அவர் கண்களிலிருந்து கண்ணீர் போல போல வென்று கொட்டியது..
ஏதோ பழைய ஞாபகம் போல என்று நினைத்து.. அழுவாதீங்க அய்யா , இங்க உட்காருங்க என்று சோபாவில் உட்கார
வைத்தேன்.
பிறகு அவர், சார் இது என்னுடைய சைக்கிள் என்று சொன்னார்.
இல்லையே அய்யா, இருக்க முடியாதே.. 25 வருடமாக என்னிடம் தானே இருக்கிறது
என்று சொன்னேன்.
நீங்கள் பரசுராமபுரமா, என்று கேட்டார்..
"அது தான் எங்க ஊர். ஆமாம், உங்களுக்கு அங்க யாரையாவது தெரியுமா?"
"நானும் அதே ஊர் தான் , வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். அப்புறம் திரும்ப
போக வில்லை."
"இந்த சைக்கிள் என் தந்தையார் எனக்கு பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாக வந்ததற்காக வாங்கித் தந்தது.. அதில் போட்டிருக்கும் ஸ்ரீராம் என்ற பெயர் என் பெயர்தான். கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்று பாத்திரக் கடையில் என் பெயரை சைக்கிளில் பொறித்து, இது போலவே எந்த வேலை செய்தாலும் அதில் முதன்மையாக சிறப்பாக செயல்படவேண்டும் என்று சொன்னார். அருகில் ஏன் மனைவி முறைத்தால். பேச்சை மாற்றும் விதமாக, மிக அருமையாக வேலை செய்தீர்கள், எத்தனை வருடமாக இந்த தொழில் செய்கிறீர்கள் என்றேன்.
"ஒரு முப்பது வருடம் இருக்கும்.. வேலை கற்றுக் கொண்டதும் தொடங்கியது.. இப்போது ஸ்ரீராம் எலெக்ட்ரிக்கல்ஸ் என்று கடைத்தெருவில் கடை வைத்திருக்கிறேன். வழக்கமாக நான் வரமாட்டேன். இன்று மற்ற பணியாளர்கள் தீபாவளிக்காக ஊருக்குப் போய் விட்டதால், நானே வந்தேன்"
வேளச்சேரி பகுதியில் மிகப் பெரிய கடை. இவன் சோடை போக வில்லை என்பது புரிந்தது.
இந்த சைக்கிள் அந்த வீடு என்று ஒரு கணக்கில், ராமச்சந்திரன் சார் பையனா நீங்க என்று கேட்டேன்.
"ஆமாம் அவரைத் தெரியுமா?"
"நானும் அதே தெருவில் தான் இருந்தேன். விளக்கு கம்பத்துக்கு பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்குமே அந்த வீடு."
ஸ்வாமினாதன் சார் பையனா? நீங்க என்று உடனே வியப்புடன் கேட்டார். "நான் உங்க அக்கா சாந்தி செட். அவங்க நல்லா இருக்காங்களா?"
அக்கா என்னைவிட பன்னிரெண்டு வயது பெரியவள். "நன்றாக இருக்கிறார்கள்,. பெங்களூரில் பையனுடன் இருக்கிறார்"
"உங்கப்பா இன்னும் அதே வீட்டில் தான் இருக்கிறார்" என்று சொன்னேன்.
"அப்படியா, தயங்கிய படியே, நான் ஒரு சின்ன பிரச்சினையினால் ஊரை விட்டு வெளியேறி விட்டேன். பல இடங்களில் சுற்றி, இந்த வேலையை கற்றுக்
கொண்டு இங்கேயே இருந்து விட்டேன், வீட்டுக்கு சென்றால் உன்னை எப்படி எல்லாம்
வளர்த்தேன் இப்படி தறுதலையா ஓடி விட்டாயே என்று திட்டுவாரோ என்று
பயம். திரும்ப ஊருக்கு போய் அவமானப் பட வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று சொன்னான்.
இருங்க அய்யா, சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொன்னேன்.. பிறகு ஊரில் அப்பாவை தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன். அவர் பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை.. பிறகு வற்புறுத்தியதால் ராமச்சந்திரன் சார் வீட்டு போன் நம்பர் கொடுத்தார்.
அங்கேயே இருவரையும் பேச வைத்தேன். நிறைய அழுதார்கள், அவர்கள் பேசியதில் “அந்த
பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல இருக்குதுப்பா. நீதான் எல்லாரையும் கஷ்டத்துல
விட்டு போயிட்ட .. என்பது கேட்டது.. உடனே ஊருக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு
கிளம்பி போனான்.
மாலையில் அக்காவிற்கு போன் போட்டு தகவல் சொன்னேன். அவன் கூட ரொம்ப வச்சுக்காதே
என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டாள்.
அவளுடைய குரல், கட் செய்த அவசரம் எல்லாம் ஏதோ சொன்னது. அப்போது தான் அவளுடைய திருமணம் ஒரே மாதத்தில்
நிச்சயம் செய்து முடிக்கப் பட்டதும் நினைவுக்கு வந்தது.
“இதெல்லாம் ரகசியம்” என்று யாரோ சொல்வது போல இருந்தது. சைக்கிள் என்னை பார்ப்பது போல ஹாண்டில் பார் திரும்பி இருந்தது.
உங்களுக்கு ஒரு இழவும் புரியாது என்று ஏன் மனைவி சொல்வதன் பொருள் புரிந்தது
போல இருந்தது.